மாற்றமா? தடுமாற்றமா?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 14,318 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். ‘என்ன தான் என்று பார்ப்போமோ?’ என்று வந்திருந்தேன்.

குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பாஸ்போட்டை என் முன் ‘பொத்’ என்று போட்டு விட்டு ‘நெக்ஸ்ட்’ என்றார். ‘ஆஹா! சிலோன் வந்த விட்டது’ என்று எனக்குப் பட்டது.

சுங்க அதிகாரிக்கு முன் போய் பவ்யமாக நின்றேன். “ஐயா! இந்தப் பெட்டியில் மதுவகையோ, சிகரெட்டோ இல்லை; எலக்டிரிக் சாமான் மருந்துக்கும் கிடையாது; எல்லாம் என் பழைய உடுப்புகள் தான்; பத்துச் சதமும் பெறாது” என்றேன்.

“சரி, சரி எல்லாரும் பாடுற பாட்டுத் தான்; திறவும்” என்றார்.

அந்த நேரம் பார்த்து சாவி துவாரத்தில் நுழைய மறுத்தது. பொறுமைக்குப் பேர் பெற்றவர் அல்லவா சுங்க அதிகாரி; ஆடாமல் அசையாமல் நின்றார்.

பெட்டியைத் திறந்தவுடன் கிளறிக் கிளறிப் பார்த்தார். பிறகு உளுத்தம் களி கிண்டுவதுபோல கிண்டிக் கிண்டிப் பார்த்தார். இது ‘ரைம் வேஸ்ட் என்று பட்டது. ‘சரி, சரி போம்’ என்று விட்டார், ஏமாற்றத்துடன். மூட்டையைக் கட்டியதும் கட்டாததுமாக ஒட்டமாக வெளியிலே வந்தேன்.

சிவபாலன் எனக்காக காத்துக் கொண்டிருந்தான். அப்படியே என்னைக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டான். பள்ளித் தோழனல்லவா? என்னிலும் பார்க்க அவனுக்கு வயது கூட என்றாலும் நாங்கள் பால்ய நண்பர்கள்.

காரில் போகும் போதே நான் அவளுடைய சுகத்தை விசாரித்து கொண்டேன். அரசாங்கத்தில் மிகவும் மதிப்பான உத்தியோகம் பார்த்து வயதுக்கு முன்பாகவே ஒய்வு எடுத்துக் கொண்டவன். மனைவி இல்லை. நாலு பிள்ளைகள் நாலு பேரும் ஜெர்மனி, ஓஸ்ரேலியா, அமெரிக்கா என்று போய் விட்டார்கள். வீட்டில் அவனும் ஒரு வேலையாளும் மாத்திரம் தான். ‘நான் வருகிறேன்’ என்று அறிவித்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோஷம்.


அடுத்த நாள் காலை சில சாமான்கள் வாங்குவதற்காக நாங்கள் இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனோம். சூப்பர் மார்க்கெட் என்றால் வெளி நாடுகளில் பார்ப்பது போல பிரம்மாண்டமானது தான்.

நண்பர் பெரிய தள்ளு வண்டி ஒன்றைத் தள்ளியபடியே வந்தார். நாகரீகமான பெண்களும், ஆண்களும், வெளியூர்க்காரர்களும் சாமான்களைக் குவித்த படியே போய்க் கொண்டிருக்கிறார்கள். ‘மூட்டை வேணும்’ என்றான் நண்பன். பிளாஸ்டிக்கில் செய்த பெட்டி. ஆறு முட்டைகள் வடிவாக அடுக்கியிருக்கும். அப்படி இரண்டு பெட்டிகள் வாங்கினோம்.

நான் சிறுபையனாக வெள்ளவத்தையில் அப்ப இருந்தேன். முட்டை வாங்க கடைக்குப் போனால் “என்ன தம்ப, எத்தினை முட்டை” என்று கேட்பார் கடைக்காரர். “பத்து முட்டை” என்று சொல்வேன்.

முதலில் ஒவ்வொரு முட்டையாக எடுத்து கவனமாக பேப்பர் துண்டில் சுத்துவார், பிறகு அது எல்லாத்தையும் ஒரு மாட்டுத் தாள் பையில் போட்டு மடித்து சணல் கயிற்றினால் கட்டித் தருவார். அந்த மாட்டுத் தாள்பையை நாங்கள் திருப்பித் திருப்பி பாவிப்போம். சணல் கயிற்றை நேராக்கி வைத்துக் கொள்வோம், வேறு தேவைக்கு உபயோகப்படுத்துவதற்கு!

இந்த பிளாஸ்டிக் அரக்கன் வந்ததிலிருந்து இப்படிதான், யுகத்துக்கும் ஒவ்வொரு அரக்கன். இந்த யுகத்துக்கு பிளாஸ்டிக் தான். கற்காலம், இரும்புக் காலம் போன்று பிளாஸ்டிக் காலம்.

சூரனைக் கொல்லக் கொல்ல அவன் ஒவ்வொரு உருவத்தில் முளைப்பானாம். பெட்டிகள், பைகள், அட்டைகள், பாத்திரங்கள் என்று இப்படி எத்தனை பிளாஸ்டிக் உருவங்கள். இந்தப் பிளாஸ்டிக அரக்கன் பூமாதேவியின் கழுத்தைப் பிடித்து நெருக்கி அவள் உயிரை எடுத்து விட்டுத் தான் போவான்; இது நிச்சயம்.

உலகமெங்கணும் இந்தப் பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கப் பாடுபட நாங்கள் மாத்திரம் இங்கே அவனுக்கு கற்பூர ஆராதனை செய்து கொண்டிருக்கிறோமே?

நண்பன் முன்னே போகும்படி சைகை காட்டினான். நாங்களும், அப்படி, இப்படி’ என்று தள்ளு வண்டியை ஒரு இஞ்சு உயரத்துக்கு நிறைத்திருந்தோம்.

வினோதமாக தலையை அலங்கரித்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். நண்பன் ஒவ்வொரு சாமானாக எடுத்து வைக்க அவள மெஷ’னில் தட்டிக் கொண்டே வந்தாள். ஒரு பையன் பிளாஸ்டிக் பைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தான், சாமான்கள் போட. நான் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று சொல்லி விட்டு பாய்ந்து போய் தயாராகக் கொண்டு போன சாக்குப் பையை நீட்டினேன். பையன் திகைத்துப் போனான்; பெண் நெளிந்தாள்; நண்பர் பராக்குப் பார்த்தான்.

பில்தொகை ரூ.982. நான் ரூ 1000 நோட்டைக் கொடுத்தேன். படக்கென்று மெசினைத் தட்டினாள். அது மீதி ரூ 18 என்று காட்டியாது.

அப்பதான் அந்த முசுப்பாத்தி நடந்தது. Do you have two rupees? “இரண்டு ரூபாய் இருக்கமா?” என்றாள். நண்பன் பதைபதைத்து பையைத் துழாவினான். நான் அவனுக்கு சாடை காட்டி விட்டு சொன்னேன்: “இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் நடத்துகிறீர்களே, உங்களிடம் இரண்டு ரூபாய் மாற்று இல்லையா?”

அவளுடைய முகம் அதிசயத்திலிருந்து அருவருப்புக்கு பாய்ந்தது. “சோமபால, மே எண்ட்” என்று கூப்பிட்டு ஏதோ சொன்னாள். பிறகு வேண்டா வெறுப்பாக 19 ரூபாயை தூக்கி என் முன்னே போட்டு விட்டு மற்றப் பக்கம் பார்த்தாள்.

“என்ன இப்பிடிச் செய்து விட்டாயே?” என்றான் நண்பன், வெளியே வரும் போது. அவனுக்கு வெட்கம்.

“இன்னும் சிலோன் புத்தி போகவில்லையே” என்றேன் நான்.


நண்பனிடம் சொன்னபடி அடுத்த நாள் பாங்குக்குப் புறப்பட்டோம். எனக்கு அந்த பாங்கில் ரூ.40,000க்கு மேல் இருந்தது. முன்பு எப்போதா போட்டு வைத்தது. இப்ப தேவைக்கு உதவட்டும் என்று எடுக்க வந்திருந்தேன்.

கவுண்டரில் ஒரு சின்னப் பெண் “என்ன வேண்டும் உங்களுக்கு?” என்றாள்.

“காசு வேணும்” என்றேன். மிகவும் சிக்கனமாக.

“செக்கைக் கொடுங்கள்” என்றாள்.

“அங்கே தான் கஷ்டம். செக் புத்தகமே இல்லை, ஒரு செக்தாள் தேவை” என்றேன்.

“ID இருக்கிறதா?”

“இல்லை”

“பாஸ்போர்ட் இருக்கிறதா?”

“இல்லை”.

சின்னப் பெண் கலங்கி விட்டாள். பாங்கில் வாடிக்கைக் காரர்களோடு மிக்க கவனமாகவும், மரியாதையாகவும் நடக்க வேண்டு என்று படித்துப் படித்துச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்.

“சேர், உங்களுக்கு இந்த பாங்கில் யாரையாவது தெரியுமா?” என்று கேட்டாள்.

“எனக்கு ஏன் தெரிய வேண்டும்? நீங்கள் தான் சிட்டுகள் போல மாறி மாறி இதிலே உட்காருகிறீர்களே, நான் எப்படி நினைவு வைக்க முடியும்? உங்களுக்குத் தான் வடி‘ககைக்காரனை தெரிய வேணும்.”

“சேர், நீங்கள் எப்பவிருந்து இங்கே கணக்கு வைத்திருக்கிறீர்கள்?”

“பிள்ளை, நீ பிறகுகு முன்னேயே எனக்கு இங்கே கணக்கு இருக்கு. தயவு செய்து எனக்கு ஒரு செக் தாள் குடுக்க முடியுமா?”

என்னோடு வந்த நண்பன் காலில் எறும்பு கடிப்பது போல மாறி, மாறிக் காலை வைத்தபடி நின்றான்.

சின்னப் பெண் உயர நாற்காலியிலிருந்து கீழே குதித்து உள்ளே ஓடினாள். அவளுக்கு தெரிந்து விட்டது இது கொஞ்சம் முரண்டு பிடித்த கேஸ் என்று.

மனேஜர் வந்தார். ஏப்பத்தை அடக்கியது போன்ற ஒரு தோற்றம். அவருடைய தாராளமான வண்டியிலே சமய சந்தர்ப்பம் தெரியாமல் சுகமாகப் படுத்து தூங்கியது அவருடைய ‘டை’. அவருக்குப் பின்னால் சின்னப் பெண் பதுங்கிய படி வந்தாள்.

நான் அவரை முந்தி “Can I help you?” என்று கேட்டேன், அவர் திடுக்கிட்டு விட்டார். சின்னப் பெண் சிரிப்பை மென்றபடி நின்று கொண்டிருந்தாள்.

“செக் தாள் தேவையா? என்ன அக்கவுண்ட் நம்பர்” என்றார், விறைப்பாக.

“இது என்ன ஜன்ம நட்சத்திரமா, நினைவு வைக்க? எனக்கு என் பேர் தான் ஞாபகம் இருக்கு; அக்கவுண்ட் நம்பர் மறந்து போச்சு” என்றேன். பெண் ‘கிக்’ என்று சிரித்து விட்டாள்.

“சேர், உங்களைப் போன்ற வாடிக்கைக்காரர்களின் பாதுகாப்புக்காக சில விதி முறைகளைப் கடைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்ததட்ட எவ்வளவு உங்கள் கணக்கில் இருக்கும் என்றாவது சொல்ல முடியுமா?”

நான் சொன்னேன். உடனே உங்களுக்கு ஓடிப் போய் ஏதோ ‘செக்’ பண்ணினார். பிறகு ஒரு நீட்டுத் தாளை தலைக்கு மேல் குடைபோல பிடித்த படி ஒயிலாக நடந்து வந்தார். அந்த நாளை நிரப்பித் தர வேண்டுமாம்.

ஒரு பதினைந்து நிமிடம் கழித்து அந்தப் பெண் என்னைக் கூப்பிட்டு ஒரு வெற்று செக்கை கொடுத்தாள். நான் அதை நிரப்பி என் கையொப்பத்தையும் போட்டுக் கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் என் காசை என்னிடம் எண்ணிக் கொடுத்தாள். நான் அதை வாங்கும் போது “என்னுடைய பணத்தை இவ்வளவு காலமும் பழுது படாமல் வைத்து பாதுகாத்திருக்கிறீர்கள். எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். திருப்பித் தந்ததற்கு மிக்க நன்றி” என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். அவள் சிரித்துக் கொண்டே விடை கொடுத்தாள்.

வெளியே வரும் போது நண்பன் “உன்னாலே பெரிய வெட்கமாய்ப் போச்சுது. இனிமேல் நான் உன்னோடு எங்கேயும் வர மாட்டேன்” என்றான். நேராக காரை நண்பன் ஆஸ்பத்திரிக்கு விட்டான். ஒரு நண்பனை பார்க்க வேணுமாம். “நீ வெளியிலேயே நில், நான் உள்ளுக்குப் போய் பார்த்து விட்டு கெதியில் வந்து விடுகிறேன்” என்று ஓடிப் போனான்.

எனக்கு இது பிடித்த விஷயமாய்ப் போய்விட்டது. சும்மா இருந்து மற்றவர்களைப் பார்த்து என்பது ஒரு ஆனந்தமான விஷயம்; அவர்களுக்கு தெரியாமல் பார்க்க வேணும். அதில் தான் திருப்தி.

அவசரமாகப் போவோரையும், வருவோரையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் என்னைக் கடந்து போனான். சாரமும், பணியனும் தான்; நல்ல தேக்கட்டாக இருந்தான். ஆனால் வலகு கை மாத்திரம் வாதம் வந்து சூம்பிப் போய் இருந்தது.

மனதைத் தொட்டது அந்தக் காட்சி. எனக்கு எங்கள் நாட்டைத் தான் நினைக்கத்தோன்றியது. எங்கள் நாட்டிலும் இப்படித் தானே. ஒரு பகுதி சூம்பிப்போய் போஷனை இல்லாமல் இருக்கிறது. மற்றப் பகுதி எல்லாம் நல்ல செழிப்பாக இருக்கும் போது எங்களுக்கு மாத்திரம் இந்த மாதிரி ஆகி விட்டதே.

அப்போது நண்பன் வந்து விட்டான். நான் அவனுக்கு சொன்னேன் “எங்கள் நாடு ஏன் இப்படிப் போய் விட்டது” என்று.

“சிலதுக்கு நாங்கன் கொடுத்து வைக்க வேணும். நல்ல பெற்றோர், நல்ல வைத்தியர், நல்ல மனைவி, நல்ல வாத்தியார் அது போல நல்ல அரசும் தேவை. இதுக்கெல்லாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேணும்” என்றான்.

நாங்கள் காரிலே திரும்பி வரும்போது கேட்டேன். “சிவ பாலன், உலகத்திலேயே மிகவும் கொடியது என்ன?”

“அது தான் ஓளவையார் அப்பவே சொல்லி விட்டாரே” என்றான்.

“கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை, அதனினும் கொடிது ஆற்றொணாக்கொடு நோய்”

இப்படியே சொல்லிக் கொண்டு போனான்.

அப்போது நான் கிட்டியில் பாகிஸ்தானில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறினேன்:

“ஈராக்கில் இருந்து நடந்து வந்த ஒரு ஏழை அகதி. ‘கேர்ட்’ இனத்தைச் சேர்ந்தவன். கொடுமை பொறுக்காமல் பிறந்த நாட்டை விடு ஓடி வந்தவன். மனைவியும், இரண்டு பிள்ளைகளும். போக இடம் இல்லை. எல்லாத்தையும் இழந்து வந்து பாகிஸ்தானில் புகலிடம் கேட்டான். ஆனால் கொடுக்க மறுத்து விட்டர்கள். எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான்; முடியவில்லை”.

“கடைசியில் ‘இறக்கும் வரை உண்ணா விரதம்’ என்று தொடங்கி விட்டான். எத்தனையோ பேர் எவ்வளவு தான் கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. ஐம்பத்திரண்டு நாள் பட்டினி கிடந்து அப்படியோ இறந்து போனாள். அவன் சாகும் முன்பு சொன்ன வாசகம் என்ன தெரியுமா?”

“‘€யா, துணியில்லாமல் இருக்கலாம்; சோறு தண்ணி இல்லாமல் இருக்கலாம்; படுக்கப்பாயும், இருக்க வீடும் இல்லாமம் கூட இருக்கலாம்; ஆனால் நாடில்லாமல் இருப்பது போன்ற கொடுமை உலகத்திலேயே கிடையாது. அது மிகக் கொடியது” என்றான்.”

நண்பனும் “உண்மைதான்” என்றான்.


அன்று மத்தியானம் சிவபாலன் கண்ணிலே மகிழ்ச்சி மின்ன “இன்றைக்கு இரவு உனக்கும் எனக்கும் சாப்பாடு, பக்கத்து வீட்டிலே” என்றான். அவனுடைய பெரிய ‘தலையிடி’ நான்தான்.

அவன் என்னைப் பார்த்து சீரியஸாக நீ அங்கு போனவுடன் “இது என்ன மணம்! என்று கேட்டு வைக்காதே” என்றான் “ஏன்?” என்று கேட்டேன்.

“இப்ப ‘சித்தலெப்ப’ என்று ஒரு அருமையான ‘பாம்’ சிலோனிலே வந்து இருக்கு. அந்த அம்மா அதைப் பூசாத நாளே இல்லை. அவவுக்கு எப்பவும் ஒரு தலையிடி. நீ தான் சும்ம இருக்க மாட்டியே, ஏதாவது சொல்லிக் கொண்டு” என்றான். பிறகு என்னுடைய பிள்ளைகள் அந்த அம்மாவுக்கு ‘பாமினி’ என்று பேர் வைத்ததையும் சொல்லிச் சிரித்தான்.

அன்று இரவு சொன்னபடி பக்கத்து வீட்டில் சாப்பிடப் போனோம். அவன் சொன்னது உண்மைதான். மற்ற வீடுகளில் சந்தனத் திரி அல்லது சாம்பிராணி மணப்பது போல அங்கே ‘சித்தலெப்ப’ மணந்து கொண்டிருந்தது. நான் வாய்திறக்கிற போதெல்லாம் நண்பன் என் வாயையே பார்த்தபடி முள்ளுக்குமேல் இருந்தான். ‘பாமினி’ அம்மா எங்களை நல்ல ‘மணத்துடன்’ உபசரித்தார்கள்.

அப்போது ஒரு பதினேழு வயதுப் பெண் புத்தகக் கட்டுடன் வெளியிலே இருந்து வந்தாள். வழக்கமான சிலோன் உடுப்புதான். அரைப் பாவாடையும் அதற்கு மேல் அணியும் பிளவுசும்; நீளமான கரு கருவென்ற பின்னல். தலையைக் குனிந்தபடியே விடு விடென்று உள்ளே போய் விட்டாள். ஒரு புன்சிரிப்பு, ‘ஹலோ’ ஒன்றுமே இல்லை. எனக்கு முன்பொரு நாள் என்னுடைய மகள் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவில் ஒரு கிராமத்தில் இருந்த நாங்கள் வீடியோவில் ஒரு தமிழ் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய மகள் பிறந்ததிலிருந்தே வெளிநாடுகளில் வளர்ந்தவள். அவளும் பொறுமையாக எங்களுடனிருந்து படம் பார்க்கிறாள். ஒரு இடத்தில் இடைமறித்து என்னை ஒரு கேள்வி கேட்கிறாள், என் மகள்.

அப்போது அவளுக்கு ஒன்பது வயது. முகம் எல்லாம் கண்கள். அதை இன்னும் அகல விரித்து கேட்கிறாள்:

“அப்பா,இந்த கேர்ல்ஸ் (girls) எல்லாம் ஏன் குனிஞ்சபடி போகினம்?”

என்னுடைய திகைப்பு அடங்க கொஞ்ச நேரம் சென்றது. பிறகு நான் சொல்கிறேன் “என் குட்டி மகளே, ‘சிலோன், சிலோன்’ என்று ஒரு நாடு இருக்கு. அங்கே நவரத்தினங்கள் எல்லாம் குவிந்து இருக்கும். மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம், மாணிக்கம், பவளம், நீலம் என்று பலப் பல நிறங்களில் இரத்தினக் கற்கள்.”

என் மனைவி குறுக்கிட்டு “புஷ்பராகம், புஷ்பராகம், அதை விட்டு விட்டீர்களே” என்று சொள்ளாள்.

“ஓ! புஷ்பராகம், அதையும் சேர்த்துக் கொள்; அவ்வளவு செல்வம் கொழிக்கும் நாடு. வீடு கட்டும் போது கூட அடிக்கல்லுக்கு கீழே நவரத்தினங்களையெல்லாம் ஒரு பிடி அள்ளிப் போட்டுத் தான் கட்டுவார்கள்.”

“இப்படிப் பட்ட சிலோனிலே பெண்கள் நடக்கும்போது குனிந்து பார்த்த படியே நடப்பார்கள். வண்ணில் தட்டுப் படுகிற நவரத்தினங்கள் எல்லாவற்றையும் பொறுக்கி பொறுக்கி எடுத்து நகை செய்து வைத்துக் கொள்வார்கள். உங்களுடைய அம்மாவைப் பாருங்கோ, எத்தினை நகை செய்து வைத்திருக்கிறா!”

என்னுடைய மகள் என்ன லேசில் மசிகிறவளா?

“அப்ப ஏன் போய்ஸ் (Boys) எல்லாம் நேர பார்த்தபடி போகினம்”.

என் மனைவி என்னைப் பார்த்தாள், “மாட்டிக் கொண்டீர்கள்” என்பது போல. நியாயமான கேள்வி.

“என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ல்ஸ் ரத்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போவதால் பின்னால போற போய்ஸ”க்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. அது தான் அவர்கள் கண்களை வேஸ்ட் பண்ணுவதில்லை” என்று சொன்னேன்.

“ச்சீ, சும்மா போங்கோ” என்று சொலலி விட்டு துள்ளிக் குதித்து ஓடி விட்டாள்.

அந்த சம்பவம் ஞாபகம் வந்தது. ஏன் எங்கள் பெண்கள் எல்லாம் தலை குனிந்த படியே நடக்கிறார்கள். அதுவும் அவர்கள் தலை விதியா?

ஒரு புலவர் கூட்டத்தில் பேசுகிறார்; “சீதை மாடத்திலே நின்று கொண்டிருக்கிறாள். ராமன் கீழே. அண்ணலும் நோக்கினான்”என் குஞ்சுப் பெண்ணே, அது என்னவென்றால் முன்னாலே போற கேர்ல்ஸ் ரத்தினக் கள்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு அவளும் நோக்கினாள். சீதை கீழே பார்க்கிறாள், ராமல் மேலே பார்க்கிறான். கீழ் நோக்கி பார்ப்பது பெண்ணுக்கு அழகு; நிமிர்ந்து பார்ப்பது ஆணுக்கு அழகு.”

பேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றும் தெரியாமை’ (Ignorance) இது லட்சணமா? அது கூட பரவாயில்லை. மடமை (Stupiality) கூட பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறதுதான்.

என் சிந்தனை இப்படி ‘இடக்கு முடக்காக’ ஓடிக் கொண்டிருந்தது.

“இப்ப போனவ தான் என்னுடைய மகள், பிரவீனா. ஏ லெவல் படிக்கிறா, பிரைவேட் ட்யூசன் எடுத்து போட்டு வாறா” என்றார்.

பிறகு தொடர்ந்து பாமினியம்மா “சாப்பாடு ரெடி, வாங்கோ” என்றார்.

எல்லாம் எனக்கு பிடித்தமான கறிவகைகள் தான். சுடச்சுட இடியப்பம், வாழைக்காய் பச்சடி. பூண்டுக் குழம்பு, மாங்காய் சம்பல், இத்துடன் சொதி, நல்லாக அனுபவித்து சாப்பிட்டோம்.

“சாப்பாடு என்றால் இது தான்” என்றேன் நான்.

அது அம்மாள் “இப்ப, இஞ்ச இடியப்பம் ஒன்றும் வீட்டிலே செய்வதில்லை. எல்லாம் வெளியில் தான் வாங்குறம். வீதி, வீதியாகக் கடை இருக்கு. பூப் போல இடியப்பம், விலையும் சீப் தான்” என்றார்.

அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். பதினொரு வயது; தமிழ் இலக்கியப்படி சொன்னால் பெதும்பை. ஊத்தைப் பாவாடை ஒன்றைக் கட்டியபடி ஓடியோடி வேலை செய்கிறாள். அந்த அம்மாள் பெருமையாகச் சொன்னார்; “இஞ்ச சிந்தாமணி தான் எல்லா வேலையும். இந்தக் கறி எல்லாம் அவள் வைச்சது தான்”.

எனக்கு அன்று இரவு அந்தக் குழந்தையின் முகம் தான் திரும்பத் திரும்ப வருகிறது. என்ன மாதிரிக் கண்கள். கரு வண்டுக் கண்கள் என்றாலும் அச்சப்படும் கண்கள். மகாத்மா காந்தி சிறு பையனாக இருந்தபோது களவாக ஆட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு நித்திரை வராமல் தவித்தது போல நானும் பிரண்டு, பிரண்டு படுக்கிறேன்.

“அந்தப் பிஞ்சுக் குழந்தை செய்ததையா அப்படிச் சாப்பிட்டேன். வெட்கமில்லாமல்”. மனதை என்னவோ பிசைந்தது. நித்திரை வரவே மறுத்தது.


அடுத்த நாள் நான் காப்புறுதி (Insurance) கூட்டுத் தாபனத்துக்கு போக வேண்டி இருந்தது. நண்பன் வர முடியாது’ என்று சொல்லி விட்டான். எனக்குப் பேச்சுத் துணைக்கு கூட ஆருமில்லை.

விஷயம் இதுதான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஆயுள் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தேன். சமீபத்தில்தான் அது (Mature) முதிர்வடைந்திருந்தது. நான் எனக்குச் சேர வேண்டிய தொகையைக் கேட்டு எழுதியிருந்தேன். அவர்கள் ஒரு ‘பாரத்தை’ அனுப்பி அதைப்பூர்த்தி செய்து அத்துடன் பொலிசியையும் அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அப்படியே நான் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தேன்.

என் கெடுகாலம், பொலிசி தபாலில் தொலைந்துவிட்டது. கிடைக்க வேண்டிய தொகையை ஏன் வீணாக விட வேண்டும் என்று அவர்களைப் போய்ப்பார்க்க முடிவு செய்தேன்.

முதலில் எந்தக் கிளை என்று என்று தெரியாமல் கொஞ்சம் அல்லாடி, கடைசியில் சரியான இடத்திற்க போய்ச் சேர்ந்தேன். நான் எங்கு போனாலும் எனக்கு முன்னால் சனியன் அங்கு போய் உட்கார்ந்து விடும். அன்றைக்கு என்று பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரி வரவில்லை. ‘வந்து விடுவார், வந்துவிடுவார்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மத்தியானத்துடன் நல்ல பசி. திரும்பி வந்துவிட்டேன்.

அடுத்த நாளும் படையெடுத்தேன். அதிகாரி பத்து மணியளவில் வந்தார். நான் ஒரு துண்டில் என் பெயரைக் குறித்து என்ன விஷயம் என்று எழுதி அனுப்பினேன். அரை மணி நேரம் கழித்து என்னை வரச் சொன்னார்கள். நான் விஷயத்தைக் கூறி கோப்பு (File) நம்பரையும் கொடுத்தேன்.

அவர் ரெண்டு மூன்று தரம் ‘பெல்’ அடித்தும் ஒருவரும் வராததால் “குணதிலக, குணதிலக” என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். அப்போது ஒருவர் வந்து நின்றார். நெடிதுயர்ந்த உருவம். சாடையான முன் வழுக்கை. கொஞ்சம் கூனிய படியே “என்ன?” என்றார்.

அவருடைய ஒரு கை பாதி குடித்த ஒரு சிகரெட்டை முதுகுக்கு பின்னால் பிடித்தபடி இருந்தது. அவர் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தால் எங்கே மின் விசிறி அவருடைய தலையில் இடித்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன்.

“இந்த ‘கோப்பை’ எடுத்துக் கொண்டு இதற்குரிய கிளார்க்கை வரச் சொல்லும்” என்றார். அவனும் ‘சரி’ என்று போய்விட்டான்.

நான் அதிகாரியின் முன்பு பொறுமையாக காத்து இருந்தேன். அவருடைய தொலைபேசி மணி அடித்த வண்ணமே இருந்தது. வேகமாக பேசி முடித்து விட்டு வேலையிலேயே கண்ணாக இருந்தார். இடையிடையே மணி அடித்து வேலையாளுக்கு வேலைகளும் கொடுத்தார். அடிக்கடி என்னைப் பார்த்து “வந்து விடும், வந்து விடும்” என்றார்.

ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. இவர் மறுபடியும் மணியடித்து குணதிலகாவைக் கூப்பிட்டு என் காரியத்தை நினைவூட்டினார். அதற்கு அவன் நெளிந்து அந்த கிளார்க் தேநீர் குடிக்கப் போனதாகவும் அதற்குப் பின் ஆளையே காணவில்லையென்றும் மெல்லிய குரலில் கூறினான்.

அதிகாரி கோபத்தை என்முன் காட்டாமல் “சரி, சரி சுமணபாலாவை வரச்சொல், அந்தக் கோப்புடன்” என்றார். சிறிது நேரம் கழித்து சுமணபாலா என் கோப்பைக் கொண்டு வந்து மேசைமேல் வைத்தார். அந்த அதிகாரி அதைதிறந்து ஒவ்வொரு ஓலையாக விபரங்களைப் படிக்க, நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து தொலைபேசி மணி அடித்தது. அவர் கைபிடியைத் தூக்கி கதைத்து விட்டு “கொஞ்சம் இருங்கள், பெரிய அதிகாரி கூப்பிடுகிறார். வந்து விடுகிறேன்” என்று போய் விட்டார்.

நான் பொறுத்திருந்து பார்க்கிறேன். நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனக்கு பீதி பிடித்து விட்டது. ‘லஞ்ச்’ நேரம் நெருங்கிக் கொண்டே வருகிறது. அது வந்தால் எல்லாரும் குருவிகள் பறப்பது போல பறந்து விடுவார்களே!

நல்ல காலம். அதிகாரி திரும்பி வந்துவிட்டார். வேகமாக இரண்டு தாளைப் படித்து விட்டு “இது கொஞ்சம் சிக்கலான கேஸ். மூன்று நாளைக்குப் பிறகு வந்து பாருங்கள்” என்றார். மனிதரைப் பார்த்தால் வேலை தெரிந்தவர் போல இருந்தார். அதனால் நம்பிக்கையுடன் வெளியே வந்தேன்.

மூன்று நாள். பிறகு சநி, ஞாயிறு. அதற்குள் ஒரு ‘போயா’ விடுமுறை. இது எல்லாம் முடிந்து ஒரு நாள் சாவகாசமாக தேடிப் போனேன். ‘கோபப்படாதே’ என்று அடிக்கடி எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

இந்த முறை விஷயம் சுலபமாக முடிந்து விட்டது. அந்த அதிகாரி “நாங்கள் இங்கே எல்லாம் அலசிப் பார்த்து விட்டோம். உங்களை பொலிசி வந்ததற்கான தடயமே இல்லை. பொலிசி இல்லாமல் ஒன்றுமே செய்ய ஏலாது. நீங்கள் பதிவுத் தபாலில் அனுப்பிய படியால் எதற்கும் தபால் கந்தோருக்குப்போய் விசாரித்து பாருங்கள்” என்று கூறிவிட்டு வேறு பேச்சு வார்த்தைக்கு இடம் தராமல் இன்னொரு பைல் கட்டில் தீக்கோழி தலையைப் புதைப்பது போல புதைத்து கொண்டார்.

எனக்கு என்ன? ஒரு வேலையுமில்லை தானே! அடுத்த நாள் ‘சும்மா’ தபால் கந்தோருக்கு போய் பதிவுத் தபால் ரசீதைக் காட்டி விசாரித்தேன். அவர்கள் நான் எதிர்பார்த்த பதிலைத்தான் கூறினார்கள். “இது வெளியூரில் போட்ட தபால். நீங்கள் இதைப் பதிவு செய்த கந்தோரில் புகார் கொடுக்க வேணும். அவர்கள் அந்த கோப்பு நம்பரைக் காட்டி எங்களுக்க எழுதுவார்கள். அதன்படி நாங்கள் விசாதணை செய்ய முடியும். இப்ப ஒன்றும் செய்ய ஏலாது” என்று கையை விரித்தார்கள்.

நண்பனிடம் விஷயத்தைச் சொன்னேன். “ஏன் நீ முதலே சொல்லவில்லை?” என்று என்னைக் கடிந்து விட்டு தனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவருடன் டெலிபோனில் தொடர்பு கொண்டான். என் சங்கடத்தை சுருக்கமாகச் சொல்லி விளக்கினான். இரண்டு நாள் தள்ளி பதினொரு மணிக்கு என்னை வரச் சொன்னார், சிவபாலனின் அந்த நண்பர்.

சிவபாலன் என்கு “நீ உன் புத்தியைக் காட்டாதே. அவர் பெரிய அதிகாரி. கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்” என்றான்.

சரியாக பதினொரு மணிக்கு என்னை உள்ளே கூப்பிட்டார்கள். பெரிய அறை. வெள்ளை வெளேரென்று தூண்மையாகவும் சிக்கனமாகவும் இருந்தது. நீண்ட திரைச் சீலைகள் கம்பீரமாக காற்றுக்கு இடைக்கிடை அசைந்த படி தொங்கின.

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒரு பெண்மணி அந்தக் கதிரையில் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் இன்னொரு ஆண் அதிகாரி. அவர் கையில் என்னுடைய கோப்பு.

“விஷயத்தைக் கூறுங்கள்” என்றார் அந்த தலைமைப் பெண் அதிகாரி.

மெத்தப் பெரிய அதிகாரிகளுடைன் கதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விதி, கதையை நீட்டி வளர்க்கக் கூடாது. அத்துடன் அதி சிக்கனமும் ஆபத்து. ஒரு அழகிய பெண்ணின் உள் ஆடை போன்று அதிகம் நீட்டாமல் அத்துடன் Subjectஐ ‘கவர்’ பண்ணவும் வேணும்.

நான் விஷயத்தை மிகவும் கவனத்துடன் சொல்லி முடித்தேன். அந்த பெண் அதிகாரி டாம்பீகமாக நிமிர்ந்து கண்ணாடியைச் சரி செய்து விட்டு சொன்னார்: “பொலிசியை எங்களுக்கு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. அது வழியில் தொலைந்ததற்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அத்துடன், பிறப்பு சாட்சிப் பத்திரமும் தேவை. உங்கள் காசு தர வேண்டிய தயார் நிலையில் இருக்கிறது. தவறான வழியில் நாங்கள் பணத்தை கொடுத்தோமென்றால் கணக்காய்வில் (Audit) எங்களுக்கு சங்கடம் வரும்.”

அவர் ‘சங்கடம்’ என்றதும் பொறுமையின் பிறப்பிடமாக இருந்த எனக்கு பத்திக் கொண்டு வந்து விட்டது.

“அம்மா! தாயே ‘சங்கடம்’ என்றா சொன்னீர்கள்! யாருக்கு சங்கடம்? ரூ 25,000 பிச்சைக் காசு. அதை எனக்கு என்ன சும்மாவா கொடுத்தீர்கள்? அல்லது லோன் கொடுக்கிறீர்களா? இதற்கும் மேல் பிறப்புச் சாட்சிப் பத்திரம் வேறு கேட்கிறீர்களே? ஏன்?”

“நான் பிறந்தது என்னவோ உண்மை. அதுதான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இறக்கவும் இல்லை. அப்படி இறந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. இருபத்தைந்து வருடங்கள், கணக்காக முன்னூறு மாதங்கள் நான் ‘பிரிமியம்’ செலுத்தி வந்திருக்கிறேன். உங்கள் முன்னால் கோப்புடன் நிற்கிறாரே, இவரிடம் கேளுங்கள். இந்த முன்னூறு மாதங்களில் ஒரு மாதத்தில் கூட ஒரு நாளாவது பிரிமியம் தவறியிருக்கிறதா? இல்லை. லேட்டாகக் கட்டியிருக்கிறேன? கிடையாது.”

“நான் காசு கட்டியது என்னவோ உண்மை. இப்ப உயிரோடு இருப்பதுவும் உண்மை. அதனால் எனக்குத் தரவேண்டிய பணத்தை தர வேண்டியது தானே! இதிலே என்ன பெரிய ரூல்ஸ் எல்லாம்!”

“மாதா மாதம் ரூ.103 கட்டி வந்திருக்கிறேன். 300 மாதத்தில் நான் கட்டிய தொகை ரூ.30,900. குறைந்தது 8% வட்டியில் இதே காசு இ€றைக்கு எவ்வளவு ஆகியிருக்கும்? ரூ.47,080. நான் கேட்பது என்ன? பிச்சைக் காசு ரூ,25,000. இதை வைத்து வீடு கட்டப் போறேனா? வெத்திலை வாங்கக் கூட காணாது!”

மேல் அதிகாரி ஏதோ பேச வாயெடுத்தார். நான் தடுத்து விட்டுத் தொடர்ந்தேன்.

“என் தொடக்கச் சம்பளம் மாதம் ரூ.1060. அதில் பத்து சத வீதம் பிரிமியம் ஆக கட்டியிருக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். அந்த நூறு ரூபாயின் அன்றைய வாங்கும் சக்தி இன்று இந்த ரூ.25,000 க்கு இல்லை. சங்கடம், என்ன எங்கடம்?”

பேசியது நான் தான், ஆனால் மேலதிகாரிக்கு ‘மேல் மூச்சு, கீழ் மூச்சு’ வாங்கியது. “மிஸ்டர் குணரத்தின, அவரைக் கூட்டிக் கொண்டு போய் ஆவன செய்து அந்தக் காசைக் குடுக்கிற வழியைப் பாருங்கோ” என்றார்.

நான் வெளியே வந்து அவர்கள் கேட்டுக் கொண்டபடி இன்னும் சில ‘பாரங்களை’ நிரப்பி கையெழுத்தும் வைத்து கொடுத்தேன். இவ்வளவும் ஆன பிறகும் கடைசியில் “ரூ.2 ஸ்டாம்பை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறேன். வேறு ஒருவரை வெளியே அனுப்பி ரூ.2 ஸ்டாம்ப் வாங்கிக் கொண்டு வந்து அதை ஒட்டி என் கையொப்பத்தை எடுத்துக் கொண்டார்கள்.

“செக்கை உங்கள் கையில் கொடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. உங்கள் பாங்குக்க நேரடியாக இன்றைக்கே அனுப்பி வைப்போம். யோசிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.


நான் இந்த விபரங்கள் எல்லாவற்றையும் நடந்தது நடந்த மாதிரியே சிவபாலனிடம் சொல்லி முடித்தேன். எனக்கு ‘மூக்கு முட்ட’ கோபம் வந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டேன்.

“முற்றிலும் இது உண்மை. நாங்கள் பல நேரங்களில் எங்கள் பொது அறிவைப் பாவிப்பதில்லை. ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான்” என்றான் அவன்.

“இல்லை, சிவபாலன். இன்சூரன்ஸ் எடுப்பது எதற்காக? ஒரு பாதுகாப்பிற்காகத்தானே? வாழ்நாள் முழுக்க ஒருவன் கட்டிய காசை அவனுக்கு திருப்பிக் கொடுக்கும் போது இப்படிச் செய்யலாமா? இது ஆயுள் இன்சூரன்ஸ் விஷயமல்லவோ? இந்தக் கதி ஒரு படிப்பறி வில்லாத ஏழை விதவைக்கு ஏற்பட்டால் அவள் என்ன செய்வாள்? புருஷன் செத்த பிறகு அவள் அந்த இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க எத்தனை தரம் அலைய வேண்டியிருக்கும்? படித்த எனக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும்? இது என்ன அக்கிரமம்?” என்றேன்.

சிவபாலன் கொஞ்சம் யோசித்து விட்டு “நீ உலக வங்கிக்கே கணக்கு எழுதிறவன். ஒரு கணக்கு பிழை விட்டு விட்டாயே” என்றான்.

நான் “என்ன?” என்று கேட்டேன்.

“நீ அஞ்சு நாள் அலைந்திருக்கிறாய். உன்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு 300 டொலர். அப்ப அஞ்சு நாளைக்கு ரூ.75,000 விரயமாகியிருக்கிறது. நீ கட்டிய வட்டியுடன் ரூ.47,080. கிடைக்கப் போவதோ ரூ.25,000; ஆக நட்டம் ரூ.97,080. இதை உன்னுடைய நட்டக் கணக்கில் எழுத வேண்டியது தான்” என்றான்.

நான் “என்ன ஸ்டாம்ப் வாங்கிய வகையில் ரூ.2 தவறிவிட்டது. அதையும் சேர்த்துக் கொள்” என்று கூறினேன்.

இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அப்படி அடிவயிற்றில் இருந்து எழும்பி வாய் விட்டு உரக்கச் சிரித்து எவ்வளவோ? காலம் ஆகிவிட்டது.


நண்பனைப் பிரியப் போகிறோம். அவன் கண்கள் என்னை நேரே பார்க்க முடியாமல் தவித்தது. ‘இனிமேல் நான் பார்ப்பேனோ’ என்று எனக்கு பட்டது. அவனுக்கும் அப்படித் தான் இருக்க வேண்டும். “ச்சீ, இது என்ன?” என்றேன். அவன் கண்கள் கலங்கி இருந்தன.

பால்ய சினேகிதம் அல்லவா? அதனிலும் பார்க்க உன்னதமான சிநேகிதம் உலகத்திலேயே கிடையாது. எங்களுக்குள்ளே ஒழிவு மறைவே இல்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஏற்படும் சினேகமானது எப்படியும் செக்ஸ’ல் கொண்டு போய் விட்டு விடும். பிறகு பல சிக்கல்கள். ஆணுக்கும் அஸக்கு மிடையே ஏற்படும் சினேகம் அப்படியல்ல; பவித்திரமானது.


பிளேனில் அன்று நிறைய சணம். மேல் தட்டில் சாமானை வைத்து விட்டு உட்கார்ந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். இந்த நேரம் தான் மிக ரம்மியமான நேரம்.

குருடர்கள் யானை பார்த்து கதை ஒன்றிருக்கிறது. தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்து விட்டு ‘யானை புடலங்காய் போல இருக்கிறது’ என்றானாம் ஒருவன். குருடர்களை விட்டு விடுவோம். யார் தான் ஒரு யானையை முழுமையாகப் பார்க்க முடியும். முன்னுக்கு நிற்பவன் அதைத் தான் காணுவான். பனை மரத்திலிருப்பவன் யானையின் மேல்பாகத்தை பார்ப்பான். உலகத்திலேயே யானையை முழுமையாகப் பார்த்தவர் யாராவது இருக்கிறார்களா? எல்லா பார்வையுமே ஒவ்வொரு கோணத்தில் இருந்துதான்.

கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பாடல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உருக்கமான குரலில் காதலன் பாடும் பாட்டுத் தான். “என் காதலியே, உனக்கு என்ன நடந்தது? சடுதியில் என் காதலை தூக்கி எறிந்து விட்டாயே! நீ மாறி விட்டாயா? அல்லது தடம் மாறி விட்டாயா? ஏந் இந்த உதாசீனம்?”

பிளேன் மெதுவாக ஊரத் தொடங்கியது. நிலத்திலே ஊர்ந்து பின் விரைந்து மேலெழும் அந்தக் கணநேர இன்பம் கொள்ளையானது. விர்ரென்று விசை கூடுகிறது. ஏணையில் தூங்கும் குழந்தையை பட்டுப் போல் மேலே தூக்குவது போல பிளேன் நிமிர்ந்து எழும்புகிறது. அந்த இன்பத்தை பங்கு போட விருப்பமின்றி கண்மூடி லயிக்கிறேன்.

– திகடசக்கரம், முதற் பதிப்பு: ஆனி 1995, காந்தாளகம், மறவன்புலவு, சாவகச்சேரி

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “மாற்றமா? தடுமாற்றமா?

  1. மாற்றமா தடுமாற்றமா?
    உங்களுக்கு பாிச்சயமான வாசகன்தான் நான். இன்று உங்கள் பெரு விசிறியான எனக்கு உங்களின் இன்னொரு சிறுகதையை இன்று வாசிக்க முடிந்தது. நகைச்சுவைாயக எழுதியிருக்கிறீர்கள். ‘அழகிய பெண்ணின் உள்ளாடை போன்று அதிகம் நீட்டாமல் சப்ஜெக்டைக் கவர்பண்ண வேணும் ‘ என்ற உங்கள் புதுமையான உவமான உவமேயம் உங்கள் எழுத்தின்‘ இளமையைப் ‘பறைசாற்றியது. கதை சற்றே நீண்டு விட்டாலும், நம் அரச அலுவலகங்களின் அலங்கோலங்களை அழகாகக் குத்திக் காட்டியிருக்கிறீாகள். மன்னிக்கவும். கதையைஇ, எழுத்துப் பிழைகள் பல, வதை செய்கின்றன. சனம் சணமாகி இரு்ககிறது.விசாரணை விகாதணையாகவும்,சனி சநியாகவும், மண்ணில் வண்ணில் என்றும், துாய்மைதுாண்மை என்றும் மாறியிருக்கின்றன. மடமைக்கு நீங்கள் கொடுத்த ஆங்கிலப் பதம் stupidity என்று நினைக்கிறேன். ஆனால் தரப்பட்டுள்ள சொல் Stupiality . ரத்தினக் கல் ரத்தினக் கள்ளாக மாறி இருக்கின்றது.
    அதி மேதாவித்தனமாக எதையாவது எழுதி விட்டேனோ தொியவில்லை. உங்கள் அற்புதமான சிறுகதைகள் இப்படிச் சிதைக்கப்படுவதை விரும்பாத வாசகன் நான்.
    அன்புடன்
    ஏ.ஜே.ஞனேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *