கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,383 
 

அந்த முன் மாலை நேரத்தில், ஏரிக்கரையில் மிதமான வெளிச்சமும், தென்றலாக காற்றும் வீசியது. வானத்தில் மேகங்கள் வெள்ளி ஓடைகளாய் காட்சி அளித்தன. சுற்றிலும் மரகதப் பச்சைக் கம்பளம் விரித்தது போல் வயல்கள். தொலைவில் குன்றும், குன்றின் மேல் கோவிலும், ஓவியமாய் காட்சியளித்தது.
“”வெளிகரம்ன்னு அங்கே உள்ள ஊருக்கு பேர். அந்த கோவில் முருகர் கோவில். டவுன் ஸ்கூலில் படிக்கும்போது, அந்த கோவிலுக்கு எக்ஸ்கர்ஷன் போவோம். ஒற்றையடிப் பாதையில் பயணித்து மலையேறுவது, நல்ல அனுபவமாக இருக்கும். இப்போ ரோடு போட்டுட் டாங்க. பஸ் போகுது,” என்றான் ஜீவா.
அவன் நண்பர்கள் அதை ஆர்வமாக பார்த்தனர். கேமராவில் படம் பிடித்தான் சுந்தர்.
மாத்தி யோசிகாலையில் துவங்கிய பயணம், மத்தியான சாப்பாட்டையும் மறந்து, ஏரி, ஆறு, குளம், குட்டை, வயல், கரும்புத்தோட்டம், மலை அடிவாரம் என்று சுற்றிக் கொண்டிருந்தது.
நண்பர்கள் ரொம்பவே என்ஜாய் பண்ணினர்.
ஆனால், ஜீவாவால் தான் எதையும் ரசிக்க முடியவில்லை. கடனே என்று, தோட்டம், ஓடை, கோவில், குளம் என்று வயல்களினூடாக, நண்பர்களை அழைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான். எல்லாரும், ஜீவாவுடன் சென்னை கல்லூரி ஒன்றில் படிப்பவர்கள். ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தனர். ஜீவாவைத் தவிர பிறர் எல்லாம் வசதியானவர்களாய் இருந்தனர். சுந்தரின் அப்பா பிசினல் மேன். வீடு சென்னையின் வட கோடியில் இருந்ததாலும், வீடு அவனுக்கு போரடிக்கும் சமாச்சாரமாக இருந்ததால், தென் கோடியிலிருந்த கல்லூரியில் சேர்ந்து, அப்படியே ஹாஸ்டலுக்குள் வந்து விட்டான்.
ரமணி என்ற வெங்கட்ரமணனின் அப்பா, சேலத்தில் ஜவுளி வியாபாரம். பீட்டரின் அப்பா, கல்லூரி பேராசிரியர். ஜோகியின் அப்பாவுக்கு, கோட்டயத்தில் ஓட்டல் இருந்தது.
ஜீவாவுக்கு விவசாயம். சொற்ப வருமானம். மேலும், அவன் தந்தை இறந்து விட்டார். தாய்மாமன் வீட்டில் தான் அடைக்கலமாகி இருந்தான். அவர் தான் அவனை சென்னைக்கு அனுப்பி, படிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு செமஸ்டர் விடுமுறையும், ஒவ்வொரு நண்பரும் தங்கள் வீட்டிற்கு மற்ற நண்பர்களை அழைத்துச் செல்வது என்று தீர்மானம். ஜீவா ஒதுங்கப் பார்த்தான்; விடவில்லை.
முதல் செமஸ்டர் முடிந்ததுமே, திருவொற்றியூருக்கு அழைத்துச் சென்றான் சுந்தர். அவர்கள் தங்க தனி வீடே கொடுத்து விட்டார் அவன் அப்பா. பிசினஸ்மேன்; உழைப்பால் உயர்ந்தவர். பத்து ரூபாயோடு சென்னைக்கு வந்தவராம். தெருத்தெருவாய் சுற்றி, இரும்பு வாங்கி விற்று, மெல்ல பெருகி, இரும்பு உருக்காலை ஒன்றை மணலியில் நிறுவி, பெரியாளாகி விட்டார். நிறைய வீடுகள், கட்டடங்கள் வாங்கிப் போட்டிருந்தார். எல்லாம் சுற்றிக் காட்டினான் சுந்தர். நாட்கள் போனதே தெரியவில்லை.
அடுத்த செமஸ்டர் விடுமுறையில், சென்னைக்கு பக்கத்திலிருக்கும் தன் ஊருக்கு ஜீவா அழைப்பான் என்று நண்பர்கள் எதிர்பார்க்க, அவன் வாய் திறக்கவில்லை.
“என்னடா… எங்களை உங்க ஊருக்கு கூப்பிட மாட்டியா?’ என்றனர்.
“அங்க விசேஷமா ஒண்ணுமில்லடா…’ என்று நழுவினான் ஜீவா.
“இந்த செட்லயே நீ தான் கவிதை எழுதறவன். கவிதை சுலபமா வந்திடாது. சோலை இருக்கணும். வேப்ப மர நிழல் இருக்கணும். குயிலோசை இருக்கணும். கண்ணுக்கும், மனசுக்கும் பசுமையாய் நிறைய சமாச்சாரங்கள் இருந்தால்தானே கவிதை சாத்தியம்… அதெல்லாம் நிச்சயம் உங்க ஊர்ல இருக்கும்.
“நீ ஏன் தயங்கறேன்னு தெரியுது மச்சி. தாய் மாமன் வீட்ல தங்கியிருக்கே. மாமனுக்கு ஒண்ணோ, ரெண்டோ பொண்ணுங்க இருக்கும். நாங்க வந்தால், அவங்களை சுட்டுகிட்டு வந்துருவோம்ன்னு பயப்படற… அப்படித் தானே?’ என்றான் ஜோகி.
நண்பர்கள் சிரித்தனர்.
ஜீவா முகம் மலர்ச்சியில்லாமல் இருந்ததால், அந்த பயணம் கேரளா நோக்கி அமைந்தது.
பசுமை பாய் விரித்து, குளிர்ச்சி போர்வையாக இருந்த அந்த மலையாள நாட்டின் முக்கிய ஸ்தலங்களை, சுற்றிக் காட்டினான் ஜோகி. ஓட்டல் வியாபாரத்தில் வந்த லாபத்தில், அவன் அப்பா வாங்கிப் போட்டிருந்த பண்ணை வீடு, தாத்தா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன டீ எஸ்டேட் என்று அழைத்து போய், போகும் இடங்களில் எல்லாம் புட்டும், நேந்திர பழமும் தின்ன வைத்து, திக்கு முக்காட வைத்தான்.
அடுத்து திருச்சி. பீட்டரின் வீட்டில், கனிவான உபசரிப்பு. பியானோ வாசித்து மகிழ்வித்தாள் பீட்டரின் தங்கை லிசா. விருந்தில், வீட்டில் தயாரித்த வைன் பரிமாறினர். சர்ச்சுடன், உச்சிப் பிள்ளையார், திருவரங்கம், காவிரி, கல்லணை என உல்லாசம்.
சேலம் டிரிப்பும், அப்படியொரு இனிமையான பயணம் தான். ரமணியின் அப்பாவுக்கு, ஏற்காட்டில் ரிசார்ட் இருந்தது. மலை வாசத்துடன் முடிந்தது. அடுத்து ஜீவாவின் முறை; தவிர்க்க முடியவில்லை. படிப்பும் இந்த வருடத்தோடு முடிவதால், தவணை சொல்லவும் வழியில்லை.
அவன் அழைக்காவிட்டாலும், அவர்கள் வருவதில் உறுதியாக இருந்தனர். “அப்படியென்ன சுட்டெரிக்கும் சஹாராவா அது. அதையும் பார்த்து விடுவோம்…’ என்றனர்.
“சரி, வாங்க…’ என்று அழைத்து வந்து விட்டான்.
சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது, மணக்க மணக்க சமையல் தயாராக இருந்தது. ஒரு பிடி பிடித்ததும், தென்னந்தோப்பில் பாய் விரித்து படுத்தனர். ஆனந்தம், பரமானந்தம். ஜீவா பக்கம் திரும்பினான் சுந்தர்.
“”ஜீவா… நானும் ஆரம்பத்திலிருந்து கவனிச்சுகிட்டுத் தான் வர்றேன். எங்க வற்புறுத்தலுக்காகத் தான் நீ உங்க ஊருக்கு எங்கள கூட்டிகிட்டு வந்த, தெரியும். ஆனால், நீ எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்கே. எங்களால் உனக்கு சங்கடமா சொல்லு… இப்பவே பஸ் ஏறிப் போயிடறோம்,” என்றான்.
திடுக்கிட்டான் ஜீவா.
“”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க முதன்முதலா பார்க்கிறதால, எல்லாம் புதுசா தெரியுது. எனக்கு பார்த்து, பழகிப் போனதால ஆர்வமில்லை. அதான்.”
“”இல்லடா… அதுக்கும் மேல ஏதோ ஒரு சங்கடம் உன் மனசுல இருக்குது. நீ சொல்லலைன் னாலும், உன் முகம் சொல்லுது. நண்பர்கள் கிட்ட கூட பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு அப்படி என்னடா அந்தரங்க சோகம்?” என்று, கரிசனத்தோடு கேட்க, ஜீவாவுக்குள் சோகம் உடைப்பெடுத்துக் கொண்டது.
“”வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு துரதிருஷ்டசாலியின் சோகம்டா… சொன்னால் புரியுமா, தெரியலை…” என்றான் ஜீவா.
“”இன்னைக்கு நான் ஒரு அகதி. ஒருத்தர் வீட்டில் அடைக்கலமாகி வாழ்ந்து கிட்டிருக்கேன். எனக்குன்னு இங்கே அரை அடி மண்ணும் சொந்தமாயில்லை. ஒரு செடி கொடி கூட எனக்கில்லை. ஆனால், இருபது வருடத்துக்கு முன்னால், இந்த ஊரில் முக்கால் பங்கு சொத்துக்கள் எங்களுக்கு சொந்தமா இருந்ததுன்னு சொன்னால் நம்ப முடியுமா… ஆனால், அதுதான் உண்மை.
“”நெல்லும், கரும்பும், கடலையும், உளுந்தும்ன்னு விளைஞ்சுகிட்டிருந்தது. எல்லா நிலத்தையும் நேரடியா பயிர் செய்ய முடியாததால, நிறைய பேருக்கு குத்தகைக்கு விட்டிருந்தோம். நாலாபுறமும் வருவாய் இருந்ததால், உறவுகள் வருவது அதிகம். தினமும் எங்க வீட்ல, விருந்து நடந்தபடியே இருக்கும். தாத்தா, அப்பாவுக்கெல்லாம் நல்ல செல்வாக்கு. டவுனுக்கு எந்த அதிகாரி புதுசா வந்தாலும், இங்க வந்து, அப்பா, தாத்தாவை பார்த்துட்டுத் தான் போவாங்க…
“”பத்து வயசு வரை, கஷ்டம்னா என்னன்னு எனக்கு தெரியாது. பட்டு சட்டை தான் போடுவேன். கழுத்துல சங்கிலி. கையில் வளையம். ஸ்கூலுக்கு கூட்டிகிட்டு போக ஆள். ராஜ போகம்…” என்று நிறுத்தி, மூச்சுவிட்ட ஜீவா, தலையை குலுக்கிக் கொண்டு, “”எல்லாம் போச்சு… சீட்டுக்கட்டு கோபுரம் காத்துக்கு சரிஞ்சாப்ல, பட்டுன்னு எல்லாமே ஒரு நாள் காணாம போச்சு… தாத்தா, அப்பா, அடுத்தடுத்து அதிர்ச்சியில செத்துட்டாங்க.
“”வரவு செலவு பார்க்காமல் ஆடம்பரமாய் வாழ்ந்தது ஒரு புறம்; எல்லாரையும் நல்லவர்கள்ன்னு நம்பினது இன்னொரு புறம். கடன் வளர்ந்து போச்சு. பாதி சொத்து கடனுக்கு போச்சு; மீதியை சுத்தியிருக்கிறவங்க சுருட்டிக்கிட்டாங்க. நானும், அம்மாவும் நடுத்தெருவுக்கு வந்துட்டோம்.
“”எனக்காக அம்மா, மாமா வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சுகிட்டு, வீட்டு வேலை செய்துகிட்டு கஷ்டப்படறாங்க… படிப்பு முடிச்சு ஒரு வேலை கிடைச்சுதுன்னா, அம்மாவை அழைச்சுக்கிட்டு எங்காவது கண் காணாத ஊருக்கு போயிடுவேன். சொந்த கிராமம் தான்; ஆனால், எனக்கு அந்நியமாயிடுச்சு. இங்க கால் வைக்கும் போதே, ஒரு ஏமாற்றம், சோகம் என்னை கவ்விக்கும்.
“”ஒவ்வொரு இடமும் பார்க்கும் போது, இது எங்கள் வயல், இது எங்காவது தோட்டம், எங்கள் மண் அப்படிங்கிற நினைப்பு வரும். ஆனால், அது இப்ப என்கிட்ட இல்லை. வேற யார் யார்கிட்டயோ இருக்கு. பார்க்க வேதனையா யிருக்கும். ராஜ்யத்தை இழந்தவன், அதை திரும்பிப் பார்க்கும் போது, அவனுக்கு என்ன வேதனை ஏற்படுமோ, அப்படியொரு வேதனை…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.
நண்பர்கள் மத்தியில் மவுனம். சிறிது இடைவெளிக்குப் பின், சுந்தர் சொன்னான்… “”சோகம் தான். ஆனால், இந்த நிலைமையை மாத்த முடியும். நாட்டை இழந்த அரசன், அதை திரும்பிப் பார்க்கும் போது, வேதனையாகத்தான் இருக்கும். கொஞ்சம் மாத்தி யோசிச்சான்னால் அந்த சோகம், வேகமாயிடும். அதாவது, நாடு கைவிட்டு போயிடுச்சேன்னு கலங்காமல், இழந்த நாட்டை எப்படியும் மீட்டே தீருவேன்ற எண்ணத்தை வளர்த்துகிட்டால் போதும், பிறகு இந்த மண்ணை பார்க்கும் போதெல்லாம், இதை மிதிக்கும் போதெல்லாம், இதை மீட்கறதைப் பத்தி யோசிப்பான். அதுக்கு என்ன வழின்னு ஆராய்வான். என்ன செய்யணுமோ, அதை செய்ய ஆரம்பிச்சுடுவான். உத்வேகம் வரும்; உற்சாகமும் வரும். அதை நோக்கி அவன் பயணிக்க ஆரம்பிச்சுடுவான். ஓடி ஒளிய நினைக்க மாட்டான். எதிர்த்து ஜெயிக்கப் பார்ப்பான். அப்ப அவன் சங்கடம், சவாலாக மாறும். யார் சவாலை எதிர்கொள்கின்றனரோ, அவர்கள் சாதனை செய்வர். புரியுதா,” என்றான்.
முகத்தில் சுளீரென்று தண்ணீர் அடித்து விழிக்க வைத்தது போலிருந்தது ஜீவாவுக்கு. நிமிர்ந்தான்.
“”ஆமாம்டா ஜீவா… சுந்தர் சொல்றது ரொம்ப சரி… நீ ஊரை விட்டு போகாதே… இங்க நின்னு ஜெயிக்கப் பாரு. ஒரு பிடி மண்ணை மீட்டெடுத்தாலும், அது சாதனை தான். பழையபடி, நிறைய சொத்து, ஆடம்பர வாழ்க்கை வேண்டாம். ஆனால், அளவான சொத்து சுகத்துடன் வாழறது சாத்தியம் தான். முயற்சி பண்ணு. அழகான இந்த ஊரை, இங்கே வாழ்கிற சுகத்தை நிரந்தரமா இழந்துடாதே…” என்றனர்.
ஒப்புக் கொண்ட ஜீவாவுக்கு இனி அந்த மண்ணில் இருக்க தயக்கமிருக்காது.

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *