மழையில் ஓர் கிழவர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 4,816 
 

இரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழை மனமிரங்கிக் கடந்த அரை மணி நேரமாக சிறு தூறலாக மாறியிருந்ததை வரவேற்றான் சங்கர்.

சே, இதென்ன போர்! தொடர்ந்த மழையின் ஓயாத ஓசை, பகலிலும் இருள் கவ்வினாற்போன்ற சோம்பல் சூழ்நிலை, தெருவில் முழங்கால் நீரில் சளக், சளக்என்று சப்தம் ஏற்படுத்தி
நடந்து போகிற மனிதர்கள், உடம்பை ஊடுருவும் குளிர்…

சங்கர்!

பை ஒன்றையும் பணத்தையும் நீட்டினாள் அம்மா. “ராத்திரி சமையலுக்கு வீட்டில் அரிசி இல்லை சங்கர், சித்தே செட்டியார் கடை வரைக்கும் போயிட்டு வர்றியாப்பா?”

மௌனமாக அம்மா நீட்டியவற்றைப் பெற்றுக்கொண்டு எழுந்தான்.“நம்ம வீட்டுக் குடை, கம்பி ஒடைஞ்சு போச்சு. பக்கத்து வீட்டுக் குடையை சித்தே வாங்கிண்டு போ!” என்ற அம்மாவுக்கு, “சரிம்மா!” என்று கூறியபடி தூறலில் நனைந்து பக்கத்து வீட்டுப் படியேறவும், “வா சங்கர்!” என்று கதவருகில் நின்ற லலிதா இவனை வரவேற்கவும் சரியாக இருந்தது.

“ஸாரி சங்கர், இருந்த ஒரு குடையையும் அப்பா எடுத்துக்கொண்டு போயிட்டார்!” என்று அவள் சங்கடப்பட்டுக் கூற, “பரவாயில்லை லல்லி, மழை விட்டிருக்கு!” என்று கூறிவிட்டு வீதியில் இறங்கினான்.

“இந்த லலிதாதான் எவ்வளவு நல்லவள்! ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரின் மூத்த மகள். தாலுகாபீசில் டைப்பிஸ்ட் வேலை பார்த்து மொத்தக் குடும்ப்த்தையே நிர்வகிக்கிறாள். எனக்காக தினமும் பத்திரிகையில் தேவை பகுதியைப் படித்து, சங்கர், இன்னிக்கு ரயில்வே சர்வீஸ் கமிஷன் விளம்பரம் வந்திருக்கு, அப்ளை பண்ணிப் பாரேன்! – இப்படித் தினம் ஏதாவது ஒரு விளம்பரம் பற்றிக் கூறுவாள். அவனுக்கும் ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தது. இப்போதெல்லாம் அந்த நம்பிக்கை செத்து விட்டது. சிபாரிசோ, லஞ்சம் கொடுக்கப் பணமோ இல்லையேல் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு” என்று நினைக்கத் தொடங்கினான்..

திடீரென்று மழை வலுக்கத் தொடங்கியது. சாலையோரம் போட்டுப் பிரிக்கப்படாதிருந்த ஒரு பந்தலை நோக்கிப் பாய்ந்து ஒதுங்கினான்.

பூட்டியிருக்கும் கட்டிடத்தின் முன்பாக எதற்கோ போடப்பட்ட பந்தல். கீழே மணல். முன்னால் காம்பவுண்டுச் சுவர் போல் தென்னங்கீற்றுகளை கொண்டு சுவர் எழுப்பியிருந்தார்கள். திருமணம் அல்லது வேறு நிகழ்ச்சி ஏதும் நடந்திருக்குமோ? யோசித்தபடியே உள்பக்கம் பார்த்தவன் திடுக்கிட்டான்.

“என்ன இது, இவளவு நேரம் பார்வையில் பட்டது மனதில் படாதது எப்படி?”

ஓர் கிழவர் அலங்கோலமாக ஒரு மூலையில் விழுந்து கிடந்தார். வேட்டி, சட்டை. பலநாள் தாடி. அவர் உடம்பில் பாதி வரை ஓடும் மழை நீரில் அமிழ்ந்து கிடக்க, “ஐயோ! பெரியவர் செத்து விட்டாரா?” மனது பக் பக்கென்று அடித்துக்கொண்டது.

சங்கர் பரபரப்பாகக் கிழவரின் அருகில் சென்று அவரின் நாசியில் கைவைத்துப் பார்த்தான். சன்னமாக சுவாசம் வந்தது. பசி மயக்கத்தாலோ, ஜுர வேகத்தாலோ அவர் கண்மூடிக் கிடந்தார். மணிக் கணக்காக, அல்லது மழை துவங்கிய இரண்டு நாட்களாக அவர் அப்படியே கிடந்திருக்கலாம்…

நீரில் கிடந்த அவரைத் தூக்கி கட்டிடத்தை ஒட்டிய மேட்டுப் பகுதியில் கிடத்தினான். வேட்டியைப் பிழிந்து விட்டான். கை கால்களைத் தேய்த்து சூடு ஏற்படுத்தி முதல் உதவிகள் செய்தான். “ஐயா, ,ஐயா!” என்று கூப்பிட்டான். கிழவர் கண் திறக்கவில்லை. குளிரில் வெளுத்துப் போன அவர் உடம்பைப் பரிதாபமாகப் பார்த்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

எதிர்ச்சாரியில் ஒரு டீக்கடை தெரிந்தது. அவரைச் சுவர் ஓரமாகச் சாய்த்து அமர் வைத்துவிட்டு, வேகமாக டீக்கடைக்குப் போனான். சூடாக ஒரு தளரில் வெந்நீரும் ஒரு கிளாசில் தேநீரும் வாங்கிக்கொண்டு திரும்பினான். வெந்நீரால் ஜாக்கிரதையாக கிழவரின் முகத்தைக் கழுவித் துடைத்தான். டீயை கிழவரின் வாய்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டான். நல்ல பசியாக இருக்க வேண்டும். அந்த டீ முழுவதும் உள்ளே போய்விட்டது. கண் விழிக்கவில்லையே தவிர, கிழவருக்குப் பிரக்ஞை இருந்தது.

லேசாக அசைந்தார்.

டீ கிளாஸையும் தம்ளரையும் கொண்டு கொடுத்துவிட்டுப் பக்கத்திலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோவைப் பிடித்து வந்தான். “கவர்மெண்டு ஆஸ்பத்திரியா, அம்பது ரூவா கொடுப்பியா?” என்று கேட்டார் ஆட்டோ டிரைவர். கையில் அரிசி வாங்க அம்மா கொடுத்த பணம் இருந்த தெம்பில் “சரி” என்றான் சங்கர்.

ஆட்டோக்காரரின் துணையோடு கிழவரை ஆட்டோவில் ஏற்றி, இவனும் ஏறினான். மருத்துவமனை வாசலில் இறங்கி அந்த முதியவரை அவசர சிகிச்சைப் பகுதி வரை தூக்கிவர உதவிய ஆட்டோ டிரைவர் சங்கர் நீட்டிய பணத்தை வாங்க மறுத்தார்..

“இன்னா ஸார், நீ? யாரோ ஒரு பெரியவருக்காக நீ இம்மாம் பாடுபடறப்ப, அதுக்குக் காசு வாங்கினா நான் என்னா மனுசன்? நம்மால முடிஞ்ச உதவியை, முடியாதவங்களுக்குச் செய்யறதுக்காகத்தான் கடவுள் நம்மப் படைச்சிருக்காரு, இல்லியா?” என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாக்காரர் கிளம்பியபோது மனசு சிலிர்த்தது சங்கருக்கு.

அங்கிருந்த ஒரு பெஞ்சில் கிழவரைப் படுக்க வைத்துவிட்டு டாக்டரைத் தேடி அவசரமாக அவருடைய அறைக்குள் நுழைந்தான் சங்கர்.

ஒரு ஆண் டாக்டரும், பெண் டாக்டரும் சுவாரஸ்யமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இவன் பரபரப்பாக நுழைந்ததும், பேச்சை நிறுத்திவிட்டு, இவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.

பரபரப்புடன் சொன்னான் சங்கர்:

“எக்ஸ்கியூஸ் மி டாக்டர்! வடக்கு வீதியில் ஒரு ஓல்ட்மேன் மழையில் ரொம்ப நேரமாக அன்கான்ஷியஸாகக் கிடந்தார். அவரைக் கொண்டு வந்திருக்கேன். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஸார்!”

“டீசன்ஸி தெரியாத ப்ரூட்! இது ஆஸ்பத்திரியா, இல்ல சத்திரமா ? திறந்து கிடந்த வீட்ல எதுவோ நுழைஞ்ச மாதிரி, விடு விடுன்னு வர்றியே, நான்சென்ஸ்!” என்று டாக்டர் கத்தி, “கெட் அவுட்!” என்று வாசலை நோக்கிக் கை காட்டினார். அந்தப் பெண் டாக்டர் `களுக்’கென்று சிரித்தாள். சங்கரின் கண்ணில் நீர் துளும்பி விட்டது. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்புடன் நின்றவன் கண்ணில், பளிச்சென்று வெள்ளுடை அணிந்த ஒருவர் பத்துப் பதினைந்து பேர் புடைசூழ சற்றுத் தூரத்தில் வருவது தெரிந்தது. சங்கரின் தந்தைக்கு நண்பர் அவர். தொகுதியின் எம்.எல்.ஏ.வான களிப்பழகன்!

வேகமாகப் பாய்ந்து அவர் முன் நின்று இருகரம் கூப்பினான். வேலை தேடும் முயற்சியில் அப்பா இவனைப் பலமுறை அவரிடம் அழைத்துச் சென்றிருந்த பரிச்சயம். “அட, திருமலையோட ஸன் சங்கர்! என்னப்பா இங்கே வந்திருக்கே? ஊட்ல யாருக்கச்சும் ஒடம்பு சரியில்லையா என்ன?” என்று சங்கரிடம் கேட்டார் களிப்பழகன். எம்.எல்.ஏ.

“ஒண்ணுமில்ல ஸார். நம்ம வடக்கு வீதி அர்பன் பேங்க் பக்கத்துல ஒரு கட்டிடத்து முன்னால பெரியவர் ஒருத்தர் மழைத் தண்ணியில ரொம்ப நேரமாக் கெடந்து நினைவு தப்பிப் போயிருக்கார். யாரு எவருன்னு எனக்குத் தெரியாது. அவரை ஒரு ஆட்டோவுல ஏற்றிகிட்டு வந்தேன். உடனே சிகிச்சை செஞ்சா உயிர் பிழைச்சுக்குவார். நீங்கதான் டாக்டர்கிட்டே சொல்லி எப்படியாவது…” என்றான் சங்கர்.

“தம்பி சங்கர், நீ எப்பேர்க்கொத்த நல்ல காரியம் செஞ்சிருக்கே தெரியுமா, நீ லட்சத்துல ஒர்த்தன்! என்று அவர் வியந்தார். பிறகு திரும்பி, ஏம்பா, டூட்டி டாக்டர் எங்கே?” என்று யாரிடமோ சத்தம் போட்டார்.

சற்றுமுன் சங்கரைப் பார்த்துக் கூச்சல் போட்ட டாக்டர் வேகமாக வெளியில் ஓடி வந்தார். எம்.எல்.ஏ.வைப் பார்த்ததும் பணிவுடனும் குழைவுடனும் கும்பிடு போட்டார். “ஐயா வரணும், வரணும்!” என்று பல்லைக் காட்டினார்.

“இருக்கட்டும் இருக்கட்டும். இந்த பேஷண்டை உடனே செக்கப் பண்ணுங்க!” என்றார் எம்.எல்.ஏ.

டாக்டர், நர்ஸ்கள் எல்லோரும் பரபரப்புடன் செயல்பட்டார்கள். இஞ்செக்ஷன் போடப்பட்டது. “ஸார் உயிருக்கு ஆபத்தில்லே. இப்பவே எமர்ஜன்சி அட்மிஷன் போடறேன். ஒருவாரம் இன்பேஷண்டா இங்கே தங்கியிருக்கட்டும். நாங்க பாத்துக் கிறோம்!” என்றார் டாக்டர் பணிவுடன். சங்கருக்கு நல்ல மூச்சு வந்தது.

“ரொம்ப நன்றி எம்.எல்.ஏ ஸார், டாக்டர் ஸார்!” என்று இருவருக்கும் நன்றி சொன்னான் சங்கர். சிறிது நேரம் கழித்து நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினான் சங்கர்.

அன்றிரவு முழுவதும் எம்.எல்.ஏ. களிப்பழகனின் பெருந்தன்மை குறித்துப் பெருமைப்பட்டான் சங்கர். அம்மா, அப்பா, பக்கத்து வீட்டு லலிதா எல்லோரிடமும் நடந்தவற்றைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தான்.

மறுநாள் காலை.

கையில் தினசரிப் பத்திரிகையோடு பக்கத்து வீட்டு லலிதா வநதாள்.

“சங்கர்! நேற்று நீ ஒரு கிழவரைக் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் கொண்டு போய் உயிர் பிழைக்க வைத்ததாகச் சொன்னாயே, இன்னிக்கு அது நியூஸ் பேப்பரிலேயும் வந்துடுச்சு தெரியுமா?” என்று கூறிச் சிரித்தாள்.

சங்கருக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய முந்தின நாள் செய்கைகள் அதற்குள் பத்திரிகையில் பிரசுரமாகி விட்டதா? எப்படி..? யார் செய்தி கொடுத்தார்கள்? ஒருவேளை பத்திரிகை நிருபர், எம்.எல்.ஏ. களிப்பழகனுடன் கூடவே வந்திருப்பாரோ? நடந்தனவற்றை நேரில் கண்டு அவர் செய்தியை அனுப்பியிருப்பாரா?… ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும்!

தினசரியை வாங்கி லலிதா காட்டிய இடத்தைப் படிக்கத் தொடங்கினான்:

குளிரில் விறைத்துக் கிடந்த கிழவர் உயிர் தப்பினார்! என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பு கண்ணில் பட்டது. தொடர்ந்து படித்தான் சங்கர்:

வடக்கு வீதியின் ஒரு மூலையில், மழை நீரில், மயங்கிக் கிடந்த ஓர் முதியவரைப் பார்த்துப் பதறி, மனிதாபிமானத்தோடு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் எம்.எல்.ஏ. களிப்பழகன்!

தன்னலம் கருதாது ஓர் முதியவருக்காக இரங்கி, அவரின் உயிரைத் தக்க சமயத்தில் பாதுகாத்துப் பிழைக்க வைத்த செம்மல் அவர்… அவரைப் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். – என்று எம்.எல்.ஏ.வுக்குப் புகழாரம் சூட்டியிருந்தது அந்தத் தின ஏட்டின் செய்தி!

லலிதா சிரித்தாள். அவள் சிரிப்புக்கு இப்போது நன்றாக அர்த்தம் புரிந்தது சங்கருக்கு!

(அலிபாபா வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *