Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மருத்துவர் எங்கே..?

 

எப்பொழுதாவது ராஜியைப் பற்றி பேச்சு வந்தால் உடனே சித்தி என்னைக் காண்பித்து இவன்தான் சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து அவள் உயிரை காப்பாற்றினான் என்பார்.

ஆனால் உண்மை உலகுக்கு தெரிய வேண்டாமா? இதோ நடந்தது இதுதான்…..

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் இருக்கும். ஒரு திங்கட் கிழமை காலை நேரம் சரியாக மணி 8:30. அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் உடை உடுத்திக் கொண்டிருந்த என்னிடம் அம்மா தயங்கி தயங்கி வந்து

“டேய் ராஜிக்கு உடம்பு சரியில்லை…..” என்றாள்.

நான் கொஞ்சம் முசுடு முன்கோபி யாதலால் என்னுடன் பேசுவதற்கு சற்று தயங்குவாள்….. எப்போதும் நம் கோபத்தையும் வீரத்தையும் நம் அம்மாவிடம் தானே காண்பிப்போம். என் மன ஒட்டமெல்லாம் என் அலுவலக வேலையைப் பற்றியே இருந்தது… அங்கே செய்ய வேண்டிய வேலைகள் என்னை பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது… மனதுள் பொருமிக் கொண்டே

“ம்… ம்…. பார்க்கலாம்” என்றேன் அம்மா பேசாமல் சென்று விட்டாள்.

இந்த இடத்தில் ராஜியைப் பற்றி சொல்லி விடுவது நல்லது. ராஜி என் சித்தியின் பெண். சித்தப்பா மத்திய அரசில் வேலை பார்ப்பதால் கடைசியாக கிடைத்த இடமாற்றத்தின் படி அஸ்ஸாமில் பணி. சித்தி தன் மற்ற

இரு பிள்ளைகளுடன் அவருடன் இருக்கிறாள். ராஜி எங்களுடன் தங்கி அவளுடைய கல்லூரிப் படிப்பை தொடர்கிறாள். நான் தான் அவளுடைய லோக்கல் தாதா, அதாவது கார்டியன்.

நான் தொடர்ந்து அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். கிளம்புவதற்காக காலணி அணியும் போது ராஜி ஓடிச் சென்று குளியல் அறை வாசலிலேயே வாந்தி எடுத்தாள். அம்மா ஓடிச் சென்று அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்… நானும் அரை மனதோடு காலணியை உதறி விட்டு அவள் அருகில் சென்றேன்…

மிகவும் துவண்டிருந்தாள். வயிறு அதிகமாக வலிப்பதாகக் கூறினாள்.. ராஜி இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அப்பென்டிசிடீஸால் அவதியுற்று இராயப்பேட்டை பொது மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்றாள். (மத்திய அரசு ஊழியர் குடும்பத்துக்கு சிறப்பு வசதிகள் உண்டு). சித்தி சித்தப்பாவும் உடன் இருந்தார்கள். எதோ காரணத்தால் அப்பென்டீசிட்டீஸுக்கு அறுவை சிகிச்சை செய்ய வில்லை. ஒரு வாரத்தில் மருந்திலேயே குணமாகி வந்துவிட்டாள்.

இப்பொழுது என் மன ஓட்டத்தில்…

“ஆலுவலக வேலையா அல்லது ராஜியின் மருத்துவ தேவையா?

அப்பென்டீசிடீஸ் திரும்பியதா – வேறு ஏதாவது வயிற்றுக் கோளாறா? ”

முதல் முடிவாக ஆப்பீசை பின்னுக்குத் தள்ளினேன்…

நான்கு வீடு தள்ளி ஒரு புகழ்பெற்ற சிறப்பு மருத்துவர் வீடு இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர்

வீட்டுக்கு இராஜியை கூட்டிச் சென்றேன்… (அவர் ஒன்றுமில்லை வெறும் அஜீரணம் தான் எனறு ஏதாவது மருந்து கொடுத்தால் நான் வேலைக்கு ஓடலாம் என்ற எண்ணத்தில்). வீட்டில் ஓய்வாக வேட்டி பனியனில் இருந்த டாக்டர் ராஜியை பரிசோதித்த பின்:

“இராஜிக்கு அப்பென்டீசிடீஸ் மிக முதிர்ந்த நிலையில் இருக்கிறது, உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்” என்றார். அவர் ஒரு தனியார் மருத்துவ மனையில் (அந்தக் காலத்திலேயே அதிகம் காசு பிடுங்கும்) பணியாற்றி வந்தார்.

நான் “உங்கள் மருத்துவ மனைக்குச் செல்லலாமா அல்லது ஏற்கனவே அவளுக்கு சிகிச்சை அளித்த இராயப்பேட்டை மருத்துவ மனைக்குச் செல்லலாமா” என்று வினவ,

அவர் திடமாக “நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது அவளுக்குத் தேவை உடனடி அறுவைச் சிகிச்சை…. காலம் கடத்தாதீர்கள்”

உடனே நான் ஒரு ஆட்டோ பிடித்து அவளுடன் இராயப்பேட்டை மருத்துவ மனைக்கு சென்றேன். நல்ல வேளை அவளுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த அந்த இளம் மருத்துவர் இருந்தார். பரிசோதித்த மருத்துவர் உடனே ராஜிக்கு அறுவை சசிகிச்சை செய்தாக வேண்டும். இங்கே என்றால் நான் தான் அறுவைச் சிகிச்சை அளிப்பேன் என்று உறுதியளிக்க முடியாது, அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தீர்கள் என்றால் நானே வந்து உடனே அறுவைச் சிகிச்சை செய்கிறேன் என்றார்.

“சிலவு…..” என்று இழுத்தேன்.

“கவலைப் படாதீர்கள் அதிகமாக ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். எனக்கு அவர் மீது ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட,

உடனே எனது அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு யார் மூலமாவது தேவையான பணத்தை அனுப்பச் சொல்லிவிட்டு அநத தனியார் மருத்துவ மனையில் ராஜியை சேர்த்தேன். மணி சுமார் மதியம் 12:00 இருக்கும். மருத்துவர் தொலைபேசியில் கூறியிருப்பார் போல். எங்களைப் பார்த்தவுடன் துரிதமாக ராஜியை அறுவைச் சிகிச்சைக்கு தயார் செய்தனர். சுமார் மதியம் இரண்டு மணிக்கு பரபரப்பாக மருத்துவர் வந்தார். அறுவைச் சிகிச்சை நடந்தது, ஒரு இரண்டு மணி நேரம் கழித்து எங்களிடம் அறுவை செய்து எடுத்த அப்பென்டீசை காட்டினார். செவிலியரிடம் ஏதோ கூறிவிட்டு அவசரம் அவசரமாக சென்று விட்டார். எங்களிடம் முகம் பார்த்து எதுவும் பேசவில்லை. நான் என் மனைவியை ராஜிக்குத் துணைக்கு வர சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன்.

அடுத்த நாள் ராஜி மெல்ல குணமாக ஆரம்பித்தாள்.

ஆனால் மருத்துவர் வரவே இல்லை.

எல்லாம் செவிலியர்களே கவனித்துக் கொண்டனர்.

மருத்துவர் எங்கே என்றால் சரியான பதில் இல்லை….

அடுத்த நாளும் செவிலியர்களே கவனித்துக் கொண்டனர். மருத்துவர் வரவே இல்லை. எங்கள் கேள்விக்கும் மழுப்பலே பதிலாக இருந்தது.

மூன்றாம் நாள் சற்று காட்டமாக “என்ன மருத்துவர் வருவாரா…. மாட்டாரா….?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவர் வரமாட்டார் உங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிவிட்டார். நீங்கள் நோயாளியை வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என்றனர். மருத்துவர் வந்து பார்க்கவே

இல்லை. ஏன் மருத்துவர் வராமல் இருக்கிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் இல்லை. நாங்கள் அவரை இராயப்பேட்டை மருத்துவ மனையில் சந்தித்ததுதான். அவர் பெயர் மட்டும் தான் தெரியும். வேறு எந்த விவரமும் தெரியாது. என் மனதுக்குள் ஏகப்பட்ட குழப்பம் கேள்விகள்

மருத்துவமனை, அவர்களுக்குச் சேர வேண்டிய கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டனர்.

“டாக்டர் பீஸ்..,?” என்றேன்

உங்களை பத்து நாட்களுக்குப் பிறகு அவருடைய கிளினிக்கு வரச் சொன்னார், அப்பொழுது வாங்கிக் கொள்வார்.

“கிளினிக் எங்கே…?”

அவர்கள் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து கிளினிக்கின் முகவரியைத் தந்தனர். அடுத்த பத்து நாளைக்கு ராஜிக்கு அளிக்க வேண்டிய மருந்தின் விவரமும் கூறி அனுப்பி வைத்தனர்.

நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்…. நாளொரு மேனியாக ராஜி உடல் சிறிது சிறிதாக தேறிக் கொண்டு வந்தாள். ஒவ்வொரு நாளும் அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஓடிப் போன விசித்திர மருத்துவரைப் பற்றி கிண்டலும் கேலியுமாகவும், சற்று கோபமாகவும் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒரு வேளை போலி டாக்டரோ என்றும் கவலைப் பட்டோம்..

பத்து நாட்கள் மேல் ஆனது… ஒரு நாள் மாலை மருத்துவ மனையில் கொடுத்த முகவரிக்கு ராஜியை அழைத்துச் சென்றேன். அந்த முகவரியில் அவர் பெயர் பலகையை

கண்டதும் சற்று மனம் லேசானது. உள்ளே டாக்டர் இருந்தார். ராஜியைப் பார்த்து

“என்னம்மா எப்படி இருக்க?” என்று அழைத்துப் பரிசோதித்தார்….

“நல்லா ஆறிண்டு வருது… ப்ராப்ளம் ஒண்ணும் இல்லை…” என்றார்

என் மனத்துக்குள் பத்து நாட்களா அமுக்கி வைத்திருந்த கேள்வி வெடித்தது: “என்ன டாக்டர் நீங்க ஆப்ரேஷன் பண்ணிவிட்டு எட்டிக் கூடப் பார்க்கல…?”

அவர் புன்னகைத்து, “என்னப்பா செய்வது உன் தங்கைக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நேரத்தில் என் தாய் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாள், அவர் பிழைப்பார் என்று தோன்றவில்லை. அவருக்கு ப்ராண வாயு குழாய் மூக்கில் பொருத்தி விட்டு ஒரு இளம் உயிரையாவது காப்பாற்றலாம் என்று வந்தேன். உன் தங்கையின் ஆப்பரேஷன் நடந்து கொண்டிருக்கும் பொழுது என் அம்மா உயிர் பிரிந்து விட்டது. அதனால் தான்அடுத்த இரண்டு நாட்கள் வர முடிய வில்லை”

நாங்கள் இருவரும் வாயடைத்தப் போனோம். என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை சூழ்நிலையின் இறுக்கம் விடுபட மிகக் கடினமாக இருந்தது. அவரிடம் இரங்கலைத் தெறிவித்து மெல்ல ஆவருடைய ஃபீஸ் என்றோம். அவர் அதைப் பற்றி அதிகமாக கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஓரு சிறு தொகையை பெற்றுக் கொண்டு எங்களை அனுப்பி விட்டார்.

மிகவும் கனத்த மனத்தோடு வீடு வத்து சேர்ந்தோம்.

இப்ப சொல்லுங்க ராஜியை காப்பாற்றியது யார் என்று? 

தொடர்புடைய சிறுகதைகள்
"ராஜன்ஜி....?" வேகமாகப் போய்க் கொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் அழைக்க தன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். யார் என்பதற்குள் நாம் ராஜன் ஜி அவர்களை முழுவதுமாகப் பார்த்துவிடுவோம்.... என்ன வயது என்று தீர்மானிக்க முடியாத தோற்றம்.... முகம் முழுதும் கரு கரு தாடியில் ...
மேலும் கதையை படிக்க...
நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு அவரை உடனே பிடிக்கும். (அவர் என்றே இருக்கட்டும், ஏனென்றால் இந்தக் கதையின் முக்கிய பாத்திரம் – முக்கிய என்ன, கிட்டத்தட்ட ஒரே கதா பாத்திரம் – அப்ப தலைப்புக்கும் அவர் பெயரையே வைத்து விடலாம்…. ...
மேலும் கதையை படிக்க...
நண்பனிடம் தொலை பேசியில் பேசும் பொழுது இந்த வாரம் ஒரு சிறுகதை எழுத நல்லதொரு கரு கிட்டவில்லை என்று அங்கலாய்த்த பொழுது அவர்: "நீ ரொம்ப சாதாரணமா ஒரே நேர் கோட்டில் வர்ணித்து எழுதுகிறாய், நல்ல திருப்பங்களுடன் எழுதினால்தான் உன் கதை இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
வேலுவுக்கு தகவல் வந்த போது பதறி விட்டான்.  ஓரு கணம் என்ன செய்வது. ஏது செய்வது என்று புரியவில்லை.  மனைவிக்கு இரண்டாவது பிரசவம்....   மருதுவர் சொன்னபடி பார்த்தால் இன்னும் இரண்டு வாரம் தள்ளித்தான் ஆக வேண்டும்..... இப்பொழுதேவா.....?   உடனே மருத்துவமனை செல்ல ...
மேலும் கதையை படிக்க...
அந்த இரயில் வண்டி மைசூரிலிருந்து ஹூப்ளி சென்றுகொண்டிருந்தது. முன்னிரவில் புறப்பட்ட வண்டி அடுத்த நாள் காலைதான் செல்லுமிடம் சேரும். நானும் எனது மனைவியும் ஒரு அலுவலக நண்பரின் திருமணத்திற்குச் சிர்சி (Sirsi) சென்றுகொண்டிருந்தோம்... அலுவலக நண்பர்களின் திருமணங்களுக்குச் செல்வது என்பது ஒரு கடமையாகவே ...
மேலும் கதையை படிக்க...
குருஜி
வேலாயுதம்
திருப்பம்
ஏ டீ எம்
ஹம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)