மரண வாழ்க்கை

 

இரவு நான் தூங்கவில்லை. ஒரு தொலைபேசித் தகவலுக்காகக் காத்திருந்தேன். தோழர் ஒருவரின் மகன் வீடு இடிக்கும்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தான். நேரில் பார்த்தபோது சிரமம் என்று தோன்றியது. அடிவயிற்றில் உட்காயம். மூச்சு விட ஆக்சிஜன் பொருத்தியிருந்தார்கள். அடிவயிற்றின் இயக்கத்தைக் குறைப்பதற்கு என்று என் அறிவியல் படிப்பு என்னிடம் சொன்னது. ஆண்குறியில் குழாய் பொருத்தி சிறுநீரை நெகிழி உறையில் சேமித்துக்கொண்டிருந்தார்கள். அதில் சேகரமானது சிறு நீர் அல்ல.. இரத்தம்…

அந்த அரசு மருத்துவமனையின் கல் படுக்கையில் அவன் முனகிக்கொண்டு கிடந்தான். தலைக்கு மேல் தொங்கிய கம்பிக் கொடியிலிருந்து தொங்கிய இரத்தப் பையிலிருந்து இரத்தம் இறங்கிக் கொண்டிருந்தது. இரத்த இழப்பை ஈடுகட்ட என்று மறுபடியும் என் மூளை முன்னுக்கு வந்தது.

சிறிது நேரத்தில் மருத்துவர்கள் வந்தார்கள். இரத்தப்பையின் உயரம் பற்றாது என்று ஒருவரை உயர்த்திக் கையில் பிடித்துக்கொள்ளச் சொன்னார்கள். சற்று நேரம் கழித்து அவனை ஸ்டூல் ஏறி நின்று பிடித்துக்கொள் என்றார்கள். இரத்தம் இறங்கும் வேகம் போதவில்லை.

அவன் தந்தை இதனையெல்லாம் எதிர்கொள்ள திராணியின்றி வெளியே சென்று அமர்ந்துவிட்டார். அந்த நேரம் தோழரின் மனைவி வந்து சேர்ந்தார். தாவலும் தள்ளாட்ட‌முமாக.. எனக்கு வேலை வந்துவிட்டது. முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு அவரை நெருங்கினேன். ‘தோ பாரு தாயி.. அழக்கூடாது.. அவங்கூட இருக்கும்போது சத்தம் கேட்டுச்சி…’

நிமிர்ந்த பார்த்து தலையசைத்தார் அவர். அவனது தலைமாட்டில் நின்ற அவரின் உதடுகள் துடிப்பது தெரிந்தது. நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

அவருடைய குடும்பத்தினருக்குத் தகவல் தருவது, தோழர்களுக்கு தகவல் அளிப்பது, அதில் உள்ள அமைப்பு முறைமை, அப்புறம் மருத்துவர்களின் அவசரத்துக்கு இடையிலும் நிலைமை பற்றி தகவல் தெரிந்துகொள்வது, எதிர்பாராத இந்த செலவுக்கு அந்தத் தோழரின் குடும்பம் ஈடுகொடுக்காது என்பதால் அதற்காக செய்ய வேண்டியது என்று என் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

இப்படி மரணத்தைக் கையாளும் தப்பு, மரணத்தைத் தவிர்க்கும் இல்லை.. மரண கணங்களில் வாழும் நிலைமை எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. துடிப்பவனின் துன்பத்தில் என் உதடுகள் துடித்தாலும் கல் போல இருந்து கொண்டு உலகத்தைக் கையாளும் வேலை. உங்கள் மனமும் உங்கள் மூளையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் தருணம் அது. விழுந்து புரண்டு அரற்றினால் நல்லது என்று உடலும் மனமும் கெஞ்சும்.

நிமிர்ந்துநில்.. முகத்தை இறுக்கிக்கொள். உதடுகளைக் கட்டுப்படுத்து.. மரணம் வருவதைத் தவிர்க்க வந்தால் எதிர்கொள்ள தயார் நிலை எடு என்று மூளை உத்தரவிடும். நான் பல சமயங்களில் எந்திரமாகவே இருந்திருக்கிறேன்.

நான் அப்பாவியாக மரணத்தை எதிர்கொண்டது என் தந்தையின் மரணத்தை. வயிற்று வலியால் துடித்த அவரை அந்த நள்ளிரவில் மாட்டுவண்டியில் கிடத்தி இருண்டு கிடந்த சாலைகளின் வழியே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். நான் வண்டியின் கீழே பொருத்தப்பட்டிருந்த அரிக்கேன் விளக்கின் ஒளியில் மாடுகளின் கால்கள் நிழலாக நடனமிடுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வண்டிக்காரரின் அருகே தொற்றிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

சில நாட்களில் அதே மாட்டு வண்டியில் அவர் உடல் திரும்பி வந்தது. வீடு முழுவதும் ஒப்பாரி ஒலி. நான் திண்ணையில் உட்கார்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை அழைத்தபோது போய் நெய்ப்பந்தம் பிடித்தேன். சுடுகாடு வரை நடந்தோம். நாட்டவாய்க்கால் கரையில் அவரைப் புதைத்தார்கள். என் தோளில் கலயத்தை வைத்து நடக்க வைத்து கலயத்தில் அருவாளால் ஓட்டை போட்டார்கள். என் முதுகில் நீர் தாரை இறங்கியது குறுகுறுப்பாக இருந்தது.

அதன் பின் எங்கள் வீட்டில் சண்டைகள் நடந்தன. 15 மாமரம், இரண்டு கூரை வீடுகள், ஒரு கடைக்கான சண்டை என்பது பின்னாட்களில் புரிந்தது. இந்த சண்டையின் போதெல்லாம், பசித்த வயிறோடு, பயந்துபோனவனாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். உறவினர்களையும் சொத்தையும் அப்போதே நான் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் என்பது பின்னாட்களில் புரிந்தது.

நான் உருண்டு புரண்டு அழுதது என் தாய் இறந்து போனபோதுதான். அவர் வாழ்ந்தவரை அவரைப் பெரிதாக நான் எடுத்துக் கொண்டதில்லை என்பதும், அவர் வாழ்ந்த துயர வாழ்க்கையில் என் கையாலாகா நிலையையும் எண்ணி அழுதேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போது கூட தனிமையில் அழுகிறேன்.

அதன் பின் நான் மரணங்கள் பலவற்றோடு இருந்திருக்கிறேன். என்னை உலுக்கிய மரணங்கள் சில. அது அப்படித்தான் நடக்கும் என்று எடுத்துக்கொண்டு பிணத்தோடு தொலைதூரம் பயணித்து உடலை ஒப்படைத்துவிட்டு உறவினர்கள் உருண்டு புரண்டு அழும்போது அப்பாடா வேலை முடிந்தது என்று நினைத்துக்கொண்ட மரணங்களும் உண்டு.

மறக்க முடியாத மரணங்களில் ஒன்று தோழர் சுப்புவின் மரணம். சாதி வெறியர்களால் அவர் வெட்டிக்கொல்லப்பட்டார். தனது சிற்றூரில் தலித்துகளுக்கான தனி டீக்கடை நடத்துவதில் துவங்கிய அவர் எங்கள் கட்சியில் இணைந்து ஊராட்சித் தலைவர் வரை உயர்ந்தார். ஆண்டைகளின் சதிமதியை எங்களால் வெல்ல முடியவில்லை. துடிக்கத் துடிக்க வெட்டிக்கொல்லப்பட்டார்.

அவர் மரணத்தின் பின்னர் அவரின் ஊருக்குச் சென்றிருந்தபோது அந்த ஊரை சாதிவெறியர்கள் சூழ்ந்துகொண்டார்கள். ஒரு கண்மாய்க் கரையில் தீவு போல அந்த ஊர். வெடித்துக்கிடக்கும் வயல்களின் அந்தப் பக்கம் எதிரிகள். எங்கள் தோழர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் வயல்களில் இறங்கி நின்றிருந்தனர். நீளமான அரிவாள்கள், தடிகள்.. ஈட்டிகள். வேறு சில தயாரிப்புகள்.

நானும் என் கைக்குக் கிடைத்த தடியுடன் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். ‘நீங்க போங்க தோழரே’ என்றார்கள் உள்ளூர் தோழர்கள்.

எப்படி போகமுடியும்..?

தொலைவில் கருவேலக் காட்டில் நடமாட்டம் தெரிந்தது. அவர்கள் முன்னேறவும் இல்லை. நாங்கள்பின் வாங்கவும் இல்லை. ஓரிருவரை சாய்க்காமல் சாய்வதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எதிரிகள் பாம்புபோல பின்வாங்கி மறைந்தார்கள். சாதி வெறியர்கள், ஆதிக்க வெறியர்கள் பொதுவாக மரணத்திற்குப் பயந்தவர்கள். பதுங்கியிருந்து தாக்கும் பாம்பு போன்றவர்கள். கண்களில் தென்பட்டால் அடிபட்டே சாகவேண்டும் என்ற மரண பயத்தை அறிந்தவர்கள்.

அப்போது நான் சென்னையில் இருந்தேன். திருமழிசை தொழிற்பேட்டையில் இருந்த கேரள சோப்புக் கம்பெனியின் தொழிலாளர்கள் 200-300 ரூபாய் சம்பளத்தை ஆயிரமாவது ஆக்கிவிட வேண்டும் என்று போராட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் சங்கத்தின் தலைவன் நான்.

அன்று காலை அந்த தொழிலகத்தின் நிர்வாகி என் வீடு தேடிவந்து பேசினார். வழக்கம்போலத்தான். ஏவாளை ஏமாற்றிய பாம்பின் சாகசம்தான். அவருக்குரிய மரியாதை அளித்து வெளியேற்றினேன். வாசல்படியில் நின்று என்னை மிரட்டினார். நான் வருத்தப்படுவேனாம். வருத்தப்பட என்ன இருக்கிறது?

அன்று மாலை நான் தொழிற்பேட்டையில் நுழைந்து நடந்தபோது என்னை நோக்கி பத்துபேர் கொண்ட கூட்டம் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அவர்கள் பின்னால், பாண்டியன் ஓடிவந்துகொண்டிருந்தார். அவர் சங்கத்தின் செயலாளர்..

‘தோழரே… ஒடிப்போயிடுங்க.. ஓடிப் போயிடுங்க..’ என்று பெருங்கூச்சலிட்டார். அந்த பத்து பேரை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்கள் அந்த எஸ்டேட்டில் சுமை தூக்கம் தொழிலாளர்கள். புரட்சியை பெயருடன் ஒட்ட வைத்துக்கொண்டிருந்த சாதிச் சங்கத்தில் உள்ளவர்கள். அவர்கள் கையில் விறகுக் கட்டைகள் இருந்தன.

எனக்குத் தெரிந்துவிட்டது. இதுதான் அந்த கணம். வெற்றியைத் தீர்மானிக்கும் கணம். ஒரு வேளை மரணத்தைத் தீமானிக்கும் கணமாகவும் இருக்கலாம். தெளிவாகவும் உறுதியாகவும் முன்னோக்கி நடந்தேன். பேண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி நடந்தேன். பேண்ட் பாக்கெட்டிற்குள் மிளகாய் பொடியை மடித்து வைத்திருப்பேன். நகரத்தில் ஆயுதங்களுடன் திரிவது சிரமம். பூனைப்படை எல்லாம் வைத்துக்கொள்ளவும் வாய்ப்பில்லை. இவர்களைப் போன்ற எதிரிகளுக்கு மிளகாய்ப் பொடியே போதும். ஆனால், அதற்கு வேலை வரவில்லை.

எனது பக்காவட்டிலிருந்த ஆலையின் சந்துக்குள்ளிருந்து பெண்கள் என்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சோப்புக் கம்பெனி சங்கத்தின் உறுப்பினர்கள். என்னைச் சுற்றிக் கொண்டார்கள். கருத்து, இளைத்துப்போன அந்தப் பெண்கள் என்னைக் கட்டிக்கொண்டார்கள். தடிகள் இறங்கின. ஆனால், ஒன்று கூட என்மேல்படவில்லை. தோழரே.. தோழரே என்ற குரல் மட்டுமே, அந்தப் பெண்களின் அரட்டல் மட்டும் என் காதுகளில் கேட்டுகொண்டிருந்தது. இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கிறது. கை ஒய்ந்துபோன அல்லது பெண்களின் அரணால் மிரண்டுபோன நாய்கள் குலைத்துக்கொண்டே திரும்பி நடந்தன. என்மீது பெண்களின் நகம் ஏற்படுத்திய சிராய்ப்பு மட்டுமே இருந்தது. நான்கைந்து பெண்களுக்கு மண்டை உடைந்திருந்தது. எனது ஜிப்பாவில் இரத்தம் கோலமிட்டிருந்தது. மரணத்தின்போதும் மறக்க முடியாதவை அந்தப் பெண் தொழிலாளர்களின் முகங்கள்..

மறுபடியும் நான் யந்திரமாகி காயம்பட்டவர்களைக் கணக்கெடுத்து, காவல் நிலையம் அப்புறம் மருத்துவமனை..

அதன் பின்னால், அங்கே சங்கம் உடைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ‘புரட்சி’ தொழிற்சங்க தலைவனின் கைங்கரியம் அது. ஆனாலும், தொழிலாளர்கள் வெற்றி பெற்றார்கள். சம்பளம் ஆயிரத்தைத் தொட்டது.

மரணம் மற்றொரு முறை என்னை நெருங்கி வந்தது. இந்த முறை மருத்துவமனையில்.

குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அறுவை சிகிச்சை நடந்தபோது மயக்க மருந்து கொடுக்க‌ப்பட்டநிலையிலும் மருத்துவர்கள் பேசிக்கொள்வது காதில் கேட்டது. லேசான கீறலுக்குப் பின்பு எனக்குப் பெரிதாக வலி தெரியவில்லை. அப்புறம் மருத்துவர் இறுதியாக என் பெயரைச் சொல்லி அழைத்தார். ‘சொல்லுங்கள்’ என்றேன்.

‘அதுதான் இந்த ஆள்’, என்றபடி அவர் விலகிச்சென்றது தெரிந்தது.

அப்புறம் நெடுநேரம் மௌனம். திடீரென்று நான் வேறுபாட்டை உணர்ந்தேன். சப்தங்கள் மழுங்க ஆரம்பித்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்பு சோடியம் விளக்கு அணைவது போல ஒளி பின்னோக்கிச் செல்ல இருள் சூழ ஆரம்பித்தது. நான் படுக்கையின் உள்ளே விழ ஆரம்பித்தேன். உள்ளே… மிகமிக உள்ளே.. மெல்ல.. சில நிமிடங்கள் அல்லது மணிகள் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு மெல்ல. காற்றில் உதிர்ந்து தரை நோக்கி தாலாட்டு போல இறங்கிச் செல்லும் சிறகு போல மிக மெல்ல.. என்னைச்சுற்றியும் வெட்டியெடுக்கும் அளவுக்கு இருள் இருந்தது. மென்மையான, அழகான சேறு போல என்னை உள்வாங்கிக் கொண்டிருந்தது..

எனக்குத் தெரிந்துவிட்டது.. இதுதான் மரணம். இது இவ்வளவு மென்மையாகவும் அழகாகவுமா இருக்கும்?

ஆனால், அது நிறைவுபெறவில்லை. மருத்துவர்கள் அவசரமாக நடமாடுவது தெரிந்தது. என் காலைத் தொட்ட மருத்துவர் மறுபடியும் பெயரைச் சொல்லி அழைத்தார். தடுத்து நிறுத்தப்பட்ட சிறகு போல நான் நிலைபெற்றிருப்பதை உணர்ந்தேன். ‘உம்’ என்று மட்டும் சொன்னேன்.

நான் மருத்துவமனையை விட்டுப் புறப்படும்போது மருத்துவர் சொன்னார். என் இதயத் துடிப்பில் பிரச்சனை இருக்கிறதாம். ஒரு துடிப்பு சற்று நொண்டியடிப்பதாக இசிஜி சொன்னதை அவர் கவனத்தில் வைத்திருந்தாரம். அதனால்தான் காப்பாற்ற முடிந்ததாம்.. புகையை விடும்படி என்னிடம் சொன்னார். நான் புகைவிடுவதை செய்துகொண்டிருக்கிறேன், இன்றுவரை.

அந்த அனுபவம் கட்சி வகுப்புகளில் பயன்பட்டது. உயிர் என்றால் என்ன? மரணம் என்பது என்ன? என்று விளக்குவதற்குப் பயனாயிற்று..

நானே மரணத்தைத் தேடிச்சென்றதும் நடந்திருக்கிறது. தற்கொலை செய்வது எப்படி என்று ஆய்வு செய்திருக்கிறேன். தற்கொலையைத் தோல்விக்குள்ளாக்கும் உடலியல் காரணங்கள் பற்றி படித்தேன். ஒரு முயற்சி செய்தும் பார்த்தேன். அது உண்மைதான் என்று நிரூபணமானது. மரணம் பற்றிய அச்சமின்மை மகத்தானது. உங்களை நீங்களே அனுபவித்து வாழ அது வேண்டும்.

ஆனால், மரணம் பற்றிய அச்சமின்மை ஆபத்தானது கூட. என் நண்பன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வில் அவனது உடலை இறக்கி கள பரிசோதனையை காவல்துறை மேற்கொண்டபோது நான் உடனிருந்தேன். அவன் உடைகளை களையச் சொன்னது காவல்துறை. அப்புறம் விரல் மோதிரத்தைக் கழற்றச் சொன்னது. அதனை நெருங்கியவர்கள்தான் செய்ய வேண்டுமாம். நெருங்கியர்கள் பலரும் மிரண்டு போய் ஒதுங்கி நின்றனர். நான் முயற்சி செய்தேன். அவன் உடலின் சில்லிப்பு என் விரல்கள் வழியாக நுழைந்து என் இதயத்தை அறைந்தது. நான் தரையில் விழுந்து கதறினேன். என்னால் முடியவில்லை…

மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது? பின்னர் மருத்துவர் ஒருவர் சொன்னார், அவன் பலமுறை முயற்சி செய்து பார்த்து பெர்பெக்ஷனை எட்டியிருந்தானாம். அவன் ஏன் சாகத்துணிந்தான் என்பது ஒரு பெரிய கதை. அதை அப்புறம் பேசலாம்.

நான் கிராமங்களில் கூட்டம் நடத்தும்போது என்னை முதிய பெண்கள் பலர் சூழ்ந்துகொண்டு ஓய்வூதியம் வாங்கித் தரக் கோருவார்கள். ஓர் ஆச்சரியம் என்னவென்றால், ஓய்வூதியம் கோரும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு.

அந்தப் பெண்களின் கதைகளை பொறுமையாகக் கேட்பது என் வழக்கம். அப்புறம் அவர்களின் சோகத்தை யார்தான் கேட்பார்கள்? அதிலிருந்து நான் தெரிந்துகொண்ட பெரிய செய்தி ஒன்று உண்டு. அவர்களுக்கு சாகத் தைரியம் இல்லை. அதனால்தான் வாழ்கிறார்கள்… மரணம் பற்றிய அச்சமே அவர்கள் வாழ்வதற்கான காரணமாக இருக்கிறது என்பதை அறியாத நமது நாட்டின் பொருளாதார அறிஞர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

இனியும் சொல்வதற்கு மரணம் பற்றி நிறைய இருக்கிறது. ஆனால், நேர‌மில்லை. இப்போதுதான் தொலைபேசி செய்தி வந்தது. இரவு 12 மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை காலை 5 மணிக்கு நிறைவு பெற்றதாம். நான்கு உள் அறுவை சிகிச்சை அத்துடன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை. பையன் பிழைத்துவிட்டான். இனி பிழைத்துக் கொள்வான் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம்.

இந்த சமயத்தில் இன்னொரு செய்தியை சொல்ல வேண்டும். அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தரும் திட்டம் வைத்திருக்கிறது. கட்டித் தருகிறார்கள். கமிஷன் போக, திருடியது போக எஞ்சியதில் கட்டித் தருகிறார்கள். கட்டப்படும் கட்டட‌ங்கள் சில ஆண்டுகளில் பல்லைக்காட்டும். அதன் பின்பும் அதற்குள் வாழ துணிந்தீர்கள் என்றால், மழைக்காலத்தில் மரணம் நிச்சயம். அதனால், வீட்டுக்கு வெளியே வாழ்ந்த குடும்பம் ஒன்றுதான் குளிர் பொறுக்க முடியாமல், வீட்டுக் கூரையை தகர்த்துவிட்டு கூரையாவது போடலாம் என்று இந்தப் பையனை வேலைக்கழைத்திருக்கிறார்கள். கூரையைத் தகர்க்கும்போது வீடு தன் வேலையைக் காட்டிவிட்டது.. மரணத்தை அருகே கொண்டுவந்து விட்டது..

யாரை நொந்துகொள்ளலாம்? சரி..

அதற்கும் இப்போது நேரமில்லை. மரணம் தவிர்க்கப்பட்ட பின்பு வாழ்க்கையைத் தொடர பணம் வேண்டும்.. தோழர்கள் மருத்துவமனையில் காத்திருப்பார்கள்.. மற்ற பலருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும். புறப்படுகிறேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை முடித்திருந்தான். இன்னும் போதை போதவில்லை. அம்மாவிடம் பிடுங்கிக்கொண்டு வந்திருந்த 100 ரூபாயில் 75 ரூபாய் சரக்குதான் வாங்க முடிந்திருந்தது. 65 ...
மேலும் கதையை படிக்க...
இது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது. இருந்தாலும் இன்றாவது, எழுதியே ஆக வேண்டும். அப்போது நான் சின்னப் பையன். எங்கள் ஊரின் வயல் வரப்பின் வழியாக நடக்கும்போது பயமாக ...
மேலும் கதையை படிக்க...
சிந்தாமணிக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. அவள் அப்படி யோசித்தே பார்க்கவில்லை. அருகில் மணியும், மாலினியும் தூங்கிக் கொண்டிருந்தனர். இவளுக்குத் தூக்கம் என்ற கேள்வியே வரவில்லை. எப்படி தூங்க முடியும்? என்ன நடந்திருக்கிறது என்பதை அவள் அறிவாள். அனைத்தும் முடிந்துபோய்விட்டது.. அவளது ...
மேலும் கதையை படிக்க...
காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள் அடைத்து வைத்ததெல்லாம் வெளியேறும் நேரம் அது. அவளது வீட்டில் கீற்றால் அடைத்த மறைப்பு உண்டு. அங்குதான் குளிப்பாள். அது மாலை ஆறு ...
மேலும் கதையை படிக்க...
விஜி அருகில் படுத்திருந்த கணவனை இரவு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் தூங்கிவிட்டான் என்று பட்டது. அவனது தூக்கத்தைக் கெடுக்க விரும்பாமல் அவன் இதழ்களை நெருங்கி முத்தமிட்டாள். அவன் அதனை உணரவில்லை என்று தெரிந்தது. ஆனால், அவள் வேறொன்றை உணர்ந்தாள். நெடி.. ...
மேலும் கதையை படிக்க...
டாஸ்மாக் நாடெனும் போதினிலே..
சாதி கெட்டவன்
துரத்தும் பேய்கள்
சொல்ல முடியாத பிரச்சனை
அமிலத்தில் மீன்கள் வாழாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)