கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 6,244 
 

அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம்.

ஓ வென்று இருந்தது,

கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க,

அருகே உள்ள கொட்டகையில் புல் பூண்டு முளைத்து ,

பயன்பாடாற்ற கொட்டகையில் ஆடு ஒன்று விளையாடிக் கொண்டு இருந்தது, தன் குட்டியுடன்.

வெட்டியான் ஈசானம் ஓரமாக அமர்ந்து தனது காலை நேர சிற்றூன்டியை மதிய நேரத்தில் உண்டுக் கொண்டு இருந்தான்.
அவன் மனைவி தண்ணீர் எடுத்து வந்து வைத்துவிட்டு,

யோவ்..காசு இருந்தா கொடுய்யா மதியத்துக்கு குழம்பு வைக்கனும்,

காசெல்லாம் இல்ல..போ! என்று எரிந்து விழுந்தான்.

ஏய்யா பொய் சொல்றே? இப்பத்தானே எரிச்சு இருக்கே,

இல்லைங்கறேன், திரும்ப,திரும்ப பேசிக்கிட்டே இருக்கே!

அதையும் சேர்த்து குடிச்சுட்டியாயா? நாசமாப் போறவனே!

நாமதான் தொழில் இல்லாம ,வருமானத்திற்கு வழியில்லாம பட்டினியா கிடக்கோம், நம்ம மக மாசமாகி வந்து இருக்கா ஒரு குழம்பு வைச்சு போடலாம்னா, காசே இல்லேங்கிறியேய்யா!

ஏய்! நான் குடிக்கலடி, அவனோ காசை குறைச்சு கொடுத்துட்டுப் போறானுவோ!

மொதல்லேயே பேசிகிட வேண்டியதுதானேய்யா!

விறகு, சீமை எண்ணெய், விராட்டி எல்லாம் வாங்கினா காசு மிச்சம் படலே, நான் என்ன செய்ய.. மேலே கேட்டா, மருவாதி இல்லாம ஆளாளுக்கு பேசித் திட்டுறாங்க. நம்ம சாதி ஆளுங்கத்தானே,

துக்க வீடாச்சேனு போகட்டும் விடுனு சொல்லி எரிச்சுகிட்டு இருக்கேன், நீ வேறு வந்து வெறுப்பேத்திகிட்டு இருக்கே.

எனச் சொல்லிக்கிட்டே கையை கழுவினான்.

ஏன்யா, முன்னே மாதிரி பொணம் வருவதில்லையே, நோய் நொடியெல்லாம் குறைஞ்சுப் போச்சா? என்றாள் வெள்ளந்தியாக!

அடி போடி, நீ ஒத்தி, அதெல்லாம் விழுந்துக்கிட்டுத்தான் இருக்கு,

எல்லாம் ஏதோ எலட்ரிக்காம் அங்கே போறாங்களாம்.

அங்கே சட்டுன்னு முடியுதாம், அஸ்திய வாங்கினமா, காரியத்தை அன்னிக்கே முடிச்சோமா,ஊருக்கு கிளம்பினோமானு ஆயிப்போச்சுடி.

அதுவும் வந்தாச்சா?

இந்த தொழிலை நம்பி இருக்கிறவனை அழிக்கிறதுக்கே ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு போல..

இருக்கிறவனை அழிக்க இல்ல இயற்கையை அழிக்க…கிளம்பி இருக்கு, என்றார் ஆதங்கமாய்.

விட்டுவிட்டு வேற வேலைக்குப் போகலாம்னாலும், வேலை தரமாட்டேங்கிறாய்ங்க!இல்ல ஊரை விட்டுத்தான் ஓடனும் .

பிறந்த ஊரை விட்டு எங்க போறது?

அதான், பொணம் வர வழியை பார்த்துகிட்டு இங்கேயே கதின்னு கிடக்கேன்.

அய்யா, என யாரோ அழைக்க, திரும்பிப் பார்த்தான்.

யாருங்க என்ன வேணும்,? என்றான் .

அக்ரஹாரத்திலே ஒருத்தர் இறந்திட்டாரு.சாயந்திரமே தகனம் செய்யனும். அதான் உன் கிட்டே செல்லி ஏற்பாடு செய்யாலாம்னு வந்தோம் என்றனர்.

என்ன ஆளுங்க! என்றான்.

அதுவா , அய்யரு.
உனக்கும் தெரியும் அவரை.

நான் ..என்ன..சொல்றேன் என இழுத்தான்..

என்ன?

நீங்க எலட்ரிக்னு என்னமோ சொல்றாங்கல்ல ,அங்கே போயிடுங்க?

ஏன்யா? இங்கதானே வழக்கமா செய்யறது?

ஆமாங்க,ஆனா,ரொம்ப நாள் இங்கே யாரும் வருவதில்லை.

ஏன்?

அதோ அந்தாருக்கு பாருங்க அந்த கொட்டாதான், அய்யருமாருங்க கொட்டா.

அது புல் முளைச்சு கிடக்கு,ஏன்னு உங்களுக்கு தெரியுமா?

தெரியாது நாங்க வெளியூர்,அவங்க சொந்தக்காரங்கத்தான்.

அதிலே ஒன்றை எரிச்சாக்கா, தொடர்ந்து அடுத்தடுத்த எழவு விழுந்துடுதுமய்யா! என உண்மையைச் சொல்லி அவர்களுக்கு பீதியைக் கிளப்பினான்,

அதானாலே பெரும்பாலும் யாரும் வருவதே இல்லை.என்றான்

யோவ்..எந்த காலத்திலே என்ன பேசிக்கிட்டு இருக்கே நீ.
அதெல்லாம். ஒன்றும் நடக்காது, நீ வேலையைக் கவனி.

அய்யா,எனக்கு வருமானம்தானே? ஏன் வேண்டாமுன்னு சொல்றேன்.

உங்க ஆளுங்கத்தான் சொல்வாங்க!

சுத்தம் பண்ணிடு, பணம் எல்லாம் சேர்த்து வாங்கிக்க.

எனக்கூறி அட்வான்ஸ் ஆக 500 ரூபாயை தந்து விட்டு, நாங்க மாலை 4.00 மணிக்கு வருவோம். என உத்தரவிட்டு கிளம்பினர், உறவினர்கள்.

மாலை , பிணத்தோடு வந்தவர்கள் அனைத்து வேலையும்

முடித்துக் கிளம்பினர்.

அட்வான்ஸ் தொகை கிடைத்ததில் மனைவியிடம் கொடுத்து கறிக்கொழம்பு சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியோடுதான் இருந்தான் .

இரவு வரை..

பிணம் எரிந்துக் கொண்டு இருக்க..

இரண்டு வாலிபர்கள் அங்கே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்…

தம்பி போங்கப்பா, இரண்டு பொணம் எரியுது இங்க வந்து குந்திகிட்டு குடிக்கிறீங்களே போங்கப்பா! என விரட்டினார்.

எரிந்து ஓய்ந்ததும், ஈசானம் படுத்துக் கொண்டி கவலைப் பட்டபடி உறங்கி விட்டான். காலை பயந்தபடியே தான் காலை எழுந்தான்,.

அவன் மனதில், இன்றும் வேலை வருமுன்னு சந்தோஷமடைய முடியாத நிலை.

வந்துவிடக் கூடாதே என்று கவலையும் சேர்ந்தே வந்தது.

அடுத்தநாள் காரியத்திற்காக இரு அய்யர்கள் அங்கே வர, நேத்து எரிச்சியே அதைக் காமி. என்றனர்

வந்தவர்கள் அஸ்தியெடுத்துக் கொண்டு கிளம்பினர்,

அவர்கள் பேசுவதிலிருந்து தெரிந்தது, இறந்தவருக்கு வாரிசோ, சொந்தமோ யாரும் கிடையாது என்றும், அந்த மூட நம்பிக்கையை தகர்த்தெரிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இதை செய்துள்ளனர் என்று தெரிய வந்தது,ஈசானத்திற்கு.. நிம்மதி .நல்லவேளை அடுத்தநாளும் வருமென நினைச்சேன், வரலை. இந்தப் பொணம் தனியாவே போயிட்டு, ச்சே மூட நம்பிக்கை என நினைத்தான்..

ஒரு நாள் விட்டு மறுநாள் அந்த கொட்டகைப் பக்கம் போனவன் அதிர்ச்சியுடன் ஓடி வந்தான், அங்கே அன்று குடித்த இரு வாலிபரில் ஒருவன் பிணமாக கிடந்தான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *