மன்னிப்பும்… தண்டனையும்…

 

ஆபிஸ் மீட்டிங்கில் பிசியாக இருந்தார் ராமநாதன். அந்த நேரத்தில், அவரது மொபைல் போன் ஒலித்தது. அவரது மனைவி சாரதாவின் அழைப்பை ஏற்காமல் தவிர்த்தார்.
கூட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல், மறுபடியும் மனைவி அழைத்தார்; கட் செய்தார் ராமநாதன்.
“ச்சே… வீட்டிலே தான் தொந்தரவு தாங்க முடியலேன்னா, ஆபிஸ்லே கூடவா?’ என்று நொந்து கொண்டார். கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும் வர்த்தக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி ராமநாதன். அவருக்கு தொழில்தான் முக்கியம்; மற்றவை எல்லாம் அப்புறம் தான்.
மறுபடியும் சாரதா அழைக்கவே, “”எக்ஸ்கியூஸ்மீ…” என்று எழுந்து சென்றார்.
மன்னிப்பும்... தண்டனையும்“போனை எடுத்து மனைவியை திட்டினால் தான் நிம்மதி…’ என்ற நினைப்பில், மொபைல் போனை உயிர்ப்பித்தார்.
அந்தப்பக்கம் சாரதாவின் விசும்பல்… “”அரவிந்தை காணோம்ங்க…” என்றாள்.
அரவிந்த் அவர்களது ஆறு வயது பிள்ளை. இரண்டாவது வகுப்பு படிக்கிறான்.
“”காணோமா?”
“”ஆமாங்க… நான் அவனை ஸ்கூலிலிருந்து அழைச்சுட்டு வரப் போனேன்… கொஞ்சம் லேட்டாச்சு…”
“”என்ன காரியம் பண்ணியிருக்க… “டிவி’ பார்க்காதேன்னு சொன்னா, கேட்டா தானே. ச்சே… நான் இப்பவே வரேன்…” என்ற ராமநாதனின் உடம்பில், பதற்றம் தொற்றியது. மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, அவசரமாக வெளியேறினார்.
ஓரே பிள்ளை அரவிந்த் என்பதால், ராமநாதனுக்கு கொள்ளைப் பிரியம்.
“கடவுளே… என் பிள்ளை எங்கே போயிருப்பான்… சின்னப் பையனாச்சே… அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது. எனக்கு, என் பிள்ளை பத்திரமாக கிடைக்கணும்…’ என்று தவித்தார். தன் குல தெய்வமான சோலை அம்மனுக்கு, வைரக் கிரீடம் அணிவிப்பதாக மனதில் வேண்டிக் கொண்டார்.
முதலில் அரவிந்த் படிக்கும் பள்ளிக் கூடத்திற்கு சென்றார். சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ராமநாதனுடைய தவிப்பு அதிகரித்தது. இத்தனை நாள் கட்டுப்பாட்டில் இருந்த, பி.பி., எகிறியது. காருக்குள், “ஏசி’ இருந்தும், அவருக்கு வியர்த்துக் கொட்டியது.
வீட்டிற்குள் நுழைந்ததும், சாரதாவுடைய அழுகை தான் கேட்டது. அரவிந்தின் நண்பர்கள் வீட்டுக்கு, போன் போட்டு கேட்டார்.
“”யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு சொல்றாங்க… இப்ப அழுது என்ன பிரயோஜனம். நேரத்திற்கு போயிருந்தா இப்படி ஆகியிருக்குமா?”
சாரதா கண்களை துடைத்துக் கொண்டு, அவரை ஒரு மாதிரியாக பார்த்தாள்.
ராமநாதனுக்கு புரியவில்லை.
“”இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்?”
“”ஏங்க… உங்களுக்கு எந்தப் பெண்ணோடாவது தொடர்பு இருக்கா?”
ஏற்கனவே, நெருப்பில் நின்றவன் போல் இருந்த ராமநாதனுக்கு, அவளுடைய கேள்வி எரிச்சலூட்டியது.
“”என்ன பேசறே… புல்ஷீட்!”
அதற்குள் அவரது மொபைல் போன் ஒலித்தது. புதிய எண்ணை பார்த்தவுடன், கைகள் நடுங்க எடுத்து பேசினார்.
“”ராமநாதன்?”
“”எஸ்…”
“”உன்னோட மகன் எங்கிட்ட பத்திரமாக இருக்கான்.”
“”நீங்க யாரு?”
“”அதெல்லாம் உனக்கு தேவையில்லை. உனக்கு தேவை உன் பையன்; எனக்கு தேவை ஐந்து லட்சம் ரூபாய்!”
“”கொடுத்திடறேன்… நோ பிராப்ளம். என் பையன் பத்திரமாக இருக்கானா?”
அந்த பக்கத்தில், அரவிந்த் பேசினான்.
“”நான் நல்லா இருக்கேன்பா… இந்த அங்கிள், லேஸ், சாக்லெட் எல்லாம் வாங்கி கொடுத்தாரு… இப்ப, “டிவி’யில் போகோ சேனல் பார்த்துகிட்டிருக்கேன். இது முடிஞ்ச பின், வீட்டுக்கு வந்துடுவேன்.”
ராமநாதன் கண்களில் கண்ணீர்.
“”உன் பையன் இதுவரை பத்திரமாகத் தான் இருக்கிறான். ஆனால், நீ போலீசுக்கு போனா, இவன் மேல போயிடுவான்…”
“”ஐயோ… அப்படியெல்லாம் எதுவும் செஞ்சுடாதே. நான் இப்பவே பணத்தை கொடுக்கிறேன். எங்கே வரணும்ன்னு சொல்லு…”
“”கொஞ்சம் பொறு… நானே கூப்பிடறேன்.”
ராமநாதனுடைய முகத்தில் கொஞ்சம் தெம்பு வந்தது. திக்கி, திணறி சாரதாவிடம் விஷயத்தை சொன்னார்.
“”அடப்பாவி… யாருங்க அது?”
“அரவிந்தை கடத்தியது யாராக இருக்கும்? அவன் குரல் பரிச்சயமானதாக தெரிகிறதே… யார் அவன்?’ என யோசித்தார் ராமநாதன்.
“ச்சே… இந்த பிள்ளையை கடத்திட்டு வந்தா, இதுபாட்டுக்கு பயப்படாமல், “டிவி’ பார்த்துட்டு, இஷ்டப் பட்டதை யெல்லாம் கேட்டு வாங்கி சாப்பிடுதே…’ என்று, சலித்துக் கொண்டான் தாமோதரன்.
“ராமநாதன் போலீசுக்கு சென்றாலும் சரி… பணத்துடன் வந்தாலும் சரி… அவனுக்கு அரவிந்துடைய பிணம் தான் கிடைக்க வேண்டும்…’ என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
அப்பத்தான் ராமநாதனுக்கு உறைக்கும். தங்களுக்கு நெருக்கமானவர்களை இழக்கும் வலி, புரியும்.
ஐந்து வருடங்களுக்கு முன், ராமநாதனிடம் டிரைவராக இருந்தான் தாமோதரன். அந்த சமயம், அவனுடைய மூன்று வயது மகன் கவுதமிற்கு கடுமையான காய்ச்சல். எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசரமாக ஐந்தாயிரம் ரூபாய் பணம் கட்டச் சொல்லியிருந்தனர். அங்கே இருக்கும் டாக்டர், எப்படியும் பிள்ளையை காப்பாற்றி விடுவார் என்று நினைத்து, பணத்திற்காக எங்கெங்கோ அலைந்தான் தாமோதரன்; ஆனால், கிடைக்கவில்லை.
“உனக்கென்ன… கோடீஸ்வரனிடம் டிரைவராக இருக்க… அவரிடம் கேளேன்…’ என்ற அறிவுரை தான் கிடைத்தது.
அப்படியே கேட்டான்.
“அட்வான்ஸ் எல்லாம் தர முடியாது, அம்பது – நூறு வேண்டுமென்றால் உதவியாக தருகிறேன்…’ என்றார் ராமநாதன்.
“ஐயா… எங்களுக்கு ஒரே ஒரு பிள்ளை தான்… அவன்னா எங்களுக்கு உயிரு… இப்ப உங்களைவிட்டா எனக்கு வேற நாதியில்லை. உங்களை கடவுளா நெனைச்சு கேட்கிறேன்… தயவு செய்து இந்த உதவியை செய்யுங்க… காலம்பூரா உங்க காலில் நாய் போல கிடக்கிறேன்…’ என, அவருடைய கால்களை பிடித்து கெஞ்சினான் தாமோதரன்.
ஆனால், ராமநாதன் மனம் இரங்கவில்லை.
துவண்டுபோன நிலையில் வீட்டிற்கு திரும்பினான் தாமோதரன். அங்கே, கவுதம் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. பைத்தியம் பிடித்த நிலையில், அவன் மனைவி. அவள் எதுவும் பேசவில்லை; அதற்குப்பின் அவள் பேசவே இல்லை. அடிக்கடி வீட்டை விட்டு காணாமல் போவாள். அப்படித்தான் ஒரு முறை காணாமல் போனவள், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாள்.
துயரங்கள் துரத்தும் வாழ்க்கையிலிருந்து, விடுதலையைத் தேடி, தாமோதரன் காசிக்கு சென்றான். அங்கும், அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும், மீண்டும் இழந்த குடும்பத்தின் நினைவு, வலி தர, “பலி ஒன்று தான் அதற்கு சிகிச்சை…’ என்று நினைத்தான்.
பழி வாங் குவதில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க துடித்தான். தன் குடும்பம் நிலைகுலைந்ததை போல, ராமநாதனுடைய குடும்பமும் அழிய வேண்டும் என்ற வெறியில், ஐந்து வருடங்களுக்குப் பின், சென்னை திரும்பினான் தாமோதரன்.
“எனக்கு அவனை தெரியும்…’ என்று துள்ளிய ராமநாதன், “”என்னிடம் டிரைவராக இருந்த தாமோதரன்தான் அவன். என்னால் அவன் குரலை மறக்க முடியாது…” என்றார்.
“”அப்ப போலீசில் சொல்ல வேண்டியது தானே…” என்றாள் சாரதா.
ராமநாதன் தலை குனிந்தார்.
“”நான் ஒரு முறை தப்பு செஞ்சுட்டேன்; இன்னொரு முறை செய்ய மாட்டேன்.”
அவள் விழிகள் வினா எழுப்ப, விலா வாரியாக விளக்கினார்.
“நீ எல்லாம் ஒரு மனுஷ ஜென்மமா?’ என்று அவரைப் பார்த்தாள்.
“”அவன் நிச்சயமா என் பிள்ளையை கொல்லத்தான் போகிறான். இத்தனை வருஷம் கழித்து வெறியோடு வந்திருக்கான். என் பிள்ளை செத்துட்டா, அதுக்கு நீங்கதான் காரணம்!” என்று, பைத்தியம் பிடித்தவள் போல் கத்தினாள் சாரதா.
இரண்டாவது நாள் ­—
துள்ளித் திரியும் அரவிந்தை பார்த்துக் கொண்டிருந்தான் தாமோதரன்.
“”என்ன அங்கிள் பார்க்கறீங்க?”
“”நீ, என் பையனை மாதிரியே சிரிக்கிறே, பேசறே, நடக்கிறே…”
“”நானும் உங்கள் பையன் தான் அங்கிள்…”
“”நீயும் அவனை மாதிரி என்னை விட்டுட்டு போயிடுவியா?”
“”என்னை ஏன் அங்கிள் நீங்க கடத்திட்டு வந்தீங்க?”
தாமோதரனுக்கு, “திக்’ என்றது.
“”கடத்திட்டு வந்தேன்னு உனக்கு எப்படி தெரியும்?”
“”டிவியில் காட்டுவாங்களே… எங்கப்பா மீது உங்களுக்கு கோபமா?”
மவுனமாக இருந்தான் தாமோதரன்.
“”சொல்லுங்க அங்கிள்… நான் வேணும்னா அப்பா கிட்ட சொல்லி, உங்களிடம் சாரி கேட்கச் சொல்லட்டுமா?”
தாமோதரனுக்கு சிரிப்பு வந்தது.
“”அரவிந்த்… உனக்கு பிடிச்ச ஒரு பொம்மையை யாராவது திருடிட்டா, நீ என்ன செய்வே?”
“”நான் அவங்களை மன்னிச்சுடுவேன்!”
“”அது அவ்வளவு சுலபமா?”
“”மன்னிப்பது தான் பெரிய தன்டனைன்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க.”
தாமோதரனுக்கு, கவுதமே பேசுவது போல் தோன்றியது.
அவனுடைய கண்கள் பனித்தன.
மொபைல் போன் ஒலிக்க, அவசரமாக எடுத்தார் ராமநாதன்.
“”சொல்லுங்க… எங்கே வரணும்?”
“”நீ மட்டும் தனியா வரணும். சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்டிற்கு, இயல்பா மீன் வாங்குவதை போல வா… ஜாக்கிரதை…”
கையில் சூட்கேசுடன் மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் ராமநாதன்.
அந்த நாற்றம் வயிற்றை புரட்ட, சுதாரித்து கொண்டார். பின்னாலிருந்து யாரோ தொட திரும்பி பார்த்தார். அரவிந்த் ஆசையுடன் அவரை ஆரத் தழுவினான்.
தாமோதரனை தேடினார். அவன் சற்று தொலைவில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனை நோக்கி சென்றார் ராமநாதன்.
அவர் பெட்டியை நீட்ட, அவன் வாங்க மறுத்து விட்டான்.
“”என் பையனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் நீ கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்.”
“”அஞ்சு பைசாவும் எனக்கு வேண்டாம். என் பிள்ளையை உன்னால், திருப்பி தர முடியுமா?”
ராமநாதன் தலை குனிந்தார்.
“”தாமோதரா என்னை மன்னிச்சுடு… நான் பாவி.”
“”உங்களை நான் மன்னிச்சுட்டேன்… போங்க!”
பையன் கிடைத்த சந்தோஷத்தைவிட, அவன் மன்னித்ததுதான் அவருக்கு வலித்தது.
“அவன், என்னை மன்னிச்சுட்டான். என்னை, என்னால் மன்னிக்க முடியுமா? நான் செய்த பாவத்தோட குற்ற உணர்ச்சியே, எனக்கு பெரிய தண்டனையாக இருக்கே…’ என்று எண்ணியபடி சென்றார் ராமநாதன்.
“அவரை நான் மன்னிச்சுட்டேன். இப்ப மனசு லேசாகி பஞ்சு மாதிரி பறப்பதை போல் உணர்கிறேன். நிம்மதியாக இருக்கு. ஆனா, அரவிந்தை பிரியறதுதான் பெரிய தண்டனை. ஒரு பையனை இழந்த துயரமே இன்னும் ஆறலே, இனி இவனை எப்படி மறப்பேன்…’ என்று நினைத்து, கலங்கினான் தாமோதரன்.
அப்பாவின் கை பிடித்து சென்றாலும், திரும்பி பார்த்து, “டாடா’ காட்டினான் அரவிந்த். தாமோதரனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.
உண்மைதான்… மன்னிப்பை விட பெரிய தண்டனை வேறு எதுவும் கிடையாது.

- பிப்ரவரி 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
''யாரு மச்சி போட்ருப்பா?'' ''எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?'' ''எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.'' ''கிரவுண்ட வுட்ட மாதிரி இத வுட்ரக் கூடாது.'' ''யாருனு ஆளப் பாத்துகினு நைட் கொளுத்திரலாம் மச்சி''- பொது இடத்தில் இருந்த கொட்டாயைச் சுற்றி இளைஞர்களின் கோபக் குரல்கள். அரசாங்கத்தால்ஒதுக்கப்பட்ட விளையாட்டு ...
மேலும் கதையை படிக்க...
விலை கொடுத்து உடல் பசியை தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட 25 வயது இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த 4 இட்லியை எடுத்து வர இவ்வளவு நேரம் ஆகிறதென்றால், நான் 12 ரூபாய் கொடுத்ததற்கு என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த சர்வர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
சற்றே அகலமான ரிப்பனைப்போல் நீண்டிருந்த அந்தக் காகிதத்தில், மொத்தம் இருநூறு சிறு வட்டங்கள் இருந்தன. இடது ஓரத்தில், ஒன்றில் தொடங்கி ஐம்பதுவரை வரிசையாக எண்கள் அடுக்கியிருக்க, ஒவ்வொரு எண்ணுக்கும் எதிரே, நான்கு வட்டங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேனாவால் முழுமையாகத் ...
மேலும் கதையை படிக்க...
ராமநாதபுரத்து அரசர்களாகிய சேது, வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாதுகாத்துப் புகழ் பெறுவதில் பெரு வேட்கையுடையவர்கள். சங்க காலத்திற்குப் பிறகு அங்கங்கே சிற்றரசர்களுடைய வள்ளன்மையால் தமிழைக் கைவிடாமல் வாழ்ந்து வந்த புலவர்கள் பலர். அவர்கள் அவ்வப்போது தம்மைப் பாதுகாத்த உபகாரிகளைப் பாடிய பாடல்கள் ...
மேலும் கதையை படிக்க...
தேதி பதினைந்து ஆகியும் தன்னிடம் வேலை பார்க்கும் ராஜாவிற்கு சம்பளம் தராமலிருந்தார் மளிகை கடை முதலாளியான அன்பரசு. இது குறித்து அன்பரசுவின் மனைவியிடம் ராஜா பேச அவள் கணவனிடம் கேட்டாள். ‘ஏங்க ராஜாவுக்கு சம்பளம் தரலை..? ஒரு சின்ன ட்ரீட்மென்ட் தான்! இப்பல்லாம் அவன் நைட் ...
மேலும் கதையை படிக்க...
கொட்டாய்
இன்டர்வியூ
A, B, C அல்லது D
வணங்கா மூடி
முதலாளி – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)