மனிதர்கள்!

 

நண்பர்களில் எத்தனை நிறம் ! பாலுவிற்குள் சின்ன அதிர்ச்சி, யோசனை.!

ரகு, ராசு, சிவா, சுப்பு இந்த குறிப்பிடத்தக்க நண்பர்கள் நால்வரில் ரகு நான்கு நாட்களுக்கு முன் பாலுவிடம் வந்தான்.

”ஒரு உதவிடா.” பக்கத்தில் அமர்ந்தான்.

”சொல்லு ?”

”என் தம்பிக்குத் திருமணம் முடிக்கனும்…”

”தாராளமா முடி.”

”பொண்ணு கையில இருக்கு. ஆனா மாட்டேன்னு சொல்றான்.”

”விபரமா சொல்லு ?”

”கும்பகோணத்துல என் மனைவி சித்தி பெண் ஒருத்தி. பேர் அபிராமி. பட்டப்படிப்பு. தனியார் பள்ளியில் மாசம் ஐயாயிரம் சம்பளம். அஞ்சு பொண்ணுகள்ல இவள்தான் மூத்தவள். ஏழைப்பட்ட குடும்பமாய் இருந்தாலும் அஞ்சு பவுன் போட்டு, அம்பதாயிரத்துக்கு சீர்வரிசை செய்து, மாப்பிள்ளைக்கு ரெண்டு பவுன் சங்கிலி போடுறேன் சொல்றாங்க. என் தம்பி வேணாம் சொல்றான். ”

”ஏன் ?”

”வேலைக்குப் போற பெண் வேணாம் சொல்றான். இந்த காலத்துல புருசன் பொண்டாட்டி சம்பாதிச்சாதானே… புள்ளைங்களை நல்லா படிக்க வைச்சு பிற்காலத்துக்கும் ஏதாவது சேர்;த்துக்க முடியும். இதை நான் சொல்றேன். கேட்க மாட்டேன்கிறான், புரிஞ்சிக்க மாட்டேன்ங்கிறான். உன் மேல அவனுக்கு மதிப்பு மரியாதை இருக்கு. சொன்னால் கேட்பான் என்கிறது என் அபிப்பிராயம். சொல்லேன்.” சொன்னான்.

பாலுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மௌனமாய் இருந்தான்.

”பாலு ! நமக்குள் ஒளிமறைவு இல்லே. என் குடும்பத்தைப் பத்தி உனக்கு எல்லாம் தெரியும். என் அண்ணன், அக்கா, தங்கச்சிக்கெல்லாம் திருமணம் முடிச்சி எல்லாரும் நல்லா இருக்காங்க. இவன் மட்டும் திருமண வயசைத் தாண்டி அம்மாவுக்குப் பாரமா இருக்கான். நாளைக்கு எண்பது வயசைத் தாண்டின அம்மா திடீர்ன்னு மண்டையைப் போட்டுதுன்னா….இவன் யார் வீட்டிலேயும் போய் சோத்துக்கு நிக்க முடியாது. குடியிருப்பு வீடு வேறு கோயிலுக்குச் சொந்தம். அம்மாவோட இவன் இருக்கிறதுனாலதான் விட்டு வைச்சிருக்காங்க. அவுங்க இறந்துட்டா பிரம்மச்சாரிக்கு எதுக்கு கோயில் வீடுன்னு நிர்வாகம் காலி பண்ணிடும். எல்லாத்தையும் யோசிச்சுதான் இந்த வரனை சீக்கிரம் முடிக்க முயற்சி செய்றேன்.அவன் முரண்டு பிடிக்கிறான். நீயும் இதைச் சொல்லி அவனைச் சம்மதிக்க வை.” முடித்தான்.

ரகு சொல்வது அத்தனையும் உண்மை, நியாயம். வயதான தாய் நாளைக்கே மண்டையைப் போட்டுவிட்டால் பரமேஸ்வரனுக்கு ஆக்கித் தின்னக்கூட இடம் இருக்காது. நிர்வாகம் உடனே காலி செய்து விடும். காலம் இருக்கும் இருப்பில் அடுத்தவர்கள் காலி செய்ய வைத்து விடுவார்கள்.! இவன் அடுத்தவர்களிடமும் போய் ஒண்ட முடியாது. அவரவர்களுக்கு அவரவர்கள் குடும்பம். தம்பி மேல் இப்போதாவது இப்படி கரிசனம் வந்ததில் பாலுவிற்கு மகிழ்ச்சி.

”சொல்றேன்.” சொன்னான். ரகு சென்றான்.

முந்தா நாள் சுப்பு வந்தான். இவன் ரகு அம்மா தம்பி வீட்டிற்கு அடுத்த வீடு.

”ஒரு சேதிடா.” அமர்ந்தான்.

”சொல்லு ?”

”ரகு, தன் மனைவி சொல்லை மந்திரமா எடுத்துக்கிட்டு உடன் பிறந்தானை படுகுழியில தள்ள முயற்சி செய்யறான் பாவி.!” ஆரம்பித்தான்.

”அப்படியா !?” பாலுவிற்கு சின்ன மின்னதிர்ச்சி.

”அவன் மனைவி சித்தி பெண். எனக்குத் தெரியும். சரியான குண்டு. நிறமும் கறுப்பு. ரொம்ப ஏழ்மை. அஞ்சு பொண்ணுகள்ல இவள் மூத்தவள். கட்டினால்; இவன் கொழுத்தியாள்களுக்கெல்லாம் செய்தே அழிஞ்சு போவான். பரமேஸ்வரனுக்கு வாத்தியார் வேலை கை நிறைய சம்பளம். அவன் தகுதிக்கு இப்படி ஒரு பெண்ணைப் பார்க்கலாமா? பொண்டாட்டி சொல்றதை முடிக்கனும்ன்னு துடியாய்த் துடிக்கிறான்.பரமேஸ்வரனுக்குப் பிடிக்கலை. அவன் வேணாம்ன்ன்னு சொன்னதும் பக்கத்து வீட்டுக்காரன் என்கிற முறையில் என்கிட்ட சிபாரிசுக்கு வந்தான். என்னத்தைச் சொல்ல ? ”

அண்ணன்காரனுக்குத் தம்பி மேல் உள்ள திடீர் பாசம் அக்கரை புரிந்தது பாலுவிற்கு. மேலும் தான் பரமேஸ்வரனுக்குத் தலைமை ஆசிரியன். மதிப்பு மரியாதை வைத்திருப்பவன். தன் சொல் அவன் கேட்பான் என்பதற்காக ரகு தன்னிடம் சிபாரிசு. என்பதும் விலாவாரியாகப் தெரிந்தது.

”பாலு ! பரமேஸ்வரன் ரொம்ப நல்லவன்டா. அவனுக்குப் போய் இப்படிப் பொண்ணு பார்க்கலாமா ?. அதனால நான் இவனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன். என் மனைவி ஊர். ஓரே பெண். நல்ல படிப்பு. அங்கே தனியார் கல்லூரியில ஆசிரியை. அவ அந்த ஊர்ல வேலையை விட்டு வந்தால் நம்ம ஊர் கல்லூரியில கண்டிப்பா வேலை கிடைக்கும். அதுக்கு நான் உத்திரவாதம். நான் பரமுவை அழைச்சுப் போய் பொண்ணையும் காட்டியாச்சு. அவனுக்கு விருப்பம்தான் இருந்தாலும் வாய்விட்டு சொல்லலை. அண்ணன் பேச்சை மீறலாமோன்னு தயக்கம் போலிருக்கு. நீ சொல்லி இதுக்கு சம்மதிக்க வைச்சு சீக்கிரம் திருமணத்தை முடி.” முடித்தான்.

பரமேஸ்வரன் பக்கத்து வீட்டுக்காரன், தன் சொல் பேச்சைக் கேட்பவன், தனக்குத் தேவை, உதவி என்று எந்த சமயம் அழைத்தாலும் ஓடி வந்து நிற்பவன், எதையும் செய்பவன், நல்லவன், வல்லவன் என்கிற நன்றி விசுவாசம் இவனை இப்படி செயல்பட வைத்திருக்கிறது. பாலுவிற்கு நண்பனைப் பார்க்கப் பெருமையாய் இருந்தது.

இருந்து என்ன செய்ய ? சுப்பு பேச்சைக் கேட்டால் ரகுவிற்கு கோபம் வரும். ரகு சொன்னதைச் செய்தால் சுப்புவிற்கு வருத்தம் வரும். இருவருமே நண்பர்கள். எவர் சொல்வதைச் செய்ய ? – சிக்கல் !

”என்ன யோசனை ?” சுப்பு கேள்வியால் உலுக்கினான்.

இவன் சிக்கலைச் சொன்னான்.

”அதுக்காக உன்னை மதிக்கிற பரமேஸ்வரனுக்கு துரோகம் பண்றதா ? அவன் வாழ்க்கையைப் பாழ் பண்றது தப்பு. ரகு நம்ம நண்பன். அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டாலும் அவளுக்காக தம்பி வாழ்க்கையைச் சீரழிக்காதே சொல்லி சரி செய்யிறது நம்ம கடமை. அதைச் செய்.” சொன்னான்.

இது பாலுவிற்குச் சரியாகப் பட்டது.

”சரி. சாயந்தரம் ரகுவை வரவழைச்சு பேசுவோம்.” சொல்லி அனுப்பிய பிறகுதான் நண்பர்களுக்குள் எத்தனை வர்ணம் ? மின்னதிர்ச்சி, யோசனை.

அரை மணி நேரத்தில் அழைப்பு மணி அழைத்து கலைத்தது.

போய்த் திறந்த பாலுவிற்கு அதிர்ச்சி.

மாலையும் கழுத்துமாய் பரமேஸ்வரன். அருகில் பெண்.

இவன் அழைக்காமலே உள்ள வந்தார்கள்.

”சார்! அண்ணன், அண்ணிகிட்ட நல்லபேர் எடுக்கிறதுக்காக எனக்குப் பொருத்தமில்லாதவளைத் தலையில கட்டி வைக்க முயற்சி செய்யறார். பக்கத்து வீட்டுக்காரர், எனக்கு உதவி செய்யனும் என்கிற போர்வையில் என்னை அவருக்கு நிரந்தர வேலையாளாய் ஆக்கத் திட்டமிட்டு அவர் சார்பா ஒரு பொண்ணை முடிக்க செயல்படுறார். நான் இவுங்க ரெண்டு பேர்கிட்டேயும் இருந்து தப்பிக்க யோசிச்சு… அவசரமாய் ஒரு அனாதை ஆசிரமம் போய் இவளை தேர்ந்தெடுத்து உடன் பதிவு திருமணம் முடிச்சு வர்றேன். என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார். இது தப்புன்னா மன்னிச்சுடுங்க.” என்ற பரமேஸ்வரன் சட்டென்று அந்தப் பெண்ணுடன் பாலு காலில் விழுந்தான்.

பரமேஸ்வரன் சுயநலப்புலிகளிடமிருந்து தப்பிக்க அவசரமாய் செயல்பட்டாலும் ஒரு அனாதைப் பெண்ணிற்கு வாழ்வளிக்கும் ஆரோக்கிய முடிவு எடுத்திருப்பது பாலுவிற்குள் புளகாங்கிதத்தை ஏற்படுத்தியது.

”நீங்க நூறாண்டுகளுக்கு மேல் நல்லா இருக்கனும் !..” இருவரையும் தன் கரங்கால் தொட்டுத் தூக்கி மனதார ஆசீர்வதம் செய்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
நாலைந்து வருடங்களாகத் துணை நடிகையாய் வாழ்க்கை நடத்தும் நித்யாவிற்குள் ரொம்ப நாட்களாகவே... 'தான் சினிமா நடிகையாக வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை!' என்கிற கஷ்டம். 'தோழிகள், உறவினர்களிடம் கூட நான் இந்தப் படத்தில் தலைகாட்டி இருக்கேன்!' என்று சொல்ல முடியாத துக்கம், வருத்தம், அவமானம்.! 'சினிமாவில் நடிக்க ...
மேலும் கதையை படிக்க...
எழிலன் வயது 22. ஒல்லியான உருவம். உருண்டை முகம், எடுப்பான மூக்கு. கூர்மையான கண்கள். கன்னங்களில் கொஞ்சம் தாடி. கொஞ்சம் மீசை. பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் இளைஞன். இவனுக்கு எத்தனை நாட்கள், எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
ஐம்பது கிலோ மீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு அந்த வீட்டு வாசலில் மனைவியுடன் நின்ற தனசேகரன் தன் கையிலுள்ள தினசரியை விரித்து விலாசத்தை சரி பார்த்தான் சரியாக இருந்தது. முகத்தில் மலர்ச்சி. திவ்வியாவிடமும் காட்டினான் திருப்தி. இருவரும் வாசல் ஏறினார்கள். தனசேகரன் அழைப்பு ...
மேலும் கதையை படிக்க...
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார். ''உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !'' நெகிழ்ந்தார். ''பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.'' ...
மேலும் கதையை படிக்க...
'அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா.....?!!' எனக்குத் தலைகால் புரியவில்லை. மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்...ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
இவர்களும்…
வேர்களைத் தேடி…
குழந்தை…!
ஆளவந்தவர்..!
பய புள்ள….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)