மனிதர்கள்

 

“ஏனுங்கோ, இப்பிடி இங்க வந்து ஒக்காருங்க!’ லட்சுமி, ஜன்னலோரம் நகர்ந்தமர்ந்து தன் கணவருக்கு இடமளிக்கிறாள்.

அருகமர்ந்த நாச்சிமுத்துவிடம், “என்னங்க இது, இங்க இப்படியோரு சன நெரிசலு! ஒரு நாளைக்கே நாம் இப்பிடி நசுங்கிக் கசங்கிப் போறமே, புள்ள சென்னி எப்பிடித்தான் நெதமும் அமிஞ்சிக்கரைக்கு பஸ்சுல காலேசுக்கு வந்து போறானோ? பாவங்க பய!’ என்றாள் லட்சுமி.

மனிதர்கள்2

“அதெல்லாம் பாக்க ஏலுமா எச்சுமி? நாம என்ன, சென்னியப்பனுக்கு வண்டி வாகனம் வாங்கித் தரவா முடியும்? நம்மூர் சாயப்பட்ற தண்ணிப் பிரச்னைல நெரந்தர வேலைக்கே உறுதியில்லாமத்தானே அல்லாடுறோம்! இப்பதான் கம்பெனி திருப்பித் தொறந்து ஏதோ ஆறு மாசமா வேலக்கிப் போறன். நாமதான் நாலு எழுத்துப் படிக்கமுடியாமப் போச்சு; நம்ம புள்ளகளாவுது படிச்சுக் கரையேணுமேன்னுதான் பயல இங்க மெட்ராசுக்கு அனுப்பிப் படிக்க வக்கிறோம். இந்த பஸ்சுக் கூட்டத்தையெல்லாம் பாத்தா ஆவுமா?’
முதலாளி வீட்டுத் திருமணத்திற்காக பூந்தமல்லி வந்தவர், அப்படியே கல்லூரியில் பயிலும் மகன் சென்னியப்பனைப் பார்த்துவிட்டுப் போக தன் மனைவி லட்சுமியுடன் மாநகரப் பேருந்தில் வந்து கொண்டிருந்தார் நாச்சிமுத்து. நாற்பது வயது லட்சுமிக்கு இதுவே முதல் பட்டினப் பிரவேசம்!

“அட, அங்க எதுத்தாப்புல பாருங்களேன்! பஸ்சுக்குப் போயி மாலை போட்டு, தோரணங்கட்டி, ஜிகினாத் தாள் ஒட்டி இங்கிலீசுல என்னவோ எழுதியிருக்காங்கோ? என்ன விசேசமுங்கோ?’

லட்சுமியின் கேள்விக்கு, பேருந்தினுள்ள நின்றபடிப் பயணிக்கும் உள்ளூர் வெள்ளுடைக்காரர், “பஸ் டே’ ம்மா! என்கிறார்.
“பஸ் டே ன்னா?’

“காலேஜ் படிக்கிற பசங்க, அவுங்க தெனமும் வந்து போற பேருந்துக்குன்னே வருசத்துக்கு ஒரு நா விசேஷமாக கொண்டாடுறாங்க. பசங்க அவங்க மகிழ்ச்சியாக் கொண்டாடுறாங்க.’

“படிக்கிறத விட்டுப் போட்டு பஸ்சுக்குப் போயி… இதென்னங்க ஒரு வௌரங்கெட்ட கொண்டாட்டம்?’ இது லட்சுமி.

“ஏனுங்க, இவிங்களுக்கு இதுக்கெல்லாம் காசு பணம், நேரம்லாம் எங்கேயிருந்துங்க?’ இது நாச்சிமுத்து.

“அட, அதெல்லாம் பாக்கெட் மணி… அவுங்களுக்குள்ளேயே வசூல் செஞ்சுக்குவாங்க. ஆனா சில நேரத்துல இவங்க உற்சாகம் எல்லை மீறி ஒரே அலம்பலாகி கலாட்டா, கலவரத்துலக்கூடப் போயி நிக்கிது. அதனாலதான் பஸ்டே கொண்டாட அனுமதிக்கிறதில்லை.

ஹம் ஆனா, இங்க எல்லாமா அனுமதியோட நடக்குது? அதோ, அங்க பாருங்க, பயலுக பஸ் கூர மேலயே நின்னுகிட்டு டான்ஸ் ஆடுறத! டாப்புலர்ந்து விழுந்தான்னா என்னா ஆவான்? நடுரோட்ல நின்னு டான்ஸும் கூத்தும்… அவசரமாப் போறவங்க எப்பிடிப் போகமுடியும்?’
லட்சுமியும் நாச்சிமுத்துவும் வெறுப்பும் அச்சமும் கலந்து பார்வையை வெளியே அலைய விடுகின்றனர்.

மற்றொரு பயணி அலறுகிறார். “அட, இதென்னடா புது வம்பு? இன்னொரு காலேஜ் பசங்க வேற, எதிர் சைடுலர்ந்து பஸ்சுல ஆட்டம் போட்டுக்கிட்டு வர்றாங்களே? ஐயோ, கையில வெறகுக் கட்டை, மூங்கில் கழி…’

வரும் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரிக்குப் போகத் தயாராயிருந்த நாச்சிமுத்து மருண்டபடி பார்க்கிறார்.

எதிரே, அருகே, சாலையின் இருமருங்கிலும் குழுமிக் கூக்குரலிட்டு ரகளை செய்யும் மாணவர்கள்.

“ஆய் ஊய்’ எனத் தெளிவற்ற கூச்சல். சீழ்க்கையொலி. பேருந்துகளைக் கைகளால், கட்டைகளால், தட்டி எழுப்பும் “டமார்! டமார்!’ ஒலி.

இரு கல்லூரி மாணவர்களுக்குள் மோதல். இடையில் பேருந்துப் பயணிகள், பாதசாரிகள், சொந்த வாகனப் பயணிகள் மீதும் பாய்கின்றனர் மாணவச் செல்வங்கள். குறியற்ற தாக்குதல், நோக்கமற்ற போராட்டம், தெளிவற்ற கூச்சல், கோஷம்!

“அதோ! அங்க கூட்டத்துக்க நடுவில… யாரது? அட, சென்னியப்பா!’
வாயிலிருந்து வார்த்தைகள் வராது, கையை மட்டும் ஜன்னலுக்கு வெளியே நீட்டுகிறார் நாச்சிமுத்து.

“என்ன இது? தெருவோரம் குவிந்திருக்கும் ஜல்லிக் கற்றகளில் கைகொண்ட அளவு பாய்ந்தெடுத்து நம்ம பஸ் முன் கண்ணாடியக் குறி வச்சு வீசுறானே, சென்னியப்பன்!’

“சலங்! சலங்!’ பொல பொலவென உடைந்து நொறுங்கிக் கொட்டுகிறது பேருந்துக் கண்ணாடி. படபடக்கிறது நாச்சிமுத்துவின் மனசு.

பேருந்தை அப்படியே நிறுத்தி உள் பக்கம் பார்த்து,
“பஸ் இனிமே ஓடாது. நீங்கள்லாம் பதட்டப்படாம கீழ எறங்கிடுங்க!’
படபடக்கும் புறாக் கூட்டப் பதட்ட ஓசை பேருந்துக்குள். லட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை.

பேருந்து மீதும் பயணிகள் மீதும் செங்கல், சரளைக் கற்கள், பறந்து பறந்து வந்து பதம் பார்க்கின்றன. சிலநிமிடம் முன்பு வரை உற்சாகமும் மகிழ்ச்சிப் பெருக்குமாய் ஆடிப்பாடி ஆர்ப்பரித்த மாணவர்கள் இப்போது, கொதிக்கும் எண்ணெயில் சிதறிய நீர்த் திவலைகளாய் காட்டுமிராண்டித்தனமாய்… கலவரக்காரர்களாய்….
நாச்சிமுத்து லட்சுமியின் பின்னே அவசரமாய்ப் படி இறங்குகிறார்.
“உய்! உய்!’ என அலறிய வண்ணம் “காவல் “வண்டிகள் வந்து நிற்கின்றன. “தபதப’ வெனக் காவலர்களும் உயரதிகாரிகளும் கீழிறங்கி, உயர்த்திய தடிகளுடன் தரையில் தட்டி, “ஓடுங்க! ஓடுங்க காலேஜுக்கு’!’ என விரட்டி அடிக்கின்றனர்.

கல்லெறியும், உருட்டுக் கட்டைகளால் தாக்கும் இளைஞர்களை அப்படியே சட்டைப் பின்பகுதியைப் பிடித்துத் தர தரவென இழுத்து, வேனில் ஏற்றுகின்றனர்.

மீண்டும் சரளைக் கல்லை ஓங்கிய சென்னியப்பனின் பார்வையில் எதேச்சியாய் அவனது தகப்பன் நாச்சிமுத்து பட்டுவிட, கையிலிருந்து கல் நழுவிக் கீழே விழுகிறது.

காவலர் இழுத்த இழுப்பிலும் கல்லெறியும் தன்னைத் தகப்பன் கண்டுவிட்ட குற்ற உணர்வாலும் தால்கள் துவள, தரையில் சரிகின்றான் சென்னியப்பன்.

பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் காவல் துறை அதிகாரியிடம் முறையிடும் தொனியில் ஆவேசமாகக் கூறினர்.

“இவன்தான் சார் எங்க பஸ்சுக் கண்ணாடிய ஒடைச்சவன். இவன் கூட வந்த ரெண்டு மூணு பசங்களும் பஸ்ஸத் தட்டி பயணிங்கள மெரட்டி ரகள பண்ணினாங்க.’

சுருட்டிய பாயாய் சென்னியப்பனை நெட்டித் தள்ளி அள்ளிக் காவல் வேனில் திணித்தனர்; கதவடைத்தனர்; உள்ள÷ ஏற்கெனவே சில மாணவர்கள்.

“டிரைவர்! நீங்க மட்டும் எங்க பின்னாடியே ஸ்டேஷனுக்கு வந்துடுங்க. கண்டக்டர், சாட்சிக்கு ரெண்டு, மூணு ஐ விட்னஸ்ங்களையும் கூட்டிக்கிட்டு வாங்க.. ம் சீக்கிரம்!’ பேச்சற்று நின்ற நாச்சிமுத்து காவல்துறை அதிகாரியிடம் சென்று “நாஞ்சாட்சி சொல்றேனுங்கோ!’ என்கிறார்.

“ம்… சரி… கண்டடக்டர் கூட வந்து சேருங்க..’

“ம்… ம். கூட்டம் போடாதீங்க! வெலகுங்க! வெலகுங்க!’

பாதையோரம் மரத்தடியில் காத்திருந்த லட்சுமியிடம், “யெட்சுமி! வெரசா வா, ஓரிடம் போயிட்டு வரோணும்!’ என்கிறார்.

“ஏனுங்க அவசரம்? சென்னிப் பயலக் காலேசுல போய்ப் பாக்கோணுமில்ல? மொதக்க அவனப் பார்த்துப் போட்டு வந்து பொறவு எங்க வேணாப் போலாமுங்கோ…’

“அட அவனத்தேன் பாக்க போறோம்… வா புள்ள…’

கை முறுக்கும் அதிரசமும் பிதுங்கும் மஞ்சள் கையைக் கை மாற்றிக் கொண்டு நாச்சிமுத்துவுடன் ஓடினாள் லட்சுமி.

“வாங்கய்யா, இந்த ஷேர் ஆட்டோவிலேயே போய் வந்திடலாம்’ நடத்துனர் அழைக்க அவர் பின்னே சிறு படை திரள்கிறது.

“வாங்கம்மா! மொதல்ல நீங்க உள்ளே போய் ஒக்காருங்க’

“ம் உள்ளே போ!’ விவரம் புரியாமல் விழித்த லட்சுமியிடம் கட்டளையிடுகிறார் நாச்சிமுத்து.

காவல்துறை வேன் பின்னே தொடர்கிறது ஷேர் ஆட்டோ. பேருந்து ஓட்டுனர் கவலை தோய்ந்த குரலில் பேசுகிறார்:

“பெத்தவங்க எவ்வளவோ கஷ்டப்பட்டு இவங்களைக் காலேஜுக்கு அனுப்பி வைச்சா இவனுங்க காலேஜ் எலக்க்ஷன், பஸ்டே, கல்சுரல்ஸ்னு களேபரம் பண்றாங்க. இந்த வயசுக்குரிய ஆர்வம், துடிப்பு, சந்தோஷத் தேடல், குறும்பு எல்லாம் இருக்கலாம்; ஆனா, இப்பிடி எல்லை மீறக்கூடாதுல்ல. கல்லெறியறது, கத்தி அருவா தூக்கறதுன்னு போகலாமா?’

ஓட்டுனர் – நடத்துனர் பேச்சில் ஒட்டாது தாழ்ந்த குரலில் வினவுகிறாள் லட்சுமி: “எங்கங்க போறோம்? சென்னியப்பனப் பாக்க வேணாமுங்களா?’

நாச்சிமுத்து, லட்சுமியின் கரம் பற்றித் தன் உள்ளங்கையுள் புதைத்துத் தட்டித் தந்து கூறுகிறார்.

“யெச்சுமி! அவனத்தான் பாக்கப் போறோம்; ஆனா அவனிப்ப காலேசுல இல்ல; போலீஸ் ஸ்டேசன்ல…’

“ஏனுங்க என்ன சொல்றீங்கோ?’ நாச்சிமுத்துவின் தோளை பற்றி உலுக்கிக் கேட்கிறாள் லட்சுமி.

“நாஞ் சொல்றத நிதானமாக் கேளு. இத, இப்பக் கொஞ்சம் மின்னப் பாத்தமே ஆட்டம் கொண்டாட்டம் கல்லெறிக் கலவரமா ஆச்சுல்ல? நீதானே அவனுக கல்லெறியிலிருந்து நெக்கைக்குள்ள கோழிக் குஞ்சுக் காப்பாத்தற மாதிரி ஒரு பிஞ்சுப் புள்ளயக் காபந்து பண்ணிக் குடுத்த? யெச்சுமி, நம்ம வந்த பஸ்சு கண்ணாடியக் கல்லெறிஞ்சு உடைச்சது நம்ம சென்னியப்பந்தான்புள்ள!’

“என்னது? சென்னியா? நம்ம சென்னியா?’

“ஆமா எச்சுமி, நா என் கண்ணால அந்தக் கொடுமையைப் பாத்தேன் புள்ள! அவெந்தான் எதிரக்க நின்னு மொதக் கல்ல வீசினான். பின்னுக்க ரெண்டு மூணு பயலுக சரமாரியா கல்ல வீசுனானுங்க. நம்மளப் பய பாக்கல. நா றங்கி எதுத்தாப்புல போகவும் போலீசு வரவும் சரியாயிருந்துச்சு. அப்பத்தான் என்னையப் பாத்தான் உம் மவன்! அதுக்குள்ற போலீசு வெரட்டித் தொரத்தி அள்ளித் தூக்கிப் போட்டுக்கிட்டு போறாங்கோ. இதோ, முன்னுக்குப் போகுதே போலீசு, வேனு, அதுக்குள்றதான் இருக்கான் நம்ம சென்னியப்பன்!’
“ஐயோ! இது எனக்கொன்னுந் தெரியாமப் போச்சே! அது சரிங்கோ, நாம போயி நம்ம சென்னியக் கூட்டிக்கிட்டு வந்துடலாம்ல? விட்ருவாங்கள்ல?’

கறந்த பால் கறந்தபடி லட்சுமி:

“இப்பிடிப் பாசம் மட்டுமே ஒலகம்னு வாழ்ற நீ இந்த நெச ஒலகத்தை எப்பத்தான் நெதர்சனமாப் புரிஞ்சுக்கப் போறியோ தெரியலையே எச்சுமி! சென்னியப்பனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்க நானே அவனுக்கு எதிரா சாட்சி சொல்லத்தான் இப்பப் போறேன்.’
“ஐயோ! நல்லாயிருக்கா நீங்க பேசுற நாயம்? பெத்தப் புள்ளயக் காப்பத்றதவிட்டுப் போட்டு, அவுனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கப் போறேன்கிறீங்களே, இது ஒங்களுக்கே நாயமா, சொல்லுங்க?’

“அந்தப் பய எரிஞ்ச கல்லு யாரு மேலயாவுது பட்டு யாருக்காவுது எதாவது ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும் சொல்லு? எச்சுமி, நம்ம புள்ள சென்னியப்பன் நமக்கு மட்டும் நல்ல புள்ளையாயிருந்தா போதாது. அவன் உலகத்துக்கும் நல்ல புள்ளையா இருக்க வேணாமா? அட, அவனுக்கு அவனே நல்லவனா இருக்கு வேணாமா, சொல்லு? இப்ப அவன் செஞ்ச குத்தத்துக்கு அவன் தண்டனைய அனுபவிச்சான்னா அவன் திருந்திடுவான்ல? திடமா இரு. அவன் நல்லதுக்குத்தான் நான் சொல்றேன்.’

உப்புக் கரிக்கும் கண்ணீர் உதட்டில் பட, “செய்யுங்க…’ என்கிறார் லட்சுமி.

கூப்பிய கரங்களுடன் அவர்கள் இருவரையும் கண் இமைக்காது தரிசிக்கின்றனர் உடன் வரும் நகரவாசிகள்.

- ஆகஸ்ட் 2013 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW