தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,002 
 

மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய்.
“அது சுப்ரமணியம் சார் தானா…’ என்று, காதர்பாய் தீர்மானிப்பதற்குள், அவர், டூ வீலரில், இவரை தாண்டிப் போக, காதர்பாய் அவசரமாய் தன் சைக்கிளை எடுத்து, பின் தொடர்ந்தார்; ஆனால், துரத்திப் பிடிக்க முடியவில்லை.
சைக்கிளின் வேகத்தைக் குறைத்துக் கொண்ட காதர்பாய், “சரி… ரோட்டில் கேட்பதை விட, வீட்டிற்குப் போய் கேட்பது தான் நல்லது…’ என்று முடிவு செய்து, சைக்கிளை செலுத்தினார்.
சுப்ரமணியத்தின் வீட்டு வாசல்.
“”சார்… சார்…” குரல் கொடுத்தார் காதர்பாய்.
மனிதர்கள்“”ஏங்க… யாரோ உங்களை கூப்பிடறாங்க… காதுல விழலையா?” என்று, தன் கணவனை பார்த்து அவர் மனைவி கேட்க, “”ஓ… அப்படியா… வயசு அறுபதை தாண்டிடுச்சே… காதுல விழலை… இதோ போறேன்,” என்றவர், ஈசி சேரிலிருந்து எழுந்து, வாசலுக்கு போனார்.
லுங்கியுடனும், தலையில் தொப்பியுடனும், தாடியுடனும் நின்றிருந்த காதர்பாயை சட்டென்று அடையாளம் தெரியாமல் விழித்தார் சுப்ரமணியம்.
“”ம்… நீங்க?” இழுத்தார் சுப்ரமணியம்.
“”சார்… நான் காதர்பாய்… மசூதி பக்கத்துல…”
“”ஓ…ஓ… ஞாபகம் வந்துடுச்சுப்பா… கோழிக்கறிகடை காதர்பாய்; சரியா…?”
“”ஆமா சார்,” தலைகுனிந்தபடி சொன்னார் காதர்பாய்.
“”இருப்பா… சேர் கொண்டு வர்றேன். முதல்ல ஒக்காரு.”
“”சார்… சேரெல்லாம் வேண்டாம். உங்க மூலமா, எனக்கு ஒரு உதவி வேணும்,” என்று சொன்ன காதர்பாயை, ஆச்சரியத்துடன் பார்த்தார் சுப்ரமணியம்.
“”என்னால உனக்கு ஒரு உதவியா… சொல்லுப்பா…”
“”சார்… யாருமே செய்ய நினைக்காத, மிகப் பெரிய புண்ணிய காரியத்தை நீங்க செஞ்சிருக்கீங்க… உங்க பையன் ரவி, விபத்துல அடிபட்டப்ப, டாக்டர் உயிர் பிழைக்க வழி இல்லைன்னு சொன்னதும், கொஞ்சமும் தயங்காம, உங்க பையனோட கண், கல்லீரல்ன்னு, உறுப்புகளை தானமா கொடுத்தீங்களே… எப்பேர்பட்ட விஷயம்…”
காதர்பாய் சொல்லச் சொல்ல, தன் மகன் ரவியை நினைத்த சுப்ரமணியத்தின் கண்கள் கலங்கின!
“ஒரு மனுஷன், பணத்தால மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியுதோ இல்லையோ, சரீரத்தால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்யணும்…’ என்று, ரவி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள், சுப்ரமணியத்தின் ஞாபகத்திற்கு வந்தன!
“”காதர்பாய்… என்னால முடியும்ன்னா கண்டிப்பா நான் உனக்கு உதவி செய்வேன்… உன் மனித நேயம் எனக்குத் தெரியும். கோடைக்காலத்துல, உன் கடை வாசலிலேயே தண்ணீர் பந்தல் அமைச்சு, மக்களோட தாகத்தை போக்கறே… இதெல்லாம் எல்லாருக்கும் செய்ய மனசு வராது…”
“”சார்… நீங்க பெரிய பெரிய வார்த்தை சொல்றீங்க… ம்… சார், என் பையன், பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டான்.”
“”ஓ… ரொம்ப சந்தோஷம்ப்பா…”
“”நம்ம ஊர்ல இருக்கிற செயின்ட் பீட்டர்ஸ் இன்ஜினியரிங் காலேஜ்ல, என் பையனை சேர்க்கணும்ன்னு ஆசை. ஆனா, பையன் பிளஸ் 2வில் மார்க் ரொம்ப கம்மி… அந்தக் காலேஜ்ல டொனேஷன் கொடுத்து, என்னால சேர்க்க முடியாது… வெளியூர்ன்னா செலவும் ஜாஸ்தி… பையனை அனுப்பவும் பயமா இருக்கு… அதனால, அந்த காலேஜ் சேர்மன்கிட்ட நீங்க சொன்னா, அவர் கண்டிப்பா செய்வார்ன்னு, ஊர்ல எல்லாரும் சொல்றாங்க சார்…”
சில வினாடிகள், காதர்பாயை அமைதியாய் பார்த்தார் சுப்ரமணியம்.
“”காதர்… நான் அவருக்கு செஞ்ச உதவி, தானா அமைஞ்சது… என் மேல அவருக்கு மரியாதை உண்டுங்கறதும் உண்மை… ஆனா, நான் செஞ்ச உதவிக்கு கைமாத்தா, நான் அவர்கிட்ட கேட்டா, நல்லா இருக்காதே,” என்று தயங்கினார் சுப்ரமணியம்.
“”சார்… உங்க நிலைமை எனக்குப் புரியுது… உங்க பையனோட கண்ணு, அவரோட பையனுக்குத்தானே பொருத்தியிருக்கு… அதுக்கு பிரதிபலனா, இதை நீங்க கேக்கறதா, அவர் நினைப்பாரோன்னு நினைக்கறீங்க… இல்லையா?”
“”ஆமா காதர்… நீ சொல்றது சரிதான்… ஆனா, மத்தவங்களுக்கு உபகாரம் செய்யற உனக்காக, நான் காலேஜ் சீட் கேக்கறது தப்பில்லைன்னு தோணுது. சரி காதர்… நாளைக்கு காலைல நீ வீட்டுக்கு வா… நாம காலேஜ் சேர்மன் ஜோசப் சாரை கேட்டுப் பார்க்கலாம்…”
சுப்ரமணியம் சொன்னதும், மகிழ்ச்சி கலந்த நம்பிக்கையுடன் வீடு திரும்பினார் காதர்பாய்.
செயின்ட் பீட்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி வளாகம்.
சுப்ரமணியம் வந்திருப்பதை கேள்விப்பட்டு, வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார் கல்லூரி சேர்மன் ஜோசப்.
“”வாங்க சார்… சொல்லி அனுப்பியிருந்தா, நானே உங்க வீடு தேடி வந்திருப்பேனே… உங்களுக்கு எதுக்கு சிரமம். வாங்க… வாங்க…” என்று, இருவரையும் தன் அறைக்குக் கூட்டிச் சென்றார் சேர்மன் ஜோசப்.
காதர்பாயும், சுப்ரமணியமும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தனர்.
“” இவர் காதர்பாய்…” என்று தயங்கியபடியே, ஆரம்பித்த சுப்ரமணியம், தான் வந்த விஷயத்தை விரிவாகச் சொல்ல, ஜோசப் சந்தோஷப்பட்டார்!
“”சார்… இதை நீங்க தயக்கத்தோட கேக்கணுமா? நாங்களே இந்த காலேஜ்ல ஒவ்வொரு வருஷமும் மேனேஜ்மென்ட் சீட்ல, வருமானம் குறைவா இருக்கிற அஞ்சு பேரை டொனேஷன், பீஸ் எதுவும் இல்லாம இலவசமா சேர்த்துக்கறோம். படிக்கிற நாலு வருஷமும், ஒரு பைசா கூட கட்ட வேண்டாம். அந்த அஞ்சு பேர்ல, இந்த வருஷம் காதரோட பையன் மைதீன்… சரியா?” என்று ஜோசப் சொல்ல, ஆனந்த அதிர்ச்சியில் காதர்பாயின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
“”சார்… நீங்க தெய்வம் சார்,” கையெடுத்து கும்பிட்டார் காதர்பாய்.
“”நான் உங்களுக்கு தெய்வம்ன்னா, தன் பையனோட கண்ணை என் பையனுக்கும், தன் பையனோட கல்லீரலை இன்னொருத்தருக்கும் தானமா கொடுத்த சுப்ரமணியம் எனக்கு தெய்வம். நாமெல்லாம் தெய்வம் இல்லை. கடவுள் சொல்ற கட்டளைகளை நிறைவேத்தற பொம்மைகள்… அவ்வளவுதான்.”
“”என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஜோசப் சார்,” கைகூப்பி சொன்னார் சுப்ரமணியம்.
“”எதுக்கு சார் நன்றி… உங்க சமூகத்துல ஒருத்தர் இறந்துட்டா, எந்த ஒரு உறுப்பையும் சிதைக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. நீங்க அதையும் தாண்டி, உங்க பையனோட உறுப்புகளை தானம் செய்து, மத்தவங்களுக்கு ஒரு முன்னுதாரணமா ஆயிட்டீங்க… நீங்க கிரேட் சார். காதர்… நாளைக்கு பையனோட காலேஜ் ஆபீசுக்கு வந்து, “அட்மிஷன்’ வேலையை முடிச்சிடுங்க. நான் ஆபீசுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடறேன்,” என்று ஜோசப் சொன்னதும், சுப்ரமணியமும், காதரும் சந்தோஷமாய் விடை பெற்றனர்!
ஞாயிற்றுக்கிழமை –
“”டேய்… மைதீன் நாளைக்கு காலேஜ் ஆரம்பம்… வா… போய் சுப்ரமணியம் சார்ட்ட சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு வரலாம்.”
“”சரிப்பா.”
காதரும், மைதீனும் சுப்ரமணியம் வீட்டிற்கு போனபோது, வீடு பூட்டியிருந்தது.
காதர்பாய் பக்கத்து வீட்டில் விசாரித்த போது, கேட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்தார்.
“”டேய் மைதீன்… சைக்கிளை ஜே.கே., ஆஸ்பத்திரிக்கு ஓட்டு…”
காதர்பாய் அவசரமாய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து, விசாரிக்கவும், போர்டிகோவின் மறுமுனையில் சுப்ரமணியம் வருவது காதருக்கு தெரிந்தது!
அவரை நோக்கி ஓடினார் காதர்பாய்.
“”சார்… மாமிக்கு என்ன ஆச்சு…?” படபடப்புடன் கேட்டார் காதர்.
“”நேத்து ராத்திரி நெஞ்சு வலிக்குதுன்னா… அப்படியே மயங்கிட்டா. உடனே, இங்க தூக்கிட்டு வந்துட்டேன். அவசரமா ஆபரேஷன் செய்யணுமாம்… பணம் இருக்கு, பிரச்னையில்லை. ஆனா, ரத்தம் அவசரமா தேவைப்படுது. இவளோடது, “பி – நெகடிவ்’ குரூப் வேற… ஈசியா கிடைக்காதாம்… அதான் பயமா இருக்கு. என்னை விட்டுட்டு போயிடுவாளோன்னு…” சுப்ரமணியம் கண்களில் கண்ணீர் பெருகியது.
“”சார்… ரத்தம் தானே… தெரிஞ்சவங்களை கேட்டுப் பார்க்கிறேன்,” என, அவசரமாய் ஆஸ்பத்திரியின் படிகளில் இறங்கியவர், திரும்ப சுப்ரமணியத்திடம் ஓடினார்.
“”சார்… என்ன பிளட் குரூப் சொன்னீங்க?” மூச்சிறைக்க கேட்டார் காதர்பாய்.
“”பி – நெகடிவ்…”
“”சார்… என் பொண்டாட்டி, மைதீன், ரெண்டு பேரும், “பி – நெகடிவ்’ தான் சார். நீங்க கவலைப்படாம இருங்க. கடவுள் எல்லாம் நல்லது செய்வார். டேய் மைதீன்…” என்று காதர் கூப்பிட, ஓடி வந்தான் மைதீன் .
“”இந்தா காசு… போய் விஷயத்தை சொல்லி, அம்மாவை கையோட ஆட்டோவுல கூட்டிட்டு வா.”
மைதீன் பறந்தான்.
“”நன்றி காதர்பாய்…” நெகிழ்ந்து போய், காதர்பாயை கட்டி அணைத்தார் சுப்ரமணியம்.
“”சார்… எதுக்கு நன்றி. நீங்களோ, அந்த ஜோசப் சாரோ உதவி செய்தப்ப எதையாவது, எதிர்பார்த்தா செய்தீங்க. பிறக்கும் போது இந்த ஜாதியில, இந்த மதத்துல பிறக்கணும்ன்னு வேண்டிக்கிட்டா நாம பொறக்கிறோம். ஆனா, பொறந்தப்பறம், நாம அந்த மதத்துக்கு பெருமை சேர்க்கிற மாதிரி நடந்துக்கணும்… இப்ப உங்களுக்கு உதவ, கடவுள் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கார். அவ்வளவுதான் சார்.”
காதர்பாயின் முதுகைத் தட்டிக் கொடுத்தார் சுப்ரமணியம்.
மதங்களை, மனித நேயம் இணைத்தது!

– சித்ரா பாலசுப்ரமணியன் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *