Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மனிதன் 2.0

 

இதைத் தனியாக பல வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். நேரில் பார்த்த சம்பவம். என் கண் முன்னாலேயே நடந்தது. ஊசி குத்திய தழும்பு போல் பலவருடத்திற்குப் பிறகும் மறையவில்லை. ஆனால், இதைச் சொல்லும் போது எனக்கு புதிதாக இருந்தால் என் நினைவுகளுக்குத் தோல்விதான். படித்துப் பார்க்கலாமென தோன்றியது.சில வேலைகளை என்னால் தனியாகச் செய்ய முடியும். துணைக்கு யாராவது இருந்தால் அனுசரணையாக இருக்கும்.

என்ன போச்சு? நீங்களும் என்னுடன் படிக்க வாருங்கள். அம்பாள் சந்நிதி நந்திதேவர் நடுவில் நிற்பது போல பல கற்பனைகள் குறுக்கே வரும். அதையெல்லாம் தாண்டினால் மட்டுமே என் கதையின் உண்மை புரியும். கற்பனையில் எல்லாவிதமான மண்டபங்களும் வரும். நீளமான சங்கிலி மண்டபம்;அதனுள் இருக்கும் துர்கை, முருகன், ஐயப்பன் சிலைகள், தூண்கள், இருட்டுகள்.

*

ஒரு புதன் கிழமை ,உழைப்பவர்கள் சளைக்காமல் வேலை செய்துகொண்டிருக்கும் மதிய நேரம். அப்போது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அமைதியான நூலகத்தில் என்னென்ன நடக்கும்?

என்னுடன் நீங்களும் சேர்ந்து நுழைகிறீர்கள். நூலகத்தில் வேலைப் பார்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் பொழுதைக் கழிக்க வரும் பிரகஸ்பதிகள் தான்.உங்களுக்கு எதிரில் சோற்று மடம் போல் வரிசையாக கணிணி தலைகள் வெறித்துக்கொண்டிருக்கின்றன. நம் பக்கம் முதுகைக் காட்டியபடி பல வடிவங்களில் மக்கள் கணிணியில் மேய்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதை நோக்கிச் செல்லும் உங்கள் கைகளை பிடித்து இழுக்கிறேன். `நண்பா தேவையில்லை, எல்லா இடங்களையும் பார்த்து விட்டு வருவோம்`

இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவீங்களா என்ன? கையை உதறி வேறிடம் பார்க்க எவ்வளவு நேரமாகும்? அதனால், உங்கள் ஆர்வம் குறையாமலிருக்க, வேகவேகமாக முதல் மாடிக்குள் ஒரு சின்ன கொடி மரத்தைக் கடந்து உள்ளே நுழைகிறோம். சுவாமி சந்நிதி மாதிரி உயரமான விதானம். நீங்கள் தலை கீழே விழும்வரை வளைந்துப் பார்க்கிறீர்கள் – `ஏய், என்ன பண்ணற? அங்க பாரு`. நான் காட்டிய இடத்தில் கருவறைப் போல இருட்டான இரு அறைகள் இருந்தன.

அர்த்த மண்டபமா என நீங்கள் கேட்பதற்கு முன் இழுத்துக்கொண்டு உள்ளே விரைகிறேன். விட்டத்தை இடிக்குமாறு ஓங்கி நிற்கும் புத்தர் சிலை. யப்பா என நீங்கள் வியப்பதற்கு முன், நான் `எவ்வளவு பூந்தொட்டிகள், எல்லா நிறத்திலும் பூக்கள், அந்த வானவில்லுக்கு நடுவே ஒருவன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறானே.யாரவன்?` எனக் கேட்க.`பெரிய அரசன். வில்லையும்,கடத்தையும் துறந்து சில கண்ணீர் துளிகளால் மண்ணுக்கு உரம் சேர்க்கிறான்` என உங்கள் கையை இருக்கமாகப் பிடித்திருக்கும் கிழவர் கூறுகிறார். காட்சிகள் இப்படி மாறியதை நாம் உணர்வதற்குள் மூவரையும் மத யானைப் போல் இழுத்துக்கொண்டு அந்த சந்நிதிக்குள் நுழைகிறார். அவர் யாரென்றோ,அங்கிருந்த பூக்கள் எங்கே எனக் கேட்கக்கூட நேரமில்லாமல் வேகவேகமாகத் பல படிகெட்டுகளைத் தாண்டிச் செல்கிறோம்.

கீழ் தளத்தில் கணிணியின் முன் உட்கார்ந்திருந்தவர் இந்த முதியவர் என ஞாபகம் வந்தது. உங்களிடம் சொல்லவில்லை.

உங்களுக்கும் கேட்க நேரமில்லை. கணம் தோறும் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளுக்குள் காலடி வைக்கிறோம். இது எங்கே முடியுமெனத் தெரியவில்லை. நீங்கள் திடீரென நின்று – பழைய ஷெர்லாக் ஹோம்ஸ் போல நீளமான உடையணிந்த இருவருக்கு வழிவிடுகிறீர்கள். அவர்கள் கைகளிளும் பல நிறப் பூக்கள் தோரணமாய் இருக்கிறது. தூரத்தில் நிற்கும் குதிரையில் இருந்த ஒரு சவப் பெட்டியின் மேல் அதை வைத்தபடி, பழைய கால கனவான்கள் போல் குதிரையை ஓட்டிச் செல்கிறார்கள்.

நாமிருவரும் இந்த காட்சியை பற்றி பேச வாயெடுக்கும்போது நம் சந்நிதியின் இசைத் தூண்களில் சத்தம் கேட்கிறது. `திருநாவுக்கரசர்..` என மெள்ள முணுமுணுக்கிறீர்கள்.

ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வதுதானே

நம் முன் பல சடலங்கள் சடசடவென திருநாவுக்கரவுப் போல் எழுந்தன.`என் இறந்த மகன் கிடைத்தான்` எனக் சந்தோஷக் கூக்குரல் சந்நிதியின் தூண்களில் அறைந்தது.

உங்களுக்கு மயக்கம் வருவது போலிருக்க, என் கைகளை வலிக்கும்படி அழுத்தமாகப் பிடித்தீர்கள். `இன்னும் பார்க்க வேண்டியது நிறைய. சீக்கிரம்..சீக்கிரம்` என கிழவர் அவசரப்படுத்த வலியைப் பொருட்படுத்தாது ஓடுகிறோம்.

ஓடும் வழியிலெல்லாம் விதவிதமான மனிதர்கள். நகரங்களும் மண்ணுக்குள் புதைந்து, பல நிலங்கள் சேர்ந்து மாறியபடியே இருக்கும் காட்சி , சாலைப் போக்குவரத்துப்போல் குழப்பமாக இருக்கின்றது. நாமிருவரும் பீதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.கிழவருடன் அவர் கூட்டாளிகள் இருவர் சேர்ந்து கொள்கின்றனர்.

வழியெங்கும் புன்னை மரங்கள். ஐவரும் எந்த மரத்தின் மீதும் இடிக்காதபடி ஓடுகிறோம். எங்கு போகிறோமென நீங்கள் கேட்க, மற்ற மூவரும் வெவ்வேறு இடங்களைச் சொல்கிறார்கள். அழுவது போல் விகாரமாய் உங்கள் முகம் மாறுகிறது. `ஏன் இப்படி`என நான் கேட்க, என் முகத்தைப் பார்த்து பயப்படுவதாக நீங்கள் சொல்கிறீர்கள்.

“ஃப்ரான்க்ஸ் என்பவர்களால் உருவாக்கப்பட்டது பிரான்ஸ். ஸ்விஸிலிருந்து, ஸ்பெயின் நாட்டில் தென்கோடிவரை சார்ல்ஸ் மாகானின் ஆணைக்கு கட்டுப்பட்டது. சின்னப் பகுதிகளாகப் பிரிக்க முடியும், ஆனால் ஒவ்வொரு நிலமும் தனித்து தழைக்கக்கூடிய வளமிருக்கவேண்டும்”- பலர் கூட்டமாய் நின்று, நடுவில் நிற்கும் ஒருவனை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடமே இருட்டாக இருந்தாலும், அனைவரின் முகத்திலும் திட்டு திட்டாய் அசைந்து ஆடியபடி இருந்த தீச்சட்டியின் வெளிச்சம் போதுமானதாக இருந்தது.

நடுவில் நிற்பவன் முகத்தில் ஜ்வாலை. அவனருகே இருந்த குள்ளமான விலங்குபோல் ஒன்று எட்டி நம்மைப் பார்த்தது. நாம் வேகத்தை அதிகப்படுத்தினோம்.வழியில், குனிந்து வயல்களில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த யாரும் நம் சத்தத்தைக் கேட்டு திரும்பவில்லை. வேலையில் மும்முரமாக இருந்தனர். அவசரகதியில் ஒரு திருப்பத்தில் பெரிய கதவை அடைந்தோம்.

முடிவில்லாத வானத்தின் உச்சி வரை அந்த கதவு வளர்ந்து கொண்டிருந்தது. அதன் முகம் முழுதும் செடிகள். முழுவதும் பச்சையால் செய்ததுபோன்ற கதவு. பலமாக அடித்த காற்றில் கதவிலிருந்த இலைகள் தங்களில் வயதானவர்களைக் கீழே தள்ளிக்கொண்டிருந்தன.

உங்கள் முகத்தில் அவை விழுகின்றன. பதறியபடி அவற்றை துடைத்துப் போடுகிறீர்கள். ஏதேனும் அரிப்பு வந்துவிடுமோ என வேகவேகமாய் மூக்கு, தாடை, கண்கள் என தேய்த்துக்கொள்கிறீர்கள்.

கதவைத் தாண்டு நுழைந்தால், விடியலைப் போல் மேகங்களில் சூரியன் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தான். உங்கள் முகத்தை அப்போதுதான் தெளிவாகப் பார்க்கிறேன். முழுவதும் களைப்பு.பீதி. அழகாக பொழுது புலர்வது போல் பறவைகளின் சத்தங்களும், பலர் ஒன்றாக எழுவதைப் போன்ற காட்சிகளும் தென்படுகின்றன. நம் சங்கிலியில் மேலும் பலர் கூடியிருக்கின்றனர்.

உங்களால் நம் சங்கிலியின் கடைசியில் இருப்பவரைப் பார்க்க முடியவில்லை. `இருபது பேர் இருக்கலாம்` என நான் கூறியதைப் பொருட்படுத்தாது, `என்ன அர்த்தம்` என கண்களால் நீங்கள் கேட்பது புரிகிறது. பதில் தெரியவில்லை.

நீரோட்டத்தில் மிதக்கும் இலையிடம் அது சேருமிடத்தை விசாரிக்க முடியுமா? தண்ணீரில் நனைந்து, எதிர்ப்படும் மரக்கிளைகளில் மாட்டியபடி சென்றுகொண்டேயிருக்க வேண்டியதுதான் அதன் வேலை. கீழுள்ள பாசியில் சிக்கினால் மட்டுமே சற்று நேரம் வேடிக்கைப் பார்க்க முடியும்.

நாம் ஓடியபடி ஒரு சிறு தோட்டத்தை அடைகிறோம். புல்வெளியெங்கும் பைத்தியங்கள் உட்கார்ந்திருக்கின்றனர்.எல்லோரின் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன.பல நிற மனிதர்கள். அவர்களில் சிலரை மட்டும் இழுத்து எரிந்துகொண்டிருக்கும் கிணற்றில் தள்ளுகிறார்கள். அப்படி பிடிக்கப்பட்ட சிலர் தங்கள் ஆடைகள் கிழிய ஓடுகிறார்கள். தங்கள் சங்கிலியைப் பிரிக்க முயல்கிறார்கள்.ரத்தம் கசிகிறது. நம்மை நோக்கியும் சிலர் வருகின்றனர். ஆனால் நம்மிடமிருந்து சிறிது தூரத்தில் நின்று தங்களைக் காப்பாற்றுமாறு சைகை காட்டுகிறார்கள்.

நாம் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். வரலாற்றை கடக்கும் வேகம்.

திரும்பவும் மலர்கள் நிறைந்த அறைக்குள் நுழைகிறோம். ஏனோ, அங்கிருந்த புத்தர் சிலை விகாரமாக மாறிவருகிறது. உடம்பின் பல இடங்களில் காயம், சீழ், ரத்தம் என ஏதேதோ வழிந்து கொண்டிருக்கின்றன. கீழே மண்டியிட்ட மன்னன் கதறுகின்றான். சரியாக நமக்குப் புரியவில்லை. ஆனால் தன் பாவத்துக்காக மட்டும் அவர் மண்டியிடவில்லை என நமக்குத் தெரிகிறது.அதற்கு இவ்வளவு பீடிகை தேவையில்லை.

அவனோ, அழிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுக்காகவும் மண்றாடிக்கொண்டிருக்கிறான்.

உங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. தலையை வேறு பக்கம் திருப்பி அழுதுகொண்டிருக்கிறீர்கள். நம் வரிசையை நான் எட்டிப் பார்க்கிறேன். உண்மையில், நம்மைத் தவிர நடப்பவைபற்றி யாருமே கவலைப்படவில்லை.

உங்கள் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கிறது. கண்களில் ஈரத்திற்குப் பஞ்சமில்லை.

`நிலத்தில் வீழும் ரத்தங்களுக்கு நாங்கள் மட்டும் காரணமா? புதைக்கப்பட்ட இடத்திலிருக்கும் வேர்களிடம் கேட்டுப்பாருங்கள், துண்டான கணவனின் தலையைப் பெறும் ஒவ்வொரு வீரனின் மனைவியையும் கேட்டுப்பாருங்கள். சாவு பசியுடன் அலையும் பூதம் என அந்த மனைவி கூறுவாள். மகாராஜாவே, சாவுக்கு காரணங்கள் முக்கியமல்ல.அதற்கு வேண்டியது வெற்றிடம். இந்த உலகை அப்படி மாற்றவே இங்கே யுத்தங்கள் நடக்கின்றன. யுத்தங்களுக்குப் பிறகு யார் ஜீவித்திருப்பார்கள்? அதைப் பற்றி கவலை எதற்கு?`

புத்தரின் முக வடிவிலிருந்து மாறிக்கொண்டிருந்த அந்த சிலை கர்ஜனையுடன் பேசிக்கொண்டேயிருந்தது. நம்மால் கேட்க முடியவில்லை.

`இங்கிருந்து போய்விடலாம். ம்ம்..சீக்கிரம்` என அந்த கிழவரைப் பார்த்து நான் கத்துகிறேன். என் கையை பிடித்தபடி நீங்கள் மண்டியிட்டு கிடக்கிறீர்கள். உங்கள் முதுகு துண்டாக்கப்பட்ட கோழியைப் போல துடித்துகொண்டிருக்கிறது. மிகக் கொடுமையான துயரத்தின் விளிம்பில் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.

`என்ன இன்னும் எவ்வளவு நேரம் இங்கே நிற்கப்போகிறோம்..` கத்திக்கொண்டே நம் சங்கிலியைப் பார்க்கின்றேன்.

அங்கு யாருமேயில்லை. காற்றில் என் விரல்கள் கிழவரின் கைகளை தேடித் துழாவுகின்றன.

வீறிட்டலறியபடி நீங்கள் எழுந்து ஓடப் பார்க்கிறீர்கள்.உங்களின் வெறி அதிகரித்தபடியிருக்கிறது. ஆனாலும், என் கையை விடாமல் திமிறிக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் மெதுவாக தூரிகை போல் நின்றிருந்த விட்டத்தைப் பார்க்கிறேன். மைக்கேல் ஆஞ்ஞெல்லோவின் ஓவியமான `க்ரியேஷன் ஆஃப் மேன்` படம் தொங்கிக்கொண்டிருக்கிறது. சட்டென சிஸ்டைன் தேவாலயத்திற்கு வந்தது போல் உணர்கிறேன்.

அப்போது, அந்த ஓவியத்தில், கடவுளின் விரல் ஆதாமின் விரலைத் தொடாமல் விலகியது. 

தொடர்புடைய சிறுகதைகள்
லண்டன் வாழ் மக்களின் சந்தோஷங்கள் வெம்ப்ளி கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாடும் சிலரது கால்களில் திரண்டுகொண்டிருந்தன. தேன் கூட்டைக் கலைத்தது போல கூச்சலும் குழப்பமுமாக இலக்கை மட்டும் கருத்தில் கொண்டு எங்களைக் கடக்கும் கால்பந்தாட்ட ரசிகர் கூட்டத்துக்குப் புறமுதுகிட்டு ரஞ்சனா வீட்டுக் கதவுமுன் ...
மேலும் கதையை படிக்க...
இப்போது கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் ...
மேலும் கதையை படிக்க...
மகாபாரதம் தொடங்கி சில நிமிடங்கள் ஆகியிருந்தன. தொலைக்காட்சிப் பெட்டி இருந்த வரதன் பெரியப்பா வீட்டுக்கு முண்டி அடித்து சென்றடைந்தபோது அவர் அடிப்பட்ட மிருகம் போல கர்ஜித்தபடி ஹாலுக்கும் படுக்கையறைக்கும் இடையே உலாத்திக் கொண்டிருப்பது வாசலிலிருந்து ரங்கனுக்குத் தெரிந்தது. வெளியே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
உயரமான கட்டிடங்கள் தேம்ஸ் நதியில் சலனப்பட்டுக்கொண்டிருந்தன. நீளம் தாண்டும் வீரர்களாய் நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த பாலம் நீண்டுகொண்டே சென்றது. என் எதிர் ஜன்னல்வழியே தெரிந்த மற்ற வீரர்களைப் போல் சமத்காரம் கொண்ட வீரர்கள் இருமடங்காம். தேம்ஸை தாண்டும் வீரர்கள். நினைக்கவே குறுகுறுப்பாக ...
மேலும் கதையை படிக்க...
நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன.தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது. மதிய நேர சோம்பல் உள்புகுமுன் ஜன்னலை மூடினேன்.சரியாக இரண்டு நாட்களாக எங்குமே செல்லாமல் அஜந்தா விடுதியில் கடலைப் பார்த்த அறைக்குள்ளேயே முடங்கிக் ...
மேலும் கதையை படிக்க...
இரைச்சலற்ற வீடு
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்
திறப்பு
மன்னிப்பு
தேவதைகள் காணாமல் போயின

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)