கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 5,218 
 

அவர் பிறப்பால் ஒரு பிராமணர். நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர்.

வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிஷம் படித்து அதிகம் அறிந்தவர். இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் அத்துப்படி. ஏகப்பட்ட பணம் கையில் சேர்த்து வைத்திருந்தார். இவ்வளவு சிறப்பு அம்சங்கள் உடைய அவருக்கு ஒரு பெரிய திமிர் எப்போதம் இருந்தது.

ஆம், அவர் எல்லாம் கற்றுத் தெரிந்தவராயினும் வேதங்களை அவர் மதிக்கவில்லை. அவைகளை தூக்கி எறிந்து பேசுவார்.

ஓம்கார நாதத்தை அவர் ஓதியதே இல்லை; சங்கீதத்தை ரசித்ததில்லை; பண்போ ரசனையோ அற்றவர். இல்லாள் மீது அடிக்கடி எரிந்து விழுவார். மகன் மகளை எப்போதும் காரணமில்லாமல் திட்டிக்கொண்டே இருப்பார். பக்கத்து வீடு, எதிர்வீடு போன்ற அண்டை அயலார்களை அடிக்கடி விரட்டுவார். எதிரே வருபவர்களிடம் எரிந்து விழுந்து சண்டை போடுவார். அவரைக் கண்டு அனைவரும் அயர்ந்து போயினர்.

அவரிடம் எப்போதும் வெறுப்பு, காழ்ப்பு, எரிச்சல்.

எவரும் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ளத் தயாரில்லை. அதனால் நாளடைவில் அவர் கையில் இருந்த பணம் கரைந்தது. உட்கார்ந்து தின்றால் பணம் கரையத்தானே செய்யும்? ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திணறினார். அவரை எல்லோரும் ஒதுக்கி விட்டதால் அவரிடம் சண்டை போடக்கூட ஆளில்லை. மனைவி, மக்கள் அவரிடமிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டனர்.

பசி அவர் வயிற்றைப் புரட்டியது. வெறுத்துப்போய் வீட்டை விட்டே வெளியேறினார் அவர். கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். ஊருக்கு வெளியே மலைப் பாதை ஆரம்பமானது. அதுவரை விடாது நடந்தார். களைப்போ களைப்பு. வியர்வை வழிந்தோடியது. சற்று நிதானித்து அங்கிருந்த வழிகாட்டிக் கல்லைப் பார்த்தார். அடுத்த ஊருக்கு அது வழி என்பது போல அம்புக்குறி காட்டியது. அந்த வழிகாட்டிக் கல்லையே சுமைதாங்கிக் கல்லாக நினைத்து அதில் அமர்ந்தார்.

இளைப்பறி, களைப்பாறி மெதுவாக எழுந்து நடந்து .மேலும் மேலும் சென்றார். அப்படி நடந்தபோது அது மிகப் பெரிய வனாந்திரம் என்பதைப் புரிந்துகொண்டார். வனாந்திரம் மிகவும் அமைதியாக இருந்தது. மரத்தில் இருந்த பறவைகள் கிறீச்சிட்டன. அவருக்கு பறவைகளின் ஒலி அமர கானமாக இருந்தது. அவைகளை பொறுமையாக உற்றுக் கேட்டார். என்ன அருமையான கீத ஒலி. அந்த வனாந்திரத்தை நிதானமாக சுற்றும் முற்றும் பார்த்தார். அடடா என்ன ஒரு பசுமை! அடடா என்ன அழகு!! சற்று தூரம் நடந்தபின் ஒரு பெரிய வனத் தோட்டம். அதனுள்ளே சென்று பார்த்தால் ஏகப்பட்ட பழங்கள், காய் கனிகள். மாம்பழங்கள்; பழுத்த வாழைப்பழங்கள் அவரை வா வா என்று அழைத்தன. அவைகளை பசியாற உண்டு மகிழ்ந்தார். அட அவைகள் என்ன ஒரு ருசி.

அருகில் பெரிய தடாகம். அதில் பளிங்கு போன்ற நீர். அதைப் பார்த்தால் அவருக்கு மானசரோவர் ஞாபகம்தான் வந்தது. பளிங்கு நீரைக் கைகளால் அள்ளிக் குடித்தார். அமிர்தமும் தோற்றது போன்றிருந்தது. மேலே மேலே நடந்தார். நிறைய யோசித்தார். காட்டில் தனிமையில் இருந்தபோது கொடிய மிருகங்களும் இவரிடம் பரிவுடன் நடந்து கொண்டன. விஷப் பாம்புகள் இவரைத் தீண்டாது சுற்றிச் சென்றன. என்ன காரணம் இதற்கெல்லாம்? கர்மாவா? அல்லது தர்மமா? இல்லை, இல்லை…

அவனேதான் இவன்! இவனேதான் அவன்!! என்ன மாற்றம்? யோசிக்க யோசிக்க அவருள் ஞானம் உதித்தது. அவர் படித்திருந்த வேதங்களும் உபநிடதங்களும் அவருக்கு கை கொடுத்தன.

மனம்! மனமாற்றம் உண்டானது. ஏமாற்றம் போனது. பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. பழசெல்லாம் போச்சு, ஆனந்தம் உதிச்சாச்சு. இன்னும் பல மாதங்கள் காட்டில் சுற்றினார். அதில் புத்துணர்வு கொண்டார். புதிய உறவுகள் மனதில் தோன்றலாயின. தான் செய்த தவறுகளை உணரத் தலைப் பட்டார்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு – எவ்வளவு அருமையான வள்ளலார் வார்த்தைகள்.

தனிமை, மலை, அணில், குயில், தோட்டம், துரவு, தோட்டம், தடாகம், தாமரை… ஆஹா என்ன ஒரு ஏகாந்தம், ஆனந்தம்.

ராமர் ஒன்றல்ல இரண்டல்ல பதினான்கு வருடங்கள் காட்டில் இருந்தார். அப்படியென்றால் அவர் புடம் போட்டத் தங்கம்தானே என்று வியந்தார்.

அவர் ஒருநாள் திரும்பி தன ஊரை நோக்கி நடந்தார். அவரைப் பார்த்து அனைவரும் பயந்தனர். வந்துட்டான்யா… வந்துட்டான்யா என்று அவரைப் பார்த்து பொருமினர். ஆனால் அவர் அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்! ஊர்க்காரர்கள் அவரை நோக்கி எள்ளி நகையாடினர். பதிலுக்கு அவர்களைப் பார்த்து இவர் நகைத்தார். அவரை ஏசினர். அவர் சிரித்தார், ரசித்தார். மனைவி உறுமினாள்; மக்கள் பொருமினர். அவர் அதற்கும் அமைதியாகச் சிரித்தார்.

மனம்… மனம் லேசாக, இலகுவாக இருந்தது.

மன ஏவ மனுஷ்யானாம்!

காரணம் பந்த மோக்ஷயோ

மனமே மனிதன்! அவனது உறவுக்கும் துறவுக்கும் அதுவே காரணம்!

உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை!

உறவென்றால் உறவு, துறவென்றால் துறவு!!

ஆனந்தம் பரமானந்தம்; பிரம்மானந்தம்!!

அனைவரும் அவரையே பார்த்தனர். அதிசயம் கொண்டனர். அவரா இவர்? நம்ப முடியவில்லையே? எப்படி இப்படி ஒரு மாற்றம்? எப்படி உங்களிடம் இப்படி ஒரு மேன்மையான தோற்றம்? எங்களுக்கும் சொல்லுங்களேன்! என்று கேட்டு அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

அவர் அமைதியாக, சாந்த சொரூபியாக கூட்டத்தினரைப் பார்த்து புன்னகை பூத்தார். பிறகு மெல்லச் சொன்னார்:

மனமே எல்லாம்; மனமே மார்க்கம்; மனமே சொர்க்கம்; மனமே நரகம்.

மனம் மனம் மனம்

என்று பாடியவாறே மெல்ல மெல்ல தன் வழி நோக்கிச் சென்றார்.

கூட்டத்தினருக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *