Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மதுக்கடை

 

முருகானந்தத்தால் ராஜசேகரன் சொன்னதை நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நேராக ஊருக்கு வெளியே இருக்கும் அந்தக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அவர்களோடு ராமலிங்கம், குப்புசாமி, மகாதேவன், மனோகரன் என்று பலபேர் வந்து கலந்துகொண்டார்கள். முருகானந்தமும் ராஜசேரனும் இவர்களின் வருகையை சந்தேகத்தோடு பார்க்க, ‘எங்களுக்கும் உங்க நெலமதான்… வாங்க சேந்தே போவோம்’ என்றான் குப்புசாமி. எல்லோருடைய கண்களிலும் ஒரு பதட்டமும் பயமும் தெரிந்தது. யாரும் யாரோடவும் பேசிக்கொள்ளாமல் மெளனமாய் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த மெளனத்தை உடைப்பதற்காகவோ என்னவோ ‘ரொம்ப துணிச்சல்காரிங்களாத் தான் இருக்குறாளுங்க…. இனிமே நம்ம மரியாதய நாமதாம்பா காப்பாதிக்கணும்…’ என்று சொல்லிக்கொண்டே அவர்களோடு நடந்தான் ராஜசேகரன்.

ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு பெண்கூட அவர்களின் கண்களில் தென்படவில்லை. ‘எல்லோருமா சேந்துதான் இந்த முடிவை எடுத்திருக்காளுங்க’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ராமலிங்கம். ‘இருந்தாக்கூட பொட்டக் கழுதைங்களுக்கு இவ்வளவு தைரியம் கூடாதுடா’ என்றான் மகாதேவன். ‘நமக்கு பயந்து அடங்கி ஒடுங்கி நடந்தது எல்லாம் அந்தகாலம்பா… இப்ப ஆ… ஊன்னா போலீஸு கீலீசுனு போயிடுறாளுங்க… இல்லனா எதுத்து கேள்வி கேக்குறாளுங்கோ…. இனிமே நம்ம உருட்டல் மெரட்டல்லாம் எடுபடாது போ…’ என்றான் முருகானந்தம். ‘அதுக்காவ இப்பிடியா நம்ம மானத்த வாங்குவாளுங்க’ என்றான் மனோகரன்.

பேச்சிக்கு நடுவே ஊருக்கு வெகுதூரத்திலிருந்த அந்தக் கடையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கடையில் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்ததை அவர்களால் எளிதாகப் பார்க்க முடிந்தது. கடையை நெருங்க நெருங்க அவர்கள் இதயங்கள் பன்மடங்கு வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தன. பதற்றத்துக்கு நடுவே, ‘நாட்டுப்புறத்துப் பொண்ணுங்க இன்னா பண்ணிடுவாளுங்கனு நெனச்சது தப்பா போச்சேப்பா’ என்றான் சீனிவாசன். ‘அடப் போயா… எப்ப வீட்டுக்கு வீடு டி.வி வந்துச்சோ அப்பவே பட்டனத்து கலாசாரம் நாட்டுபுறத்துலயும் நொழஞ்சிடுச்சி’ என்றான் குப்புசாமி. ‘ஆமாமா… அதுக்குள்ள சீரியல்னு ஒன்னு போடறாம் பாரு… அதுதான்யா இவளுங்கள இப்பிடி மாத்திபுடுச்சி…’ என்றான் முருகானந்தம். ‘மொதல்ல வீட்ல கீற…. டி.விய ஒடச்சா எல்லாம் செரியாப்பூடும்’ என்றான் பரந்தாமன். ‘சொம்மா வாய மூடுங்கயா… நம்ம மேலயும் தப்பு இருக்குது… குடிக்காத குடிக்காதனு எத்தினி பொம்பளைங்க எத்தினி ஊட்ல கெஞ்சி கூத்தாடுறாளுங்க… அவுளுங்க பேச்சிக்கி ஓரளவாச்சி நாம மரியாத குடுக்குறமா, அதான் இல்லயே’ என்றான் ராமலிங்கம்.

பேச்சுக்கு நடுவே அனைத்து ஆண்மகன்களும் கடையை நெருங்கியிருந்தார்கள். அந்தக் கடையைச் சுற்றிப் பெண்கள் வட்டமடித்துக்கொண்டிருந்ததை அவர்கள் கண்கூடாகக் கண்டார்கள். கடைக்குள் இருந்த பட்டதாரி இளைஞர்கள் அந்தப் பெண்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு ஏதோவொரு சரக்கை அவர்களின் கைகளில் நழுவவிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை லாவகமாய் வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் திறந்தவெளிப் பகுதிக்குப் போய் கும்பல் கும்பலாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அந்தப் பெண்கள். எல்லோர் கைகளிலும் ஒவ்வொரு பாட்டில் இருந்தது. அவர்களில் சிலர் அதைத் திறந்து குடித்துக் கொண்டிருந்தனர். சிலர் அதைக் கையில் வைத்துக் கொண்டு முறைத்து முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்திலிருந்த பெண்கள் அதைப் பிடுங்கி மூடியைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் குவளையில் ஊற்றி, அவர்களின் வாய்களில் வலுக்கட்டாயமாக ஊற்றிக் கொண்டிருந்தனர்.

முருகானந்தம் உட்பட எல்லோரும் அந்தக் காட்சியைக் கண்டு திகைப்பாய் நின்றுகொண்டிருக்க, அவர்களோடு வந்த ராமலிங்கம் மட்டும் வேகமாய் ஓடிப்போய் கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டு குடித்துக் கொண்டிருந்த தன் மனைவியின் தலைமயிரைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து அவள் கன்னத்தில் இரண்டு அறை விட்டான். இதைக்கண்ட மற்ற பெண்கள் ராமலிங்கத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி, ‘இவ்ளோ நாள் நீங்க குடிச்சீங்க…. இப்ப நாங்க குடிக்கிறோம்…. இதுல இன்னாயா தப்பு இருக்குது…. ஒழுங்குமரியாதியா அவள விட்டுட்டு போயிடு… இல்லாகாட்டி….’ என்று சொல்லிவிட்டு அவன் கைகளைப் பிடித்துத் தள்ள, அதிர்ந்துபோன அவன், மீண்டும் ஆண்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கே போய்விட்டான். எல்லோரும் செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கையில், ‘இனிமே…. இப்படித்தான்… குடி… வேண்டாண்டா…. அது குடும்பத்துக்கு ஒத்துவராதுனா…. கேக்குறீங்களா….’ என்று ஒருத்தி கத்த, ‘குடிச்சிபூட்டு கொஞ்சநஞ்சம் கொடுமையா… பண்றீங்க…. வாங்க…. இப்ப வாங்க மோதிப்பாக்கலாம்…. என்று’ தன் சேலையையும் பாவாடையையும் மடித்துக்கட்டிக்கொண்டு சொடுக்குப் போட்டுக்கொண்டிருந்தாள் இன்னொருத்தி. ‘இந்தக் கடய மூடச் சொல்லி எவ்ளோ போராட்டம் நடத்தி இருப்போம்… ஒருத்தனாச்சும் எங்க வார்த்தைக்கி மதிப்பு குடுத்தீங்களா… இல்ல கடையத்தான் இழுத்து பூட்டச் சொன்னீங்களா… நல்லா பாருங்கடா இந்த கூட்டத்துல சின்னஞ்சிறு வயிசுலயே தாலியறுத்த முண்டைங்க எத்தினிபேரு இருக்குறாளுங்கன்னு’ என்றாள் கோபத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்த ராமலிங்கத்தின் மனைவி.

அந்தப் பெண்களின் ஆதங்கக் குரள்களையும் வலிமிகுந்த வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டே எல்லா ஆண்களும் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் மெளனமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த முருகானந்தம், ‘இனிமே… இந்த சாராயக்கட இந்த ஊர்ல இருக்கக் கூடாது… வாங்கடா எல்லாத்தையும் காலி பண்ணுவோம்’ என்று கூறிக்கொண்டே அந்த மதுக்கடைக்குப் பக்கத்தில் இருந்த பாரின் கூரைக் கொம்பை உருவிக்கொண்டு கடையை நோக்கி ஓட, அவனைத் தொடர்ந்து ஆளுக்கொரு கழிகளைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் தரைமட்டமாகியிருந்தது. கடையின் விற்பனைப் பிரதிநிதிகள் ஓட்டம் பிடித்திருந்தார்கள். பாரில் வைக்கப்பட்டிருந்த நொறுக்குத் தீனிகள் கீழே சிதறிக்கிடந்தன. அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு நாய்கள் தின்றுகொண்டிருந்தன. பாரின் உரிமையாளன் தன் போனிலிருந்து போலீசுக்கு டையல் செய்துகொண்டிருந்தான். அடித்து நொறுக்கிய ஆண்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து தம் ஊரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அந்தப் பெண்கள். அவர்களில் ஒருத்தி, ‘இந்த பாழாப் போன கடைய தூக்குறதுக்காவ நாம குடிச்சது ஒன்னும் தப்பில்ல…. எல்லாம் வாங்கடி போலாம்’ என்றாள். ‘ஆமாமா… நாம குடிக்கிறம்னுதும் எவ்ளோ வேகமா வந்து அடிச்சி நொறுக்கிட்டு போறானுங்க பாத்தியா…. நல்லாத்தாண்டி வேல செய்திருக்கு நம்ம ஐடியா’ என்றாள் இன்னொருத்தி.

எல்லா பெண்களும் தரைமட்டமாகியிருந்த அந்த டாஸ்மாக் கடையைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். அங்கு வழிந்தோடிக்கொண்டிருந்த மதுத்திரவத்தை நக்கிக் கொண்டிருந்தன நாய்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று இமையை எப்படியாவது கஸ்டப்பட்டு மூடினாலும் அவைகள் சிறகை விரித்துப் பறக்கும் பறவைபோல் திறந்துகொள்கின்றன. அந்த சிறிய அறைக்குள் நடந்து பார்த்தாள். ...
மேலும் கதையை படிக்க...
தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. வீடு தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவனைத் தன் வீடுவரை அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்ற கலாவை ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு என்று. வாழ்க்கையில் பசியையும் பட்டினையையும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த என் அம்மாவிற்கு நாள் நட்சத்திரம் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் என் பிறந்த ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை ஒன்றில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு எதிர்த்தார்போல் இருந்த நிழற்குடையில் அமர்ந்துகொண்டிருந்தான். அவன் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான். அவள் அதற்காக காத்திருக்கவில்லை என்று ...
மேலும் கதையை படிக்க...
திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அந்தக் காவல் துறை அதிகாரியும் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையேதான் கேட்டுக்கொண்டிருந்தார். விசாரணைக்கு இடையில் அவளுக்கு ஒரு தேநீர் கிடைத்தது. அதை வாங்கிக் குடித்துவிட்டு தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தலைமுடியை அவிழ்த்து உதறி ...
மேலும் கதையை படிக்க...
விவாகரத்து
ஓடிப்போனவள்
பாடம்
ஓர் இரவுப்பொழுதில்
திருடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)