Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மண்ணின் மகன்

 

வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை…

வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர மனமயக்கம்… ?

பஸ்ஸிலிருந்து இந்தக் கடற்கரையில் இறங்கி, ஆபீஸ்உம், குவார்ட்டர்ஸ்உம் ஒன்றாய் இயங்கும் அதோ தெரியும் சிறு கட்டிடத்தில் போய் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கையில்…

மனதில் வந்து கவியும் இன்னதென்று தெரியாத அந்நியமான உணர்வுகள்.

நாளை காலையில் எட்டு மணிக்கு வேலையில், ‘டியூட்டி ரிப்போர்ட் ‘ பண்ணிவிட்டால், பிறகு மீண்டும் யந்திர வாழ்க்கை..

தொலைவில் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் யந்திரங்கள். ஆழத்தில் மணலை வாரி வரிசையாய் நிற்கும் லாரிகளில் நிறைக்கும் க்ரைன்கள்.

இதோ நான் உட்கார்ந்திருக்கும் இந்த இடம் மட்டுமே இந்தக் கடற்கரையில் கடலின் மட்டத்தில் இப்போது மிஞ்சியிருக்கிறது. மீதி இடத்திலிருந்தெல்லாம் மணல் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.

இன்னும் சில நாட்களில் இதுவும்…

நீர்த்திவலைகளை அள்ளிக்கொண்டு வரும் காற்று. குளிர் உடம்பில் உறைக்கத் தொடங்கிவிட்டது. அறைக்குப் போய் முடங்கிவிடக் கெஞ்சும் உடம்பு.. எழுந்திருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் வீசியடித்த வாடைக் காற்று.

கம்மென்று வந்து கமழும் பாலை பூ மணம்.

இந்தக் கடற்கரையில் இவ்வேளையில் இந்த மணம்….

யாரோ பின் பக்கம் வந்து நிற்பதைப் போன்ற உணர்வு…

திடுக்கிட்டு பார்த்தபோது, ஊமை நிலவில் ஓர் இளைஞன். முகம் சரிவரத் தெரியவில்லை.

சார் ‘ நீங்கதான் அற்புதராஜ் சாரின் ப்ளேஸில் புதுசா வந்திருக்கும் சயின்டிபிக் ஆபீசரா ?

ஆமா ‘ நீ யாரு ?

இங்கே பக்கத்தில்தான் இருக்கிறேன்.

சற்று நீங்கி அவன் உட்கார்ந்துகொண்டான் ?

ஏன் சார் ‘ இந்தக் கடற்கரை ஊர் மணல் முழுவதையும் இப்படி பத்து பதினஞ்சடி ஆழத்தில் தோண்டியெடுத்து வாரிக்கொண்டு போறீங்களே… இந்த ஜனங்களின் பரிதாப நிலைமையை மட்டும் நீங்க யாரும் நினைச்சுப் பார்க்காமல் இருக்கீங்களே. இது நியாயம்தானா ?

என்ன தம்பீ.. பக்கத்தில்தான் இருக்கேண்ணு சொல்றே… அப்படியிருந்துமா ஒண்ணும் தெரியாதது போல் இப்படி கேக்கறே ? எத்தனையோ மாசங்களா சர்வே, ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிஞ்சு, அப்புறம் இங்கேயிருந்து மணல் வாரத் தொடங்கி இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. ஊருக்கு புதுசான ஆளு போல் நீ இப்படி எங்கிட்டே கேட்டால் ?

இந்தக் கடற்கரை மணலின் மகிமை சீமையைப் போய்ச் சேர்ந்தது பற்றி கர்ண பரம்பரையாய் கேட்க நேர்ந்த செய்திஞாபகம் வருகிறது…

செழிப்பாய் வளரும் தென்னை மரங்களுக்கு பெயர் போன இந்த ஊரிலிருந்து முன்பு ஏற்றுமதி செய்யும் வடத்தின் கயிற்றின் எடையைத் தட்டிக்காட்ட உள்ளூர் வியாபாரிகள் இந்த மணலில் புரட்டியெடுத்து அனுப்ப, யதேச்சையாய் சீமையில் கப்பலிருந்து இறக்குகையில் நடத்திய பரிசோதனையில் கதிரியக்க உலோகம் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு இந்த மண்ணுக்கு வந்தயோகம்…

சார், நீங்க சொல்றாப்போல் இந்த ஊருக்கு யார் யாரல்லாம்மோ புதுசு புதுசா ஆளுங்க வந்து மணலை அள்ளிகிட்டுப் போனாங்க. ஆழமா தோண்டிப் பாத்தாங்க. அதையெல்லாம் இந்த ஊர்வாசிக, ஏழைக் குடியானவங்க, செம்படவங்க நாங்க பாத்துகிட்டுத்தான் இருந்தோம். இல்லேண்ணு சொல்லலே. ஆனா, யாருமே விஷயம் என்னாண்ணு நெஜத்தை எங்ககிட்டெ வாயைத் தொறந்து சொல்லவே இல்லையே… வேறென்னவோ சாக்குப் போக்குச் சொல்லி சமாளிச்சாங்க. கடைசியில க்ரைன், மெஷீன், லாரி வந்து மணலை வாரத் தொடங்கின. அப்புறம்தான் உள்ளதைப் புரிஞ்சுகிட்டோம்.

அதன்பின் நெடுநாள் இங்கே நடந்த ரகளை இலாகாவில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே ‘ இந்த ஊர்ஜனங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மறியல் செய்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கடைசியில், இலாகா அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளூர் மக்கள் பிரதி நிதிகள் இவர்களின் இடையில் பல நாட்கள் நடந்த பேச்சு வார்த்தையின் படி எல்லாம் ‘சுபமாய் ‘ முடிவு பெற்றது. அதன் படி, இந்த மணல் வாரலால் இடம் இழந்தவர்களுக்கு பதிலுக்கு வேறு இடம் கொடுப்பது, தொழிலும் வேறு வருமான மார்க்கங்களும் இழந்து போனவர்களுக்கு இங்கே இது சம்பந்தமான வேலைகளில் முதலிடம் கொடுப்பது போன்ற விதிகள் இரு தரப்பாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதே..

இப்போது பக்கத்து மாதா கோயில் மணியோசை திடாரென்று கேட்ட ஒலிவீச்சினாலா இல்லை வெடவெடக்கும் குளிர் காரணமாகவா இந்த இளைஞனின் நடுக்கம்… ?

சற்று தொலைவில் நிழல் கோலமாய் ஒண்டியாய் தலை தூக்கி நிற்கும் மாதா கோயிலின் மங்கிய தோற்றம் ஊமை நிலவில்…

நான் அறிஞ்ச வரையில் இந்த சர்ச்சைக்கூட அப்படியே விட்டு வைக்கவும் அப்படாண்ணு நீங்க போட்ட கண்டிஷனைக் கூட சம்மதிச்சிருக்கோமே அப்புறம் என்ன ?

அவன் சிரிப்போசை…

வீடும் குடியுமெல்லாம் குளம் தோண்டப்பட்டு இழந்த செனங்க குடிபெயர்ந்து போன பிறகு இங்கே மிஞ்சியிருக்கும் சாமிக்கு பாதிரியார் மட்டும் தொணை.

ஏன்… ? ரொம்ப பேருங்களுக்கு இங்கேயே வேலை கொடுக்கப்பட்டிருக்குதே. அவுங்களுக்குப் பிரார்த்தனை செய்ய வசதியா இருக்காதா ?

இப்போது பிரமாண்டமான ஒரு கறுத்த விலங்காய் நீண்டு நிமிர்ந்து கிடக்கும் சமுத்திரத்தின் மறுமுனையில் தொடுவான விளிம்பில் மின்னல் வெளிச்சம், கூட ஓடிவரும் இடியோசை…ஜ்

மழை பெய்யப் போகுது போலிருக்குது. அதுதான் இத்தனை குளிர்.

நான் எழுந்தேன்.

அவனும் எழுந்தான்.

இப்போது முகம் இருளில் தெரியவில்லை. ஆனால் நல்ல ஆஜானுபாகு என்பது மட்டும் தெரிகிறது.

மெல்ல நடந்துகொண்டிருந்த என் பின்னால், சற்று நீங்கி கூடவே வந்து கொண்டிருக்கும் அவன் குரல்.

கடற்கரை மணலையெல்லாம் இப்படி பத்து பதினைஞ்சடிக்கு தோண்டி லாரியில் அள்ளிகிட்டுப் போனா கடல் ஊருக்குள்ளேயே ஏறி வருவதை உங்க இலாகா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குது ? குறிப்பா, மழை காலத்தில் இந்த ஊரே கடலுக்குள்ளே போய்விடுதே…

அவன் குரல் கோஷமாய் உயர்ந்ததுபோல்…..

தம்பீ.. இந்த மண்ணின் மகன் உன் கோபத்தையும் தாபத்தையும் புரிஞ்சுக்க என்னால் முடியுது. ஆனா.. இந்த ஊரைச்சேர்ந்த உங்களுக்கு இந்த கஷ்ட நஷ்டங்களிலும் நாட்டுக்கு சில நன்மைகள் விளைந்திருப்பதை நீ ஏன் எண்ணிப் பார்க்கவில்லை ?

மீண்டும் இருளில் அவன் சிரிப்பு.

நீங்க எதைச் சொல்லுறீங்கண்ணு எனக்குத் தெரியும். உங்களுக்கு முந்தி இங்கே இருந்த அற்புதராஜ்உம் அவன் கூட்டாளிகளும் அதைச் சொல்லித்தான் எங்களை வஞ்சித்தாங்க….

அவுங்க என்ன சொன்னாங்க ?

அணுசக்தி நம் நாட்டில் தொழில் கூடங்களை உருவாக்கும், வெளிச்சம் தரும். நோய் சிகிச்சைக்குப் பயன்படுமென்று….

அதெல்லாம் மொத்தத்தில் நம் நாட்டுக்கு…. ‘ ஆனா, குறிப்பா இந்த ஊருக்கு கிடைக்கும் பெரிய ஒரு நன்மைஇருக்கு ‘ இங்கே இருக்கும் இந்த மணலில் கதிரியக்க உலோகம் கலந்திருந்தால் இந்த ஊர் குழந்தைங்க – பெரியவங்களில் பரவலாய் தென்பட்ட ஊனம், புற்றுநோய் போன்றவை இனி நாளாவட்டத்தில் குறைந்துவிடும். காரணம், இப்ப நாங்க இங்கிருந்து அள்ளிக்கொண்டு போகும் மணலில் இருந்து அந்தக் கதிரியக்க உலோகம் மோனஸைட்டை அப்புறப்படுத்தி விட்டு மறுபடியும் இதே மணலை இதே இடத்தில் கொண்டு போட்டு விடுவோம். அப்புறம் இந்தப் பள்ளங்கள் நிரம்பிவிடும். கதிரியக்க அபாயமும் நீங்கிவிடும்.

சார்.. நீங்க சொல்ற இந்த நன்மையெல்லாம் எத்தனை வருசங்களுக்கு அப்புறம் நடக்கப் போகும் காரியங்க ‘ அதுவரை ஏழை சனங்க இந்தக் கொடுமையெல்லாம் தாக்குப்பிடிச்சு உயிரோட இங்கே இருக்கணுமே.. அதை என்னான்னு கேட்டா அப்படி கேட்டவனையும் விட்டு வைக்கமாட்டாங்க…

சர்ச்சின் முன் ஒரு கணம் நின்று உள்ளுக்குள் இறைவா என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.

மீண்டும் நடந்தேன். இப்போது மெளனம். அவன் குரல் கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தபோது புதைக்குழிக் கல்லறைகள் மட்டும் மங்கிய நிலவில்…

அவனைக் காணோம்…

சற்றுக்கூட நடந்தபோது எதிரில் வாச்மேன் சாமுவேல் வந்து கொண்டிருந்தான்.

அதுக்குள்ளே எங்கே சார் போயிட்டாங்க… பக்கத்து ஊரில் போய் டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன். மழை வேறு பெய்யப் போகுது. சீக்கிரம் வாங்க…

அறைக்கு வந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சாமுவேல் சொன்னான்.

சார் நீங்க டியூட்டில் சேர வந்த உடனேயே சொல்ல வேணாமுண்ணுதான் இருந்தேன். ஆனா கடற்கரையில் நீங்க ஒண்டியா ஒக்காந்திருந்த எடத்தை நான் இங்கேருந்து பார்த்தேன். அதுதான் அங்கே ஓடியாந்து கொண்டிருந்தேன்.

ஒண்டியாகவா ? கூட இருந்த ஆளை நீ பார்க்கலயா ?

அவன் முகத்தில் ஒரு மிரட்சி.

சார்.. எதுக்கும் இனி இப்படி ஒண்டியா அங்கே போய் உக்கார வேணாம் ?

என் முகத்தில் த்வனித்த கேள்விக்குறியைப் பார்த்துவிட்டு அவனே குரலைத் தாழ்த்திச் சொன்னான்.

இந்த ஊரில் மணல் வாருவதை எதிர்த்து ரகளை நடந்துகிட்டிருந்தது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அதில் முக்கியபங்கு வகிச்சவன் அந்தோணி. இந்த கிராமத்திலேயே நாலு எழுத்து படிச்ச அவன் மீது எல்லோருக்குமே ரொம்ப மதிப்பு, மரியாதை, அன்பு… ரகளை முடிஞ்ச பிறகு அவனுக்கு இங்கேயே வேலை கொடுத்தாங்க… ஆனா.. அதன் பிறகும், இங்கே அப்படி வேலை பார்க்கும் மத்தவங்களையும் சேத்துகிட்டு அடிக்கடி மோதல்கள்…அப்போதுதான், ஒருநாள் ராத்திரி ஷிப்டில், மணல் ஏத்திக்கிட்டிருந்த லாரி ஏறி, இப்ப நீங்க ஒக்கார்ந்திருந்தீங்க இல்லையா, அந்த இடத்தில் வச்சு அவன் மரணம்…அதில் அற்புதராஜ் சாரின் கை உண்டுண்ணு சொல்லிக்குறாங்க. அந்தோணியை அந்த சர்ச்சின் பக்கத்தில் தான் சார் ஊர் ஜனங்க எல்லோரும் கண்ணீர் விட்டபடி பொதைச்சாங்க… சரிங்க சார்… ரொம்ப நேரமாச்சு.. படுத்துக்கங்க. 

தொடர்புடைய சிறுகதைகள்
மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று கொண்டு செருப்பைக் கழற்றிப் போட்டவாறே, வராந்தாவின் இடப்பக்கம் ஜோஸியர் அருணகிரி வழக்கமாக உட்கார்ந்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தபோது அங்கே அவர் ...
மேலும் கதையை படிக்க...
வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ 'ணங் ' 'ணங் ' என்று தட்டும் ஓசை. மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்....இன்றும் நேற்று போல் தானா ? இதென்ன நியூசன்ஸ் ' இந்த ...
மேலும் கதையை படிக்க...
அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது. கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும் இயற்கைக் கன்னியை விழிகளால் துழாவியபடி சிட் அவுட்டில் அவன் உட்கார்ந்திருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம். அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை என்று சபித்து விரட்டிய பொக்கை வாய்க் கிழவியின் கர்ண பரம்பரக் ...
மேலும் கதையை படிக்க...
ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் ...
மேலும் கதையை படிக்க...
பொருத்தம்
தேடல்
பயம்
நைவேத்தியம்
ஊமைத் துயரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)