மஞ்சள் நிற நோட்டீஸூ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 8,339 
 

தடுப்புச் சுவர்கள், விபத்துக்கள் நடக்காமலிருக்கக் கட்டப் படுபவை. ஆனால், தடுப்புச் சுவரில் மோதி ஒருவன் காயம் பட்டுக்கொள்வது என விதியிருந்தால், யார் என்ன செய்ய முடியும்? கார்த்திகேயனுக்கு அது நிகழ்ந்தது.

இருபத்து மூன்று வயது நிரம்பியிராத இளைஞன் அவன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, எவ்வளவோ பல காலங்கள் முடிந்துவிட்டதான சோர்வு அவனுக்குத் தட்டியிருந்தது. வெட்டியாக ஊரைச் சுற்றுகிறான் என்ற ‘நற்பெயர்’ வேறு! அப்படி அவனைப் பேசுபவர்கள், சௌகரியமாக இன்னொரு தரப்பை மறந்துவிடுகிறார்கள். அடாவடிகளில் இறங்காமல் ஒருவன் தேமே என்று இருக்கிறானே என நியாயத்துக்கு மகிழ்ச்சி அடைய வேண்டும் அவர்கள்.

அவனுக்கென்று ஆண்டிவேல் டீக்கடை, மாரியம்மன் கோயில் குறிஞ்சி, சந்தையின் விற்பனைத் திட்டுகளான மால்கள், சின்ன தாராபுர மூலனூர் சினிமாக்கள், எப்போதாவது தோட்டம் போய்ப் பறிக்கிற முருங்கைக்காய்கள், அம்மாவின் குழம்புகள், அப்பாவின் புலம்பல்கள், எப்போதாவது கவின் கற்பனையைத் தூண்டுகிற சில பெண்களின் நினைவுகள் என வாழ்ந்து வருகிறான்.

முருங்கைக் காய்கள் தோட்டத்தில் காய்த்திராத வெள்ளிக்கிழமை பகலில் சந்தைக்குப் போனான். சந்தையில் தண்டபாணி, பொரிக் கடை போட்டிருந்தான். கார்த்திகேயனுக்குப் பங்காளி முறைக் காரன். வெள்ளக்கோவிலில் இருந்து வந்து, வெள்ளிக்கிழமை இங்கே கடை போடுவான். ‘‘என்ன பங்காளி… சொல்லு பங்காளி!’’ என விளித்தபடியே இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். தண்டு (தண்டபாணியின் செல்லக் குறுகல்) பேச்சுக்கு இடையில் பொரி விற்பான். பொரிகடலை வியாபாரத் துக்கு நடுவில் பேசுவான். அவன் கடைக்கு எதிரில் வாதநாராயண மரத்துக் குக் கீழ் கனிகள் விற்கிற பொம்பளையும், வலதுபுறம் வடை, போண்டா விற்கிற பெண்ணும் கார்த்தி கேயனை மிகவும் கவர்கிறார்கள். பங்காளிகளின் உரையாடல் முடிவதற்குள் சுக்குக் காப்பி ஒன்று இடது பக்கத்திலிருந்து வந்து சேரும். துயரங்களும் வாழ்க்கையும் சந்தை சார்ந்து, சந்தைக்கு வெளியே இருக்கின்றன.

தண்டுவுடன் கார்த்தி பேசிக்கொண்டு இருக்கும் போதே, யாரோ ஒரு ஆள் பொரிக் கடையை நெருங்கி வந்தார். வந்தவர் சுதந்திரத்துக்குச் சற்று முன்போ பின்போ பிறந்திருக்கலாம். குழந்தையாய் பிறக்கும்போது யாரும் சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், மிக எதேச்சையான போக்கில், அவர் கார்த்தியின் சுதந்திரத்தில் தலையிடுவதென்பது நடந்தேறிவிட்டது.

அவர் அவனிடம் ஒரு மஞ்சள் நிற நோட்டீஸை நீட்டினார். ‘‘பங்காளி! அத வாங்காதே!’’ என்று கூவினான் தண்டு. அதற்குள் காரியம் கை மீறிவிட்டது. நோட்டீஸ் கை மாறிவிட்டது. வந்த ஆள் நோட்டீஸைத் திணித்தாரா, கார்த்தி அவர் கையிலிருந்து அதைப் பிடுங்கினானா என வரையறுக்க முடியாதபடி அச் செயல் நிகழ்ந்தது. தண்டபாணி தலையில் அடித்துக்கொண்டான். நோட்டீஸைக் கொடுத்தவர் போய்விட்டார். தண்டபாணி பொரி, மிக்ஸர், பன்ரொட்டி மற்றும் நெய்வறுக்கி வியாபாரத்தில் ஈடுபட்டான். கார்த்தி கைக்குறிப்பைப் படிக்க ஆரம்பித்தான்.

தமிழ்நாட்டில், தமிழ் படிக்கத் தெரிந்து தெருவிலும் நடமாடுகிற ஒவ்வொரு உயிரியும் ஏதாவது ஒரு கட்டத்தில் வாசித்திருக்கக்கூடிய நோட்டீஸ்தான் அது.

சமீபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் பூஜையில் அந்தணர் ஈடுபட்டிருந்தபோது, ஆண்டவன் சிலை பின்னாலிருந்து அரவம் ஒன்று எழுந்து வந்து, கலிகாலத்தில் தாம் வந்துள்ள செய்தியை மக்களுக்குப் பரப்பவேண்டுமென்று சொல்லிச் சென்றதால் அடிக்கப்பட்ட நோட்டீஸாகும் அது. படிப்பவர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்ட அளவில் ஐந்நூறோ ஆயிரமோ அடித்து விநியோ கிக்க வேண்டும்; அதுவும் ஒரு வாரத்துக்குள் விநியோகிக்க வேண்டும்; மாறாக, அலட்சியப் படுத்தினால் இடர்கள் வந்து சேரும். இதில் நோட்டீஸ் அடித்தவர்கள் பயன் அடைந்ததற்கு இரண்டு உதார ணங்களும், அலட்சியப்படுத்தி யவர் பெற்ற ரணங்களுக்கு நான்கும் கொடுக்கப்பட்டு இருந்தன. அந்த மஞ்சள் காகிதத்துள் ஒரு பொட்டல வஸ்துவாக கார்த்தி சுருண்டான். உயிர்ப்பில்லாமல், ‘‘வர்றேன் பங்காளி’’ என விடை பெற்றுக்கொண்டு, மாரியம்மன் கோயில் பக்கம் வந்து சேர்ந்தான்.

மனிதன் உணர்வுகளால் மட்டுமின்றி நம்பிக்கைகளாலும் வாழ்கிறான். ஆகவே, கார்த்தி ஆவலும் கிலியும் ஒருங்கே கொண்டான். குறிஞ்சி மண்டபத்தில் வடமேற்குத் தூணில் சாய்ந்து அமர்ந்தபோது வாடிய வெள்ளரிக்காய் போன்ற தோற்றத்தில் இருந்தான். நோட்டீஸைப் படிக்கவும் பயமாக இருந்தது; மடிக்கவும் பயமாக இருந்தது. மாரியாத்தாளை மனதார வேண்டிக் கொண்டு, பவ்யமாக அதை மடித்துப் பாக்கெட்டில் வைத்தான். ஒரு வாரத்துக் குள் ஐந்நூறு நோட்டீஸாவது அடிக்க வேண்டுமாமே! காசு..?

அவனுக்கென்று சொந்தபந்தங்கள் உண்டே தவிர, அவனது பெயரில் சொத்து பத்துக்கள் கிடையாது. அப்பா அம்மாவால் பிறந்து, வாழ்ந்துகொண்டு இருந்தாலும், அவனது வாழ்வு, துணை, வேலை, மரணம் எல்லாவற்றையும் அவனே தேடிக்கொள்ளும்படிதான் நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தான்.

அப்பாவுடன் தேவைக்கு ஒரு அங்குலம் கூட அதிகமாகப் பேச்சுவார்த்தை இல்லை. இது பகை சார்ந்த விஷயமில்லை. அப்பாவும் மகனும் பேசிக்கொள்ள பெரும்பாலும் சந்தர்ப்பங்களும் விஷயங் களும் இருப்பதில்லை. சமயத்தில் விஷங்கள் இருக்கும். அந்த விஷத்தின் பாதையில் இருவருமே பாதமெடுத்து வைப்பதில்லை. அம்மா பருக்கை வடித்துக் கொடுக்கிறாள்; பாய் விரித்துப் போர்வை தருகிறாள்; ‘‘உனக்கும் காலம் வரும். முகர்ஜி பண்ணு!’’ என ஆறுதல் உரைக்கிறாள். இந்த முகர்ஜி வங்காள சாதி சம்பந்தப்பட்டதல்ல; முயற்சி என்பதன் வட்டாரச் சொல்லாக்கம்.

கார்த்திகேயனுக்கு ஐந்நூறு நோட்டீஸ் அடிக்கிற செலவை நினைக்கப் பயமாக இருந்தது. அவன் நாமக்கல் ஆஞ்சநேயரை இதுவரை பார்த்ததில்லை. ராமாயணத்தில் வரும் அனுமன் தவிர, ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் வாகனங்களில் பக்கவாட்டில் சஞ்சீவி மலையைத் தூக்கியபடி பறக்கும் அனுமன், தோல்பாவைக் கூத்துக்களில் வரும் அனுமன் ஆகியோரை மட்டுமே அறிந்திருந் தான். பக்கத்து நகரும், வட்டாரத் தலைமையுமாக விளங்குகிற தாரா புரம் காடு ஹனுமந்த ராய சுவாமி கோயிலையும் வெளியே இருந்து பார்த்திருக்கிறானே தவிர, உள்ளே சென்று கும்பிட்டதில்லை. மற்றைத் தெய்வங்களைப் போலவே, ஆஞ்ச நேயரும் அருள்வதில் குறைவைக்க மாட்டார் என்று தோன்றியது.

மத்தியானம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் ‘‘அம்மா, இப்படி ஒரு நோட்டீஸ வாங்கீட்டனம்மா!’’ என்று விவரத் தைப் படித்துக்காட்டினான். ‘‘இப்படி ஒரு சோதனையா?’’ என அவள் கண்ணீர் உகுத்தாள். தினம் ஒரு அவுன்ஸ் அழ வேண்டும் அவளுக்கு. இன்றைய தினத்தின் அழுகை அனுமன் நோட்டீஸின் பேரிலாக இருந்தது. கடைசியாக, ‘‘நோட்டீ ஸெல் லாம் அடிக்க வேண்டாம். நம்ம கஷ்டம் சாமிக்குத் தெரியும்’’ என்றாள்.

நோட்டீஸ் அடித்தால் வருகிற அதிர்ஷ்டங்களைவிட, அடிக்காமல் விட்டால் வருகிற வில்லங்கங்கள் கார்த்தியைப் பயமுறுத்தின.

சாத்தான்களும் சிந்திக்கத் திணறும் கோணங்களில் சிந்தித்துக் கிலேசித் தவன், மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்து ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். பிறகு, கையில் பத்து ரூபாய் இருக்கிற தைரியத்தில், அச்சகம் இருக்கிற பக்கத்து ஊரான சின்ன தாராபுரத்துக்கு பஸ் ஏறினான். பத்திரிகை அச்சடிக்க வருகிறவர்கள் அடித்துவைத்ததை வாங்குவதற்கு வேண்டுமானால் ஒற்றையாக வரு வார்களே தவிர, முதலில் அச்சடிக்கக் கொடுக்க ஒற்றையாக வர மாட்டார்கள். ஆகவே, அவனை ஆச்சர்யத்துடன் பார்த்த அச்சகத்துக்காரர், அவன் வந்த நோக்கத்தை அறிந்ததும் ஆச்சர்யத் தைக் கழற்றி ஆணியில் மாட்டினார்.

ஐந்நூறு நோட்டீஸ் அடிக்குமாறு கார்த்தி கேட்டான். அவர் முன்பணம் தராமல் அச்சடிக்க முடியாதென்றும் தன்னால் ஆஞ்சநேயரிடம் வசூலுக்கு நடக்க முடியாதென்றும் கூறினார். அப்படியானால், மறுநாள் காசு கொண்டு வருவதாக கார்த்தி கூறவும், அப்படிக் கொண்டுவருகிற பட்சத்தில் அரை மணி நேரத்தில் தன்னால் ஐந்நூறு நோட்டீஸைத் தந்துவிட முடியும் எனவும் கூறினார். அவர் கூறியதற்குக் காரணம், எப்போதோ இப்படி அடித்துவைத்த நோட்டீஸ் கத்தை ஒன்று அச்சகத்தின் தென் கிழக்கு மூலையில் கிடந்ததுதான்!

திரும்ப ஊருக்கு வந்து பஸ் இறங்கியபோது, வேலுச்சாமியை கார்த்திகேயன் பார்த்தான். வேலுச்சாமி வட்டிக்குக் காசு தருபவன். ஆனால், கெடுவின் நாள் தப்பினால், அது கல்யாண வீடாக இருந்தாலும், கருமாதி வீடாக இருந்தாலும், ‘‘ஏப்பா… வாங்கினியே அது என்னாச்சு?’’ என்று கேட்டுவைப்பான். மற்ற படி, கேட்டதும் சுரக்கிற காமதேனு அவன்.

‘‘ஒரு மாசத்துல தந்திருவேன்’’ என கார்த்தி வாக்குரைத்ததற்காக, ஏழு வட்டிக்குக் கடன் தந்தான். மறுநாள் மத்தியானம் கார்த்தியின் கைகளில் காக்கிப் பொதிவுக்குள் கனத்து நின்றன நோட்டீஸ§கள். கையில் தூக்கி நடக்கும்போது முதன்முறையாக இதுவரை கொள்ளாத கவலை அவனை ஆட்கொண்டது. இவற்றை எப்படி விநியோகிப்பது?

அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டின் அட்டாலி மேல் அதைப் போட்டுவைத்தான். மூன்று நாட் கள் கழிந்த பிறகு, விதித்திருந்த ஒரு வாரக்கெடு நினைவுக்கு வர மனதினுள்ளும் படுக்கையிலு மாகப் புரண்டு ஒரு திட்டத்தைக் கண்டடைந்தான். தாராபுரத்துக்கு சந்தை தினத்தில் சென்று இவற்றை விநியோகிக்க வேண்டி யதுதான்!

செவ்வாய்க்கிழமை…

வற்றாச் சூரியன் வந்துதிக்கும் முன் அதிகாலையில் எழுந்து, தாராபுரத்துக்கு பஸ் ஏறினான். அங்கே வர்க்கி ஆஸ்பத்திரி ஸ்டாப்பிங்கில் இறங்கி, சித்ரா டாக்கீஸைக் கடந்து, சந்தைத் திடலான கோட்டைமேட்டுக்கு வந்தான். பலப்பல விண்மீன்கள் மறைந்து, பளப்பள விடியல் தொடங்கியிருந்தது. ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டுக் காசு கொடுத்தவன், பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு, விநி யோகத்தைத் துவக்க வேண்டியது தான் என காக்கிக் கவரைப் பிரித்து ஒரு நோட்டீஸை எடுத்து அருகில் இருந்தவருக்குக் கொடுத்தான்.

கைகள் பெற்றுக்கொள்கிறபோது அந்த முகத்தைப் பார்த்தான். போன வாரம் அவனுக்கு நோட்டீஸ் தந்த அதே பெரியவர். நொடியும் யோசிக்காமல் மொத்தத்தையும் அவரது கரங்களில் வைத்தான். அவர் மறுப்பேதும் இன்றி வாங்கிக் கொண்டார். முகத்தில் அதிர்ச் சியோ ஆச்சர்யமோ எதுவும் தென் படவில்லை. அவர் கிழக்கே நடக்க ஆரம்பித்தார். அவன் பேருந்து ஏறுவதற்காக மேற்கே நடக்க ஆரம் பித்தான். முன்னே முன்னே ஒரு யுகத்தில் ஆஞ்சநேயன் பழமாய் எண்ணி மயங்கிய சூரியன் கீழ்த் திசையில் முற்றாக எழுந்து ஒளிர்ந்தான்.

காடு ஹனுமந்தராயன் கோயிலிலிருந்து ஆராதனை மணி ஒலி கேட்டுக்கொண்டு இருக்க, ஊர் செல்லும் பஸ் பிடித்தான் கார்த்தி.

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *