மகேசும் பாபுவும்

 

வளைந்து வளைந்து செல்லும் அந்த மலைச்சரிவில் அநாயசமாய் காரை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேசின் திறமை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பிரமிப்பை தந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவனின் மனமோ பெளர்ணமி நிலவின் ஈர்ப்பில் கொந்தளித்து கொண்டிருக்கும் கடலின் நிலையில் இருந்தது. அவனை பொருத்தவரை இந்த மலைப்பயணம் வாழ்க்கையின் கடைசி முறையாக இருக்கலாம். இந்த முடிவு காரை வெளியில் எடுக்கும் போதே எடுத்துவிட்டான். இனி அவனுக்கு வாழ்க்கை என்பது ஏது?

தன்னுடைய முடிவை அவன் வீட்டிலேயே எடுத்திருக்கலாம். ஆனால் அவன் உடல்கூட இந்த உலகத்துக்கு கிடைக்கக்கூடாது என்று நினைத்துவிட்டான். இந்த உலகில் நியாயமாய் நடக்க வேண்டும் என்று நினைத்தது என்தவறா? அவன் தனக்குதானே கேட்டுக் கொண்ட கேள்வி. பிசினஸ் என்று சொல்லி அடுத்த கம்பெனியை இல்லாமல் ஆக்க நினைக்காமல் போட்டிக்கு வந்த கம்பெனியையும் மதித்து நடந்தவன் நான். அப்படிபட்டவனுக்கு இப்படி ஒரு நிலையா?

அவனுக்கு என்று தனி கஸ்டமர்கள் இருந்தனர். மகேஷிடம் பிசினஸ் செய்தால் நமக்கு நிலையான வருமானம் உண்டு என்று நினைத்த டீலர்கள் எத்தனைபேர் இருந்தார்கள். அவனும் இதுவரை சொன்ன சொல் தவறியதில்லை. பார்ட்டிகு சரக்கு அனுப்புவதிலும் சரி, பணம் வரவு செய்வதிலும் சரி இதுவரை நியாயமாகவே நடந்துள்ளான். அவன் செய்த மிகப்பெரிய தவறு சொந்தக்காரன், மச்சினன் உறவு ஆனவன், இவனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டதன் பலன், இன்று அவனுடைய சொத்துக்கள் ஏலத்தில் வந்து நிற்கினறன.

அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அந்த ஊரில் அவனது சொத்துக்கள் ஏலம் போவது என்பது அவனுடைய வம்ச உறவுகளையே கேவலப்படுத்தி விடும். போதும் இந்த வாழ்க்கை, முடிவு செய்தவன் இங்கு நாம் வாழ்க்கையை முடித்து கொள்வதைவிட கண்காணாத இடத்துக்கு சென்று வாழ்வை முடித்துக்கொள்ளலாம் முடிவு செய்து கொண்டு இந்த மலைப்பிரதேசத்துக்கு வந்து கொண்டிருக்கிறான்.

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வளைவுகளை கடந்து ஏறியவன், மண்பாதை ஒன்று தனியே பிரிந்து செல்வதை பார்த்து காரை அதனுள் திருப்பினான். அந்த பாதை கரடு முரடாக இருந்தது. உள்ளே செல்ல செல்ல அடர்ந்த செடி கொடிகளும், மரங்களுமாக இருந்தது. இதுதான் நல்லஇடம். ஒருத்தரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது என்று ஒரு புதர்பக்கம் காரை ஒதுக்கி நிறுத்தினான்.

இறங்கி உள்புறமாக நடக்க ஆரம்பித்தான் கார் போகும் பாதை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி ஒத்தை அடிப்பாதையாக ஆகிருந்தது. அப்படியே மனம் போன போக்கில் அதன் வழியே நடந்தான். சிறிது தூரத்தில் ஒரு வெற்றிடமாய் காணப்பட்டது. அங்கு வந்தவன் அந்த சூழ்நிலையிலும் அந்த இடத்தின் அழகை கண்டு ஒருநிமிடம் மெய்மறந்துவிட்டான்.

முகத்தை வருடிக் கொண்டு சென்ற மேகக்கூட்டங்களும், சில்லென்ற காற்றும், ஹோவென விரிந்து காணப்பட்ட வெட்ட வெளியும் அப்படியே மெய்மறக்க செய்து அவன் வந்த நோக்கத்தையே மறக்க செய்துவிட்டன.

மெல்ல அப்படியே மெத்தென்ற புல்வெளியில் நடந்தவன் கீழே பார்த்தான். கீழே ஆறு ஒன்று இங்கிருந்து பார்க்க கோடாய் தெரிந்தது. அப்பா என்ன உயரம்! வியந்து கொண்டான். தள்ளி நின்று பார்க்கும் போதே மனம் திகிலடித்து போனது. இதுதான் சரியான இடம் இன்னும் கொஞ்சம் முன்னேறி அந்த மலை முகட்டிலிருந்து குதித்தால் ஒருவரும் கண்டு பிடிக்கமுடியாது.

ஒரு நிமிடம் கண்ணைமூடி தியானித்தான். ரெடி.…ஒன்…டூ….திரி.. மலை முகட்டை நோக்கி வேகமாக ஓடினான். அப்படியே குதித்து விட வேண்டுமென்று. ஆனால் அந்த மலைமுகட்டில் அதென்ன.. அங்கே.. ஒருவன் உட்கார்ந்து கொண்டு ஏதோ பாட்டு பாடிக்கொண்டிருப்பது காதில் கேட்டது. இவன் அப்படியே நின்று விட்டான். என்ன தைரியம், அந்த மலை முகட்டில் உட்கார்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொண்டிருப்பான் போலிருக்கிறது உடல் அசைவில் தெரிந்தது. உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருப்பதும் இவன் காதுகளில் அந்த காற்றின் வேகத்தில் இலேசாக கேட்டது.

தன் ஓட்டத்தை நிதானப்படுத்தினான். அவன் பின்புறமாக மெல்ல நடந்து சென்றவன்க்கும்..க்கும்…இருமிக் காட்டினான்.

அவன் திரும்பவே இல்லை. அவன் பாட்டுக்கு பாடுவதில் உற்சாகமாய் இருந்தான்.

ஹலோ..ஹலோ….இவன் கத்தினான்.

அவன் சட்டென திரும்பியவன் முகம் இவனை கண்டதும் சற்று புருவங்களை உயர்த்துவது போல் இவனுக்கு தெரிந்தது.

இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கறீங்க? மகேஷ் கேட்டான்.

இயற்கையை இரசிச்சுகிட்டு இருக்கறேன். வாங்க நீங்களும் வந்து இரசியுங்க, அவன் அழைத்தான்.

அவனின் அழைப்பை மகேஷ் இரசிக்கவில்லை. சே..காரியத்தையே கெடுத்துட்டான், வேற இடம் போயிடலாம் முடிவு செய்தவன், சட்டென திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

இப்பொழுது உட்கார்ந்திருந்தவன் ஹலோ..ஹலோ..என்ன திரும்பி போறீங்க, கொஞ்சம் நில்லுங்க. திடீருன்னு வந்தீங்க, என்னைய கேள்வி கேட்டீங்க? திடீருன்னு நீங்க பாட்டுக்கு கிளம்பி போறீங்க? அவன் எழுந்து இவனை வழிமறிப்பது போல் நின்றுகொண்டான்.

மகேசுக்கு வெறுப்பாக இருந்தது. ஒண்ணும் இல்லை, இந்த இடத்தை இரசிக்கணும்னு வந்தேன்,மனசு சரியில்லை, அதான் போறேன்.

மனசு சரியில்லையா..இல்லை..நான் இருக்கறதுனால வந்த காரியம் நடக்கலையின்னு போறீங்களா? அவன் பேச்சில் கூர்மை..

மகேஷ் சற்று தடுமாறினான், என்ன காரியம்? அதெல்லாம ஒண்ணுமில்லை.

சார் உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது, ஏதோ வருத்தத்துல இருக்கறீங்கண்ணு, அப்படி இருக்கறவங்க, யாருமில்லாத இந்த மலை உச்சிக்கு வர்றது இயற்கையை இரசிக்கறதுக்குன்னு சொன்னா நம்பற மாதிரியாவா இருக்குது.

அவன் கேலியாக சொல்வது போல் தோன்றினாலும், குரலில் மென்மையையும், இவன் உள்ளத்தை தொட்டு பேசுவது போலவும் மகேசுக்கு தோன்றியது.

ச்சு..விடுங்க சார்,, எனக்கு எல்லாத்துலயும் அதிர்ஷ்டமே இல்லை சார்..நான் வர்றேன் கிளம்ப எத்தனித்தவனை இவனின் குரல் சற்று நிதானிக்க வைத்தது.

சார் உங்க பிரச்சினையை என்னைய மாதிரி ஆளுக கிட்ட சொன்னா என்னால கண்டிப்பா உதவமுடியும்.

இவனால் உதவ முடியுமா? ஆளை பார்த்தால் நல்ல வசதியானவன் மாதிரிதான் இருக்கிறான், இருந்தாலும்..சிறிது தயங்கியவன், சரி சொல்லியாவது தன் மனக்குமுறலை ஆற்றமுடியுதா பார்ப்போமே.

மளமளவென தான் கையெழுத்து போட்டு கொடுத்து மாட்டிக் கொண்டது. இதனால் தன் சொத்துக்களும் ஏலம் போகும் நிலையில் இருப்பது, இதனால் தன் குடும்பம் மானம் போவது போல் இருந்ததால், வாழ்க்கையை முடித்துக் கொள்ள இங்கு வந்தது. எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

இவன் சொல்லி முடிக்கவும் அவன் வாய்விட்டு சிரித்தான், சிரித்துக் கொண்டே இருந்தான். மகேசுக்கு எரிச்சலாக இருந்தது. ஏன்சார் வாழ்க்கையையே முடிச்சுக்கற சூழ்நிலையில இருக்கற நிலைமையை சொல்லிகிட்டு இருக்கறேன், நீங்க இப்படி சிரிக்கறீங்க. குரலில் கடுமை.

சாரி பிரதர், கோபிச்சுக்காதீங்க,

ஏன் ப்ரதர் யாரோ ஒருத்தன் ஏமாத்திட்டான்னு நீங்க பாட்டுக்கு இப்படி கிளம்பி வந்திட்டீங்கண்ணா, வேடிக்கையா இல்லையா? அவனை கண்டுபிடிச்சு பணத்தை கட்டறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க? இல்லை கோர்ட்டுல ஒரு கேசு போட்டு கொஞ்சநாள் டைம் வாங்குங்க, அதுக்குள்ள அவன் கிடைக்காமயா போயிடுவான், இல்லே பணம் கொடுத்தவன்கிட்டயே போய் ஒருவருசமோ, இரண்டுவருசமோ தவணை கேளுங்க, முதல்ல ஏலத்தை “ஸ்டே ஆர்டர்” வாங்க பாருங்க. இதையெல்லாம் விட்டுட்டு, இப்படி நான் சாகப்போறேன்னு கிளம்பி வந்துட்டீங்க.

அவன் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல, அட நாம இதையெல்லாம் முயற்சி பண்ணிட்டல்ல இந்த முடிவுக்கு வந்திருக்கணும். அவசரப்பட்டு கிளம்பி வந்துட்டமே.

மகேசுக்கு முகம் கொஞ்சம் தெளிவடைய ஆரம்பித்தது. ஆமா நாம் ஏன் வாழ்க்கையை முடிச்சுக்கணும்? முடிஞ்சவரைக்கும் போராட பாக்கலாமே.. முடிவு செய்தவுடன் உடனே தன் இருப்பிடத்துக்கு செல்லவேண்டும் என்று மனசு பறக்க ஆரம்பித்துவிட்டது.

ரொம்ப தேங்க்ஸ் சார், ரொம்ப வெட்கப்படறேன் சார், இப்பவே கிளம்பறேன், உங்களுக்கு ரொம்ப நன்றி சார், உங்களை மறுபடி வந்து பாக்கரேன் சார்.

என்னைய வந்து பாக்கவே பாக்காதீங்க.. அவன் வெடிச் சிரிப்பு சிரிக்க

சார்..புரியாமல் பார்த்தான் மகேஷ்..

இல்லே மறுபடி என்னை பாக்க இதே எண்ணத்துல வந்துடுவீங்களோ அப்படீங்கறதுக்காக சொன்னேன். சொல்லிவிட்டு, மெயின் ரோட்டுல இருந்து நாலுகிலோமீட்டர் தள்ளி போனீங்கண்ணா அங்க என்னோட “இரத்தினம் எஸ்டேட்” வரும். அங்க வந்து சின்ன முதலாளி பாபுன்னு கேளுங்க.

மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வந்தபொழுது, சூழ்நிலைகள் எல்லாமே மகேசுக்கு சாதகமாக திரும்பியிருந்தன. இவன் மச்சினன் கொஞ்சம் பணத்தை கட்டியிருந்தான். ஒரு வருடம் தவணையும், வாங்கியிருந்தான். அதனால் இவன் சொத்தை ஏலம் விடுவதாக இருந்தது எல்லாம் வாபஸ் பெறப்பட்டு இருந்தது.

மகேசுக்கு வெட்கமாக போய்விட்டது. சே என்ன காரியம் செய்ய துணிந்திருந்தோம். மீண்டும் ஒருநாள் அவன் எஸ்டேட்டுக்கு சென்று அவனுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

ஆனாலும் இடைவிடாத பணி, அவனை உடனே இரத்தினம் எஸ்டேட் போக முடியாமல் செய்துவிட்டது. அப்படி இப்படி என்று ஒரு வருடங்கள் ஓடிவிட்டன. அதற்குள் இவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. நல்ல வசதிகளும் கூடியிருந்தது. சரி தேனிலவு டூராக இதனை வைத்துக் கொள்ளலாம் என்று மனைவியோடு கிளம்பி விட்டான் ஒருநாள்.

ஆனால் இரத்தினம் எஸ்டேட் சென்று பாபுவை விசாரித்த பொழுது அதிர்ச்சியாகி விட்டான். பாபு கடன் தொல்லை தாங்காமல் அதே மலைமுகட்டிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டானாம்.

அப்படியானால் அன்று என்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றியது?

அவனுடைய பெற்றோர்கள் அழுது கொண்டே சொன்னார்கள், இதுவெல்லாம் ஒருகடனா தம்பி? ஒரு வருசத்துலயே அவனோட அண்ணன் பாரின்ல இருந்து பணம் அனுப்பிச்சு அதை எல்லாம் அடைச்சுட்டோம். அவன் எங்ககிட்ட ஒருவார்த்தை சொல்லாம இப்படி பண்ணிகிட்டான். குலுங்கி குலுங்கி அழும் அவன் பெற்றோர்களை பார்த்து அப்படியே அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் நின்றுவிட்டான் மகேஸ். 

தொடர்புடைய சிறுகதைகள்
நூறு வருடங்களுக்கு முன்னால், அதாவது நம் நாட்டை பிரிட்டிஷார் ஆண்டு கொண்டிருந்த காலம், தமிழ்நாட்டில் மாசிலாபுரம் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வந்தனர். அவர்களது முக்கிய தொழில் விவசாயம்தான். அந்த ஊர் ஐந்து தெருக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு மனைவியும், குமரப்பன் என்ற மகனும் இருந்தான். இவர்கள் மூவரும் அவர்கள் நிலத்தை ஒட்டிய இடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
மிக உயரமான பாறை மேல ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பொந்தில் இருந்த கருநாகம் தீண்டி உயிர் போய்விட்ட மலைஜாதி இளைஞன் ஒருவனை அவனுடன் சென்றிருந்த மலைஜாதி இளைஞர்கள் அவன் உடம்பை நார்களால் கட்டி ஒரு தொட்டில் போல வைத்து,பிணத்தை ...
மேலும் கதையை படிக்க...
ப்ளாஸ்பேக்-1 இப்படி “தத்தி” மாதிரி இருந்தா எதையும் கரெகடா செய்யவே மாட்டே அம்மா அரைக்கால் போட்டிருந்த என்னை வசவு பாடிக்கொண்டிருந்தாள் நீ இப்படி சொல்லி சொல்லியே அவன் கடைசியில் எந்த வேலையும் ஒழுங்கா செய்யாமயே போயிடுவான் அப்பா எனக்கு வக்காலத்து வாங்கி பேசினார் நிகழ்வு : அண்ணா ...
மேலும் கதையை படிக்க...
சே என்ன வாழ்க்கை,மனிதர்களிடையே வாழ்வது என்பது நமக்கு தொல்லைதான், நன்றியுள்ளவன் என்று சொல்லியே நம்மை வசப்படுத்தி வேலை வாங்கிக் கொள்கிறான், உடன் இருந்த நண்பனிடம் வாலை ஆட்டிக்கொண்டே புலம்பினேன். அப்பனே புலம்பாதே, நாமாவது கிராமத்தில் தெருவில் வசிக்கிறோம், நகரத்துக்குள் நம் இனத்தார்கள் மிகவும் கேவலப்பட்டு கிடக்கிறார்கள். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கா¢டம் "தம்பி" உனக்கு என் பொண்ணு கமலாவை கட்டிக்க விருப்பமா? நான் உன் விருப்பத்தை கேட்ட பின்னாடிதான் உங்க அப்பா அம்மாவை போய் கேக்கனும்னு நினைக்கிறேன்,என்றவரை சங்கடத்துடன் பார்த்தான் ...
மேலும் கதையை படிக்க...
வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்? புருவத்தை உயர்த்தி வினா தொடுத்தேன். உங்க படத்துல நல்ல கதை கதைவசனகர்த்தா தேடிக்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன், உங்க நண்பர் பாரிதான் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்துக்கு போன பின்னால் தான் தெரிந்தது பாலகிருஷ்ணனுக்கு திடீரென்று “ஹார்ட்அட்டாக்” வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று. அப்பொழுதே நான்கைந்து பேர் ஒரு மணிநேர அனுமதி பெற்று போய் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள். நான் போகவில்லை. போன உடன் பார்த்துவிட்டு வரும் நட்பு அல்ல ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன். இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை. இவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ...
மேலும் கதையை படிக்க...
மரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன் அதிகமாக கல்வி அறிவு இல்லாதவன்.ஆனால் அவன் தந்தை நல்ல கல்வி அறிவு பெற்றவராக இருந்ததால் இவனையும் கல்வி கற்க குருகுல வாசகத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
மாசிலாபுரத்து கிணற்று நீர்
புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்
பிணம் – ஒரு பக்க கதை
அம்மாவின் கணிப்பு
கோழிகுழம்பு
உறவுகள் உருவாகின்றன
கதைவேண்டும்
மனக்கவலை
சூரியன், காற்று, மழை
கல்விதான் நமக்கு செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)