போலியோவும் போராட்டமும்!

 

1974 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 21 ஆம் திகதியன்று ஓர் அழகான ஜோடி தமது பதிவுத்திருமணத்தை பெற்றோரும் உற்றாரும் சூழ்ந்து நிற்க இனிதே நிறைவேற்றினர். அதனைத்தொடர்ந்து மஞ்சள் பட்டுச்சேலையில் மணமகள் மணமேடையேற, பட்டு வேட்டி சால்வையோடு அரும்பு மீசை தளிர்க்க மணமகன் கைகோர்த்து கோலாகலமான திருமணம் நடந்தேறியது அந்த நாட்களில்.

புகழ்பூத்த வன்னி மண்ணின் மருமகளாய் புங்கை நகர் புகுந்தெடுத்த மகள் குடிபுகுந்தாள் கேணி ஊரில்.

வனத்தின் வேரோடு ஒன்றி வாழத்தொடங்கிய தம்பதியினருக்கு தாம்பத்தியத்தில் இணைந்த முதல் வருடம் குழந்தைச்செல்வம் இல்லையே என்று கவலையோடிருந்தனர். ஆண்டிரண்டு ஆனபோது வந்துதித்தான் ஓர் அழகான ஆண்மகன் 1976 ஆம் ஆண்டு பங்குனி மாதத்து முதலாம் நாள்.

பிள்ளை பெற்று ஓரிரு மாதங்களிலேயே அன்னையை ஆட்கொண்டது வயிற்றுவலி. தன் பச்சிளம் குழந்தையை புகுந்தவீட்டார் அரவணைக்க கணவரோடு யாழ் நகரின் பெரிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார் அன்னை.

தாயின் அரவணைப்பை இழந்த மகனுக்கு காச்சல் என்னும் கொடிய நோய் ஆட்கொண்டது.

சரியான பராமரிப்பு இன்மையால் ஆனதா? இல்லை; பக்குவப் படாத மனிதர்களின் உதாசீனத்தால் ஆனதா?

மூன்று நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்புகிறாள் பெற்றவள். ஆசை அருமையாய் பிறந்த தன் மகனை வாரியணைத்து தூக்குகின்றாள். பிள்ளையின் கால்கள் இரண்டும் சோர்ந்து விழுகின்றது….

கால்களில் துடிப்பும் இல்லை, விறைப்பும் இல்லை. துடி துடித்துப்போன அவள் குழந்தையோடு வைத்தியசாலை நோக்கி விரைகிறாள்.

தன் மகனுக்கு போலியோ என்னும் கொடிய நோய் தாக்கப்பட்டிருப்பதாக அறிகிறாள். அங்குள்ள வைத்திய சாலைகள் குழந்தையின் கால்கள் இரண்டும் இனி இயங்கமாட்டாது என்ற முடிவுக்கு வருகின்றன.

பெருநகர வாழ்க்கையில் வாழ்ந்து பழக்கப்பட்டுப்போன அவள், கணவரோடு வாதிடுகின்றாள்; என் மகனை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும்படி கேளுங்கள். அங்குதான் திறமையான வைத்தியர்கள் இருக்கின்றார்கள், அங்கு சென்றால் என் மகனின் கால்கள் குணமாகும், என்கிறாள். ஆனால் கணவனுக்கோ மகனை ஈரப் பெரிய குளத்தில் இருக்கும் பெருனாட்டுக்கேணியில் வைத்து தமிழ் வைத்தியம் செய்தால் குணமாகும் என்ற நம்பிக்கை.

மனைவியின் விருப்பத்திற்கு செவி சாய்த்து அவளை குழந்தையோடு யாழ் நகரின் பிரபல்யம் வாய்ந்த அந்த பெரிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கின்றான். அங்குள்ள வைத்தியர்களின் பல முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், தங்களால் எதுவும் இனி செய்ய முடியாது என்று கைவிடுகின்றனர்.

இன்னிலையில்தான். கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப பெருனாட்டுக்கேணியில் உள்ள தமிழ் வைத்தியத்தை நாடிச் செல்கின்றனர். அவர்களின் ஆலோசனைக்கு இணங்க அங்கு அவர்கள் பெற்றுக் கொண்ட ஒருவித எண்ணையை தினமும் காலையும் மாலையிலும் கால்களில் பூசி நன்கு நீவி( உருவி) விட்டனர். இவ்வாறு செய்ததன் பயனாக கால்களில் சற்று துடிப்பும், துரு துருப்பும் வருவதை அவதானித்தனர்.

எல்லாப் பிள்ளைகள் போலவும் அவனும் நடக்கும் பருவம் வரும்போது எழுந்து நடக்கத் தொடங்கினான். எந்த ஆங்கில மருத்துவம்தான் உலகின் தலை சிறந்தது என்று நம்பினாளோ அது அன்று பொய்த்துப் போனது, அவர்களால் முடியாததை முடியும் என்று நிரூபித்துக் காட்டியது தமிழ் வைத்தியம்.

இராமும்பிள்ளை என்று ஒரு சாத்திரியார், பட்டிக்குடியிருப்பை சேர்ந்தவர். அவரிடம் அவன் குறிப்பை பெற்றோர் எழுதக் கொடுத்தபோது அவனுக்கு ஆயுள் 12 வயது வரையும்தான், அதன் பிறகு அவன் உயிரோடிருந்தால் அவனுக்கு குறிப்பு எழுதுவதாக சொல்லி அன்று அவன் தலையெழுத்தை எழுத மறுத்துவிட்டார் சாத்திரியார்.

அவனுக்கு சரியாக பன்னிரண்டு வயதாகியபோது அவனின் பிறந்த நாளன்று பங்குனி மாதம் முதலாம் திகதி 1988 ஆம் ஆண்டு அவனது கடைசித் தங்கை பிறந்தாள். அவன் வாழ்வும் நீடித்தது. சாத்திரியார் குறி தவறியது. அவள் பிறப்பு அவன் ஆயுளை நீடித்ததோ என்னவோ. படைத்தவன்தான் அதன் பெருமையறிவான்.

நாளொன்று நகர பொழுதொன்று கழிய, அவனும் வளர்ந்தான். காலை உருவி உருவி இழுத்ததன் விளைவா? இல்லை ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பா தெரியவில்லை. முதுகுப்பக்கத்தின் வலப்பக்கம் முட்டிபோல் பின்னோக்கி தள்ளத் தொடங்கியது. ஆனாலும் அவன் வளர்ந்தான் கிட்டத்தட்ட ஐந்தடி உயரம்தான் அவனுடைய வளர்ச்சியாக இருந்தது. கூர்மையான மூளை, எதையும் துணிந்து செய்யும் ஆற்றல், என் நேரமும் துரு துரு என்று எதையாவது செய்து கொண்டிருப்பான்.

பள்ளிக்காலத்திலும் நல்ல நண்பர்களை சேமித்து வைத்திருந்தான். சிறு வயதில் எல்லாப் பிள்ளைகளைப்போலும் அவனும் சாதாரணமாக நண்பர்களோடு குறும்பு செய்வான். ஆனால் அவனை யாராவது கேலி செய்தால் அதை தாங்க முடியாது துடித்துவிடுவான்.

வீட்டிற்கு மூத்தவன் அல்லவா, துரு துரு என்று காய் கறி தோட்டம் செய்வதிலும் அலாதி பிரியம் அவனுக்கு. மழை வந்து பயிர்கள் வாடி நின்றால் அவன் முகமும் வாடக்கண்டு, வெய்யில் இதோ வந்துவிடும் என்பார் தந்தை.

சிறு வயது முதல் கோழி வளர்ப்பில் கை தேர்ந்தவன். தன் சொந்த முயற்சியால் வீட்டின் அருகில் நின்ற ஒரு கொய்யா மரத்தடியில் அவன் மண்ணில் கல்லரிந்து கட்டிய பெரிய கோழிக்கூடு ஓட்டினால் வேயப்பட்டிருந்தது. அதற்குள் அடைகாக்கும் பெட்டை கோழிகளையும், குஞ்சு பொரிக்கும் நாட்களையும் அவன் எண்ணி மகிழ்ந்த நாட்கள் அவன் இளமையில் சிறகடித்த நாட்கள்.

படிக்கும் காலத்தில் அவனைவிட ஒரு வயது குறைவான அவன் தங்கையோடு போட்டி போடுவான். அவளோ கெட்டிக்கார சுட்டிப் பிள்ளை. ஆனாலும் பரீட்சைக்கு படிக்கும் காலங்களில் நீ படித்துவிட்டு என்னை எழுப்பு என்று அவனுக்கு இடமளித்து தூங்கச் செல்வாள்.

போர்க்காலத்தின் மின் குமிழ் இல்லா ஒற்றைக் குப்பி விளக்கில் எண்ணையும் தட்டுப்பாடான நேரத்தில் எப்படி இருவரும் விளக்கெரிக்க முடியும். அவனுக்கோ அமைதியாக மனதிற்குள் படித்தலென்பது சரிவராத ஒன்று. அவளோ அதற்கு எதிர்மறை. அண்ணனுக்கு இடமளித்து தூங்கி எழுந்து நடுச்சாமத்தில் படிப்பாள் அவன் தங்கை.

கல்விப்பொதுத்தராதர(O/L) வகுப்பில் சாதாரண சித்திபெற்று உயர்தரம் செல்ல நினைத்தும்

நம் நாட்டு கல்வி முறையின் தகுதியற்ற தரப்படுத்தலால் அது பலனளிக்காத போது

சிறிய தந்தை நாதன் வசிக்கும் வவுனியா என்னும் நகரில் அவரோடிணைந்து பெருந்தோட்டம் செய்தான்.

அப்போது அவனுக்கு வயது பதினெட்டுத்தான். வீட்டை விட்டு முதன் முதலில் பிரிவை சந்தித்தது அப்போதுதான்.

அவன் வீட்டிற்கு அடிக்கடி கடிதம் எழுதுவான். அவன் எழுத்துக்களில் மற்றவர்களுக்கு ஊக்கமூட்டும் சொற்கள் எப்பொழுதும் கலந்திருக்கும். தான் உழைத்து சேமித்த பணத்தில் தங்கைக்கு அவள் கேட்ட புத்தகப்பையும், இன்னொரு தங்கைக்கு கேக் ஐசிங் செய்யும் நொசில்சும் முதன் முதலில் அவன் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தான்.

ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கை 1997 ஆம் ஆண்டு வன்னியை ஆட்கொண்ட போது போர்ச்சூழலில் சிக்குண்டு பல இன்னல்களையும் அனுபவித்து, அவன் பெற்றோரும் சகோதரர்களும் சொத்து சுகங்களை இழந்து வந்த போது தூண்போல் கைகொடுத்தான். தந்தையோடிணைந்து ஓர் கடை திறந்து வாழ்க்கைச் சக்கரம் ஓட வழிகாட்டியாய், உற்ற தோழனாய் துணை நின்றான்.

2002 ஆண்டு சமாதான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது மீண்டும் ஊர்மக்கள் தம் நகரம் நோக்கி நகர்ந்த போது அவன் குடும்பமும் சொந்த ஊருக்கு குடி பெயர்ந்தது. அங்கேதான் அவனுக்கு இறுதி வாழ்வென்று யார் கண்டார் அன்று.

தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரன் குராஜாவின் பரிந்துரையின் கீழ் சங்கக் கடை ஒன்றின் முகாமையாளராக கடமையேற்று தன் பணியை தன்னிகரில்லாது ஆற்றி வந்தான். அவனுக்கு கிடைக்கும் ஊதியத்தில் வவுனியாவில் பிரபல பாடசாலையில் உயர்தரம் கற்கும் தன் கடைக்குட்டி தங்கைக்கு செலவுக்கு அனுப்புவான்.

நாளொன்று நகர வயதொன்று ஏற அவனும் 30 ஐ நெருங்கலானான். பெண்பார்க்கும் படலம் தொடர்ந்தபோது ஆவலாய் காத்திருந்தான். ஓமந்தையில் பெண்ணொன்று பார்த்து பிடித்துப்போகவே

வாஞ்சையோடு, வெளி நாட்டில் குடிபுகுந்த தன் முதல் தங்கைக்கு தொடர்பெடுத்து பெண் பற்றி கூறினான்.

2007 ஆம் ஆண்டு ஈழப்போராட்டம் வலுவிழக்கத் தொடங்கியிருந்த காலத்தில் “வீட்டுக்கொரு போராளி நாட்டைக் காக்க வேண்டும்” என்ற நாமம் சுழற்சியாய் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த காலத்தில் வீடு தேடி இளையவர்களை இணைக்கத்துணிந்த போராளிகளுக்கு அஞ்சி அவனின் இன்னொரு தங்கை பயந்து நாளெல்லாம் ஒழிந்து திரிந்தபோது, தன் தங்கைக்காக தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொண்டான்…..

தன்னையே தாரை வார்த்துக் கொடுத்த அந்த இளஞ்சிட்டு 2009 ஆண்டு மாசி மாதம் 28 ஆம் திகதி போர்க்களத்தில் கிபீர் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி தன்னுயிர் ஈர்ந்தது முள்ளிவாய்க்காலில்……

அவன் வித்துடல் கூட வீடு வந்து சேரவில்லை…… இன்னும் அவன் உயிருடன் இருப்பதாகவே ஓர் உணர்வு….! 

தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட திடுக்கிடும் பயம் உடனே தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு ஊரே பேரமைதியாய் இருந்தது. அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான். குட்டி கண்ணனுக்கு வயது ஒன்பதுதான் அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள். கண்ணனுக்கு ஆருயிராய் ...
மேலும் கதையை படிக்க...
கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய் நம்பாதீர்கள். நான் ஓர் தொற்றுக்கிருமி. என்னைத்தொட்டால் பற்றிக்கொள்கிறேன். தும்மலுடன் வந்து ஒட்டிக் கொள்கிறேன். இருமலுடன் செருமப்பட்டு வெளி வருகின்றேன். சுத்தமாக ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் ...
மேலும் கதையை படிக்க...
புரியாத புதிர்
கண்ணனுக்கு வைரஸ்
கரோனா பேசுகிறேன்
வசுந்தரா!
ப்ரியாவின் விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)