போர்முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 8,556 
 

அடிக்கடி வேரோடு பிடுங்கப்பட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் நடப்படும் பயிர்கள் எல்லம் பிழைத்துக் கொள்வதில்லை. சில செத்துமடிந்துவிடுகின்றன. சில உயிருக்காய் ஊசலாடுகின்றன. ஒரு சில மட்டுமே மீண்டும் தளிர்த்துத் துளிர்விடுகின்றன.இப்படித்தான் யாழ்ப்பணத்து மக்களும் அடிக்கடி வேரோடு பிடுங்கப்படுகிறார்கள்.அவர்களது ஆணிவேர்கள் அறுந்துபோகின்றன.

எனது சிந்தனையை பஸ்சின் இரைச்சல் துண்டிக்கிறது. ஆர்வமாய்த் தெருவை நோக்குகிறேன். மூளாய் வீதியிலிருந்து நெல்லியான் சந்தி முடக்கில் திரும்பி, சுழிபுர வீதியால் இராணுவ வாகனம் ஒன்று மிகவேகமாகச் செல்கிறது. ஏமாற்றத்துடனும் சலிப்புடனும் நேரத்தைப் பார்க்கிறேன். மணி 7.30 ஐக் காட்டுகிறது. எனது காத்திருப்பு முப்பது நிமிடத்துளிகளை விழுங்கிவிட்டது.

காத்திருப்பு—

பஸ்சுக்கு…

கப்பலுக்கு…நிவாரணத்துக்கு….

காணாமல் போனவருக்கு….

பட்டியல் நீள்கிறது.

காத்திருப்பே தேசத்தின் தலைவிதியாகி…. மீண்டும் பொறுமையாய் காத்திருந்தேன்…..

நானும் வேரோடுபிடுங்கப்பட்டவள்தான்.ஆணிவேருக்கு மண் அணையாய் அக்கா குடும்பத்தின் ஆதரவு கிட்டியது.

அக்கா வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தது உண்மையே..ஆனால், சுழிபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தினமும் பஸ்சில் பயணிப்பதென்பது நரக வேதனையாகவிருந்தது.எண்ணச் சுழியில் அகப்பட்ட மனம் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சுழழ்கிறது.

மேலும் பத்து நிமிடத்துளிகள் காத்திருப்பில் கரைகின்றன..பள்ளிக்குப் பிந்திச் செல்லுகையில் அதிபரின் பார்வை ஊடுருவித்துளைக்கும் அதில் கோடிடும் வெறுப்புக்குறி என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தும்.

வேதனை …சலிப்பு…கோபம் …உணர்வுகள் போட்டியிட க் காத்திருப்புத் தொடர்கிறது.

7.45 க்கு மிக வேகமாக மினிப்ஸ் ஓன்று வந்து நிற்கிறது. அவசர அவசரமாய் பஸ்ஸில் ஏறி அமர்கிறேன்.

மினிபஸ் புறப்பட்டபோது அதனைத் துரத்தியபடி இ.போ.ச பஸ் ஒன்று நெல்லியான் முடக்கில் திரும்பி முந்திச் செல்கிறது.

எனது மனம் அங்கலாய்த்துக்கொள்கிறது.இ.பொ.ச பஸ்ஸில் பயணம் செய்வதில் சில ஆதாயங்கள் உண்டு. பயணிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமையால் நேரச் சிக்கனம் கூடியது.இராணுவச் சோதனைச் சாவடியில் பரிசோதனை சற்றுக் குறைவு.

இ.பொ.ச ,மினிபஸ் இரண்டும் ஒன்றுக்கொன்று குரோதத்துடன் போட்டியிட்டுப் பறக்கின்றன. மினிபஸ் சாரதி இ.பொ.ச சாரதியைத் திட்டித் தீர்க்கிறார்.தமது பிழைப்பில் மண்ணைப் போடும் சாரதி மீது ஏற்பட்ட கொதிப்பில் நெருப்புத்துண்டங்களாய் வார்த்தைகள்…

மினிபஸ்ஸின் வேகம் எனக்கு ஆறுதலைத் தருகிறது.குறித்த நேரத்தில் 15 நிமிடங்களையாவது மிச்சம் பிடிக்கலாம்.

மினிபஸ் சாரதியின் வார்த்தைகள் தடித்து காதில் வாங்க முடியாதனவாக வக்கரித்து வெளிப்படுகின்றன.எனது கவனத்தைத் தெருவில் செலுத்துகிறேன்.

மினிபஸ் சங்கானைத் தரிப்பிடத்தில் திடீர் பிரேக்குடன் குலுங்கி நிற்கிறது.வயிற்றுப் பிழைப்புக்காக மினிபஸ்ஸை ஓட்டத்தொடங்கிய சாரதியால் வீம்புக்கு வேட்டையாட முடியவில்லை.

கொதிக்கும் வார்த்தைகளால் தூஷித்தப்படி நிதானமாக பஸ்ஸை ஓயவைக்கிறார்.கிளீனர் இறங்கி அருகில் இருந்த தேநீர்க் கடையில் சென்று அமர்கிறார். அவரது நிதானம் பஸ் உடனே புறப்படப் போவதில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியது. அவர்களுக்கு அவர்களது பிழைப்பு.எனக்கு?…என்னைப்போன்று அங்கே ஏறியிருந்த ஏனைய பயணிகளுக்கு?:…

வேதனை சலிப்பு விரத்தி போன்ற உணர்ச்சிக் கலவையுடன் பஸ்ஸில் உள்ளவர்களை நோட்டமிடுகிறேன்..

அவர்கள் முகங்களிலும் சலிப்பும் அவசரமும் …சிலர் தங்கள் சலிப்பை வாய்விட்டுக் கூறுகிறார்கள்.

எனது பார்வை எனது இருக்கைக்கு சமாந்தரமான இருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுமியில் படிகிறது. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த அவளுக்கு 15-16 வயதுக்கு மேல் இருக்காது. அவள் சீருடை அணியவில்லை. ஆனால் நிச்சயமாக மாணவியாகத்தான் இருக்க வேண்டும்.துடைத்துவிட்டது போல பளபளக்கும் அவளது முகத்தில் சூழலின் பாதிப்பு அதிகமாய்த் தெரியவில்லை. ஆனால் ….அவளது வயதுக்கு மீறிய ஓர் உணர்வு…இறுக்கம் ..தற்செயலாகத் திரும்பிய அவள் எனது பார்வையின் ஊடுருவலை தவிர்க்கவோ என்னவோ ..சட்டென மறுபக்கம் திரும்பிக் கொள்கிறாள் .

முணுமுணுப்பாய்த் தொடங்கி, பயணிகள் இப்பொழுது ,சாரதியை பஸ்ஸை எடுக்குமாறு வற்புறுத்தினர். சில பயணிகள் பஸ்ஸில் புதிதாய் ஏறுகிறார்கள்.பஸ்ஸில் இருக்கைகள் நிரம்புகின்றன.அதனால் திருப்தியடைந்ததாலோ ,அல்லது பயணிகளின் அதிருப்தியை விரும்பாததாலோ சாரதி பஸ்ஸை எடுக்கிறார்.கிளீனர் வந்து தொற்றிக்கொள்கிறார்.

பஸ் பதினைந்துநிமிட தாமதத்தின் பின் ஊரத்டொங்குகிறது.சங்கானைக்கு அடுத்துவந்த பஸ்தரிப்பில் சில பயணிகள் ஏறுகின்றனர். அவர்களோடு ஓர் ஆச்சியும் ….முதுமையும் நோயும் கோடிடத் தள்ளாடி நிற்ற்கும் கிழவிக்கு இடங் கொடுக்க அங்கு யாரும் முன்வரவில்லை. பயணித்தவர்களில் மிகவும் இளமையான அந்தச் சிறுமி எழுந்து இடம் கொடுப்பாள் என எதிர்பார்த்து அவளைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆனால் ஜன்னலுக்கு வெளியே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அவள் அசையவில்லை.

நான் எழுந்து அந்த ஆச்சிக்கு இருக்கையை வழங்கினேன்.மலர்ந்த முகத்துடன் கிழவி இருக்கையில் அமருகிறார்.

ஆசிரியை என்பதைப் பறைசாற்றும் எனது தோற்றம் ..உடை …எனது செயலைப்பார்த்தபின்னாவது அச்சிறுமியில் மாற்றம் ஏற்படுகிறதா எனத் திரும்பிப் பார்க்கிறேன். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு…எது ? என்னால் மட்டிட முடியவில்லை.எனது பார்வையைத் தவிர்க்க மீண்டும் தலையைத் திருப்பிக் கொள்கிறாள்.

என்னுள் அவள்மிது சிறிது வெறுப்பு முகிழ்க்கிறது.” இக்காலத்தில் மாணவர் ஆசிரியர், பெரியோரை மதிப்பதில்லை”

சட்டம்பிதன எதிர்பார்ப்புககள் புறக்கணிப்புக்கு உள்ளாகும் போது இயல்பாக எழும்பும் வெறுப்பு அது. மெல்ல பஸ் சண்டிலிப்பாய் தடை முகாமில் வந்து நிற்கிறது. பஸ்ஸில் உள்ள அனைவரையும் இறங்கச் சொல்லும் கனத்த உத்தரவு இராணுவத்திடம் இருந்து பிறப்பிக்கப்படுகிறது.

“ஏல்லோரும் இறங்கிறது.ஒருத்தரும் இருக்க வேணாம்.”

நேற்று இராணுவ அணியினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலி அந்தக்கண்டிப்பான குரலில் தொனிக்கிறது..

இறங்கி நடக்கிறேன் .முதியவர்கள் சிலரைத்தவிர இளம் வயதினர் இறங்கி வருகின்றனர்.அந்தச் சிறுமி இறங்கி வருகிறாளா ?என நோட்டமிடுகிறேன்.அவள் இறங்கி நடப்பதில் எனக்கு அற்ப சந்தோசம். ஆனால் அவள் இறங்கவே இல்லை.! ”இதுகள் இப்படி இறங்காமல் விடுரதாலதான் அவங்களும் நேரத்தை மினக்கடுத்திராங்கள். தங்களைவிட்டால் ஆக்களில்லை எண்ட நினைப்பு. நாங்களெல்லாம் விசருகளே? இறங்கி நடக்க திமிர் . உடம்புமுழுக்கத்திமிர்”

நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற வக்கிரத்தின் விளைவா ?;….அல்லது இன்றைய பொழுதுகளின் பாதகநிலைமைகள் ஏற்படுத்திய மன உளைச்சல்களுக்கெல்லம் வடிகாலாக அந்தச் சிறுமி அமைந்தாளா ?:…எனக்குப் புரியவில்லை.

இராணுவத்திடம் அடையாள அட்டையைக் காட்டிவிட்டு தெரு ஓரத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறேன்.

மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கால் கடுக்க நிற்கிறேன் இப்பொழுது பயணிகள் அதிகரித்திருந்தமையால் நெரிசல் அதிகமாக இருந்தது. வியர்வை ஒருபுறம் மிக அருகில் ஒன்றோடு ஒன்று மோதும் மூச்சுக்காற்று மறுபுறம்…அருவருப்புணர்வு மேலிடுகிறது. “ஆராவது இறங்க மாட்டார்களா ,இருப்பதற்கு ஓர் இடமும் கிடைக்காதா ?” என ஏக்கமாக இருக்கிறது.

அவளது இருக்கையின் கம்பியை பிடித்தபடி முதியவர் ஒருவர் நிற்கிறார்.

அச்சிறுமியை பார்க்கப் பிடிக்கவில்லை. முகத்தத் திருப்பிக்கொள்கிறேன்.

பஸ் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலடியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடியில் நிற்கிறது..மீண்டும் எமது கீழ்ப்படிவான அடிமைத்தனத்தை எடுத்துக் காட்ட “ஓக்கம பஹின்ட”…இறக்கப் படுகிறோம்.

பெண்பொலிஸின் ஸ்பரிச தீட்சை பெற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் மீண்டும் காத்திருக்கிறேன். பிள்ளையார் எம்மைப் பார்த்து என்றும் போல் சிரிக்கிறார்.

இப்பொழுதாவது அச்சிறுமி இறங்குகிறாளா ?..ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.இம்முறை எப்படியாவது இருக்க இடம்பிடித்திட வேண்டும் என்ற வேகத்துடன் பஸ் வந்தவுடன் விரைவாக ஏறுகிறேன்.

சிறுமியின் பக்கத்தில் இருந்தவர் மருதடியில் இறங்கியிருக்க வேண்டும் . இருக்கை காலியாக இருந்தது.

அவசர அவசரமாக அவ்விருக்கையில் அமர்கிறேன்.

எனக்கு வசதியாக இடம் தருபவள்போல் சற்று நகர்ந்து இருக்கிறாள்.அவளது இறுகிய முகம் சற்றுத் தளர்கிறது.சிறுகோடாய் புன்னை நெளிகிறது.அடுத்தகணமே மறைகிறது. மீண்டும் ஜன்னலுக்கு வெளியே வெறித்து நோக்குகிறது.

நேரம் 8.40ஐத் தொட்டுக்கொண்டிருந்தது பாடசாலக்கு 9.30 க்கு முதல் நான் போய்ச் சேரமுடியாது என்பது உறுதியாயிற்று.தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன என்ற விரக்திநிலைக்கு வந்திருந்தேன்.

முன்னே இராணுவத்தின் பவள் வாகனம் ஒன்று தெருவை நிறைத்தபடி மிக வேகமாக வரவே பஸ்சாரதி திடீர் பிறேக் போட்டு விபத்தைத் தவிர்த்துக் கொள்கிறார்.

எனது மடியில் இருந்த கோப்புக்களில் இருந்த காகிதங்கள் பரந்துவிழுந்தன.அச்சிறுமி தன்னிச்சையாக குனிந்து காகிதங்களைப் பொறுக்கித் தரத்தொடங்குகிறாள். நானும் குனிந்து அக்காகிதங்களைப் பொறுக்கமுனைந்த பொழுது ……

மின்சாரத்தால் தாக்குண்டவள் போல் அதிர்ச்சியுடன் நிமிர்கிறேன்.அச்சிறுமியின் பாதங்களில் ஒன்று ….? இத்தேசம் இன்னும் எத்தனை பேருக்கு ஜெயப்பூர் கால்களைப் பரிசாக வழங்கப் போகிறதோ…’?

கேள்வி பெரிதாக எழுந்து பயமுறுத்துகிறது. போரின் அவலங்களின் தாற்பரியங்களைத் தரிசித்தபோது எனது மன உளைச்சல்கள் மிக அற்பமானவை என்பது புரிந்தது.

மானசீகமாக அந்தச் சிறுமியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *