கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 10,562 
 

அது குறைந்த வருவாய் உள்ள ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த தெரு.

அங்கிருக்கும் நிறைய பெண்கள் அருகில் உள்ள பங்களாக்கள், அபார்மெண்ட்களில் வீட்டு வேலைகளுக்கு போய் வருபவர்கள்.

அங்கு தான் ஆறுமுகமும் குடியிருக்கிறான். பக்கத்தில் உள்ள ஒரு பவுண்டரியில் அவனுக்கு வேலை.

வேலை நேரம் போக மீதி நேரம் எல்லாம் கஞ்சாக் குடித்துக்கொண்டு போகிற வருபவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்து சண்டைப் போடுவான்.

பெண்களிடம் சண்டைப் போடுவதென்றால் அவனுக்கு ரொம்ப குஷி. அவன் பேச ஆரம்பித்தால் அந்த தெருவே எதிரொலிக்கும். பீப்பாடலில் வரும் விரும்பத்தகாத வார்த்தையை முன்னும் பின்னும் வைத்து வித விதமான கெட்ட வார்த்தைகள் தொடர்ந்து சரளமாகவரும்! அவன் திட்ட ஆரம்பித்தால், சமீபத்தில் வேளச்சேரியில் வீடுகளில் புகுந்த சாக்கடை நீர் வெளியேறிய பின் நிற்கும் கழிவுகளால் ஏற்படும் நாற்றத்தை விட அதிகமாக இருக்கும்!

அவனைப் பார்த்தாலே அந்த தெருப்பெண்கள் வேகவேகமாக ஒதுங்கிப் போய்விடுவார்கள்!

அந்த தெருவில் குடியிருக்கும் எல்லாப் பெண்களும் தன் புருஷனைக் கண்டால் பயந்து ஓடுவதைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஆறுமுகத்தின் மனைவிக்கு பொன்னம்மாவுக்கு ஒரே பெருமையாக இருக்கும்!

அந்த தெருவுக்குப் பின்னால் நகரத்து கழிவு நீரெல்லாம் வந்து தேங்கும் ஒரு குட்டை, அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கிறது. அந்தப் பகுதியில் முற்புதர்கள் மண்டியிருக்கும். கழிப்பறை வசதியில்லாத ஏழைப்பெண்கள் அந்த மறைவிடத்தில்தான் போய் ஒதுங்குவார்கள்.

அங்கு இருக்கும் சாக்கடை சேற்றில் எந்த நேரமும் இரண்டு மூன்று பன்றிகள் படுத்திருக்கும்!

இரண்டு பன்றிகள் சண்டைப் போட்டுக்கொண்டு, ஒன்று இன்னொன்றைத் துரத்தியது. பயந்த பன்றி அருகில் இருந்த ஆறுமுகம் குடியிருந்த தெருவுக்குள் நுழைந்து ஓடிவந்தது.

அப்பொழுது அந்த தெருவில் போய் கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி எதிரே சகதியும், சேற்றையும் தெறித்துக்கொண்டே வரும் பன்றியைப் பார்த்து “அடியே!…ராஜாத்தி! எதிரே ஆறுமுகம் வருகிறான்..ஒதுங்கிப்போடி! …சேறும் சகதியும் உன் மேலே தெறித்துவிடும்!…..” என்று சத்தமாக தன் தோழிகளுக்கு எச்சரிக்கை செய்தாள்.

ஆறுமுகத்தின் மனைவி பொன்னம்மாவின் காதுகளில் அது விழுந்தது. அன்று ஆறுமுகத்திற்கு பகல்ஷிப்ட். வேலைக்குப் போயிருந்தான். அந்த நேரத்தில் அவன் பெயர் காதில் விழ என்னவென்று தெருவைப் பார்த்தாள். ஒரு பன்றி சேற்றை இறைத்தவாறு தெருவில் ஓடி வந்து கொண்டிருந்தது!

அப்பொழுதுதான் பொன்னம்மாவுக்குப் புரிந்தது! அந்த தெருப் பெண்கள் தன் புருஷனைக் கண்டு ஒதுங்கிப்போவதுக்கு காரணம், பயத்தினால் அல்ல அருவருப்பால் என்று!

இனி மேலாவது தன் புருஷனை நினைத்துப் பொன்னம்மா பெருமைப் படாமல் இருந்தால் சரி!

– பாக்யா ஏப்ரல் 8-14

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *