ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.
ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னை வரை பிருந்தாவனில் பயணம் செய்தபோது, ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாங்க முடியாமல் அரக்கோணம் தாண்டியதும் கேட்டேவிட்டேன்.
“உங்களுக்கு ஏதாவது பேசணுமா ?”
“இல்லை….” என்று தலையாட்டினார்.
ஒருவேளை ஊமையோ என்றால், ஜிலேபிகாரரிடம் சில்லறை கேட்டு வாங்கும்போது பேசியிருக்கிறார்.
“ஏன் என்னையே பார்த்துண்டிருக்கீங்க ?”
“நீங்கதானே இந்தக் கதையெல்லாம் எழுதறவர் ?” என்று கையில் மானசீகமாக எழுதிக் காட்டினார்.
“ஆமாம்….” என்றேன்.
“அந்தப் பூனையை அந்தக் கதையில ஏன் ஸார் சாகடிச்சீங்க ?”
“எந்தப் பூனையை எந்தக் கதையில ?”
“உங்க கதைகளைப் படிக்கறதையே அதுக்கப்புறம் நிறுத்திட்டேன்….”
“எந்தப் பூனை ?”
“ஒரு படப்பிடிப்பில் கறுப்புப் பூனை….”
எனக்குச் சட்டென்று கதை ஞாபகம் வந்தது. படப்பிடிப்புக்காக எடுத்துச் சென்ற பயிற்சி பெற்ற பூனை, வில்லனைப் பிறாண்டி விடுவதால், அதன் ஓனர் அதை…. வேண்டாம், நீங்கள் படித்திருந்தால் you get the idea . “அந்தப் பூனை உங்களை என்ன பண்ணித்து ? எதுக்காக வாயில்லா ஜீவனைப் போய்க் கொன்னீங்க ?” என்று அவர் கேட்ட போது அவர் கண்களில் நீர் ததும்பியது.
“பூனையைப் பத்தி என்ன ஸார் தெரியும் உங்களுக்கு ? எத்தனை மில்லியன் வருஷங்களா அது மனிதனோட வாழறது தெரியுமா ? கிளியோபாட்ரா காலத்தில் அதைத் தெய்வமா மதிச்சாங்க. எத்தனை வருஷமானாலும் ஒரு பூனையால மனிதனைச் சாராமல் வாழ முடியும், தெரியுமா ?”
நான் மையமாகப் புன்னகைத்தேன்.
“நீங்க அதைக் கொன்னிருக்கக் கூடாது. அதை அவன் ரோட்டுல விட்டிருந்தாக் கூட, எங்கேயாவது பிழைச்சுப் போயிருக்கும்….”
“வீட்டுக்குத் திரும்பி வந்துடுமே ஸார் ?”
“அதைவிட்டு சுவத்துல…. சொல்லவே கூச்சமா இருக்கு. கிராதகன் ஸார் நீங்க! அஞ்சு மணி நேரமா உங்களை என்ன பிராயச்சித்தம் பண்ண வைக்கலாம்னு யோசிச்சிண்டிருந்தேன். நீங்க உங்க கதைல பூனையை ஒரு அதிர்ச்சிக்காகக் கொன்னிருக்கீங்க. எங்காத்துல எட்டுப் பூனையை வளர்த்தவன் நான். எவனும் அப்படிச் செய்ய மாட்டான்.”
தனது மஞ்சள் பையில் கை விட்டு எதையோ ஆராய்ந்தார். எனக்குத் திக்கென்றது. ஆயுதம் தேடுகிறாரா, என்ன?
“ஸாரி… நான் பல கதைகளில் பல மிருகங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு மிருகங்கள்னா பிரியம். இந்தக் கதையில் அவனுடைய ஆத்திரத்தின் வெளிப்பாடு….”
“வெளிப்பாடாவது, உள்பாடாவது…” அவர் சமாதானமாகவில்லை.
வண்டி சென்ட்ரலில் வந்து நின்றதும், “நீங்க கொன்ன அந்தப் பூனைக்கு ஒரே ஒரு ப்ரீத்தி பண்ணிடுங்கோ. ஒரு எய்ட் அண்ட்ரட் ருப்பீஸ் செலவழிச்சா, அந்த ஜந்துவைக் கொன்ன பிரம்மஹத்தி உங்களைத் துரத்தாது. ஏற்பாடு பண்ணவா ?”
“என்கிட்டே எய்ட் அண்ட்ரட் இல்லை…”
“செக்கா கொடுத்தாலும் பரவாயில்லை….”
எப்படித் தப்பித்தேன் ?
“ஒண்ணு பண்ணுங்க…. அது என்ன பூஜைன்னு சொல்லுங்கோ…. எனக்குத் தெரிஞ்ச வாத்தியாரை வெச்சிண்டு பண்ணிடறேன்…..”
அவர் என்னைக் கடைசி வரை சபித்துக் கொண்டுதான் சென்றார்.
அதிலிருந்து கதைகளில் நான் பூனைகளைக் கொல்வதில்லை.
– சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் II )
தொடர்புடைய சிறுகதைகள்
நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டென்ட்டாக 210-10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க் கார் என்னும் மஹா இயந்திரத்தின் ஆயிரம் ...
மேலும் கதையை படிக்க...
சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து “அடுத்த அமாவாசைக்கு ஷ¨ட்டிங்குக்கு வா” என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!
“குதிரையா?” என்று ...
மேலும் கதையை படிக்க...
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்!
- மகாகவி
Welcome to delegates of Bharathi International
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப் பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித் ...
மேலும் கதையை படிக்க...
மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் ‘ஆஷோன்… ஆஷோன்’ என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக்கொள்ள… சென்னை-103-ஐச் சேர்ந்த ‘அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி’யின் ஆசிரியைகள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ”இங்கதான்டி ‘சிலை எடுத்தான் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும் பாஸ்போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன். 2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு கொடுத்தால் ...
மேலும் கதையை படிக்க...
மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்
டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்
வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.
மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,
பத்திரிக்கையாளர் என்று பல பேர் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சுஜாதா.
ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ ...
மேலும் கதையை படிக்க...
என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன.
“நான் சொல்வதுதான் சரி. கடவுள் இல்லை. கடவுளை நம்பினவன் முட்டாள். வாழ்க்கை அர்த்தமற்றது.”
இதை நிரூபிப்பதற்கு என் துப்பாக்கியை வெளியில் எடுத்தேன். அதன் முனையை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். ...
மேலும் கதையை படிக்க...
அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு ...
மேலும் கதையை படிக்க...
படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!