Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புலித்தோல்

 

எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை வழியே நடந்தால் இளம்புலி அம்மன் கோயில். அதை கடந்த இடதுபுறம் இறங்கி னால் நம்மை எதிர்கொள்வது ‘ஸ்ரீரங்கம் ஹவுஸ்’ தான். எங்கள் ஊரிலிருந்து ஸ்ரீரங்கம் பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அப்படியிருக்க அதற்கு ஏன் ஸ்ரீரங்கம் ஹவுஸ் என்று பெயர் வந்தது என்பது அப்போதைய சிறுவர்களான எங்களுக்கு பெரிய புதிர்.

‘ஸ்ரீரங்கம் ஹவுஸ்’ கணேசன் என்னுடைய நண்பன். அவனை கேட்டால் “எங்கள் தாத்தா ஸ்ரீரங்கம் கோவில் பேஷ்காராக இருந்தார். அவரைக் கேட்டுத்தான் ரங்கநாதரே வெளியே புறப்படுவார்” என்று சொல்வான். அது என்னவோ உண்மைதான். வருடந்தோறும் எங்கள் ஊரில் நடக்கும் ஜீயபுரம் உத்சவத்க்கு ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளுவார். சுற்றுபற்று கிராமங்களுக்கு இது பெரிய திருவிழா. அப்போதுகூட ஸ்ரீரங்கநாத ஸ்வாமி ‘ஸ்ரீரங்கம் ஹவுஸ்’ முன்பாக சற்று அதிக நேரம் நிற்பார். “பார் எங்கள் வீட்டில் எவ்வளவு நேரம் ஸ்வாமி நிற்கிறார்” என்று பெருமை பேசும் கணேசனை எங்களால் ஒன்றும் செய்ய முடியாதநிலை. அதைவிட பெருமை கணேசனுக்கு அவர்கள் வீட்டு கூடத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் புலித்தோல் தான் அது அவர்களது தாத்தாவுக்காக அவருடைய நண்பர் கொடுத்தது என்று சொல்வான் கணேசன். அவன் வர்ணிக்கும் போது ஒரு நிஜப்புலி அங்கு இருப்பதாகவே நாங்கள் நினைத்துக் கொள்வோம். எவ்வளவு முயன்றும் அதன் அருகில்கூட எங்களால் செல்ல முடியவில்லை என்பது உண்மை.

கணேசனுடைய பெருமைகளை பறைசாற்ற மற்றொரு சந்தர்ப்பமும் கூடி வந்தது. அதுதான் எங்கள் ஊரில் நடக்கும் கோலாட்ட ஜவந்தரை. களிமண்ணால் ஆன பசுவினை தயாரித்து அதற்கு சிறுமிகள் தினமும் தும்பைப் பூ மாலை சாற்றி கொண்டாடுவார்கள். தும்பை வெள்ளை யான அழகிய சிறு பூ. எங்கள் ஊர் சிவன் கோவிலின் சுற்றுப்புறங்களில் அதிகமாக பூத்திருக்கும். நாங்கள் எல்லோருமாக சேர்ந்து ஆளுக்கு ஒரு கொட்டாங்கச்சியில் பறித்து தருவோம். எங்கள் கைசூடு பட்டவுடன் சில பூக்கள் வாடிவிடும். பஸ¤வா பஸ¤வா என்று பாட்டும் கும்மியும கோலாட்டமுமாக பத்து நாட்களுக்கு ஊர் அமர்க்களப்படும். கடைசி நாள் அன்று பசுவினை ஊர்வலமாக எடுத்துச் சென்று காவிரியில் விட்டுவிடுவார்கள். இரவு வேளையில் தலையில் தூக்கிய பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் கும்மியும் கோலாட்டமும் வண்ணக் கோலமாக இருக்கும். அந்த வருஷம் கடைசி நாளன்று ஜெமினி கணேசன் வந்து கலந்து கொள்வார் என்று செய்தி வந்தது. ஜெமினிகணேசன் நம் கணேசனின் சித்தப்பா. அவர் எங்கள் ஊறவினர் என்று சொல்வதிலேயே ஊர் பெருமை பட்டது. கணேசன் இப்போ தெல்லாம் எங்களுடன் பேசுவதில்லை. இப்போதுதான் சித்தாப்பாவிடம் டெலிபோனில் பேசிவிட்டு வருகிறேன். நாளைக்கு அவர் கட்டாயம் வருகிறார் என்று சொல்லி சிட்டாய் பறப்பான். அந்த நாளும் வந்தது. பெரிய பளைமவுத் காரில் வந்த ஜெமினி கணேசனை நாங்கள் சற்று தொலைவில்தான் நின்று பார்க்கும்படி ஆகிவிட்டது. அடுத்த நாள் ஊரே வெறிசோடி கிடந்தது. அன்று விளையாட வந்த கணேசன் அவனுடைய சித்தப்பா பெரிய முத்துக்களால் ஆன படம் ஒன்று கொடுத்து இருப்பதாகவும், அதை புலித்தோலுக்குப் பக்கத்தில் மாட்டி இருப்பதாகவும் சொன்னான். என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகமாயிற்று.

நம்முடைய கதை ஸ்ரீரங்கம் ஹவுஸைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டது. பேஷ்காரரான கணேசனின் தாத்தா ஒல்லியான உயரமான உருவம். எப்போதும் கச்சம் கட்டிக் கொண்டிருப் பார். கைத் தடியுடன் அவர் மாலையில் காவிரிக்குச் செல்லும்போது வாசலில் உள்ளவர்கள் எழுந்து நிற்பார்கள். உள்ளூரில் அவருக்கு அவ்வளவு மரியாதை. மிகவும் கண்டிப்பானவர் என்று சொல்ல கேள்வி. எங்க¨ப் போல சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது என்றும் சொல்வார்கள். ஒருவேளை இவர் சிறுவனாகாமலேயே தாத்தாவாகி விட்டாரோ என்று நான் நினைப்பதுண்டு. எப்போதும் வீட்டின் மூன்றாவது கட்டில் நல்ல கருங்காலியில் செய்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார். காந்த தாத்தா போல் தப்பித்தவறி யாராவது வாசல் ரேழியில் தென்பட்டால் யாரது என்று அதட்டல் வரும். ஆனாலும் வாசலை யாரும் அவ்வளவு சீக்கிரம் தாண்டிவிட முடியாது. வாசல் திண்ணையில் போட்டிருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து இருப்பாள் பாட்டி. உள்ளே வரும் சிறுவர்களை விசிறியை தட்டி ‘போடா வெளியே’ என்று விரட்டுவாள். இந்த checkpostகளினாலோ என்னவோ எனக்கு அந்த புலித்தோலை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகிக் கொண்டே வந்தது. இப்போது போனஸாக ஜெமினியின் படம் வேறு. கணேசனிடம் என்ன முயன்றும் பயனில்லை. எனக்கு புலித்தோல் காட்டினால் என்ன தருவாய் என்று கேட்பான். எங்கள் ஊர் பக்கத்தில் கடைகள் கிடையாது. அதனால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஓவல் டின்னை கமர்கட் போல் பேப்பரில் சுருட்டி கொடுப்பதும் உண்டு.
அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு நாளை பார்க்கலாம் என்று சொல்லிவிடுவான். ஓவல்டின் டப்பா காலி ஆனதுதான் மிச்சம். புலித்தோலும் அதன் பக்கத்தில் உட்கார்ந் திருக்கும் தாத்தாவும் என் கனவில்வந்து போனார்கள்.

ஒருநாள் மதியவேளை. கையில் பேப்பரில் சுற்றிய ஓவல்டின்னுடன் ஸ்ரீரங்கம் ஹவுஸ் வாசலை எட்டிப் பார்த்தேன். நல்லவேளை வாசலில் பாட்டி இல்லை. கதவு திறந்திருந்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே சென்றேன். ரேழியில் சற்று இருட்டு. மெல்ல ஒதுங்கி மெதுவாக நடந்தேன். தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்ததார். பாதி தூக்கம். பக்கத்தில் கைத்தடி சாத்தி வைக்கப்பட்டிருந்தது. திரும்பிவிடலாமா என்று பார்த்தேன். அதற்குள் ஊஞ்சல் சத்தம் கேட்டது. பாட்டி திரும்பி வந்து விட்டார் போல் இருக்கிறது. சரி எப்படியும் முன்னேறுவது என்று மெல்ல ஹாலில் எட்டிப் பார்த்தேன். தாத்தா வுக்கு கூர்மையான பார்வை. “யார்ரா அவன்” என்று ஒரு அதட்டல். “நான் தான்” என்று என் பெயரைச் சொல்லி தயக்கத்துடன் நின்றேன். என் பெயரைக் கேட்டவுடன் மாது பிள்ளையா வா என்றார்.

கணேசனை பார்க்க வந்தாயா என்றார். இல்லை என்று தலைஆட்டினேன். சரி இன்று நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று நினைக்கையில் வா வந்து உட்கார் என்று தன் அருகில் இருந்த முக்காலியை காண்பித்தார். நடுக்கத்துடன் அதன் ஓரத்தில் அமர்ந்தேன். புலித்தோல் என்று முணுமுணுத்துக் கொண்டே அதை நோக்கி கையை காண்பித்தேன். அதை பார்க்க வேண்டுமா என்றார்? ஆமாம் என்று சொன்னவுடன் அதை எடுத்து என் அருகில் காண்பித்து தொட்டுப் பார் என்று என் மீது வைத்தார். உடம்பெல்லாம் கூசியது. அதன் கண்கள் மூக்கு வாய் என்று மெதுவாக தொட்டுப் பார்த்தேன். திரும்பிவிட நினைத்த என்னை தட்டிக்கொடுத்த தாத்தா புலித்தோலை வாங்கி சுவரில் மாட்டினார். பக்கத்தில் வைத்திருந்த திராட்சை கல்கண்டை கொடுத்து சாப்பிடு என்றார். அவர் பார்வையில் கனிவும் பரிவும் இருந்து. நான் சாப்பிடும் வரை காத்திருந்து போய்வா என்று அன்பாக என் முதுகில் தட்டி அனுப்பினார். நான் திரும்பும் போது புலித்தோலைவிட அன்பான அந்த தாத்தாதான் என் மனதில் நின்றார். உண்மையாகவே அவர் ஒரு புலித்தோல் போர்த்திய பசுவாகவே எனக்கு தோன்றினார்.

- ஜூலை 2002
 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு வாரமாகவே ஆபீஸில் வேலை அதிகம். வருடாந்திர கணக்கு முடிவு. கம்ப்யூட்டரின் முன்னே மணிக்கணக்காக உட் கார்ந்து இருந்தது கண்ணில் எப்போதும் ...
மேலும் கதையை படிக்க...
இரக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)