புருஷோத்தமன்

 

புருஷோத்தமன் எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். சுமார் 25 வயசு இருக்கும். ஆள் பாக்க நல்லா இருப்பான். ரொம்பவே ஸ்டைலா டிரெஸ் போட்டுக்கிட்டு , உயர்ரக சிகரெட்டின்னு ஒரு மார்க்கமாகத்தான் இருப்பான். வேலையிலும் கெட்டி. ஆபரேட்டரா இருந்தாலும் ப்ரோக்ராமிங், ஹார்ட்வேர் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தான். ஆபிசில் நெறைய பேருக்கு கம்ப்யூட்டர் அசெம்பிள் செஞ்சு குடுத்திருக்கான்.

ஆனா அவனுக்கு புருஷோத்தமன்னு பேரு வச்ச அவன் அப்பா அம்மாவ கோவில் கட்டித்தான் கும்பிடணும். பேருக்கு ஜஸ்ட் ஆப்போசிட் லேடீஸ் விஷயத்தில் ‘வீக்’. கண்ணுக்கு லட்சணமா இருக்கறதுனால எங்க ஆபிசுல இருக்கற கல்யாணம் ஆன ஆகாத லேடீசுல பலபேர்கிட்ட அவன் வழியாத நாள் இல்லைன்னு சொல்லலாம். அவளுகளும் புத்திகெட்டு அவனுக்கு இடம் குடுப்பாங்க. பாக்க ரொம்ப கண்றாவியா இருக்கும். (பொறாமைனு கூட வச்சிக்கலாம்).

இந்த லட்சணத்துல போன வருஷம் அவன் கல்யாணமும் செஞ்சிகிட்டான். ஆனா ஆபிசுல ஒருத்தரையும் கூப்பிடல. சொந்த ஊருக்கு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தான். இங்க வந்ததுக்கு அப்புறமும் யாரையும் வீட்டுக்கு கூப்பிடல. எங்க நாங்க வந்தா அவன் சாயம் வெளுத்துடுமோனு பயம் போல.

அப்பத்தான் போன வாரத்துல அந்த விஷயம் நடந்தது. மதியம் சுமார் இரண்டு மணி வாக்கில ஒரு பொண்ணு எங்க ஆபிசுக்கு வந்தா. புருஷோத்தமன பார்க்க வேண்டி. அவன் அந்த சமயத்துல சாப்பிட வெளில போயிருந்தான் அதனால அவள அவன் சீட்டுகிட்ட இருந்த கெஸ்ட் நாற்காலில உட்காரவெச்சேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அவன் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தான்.

அவளப் பார்த்ததும் பேயறஞ்ச மாதிரி போச்சு அவன் முகம். “ ஏய், உன்ன ஆபிசுக்கு யாரு வரச் சொன்னது? எதுவா இருந்தாலும் வீட்டுல சொல்ல வேண்டியது தானே? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்ல?” அப்பிடீனு சத்தம் போட்டான். எங்களுக்கு எல்லாம் ‘சே’ன்னு ஆயிடுத்து. ‘பொண்டாட்டி கிட்ட இப்படியா கோவபடறது? அதுவும் ஒரு பொது இடத்தில? கூறுகெட்ட மனுஷன்’ன்னு மனசுக்குள்ளேயே திட்டினேன்.

அப்புறம் ஒரு அஞ்சு நிமிஷத்துல அவன் பொண்டாட்டி போயிட்டா. இவன் எதும் நடக்காதது போல நார்மலா இருந்தான்.

மறுநாள் அவன் பொண்டாட்டி காலைல பதினொரு மணிக்கெல்லாம் வந்தா. அவன் ஏதோ திட்ட அவள் அழ திரும்பவும் ஒரு டிராமா. அப்பறம் அவளை வெளியே கொண்டு விடப் போனான்.

அவன் போனதும் ப்யூன் ராமசாமி ஓடி வந்தான். “சார், மேட்டரு தெரியுமா? நாம் புருஷ் சார் பொஞ்சாதிய விட்டுபுட்டு எவளோ ஒருத்தியோட சுத்தறாராம். அது தெரிஞ்சு தான் பாவம் அந்த புள்ள ரெண்டு நாளா அலையோ அலைன்னு அலையுது. ஊரு எப்டி கெட்டுப் போச்சு பாத்தியா சார்?” என்றான். எனக்கு என்ன சொல்றதுனே தெரில.

நான் ராமசாமிகிட்டே ஏதோ கேட்க வாயெடுத்தபோது புருஷோத்தமன் திரும்பி வந்தான். வந்தவன் தான் சிஸ்டத்தில் உட்கார்ந்து அவசரமா ஏதோ டைப் செஞ்சான். செஞ்சு ஒரு பிரிண்ட் எடுத்து சைன் பண்ணி என்கிட்டே கொண்டு வந்து கொடுத்தான். பார்த்தால் எங்க கோயமுத்தூர் ப்ராஞ்சுக்கு ட்ரான்ஸ்பர் வேண்டி விண்ணப்பம்!

உள்ள கோவம் பொங்கினாலும், ஆபீஸ் விஷயங்கறதுனால என்னால ஒண்ணும் சொல்ல முடியல. வாய மூடிகிட்டு கையெழுத்து போட்டு டெஸ்பாச்சுல கொடுத்தேன்.

அப்பறம் வேலை மும்முரத்துல லஞ்ச் டைம் ஆனதே தெரில. பசி வயித்த கிள்ள லஞ்ச் சாப்பிட வெளியே போனேன். பக்கத்துல இருந்த ஹோட்டலுக்கு போற வழில நம்ம புருஷோத்தமனும் அவன் பொண்டாட்டியும் நின்னு பேசிகிட்டு இருந்தத பார்த்தேன். என்னப் பார்த்ததும் சட்டுன்னு பேச்சை முடிச்சிகிட்டு அவன் திரும்பிப் போய்ட்டான்.

அவள் என்னப் பார்த்தாள். நான் திடீர்னு ஒரு முடிவோட அவள கிட்ட வரச்சொன்னேன். ஆச்சரியமா பாத்துகிட்டே அவ வந்தா.

“ இங்க பாரும்மா, எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். நீ ஒண்ணும் கவலப் படாத. நாங்க இருக்கோம். அப்படி உன்ன அம்போன்னு அவன் விட்டுட்டு போக விட மாட்டோம். நீ எதுக்கும் நாளைக்கு ஆபீசுக்கு வந்து என்னப் பாரு. நான் என் பிரெண்ட் வக்கீல் ஒருத்தன் இருக்கான். அவன்கிட்ட கேட்டு என்ன எப்படி செய்யனுமின்னு கேட்டுச் சொல்றேன். சரியா? நீ பயப்படாம வீட்டுக்கு போ. அப்படியே நாளைக்கு வர்ற போது உன் அப்பா நம்பரையும் கொண்டு வா. அவர்கிட்ட நானே பேசறேன். சரியா?” ன்னு கேட்டேன்.

நான் சொன்னதக் கேட்டு ஒரு பதிலும் சொல்லாம என்ன ஒரு மாதிரியா பார்த்துட்டு அவ போயிட்டா. எனக்கு ஒண்ணும் புரியல. என்ன உலகம்டா இது? உதவி செய்யுறேன்னு சொன்னா கூட வேண்டான்னு சொல்றாங்க!”ன்னு யோசிச்சிகிட்டு இருக்கும் போது ஹோட்டல் பக்கத்தில் இருந்த சிகரெட் கடைக்காரன் “ சார்! இங்க வாங்க”னு கூப்பிட்டான்.

சரி என்ன விஷயம்னு கேட்க போனேன். “ சார்! என்னா சார், நீங்க அந்த பொம்பளகிட்ட போயி பப்ளிக்ல பேசிகிட்டு இருக்கீங்க? அதும் கேரக்டர் சரி இல்லை சார். நாம் புருஷ் சாரோட ‘கீப்பு’ சார் அது. அதக் களட்டி விட ரொம்ப பாடுபட்டு இப்பதான் ஒரு வழியா செட்டில்மென்ட் பண்ணிருக்கார். நான் தான் சொன்னேன் ஊரவிட்டுப் போன்னு. சரின்னு இன்னிக்கு ட்ரான்ஸ்பர் கேட்டுருக்கறதா சொன்னார்.

நீ வேற, இதும கிட்டேல்லாம் பேசாதே சார். அது வேற பிட்டிங் கெடக்கிமான்னு அலையுது. நீ பாவம், எங்கனா அதும் வலைல வுளுந்துட போற! உஷாரா இரு சார்” னு சொல்லி சிரிச்சான்.

ஆனா எனக்கு சிரிப்பு வரல. தலதான் சுத்த ஆரம்பிச்சுது. ஒரு வேள பசியா இருக்குமோ?

- பெப்ரவரி 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து இருக்கும். “வண்டிய ஓரங்கட்டிட்டு லைசென்சு இன்சூரன்சு பேப்பர் எல்லாம் எடுத்தாடா!” என்று அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார். “சரி சார்” என்று ...
மேலும் கதையை படிக்க...
“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் வணக்கம். முதலில் அவரைப்பற்றிய ஒரு சிறு விளக்கம். பின்னர் அவருடன் வந்திருக்கும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்” என்று அந்த ...
மேலும் கதையை படிக்க...
மென்மையாக ஒலித்த i phone அலாரம் சப்தத்தினால் கண் விழித்த பூங்கொடி, அழகாக சோம்பல் முறித்தாள். அவள் சோம்பல் முறித்த அழகைப் பார்த்திருந்தீர்களானால் செய்துகொண்டிருக்கும் வேலையை ரிசைன் பண்ணிவிட்டு கவிதை எழுத புறப்பட்டு விடுவீர்கள். பூங்கொடிக்கு இன்று பிறந்த நாள்.பதினெட்டு முடிகிறது. கண்டதும் ...
மேலும் கதையை படிக்க...
“என் பேரு மஞ்சுஷா”’ என்றாள். பெயர்தான் சற்று விசித்திரமாக இருந்ததே தவிர ஆள் சித்திரம். அழகான 3d ஓவியம். எல்லாமே அளவாக அழகாக. கடவுள் நிச்சயம் இவளைப் படைப்பதற்கு முன் ஒரு மாதிரிச்சித்திரம் வரைந்து வைத்துக்கொண்டு தான் பின்னர் படைத்திருக்க வேண்டும். உந்திச் ...
மேலும் கதையை படிக்க...
என்ன இருந்தாலும் தாம்பரம்னா தாம்பரம்தான். அந்த அதிகாலைப் பனியும் சில்லு காத்தும் ஸிட்டில கிடைக்குமா சொல்லுங்க? அதுவும் போன மாசம் முழுக்க மதுரை திருச்சின்னு ஆபீஸ் விஷயம் டூர்ல இருந்த எனக்கு இந்தக் குளிர் ரொம்பவுமே இதமா இருந்துது. நேத்து ராத்திரி ...
மேலும் கதையை படிக்க...
ஓவர் ப்ரிஜ்ஜில் ஆக்சிடெண்ட்
விலை
கூரியரில் வந்த மரணம்
நாகமணி
சாகப் பிடிக்காதவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)