புயலில் சில தனி மரங்கள்!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 6,528 
 

முன் மண்டையில் இரத்தம் பீறிட்டு நெற்றி, முகம், கன்னம் யாவும் வழிய வழிய அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை சாம்பலான் தூக்கி வந்து டாக்டர் வீட்டு வராந்தாவில் இருந்த பெஞ்சில் கிடத்திவிட்டு,

“சாமி! சாமி!” என்று உரக்கக் கூவினான். அவன் கூச்சலினால், டாக்டர் வேகமாக வெளியே வந்தார். “என்னப்பா சாம்பலான், அடி தடி விவகாராமா? என்ன ஆச்சு?” “சாமி! நீங்கதான் என் மவனைக் காப்பாத்தணும். உயிர்ப் பிச்சை தரணும்..”கண்ணீருடன் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து டாக்டரின் கால்களைப் பற்றிக் கொண்டான் சாம்பலான்.

நாட்டாமைக்காரரு காட்டுல எம் மவன் ஆடு மேய்க்கிற வேலை பார்க்கிறானுங்க சாமி. ஒரே மவனுங்க. ஆடுக காட்டுல மேஞ்சிகிட்டிருந்தப்ப, பலத்த காத்து வீசியிருக்கு. ஒரு சின்ன பாறாங்கல்லு, மலைப் பாறைலேர்ந்து உருண்டு வந்து ஒரு வெள்ளாட்டு மேல விளுந்துடுச்சு. இவன் பாறையை நகட்டி, ஆட்டைத் தப்ப வெச்சு அப்புறம் பார்த்தா, ஆட்டுக்கு ஒரு கால்ல நல்ல அடி..”

“அப்புறம்..?”

“ஆட்டுக் காலை ஏண்டா முறிச்சேன்னு நாட்டாமை புள்ளையைத் தடியால அடியோ தண்டமுன்னு அடிச்சு, மண்டையை ஒடைச்சுப்புட்டாருங்க சாமி. புது ஆடு வேணும்னாலும் விலைக்கு வாங்கிக் கொடுத்துப்புடலாம். இதோ, மூச்சுப் பேச்சு இல்லாமக் கெடக்குதே எம் புள்ள, இதோட உசிரு போயிட்டா அவங்களால வாங்கிக் கொடுக்க முடியுங்களா..?” குரல் உடைத்து கேவிக் கேவி அழுதான் அவன்.

டாக்டர் பையனைக் கவனமாகப் பரிசோதித்து விட்டு, “நல்லவேளை. உயிருக்கு ஆபத்து இல்லை. அதிர்ச்சியில் மயக்கமாகி இருக்கிறான் அவ்வளவுதான்.. சாம்பலான், நீ ஆஸ்பத்திரிக்குப் போய் நர்ஸிங் அசி°டெண்ட் ராஜாங்கத்தை நான் கூப்பிட்டதா சீக்கிரம் அழைச்சுகிட்டு வா, என்ன?” என்றார்.

சாம்பலான் கண்களைத் துடைத்துக் கொண்டு மெடிகல் ஆபீசர் குடியிருப்புக்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடினான்.

அது, ஆறு படுக்கை வசதி கொண்ட சிறிய கிராமப்புற மருத்துவமனை என்றாலும் காலரா, பெரியம்மை, மலேரியா ஒழிப்பு மற்றும் குடும்ப நலத் திட்டச் செயல்பாடு, தாய் சேய் நலம் என்று பலவகையிலும் அந்தச் சுகாதார நிலையம், கிராமப் புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வந்தது.

ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸிங் அசி°டெண்ட், டாக்டர் முன் வேகமாக வந்து நின்று, “கூப்பிட்டீங்களா ஸார்?” என்றார்.

“மிஸ்டர் ராஜாங்கம், இந்தக் கேஸை நம்ம தியேட்டர்ல போட்டு ஸூச்சருக்கு ரெடி பண்ணுங்க. க்விக்! நான் இதோ வந்துடறேன்..”

சாம்பலானின் மகன் முத்தன் ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போகப்பட்டான்.

நர்ஸிங் அசி°டெண்ட் பஞ்சில் நீரை நனைத்து, முகம், மண்டையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்து சுத்தம் செய்தார். காயம் பட்ட இடத்தைச் சுற்றியிருந்த முடியைக் கத்தரிக்கோலால் நறுக்கினார். இரண்டு அங்குல நீளத்துக்கு மண்டை கிழிந்திருந்தது, இப்போது தெளிவாகத் தெரிந்தது.

டாக்டர் வந்தார். தையல் போட்டார். இஞ்செக்ஷன் போட்டார். வார்டுக்கு அட்மிஷன் எழுதினார்.

“இதோ பாரப்பா சாம்பலான், ஒரு வாரமோ, பத்து நாளோ உன் மகன் ஆஸ்பத்திரியில் இருக்கணும், என்ன சொல்றே?”

“சாமி, அவன் பொழைச்சு எழுந்திரிக்கணும். நீங்க என்ன சொல்றீங்களோ, அதுபடியே செய்றேனுங்கோ. .. அப்புறம் ஒரு விஷயமுங்க…”

“என்ன சாம்பலான், சொல்லு!”

“ஒரு சர்ட்டிபேட் வேணுமுங்க..”

“சர்ட்டிபிகேட்டா, எதுக்கு?”

“ஒரு பாவமும் அறியாத எம் மவனை அந்த நாட்டாமை அடிச்சுப் போட்டாரு. அதுக்குப் போலீஸு கேஸ் கொடுக்கப் போறனுங்க. நா இதைச் சொம்மா உடப் போறதில்லீங்க சாமி!”

டாக்டர் யோசித்தார். “சரிப்பா. தர்றேன்.”

மறுநாள். காலை மணி பத்து இருக்கும். வரிசையில் நின்று வந்த புறநோயாளிகளைப் பரிசோதித்து, சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார் டாக்டர். அச்சமயம், “டாக்டர் இருக்காரா?” என்று வாசலில் அதட்டலான குரல் ஒன்று ஒலித்தது. தொடர்ந்து நோயாளிகளையும் அங்கிருந்த ஏவலரையும் தள்ளிக்கொண்டு இருவர் உள்ளே நுழைந்தனர்.

டாக்டர் எதிரில் இருந்த ஆசனத்தில் அமர்த்தலாக அமர்ந்தார் ஒருவர். இன்னொருவர் அமர்ந்தவரின் அருகே நின்றார். அமர்ந்திருந்தவர் வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டை உடுத்திருந்தார். தோளில் துண்டு இருந்தது. கை விரல்கள் முழுக்க டாலடிக்கும் மோதிரங்கள். கனமான உடம்பு. முகத்தில் மமதை வேரோடிய பார்வை. பக்கத்தில் நின்றவர் ஒல்லியாக இருந்தார் என்பதைத் தவிர, மற்ற அம்சங்களில் முன்னவரை அப்படியே ஒத்திருந்தார்.

அமர்ந்திருந்தவர் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். “நா இந்த ஊர்லியே பெரிய பணக்காரன். நல்லசிவ நாட்டாமைன்னு பேரு. சீலக்காம்பட்டி எம்மெல்லே என் ஒண்ணு விட்ட தம்பி. நம்ம குரங்குபாளயம் பிரசெண்டு யாருன்னு நினைச்சீங்க? என் அக்கா மவன் தான்!” டாக்டரின் முகம் பயபக்தியைக் காட்டியது. பணிவுடன் கேட்டார். “அப்டிங்களா? ரொம்ப சந்தோஷம். ஐயா என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சால்..?”

நல்லசிவ உடையார் மீசையைத் தடவி விட்டுக் கொண்டு பெருமிதத்துடன் பக்கத்தில் நின்றவரைப் பார்த்துச் சொன்னார்: “நான் அப்பமே சொல்லலை… டாக்டர் நல்ல மனுஷர் தான்னு!”

பக்கத்தில் நின்றவர் சொன்னார்: “நம்ம ஊர் அன்னாடங்காச்சிப் பசங்களுக்குத் திமிரு சாஸ்தியானா டாக்டரு சார் அதுக்கு என்ன பண்ணுவாருங்க?”

“ஒண்ணும் புரியலியே?” என்றார் டாக்டர்.

“வேற ஒண்ணுமில்லீங்க டாக்டர்! இந்த ஊருல சாம்பலான்னு ஒரு போடுகாலுப் பய இருக்கான். அவன் மவன் இங்கே பெட்டுல இருக்கானாமே! ஆசையா வளர்த்த வெள்ளாட்டுக் குட்டி காலை ஒடிச்சிட்டானேன்னு பிரம்பால லேசா ரெண்டு அடி போட்டேன். அதுக்காக அந்தச் சாம்பலான் எம்மேல போலீஸ் கேஸ் கொடுக்கப் போறதா ஊரு பூராச் சொல்லிக்கிட்டிருக்கானாம். ஒங்ககிட்டே டாக்டர் சர்ட்டிபேட் வாங்கப் போறதாவும் துப்பு கெடைச்சுது. நீங்க சாதாரணமா ஒரு சர்ட்டிபேட்டுக்கு எவ்வளவு ரூபா வாங்குவீங்க.. நூறு ரூபா இருக்குமா? அந்தச் சாம்பலான் பத்துப் பைசா கூடத் தர மாட்டான். நான் ஒங்களுக்கு ஐநூரு ரூபா தர்றேன். அவனுக்கு நீங்க சர்ட்டிபேட் தரக்கூடாது. அதோட, அவன் மவனையும் இந்த ஆஸ்பத்திரிலேர்ந்து துரத்திப்புடணும். சரிதானா..?”

“டாக்டர் ஐயா நல்லவருங்க. ரூபாவுக்காக இல்லாட்டாலும் ஊர்லியே பெரிய மனுசர் நீங்க. உங்க தயவு வேணும்கிறதுக்காக அவர் நிச்சயமாச் செய்வார்..”

“எழுந்திருங்க!” என்றார் டாக்டர்.

திடுக்கிட்டு எழுந்த நாட்டாமை, “என்ன டாக்டர், கரப்பானா?” என்றபடி, கீழே சுற்றுமுற்றும் பார்த்தார்.

“கரப்பான் பூச்சிக்காக உங்களை எழுந்திருக்கச் சொல்லலை. இன்னமும் நீங்க இங்கே இருந்தா நான் மரியாதைக் குறைவா நடந்து கொள்ள நேர்ந்துடும். முதல்லே இடத்தைக் காலி பண்ணுங்க!”

“எங்களைப் பார்த்தா எடத்தைக் காலி பண்ணுன்னு சொல்றீங்க? நாங்க யாரு, எங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும்னு புரியாமப் பேசறீங்க…” அழுத்தமான குரலில் எச்சரித்தார் நாட்டாமை.

“நான் ஒரு அரசாங்க ஊழியன். உங்க மிரட்டலுக்குப் பணிஞ்சு, நீங்க சொல்றதுக்கு ஆமாஞ்சாமி போடற ஆள் நானில்லை. சட்டப்படி நான் நடக்கிறேன். நீங்க போகலாம்!”

“டாக்டர், நீங்க… நீ மலையோட மோதுறே! விளைவுகளை சீக்கிரம் சந்திப்பே!”

“எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை!” என்றார் டாக்டர்.

இருவரும் கருவிக் கொண்டே வெளியேறினார்கள்.

சாம்பலான் டாக்டர் கொடுத்த சான்றிதழோடு போலீஸில் புகார் கொடுத்தான். டாக்டரும் அரசாங்க மருத்துவமனை முறைப்படி ஒரு ரிப்போர்ட் அனுப்பி வைத்தார். கோர்ட்டில் கேஸ் நடந்தது. பெரிய வக்கீலாக வைத்து நாட்டாமை கேஸை உடைத்தெறிந்தார்.

சாம்பலான் மகன் வேறு எவனுடனோ சண்டையிட்டு மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தினத்தில் உடையார் ஊரிலேயே இலையென்றும் நிறைய பொய்ச் சாட்சிகளோடு திறமையாக வாதாடியதில் நீதி, கறுப்பு முக்காடு போட்டு ஒளிந்து கொண்டது.

ஜீப் ஒன்று ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் வந்து நின்றது.

அதிலிருந்து மாவட்ட சுகாதார அதிகாரி இறங்கினார்.

டாக்டர் பரபரப்புடன் அவரை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துப் போனார். ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்கள், பார்மசிஸ்ட், நர்ஸிங் அசிஸ்டெண்ட், மெட்டர்னிடி அசிஸ்டெண்ட், வாட்டர்மேன் மற்றும் அனைவரும் ஓடிவந்து அதிகாரிக்குப் பணிவுடன் வணக்கம் தெரிவித்தார்கள். மாவட்டத்தில் உள்ள நாற்பது ஐம்பது கிராமப் புற மருத்துவ மனைகளுக்கும் அவர்தான் உயர் அதிகாரி.

டாக்டரின் அறையில் அமர்ந்ததும் அதிகாரி திடுதிப்பென்று ஆரம்பித்தார்.

“டாக்டர், உங்க மேல் ஏகப்பட்ட புகார்கள் வந்திருக்கு. தினமும் வந்துகிட்டும் இருக்கு. ஏன் இப்படி? ஐயாம் நாட் ஸாட்டிஸ்ஃபைட் வித் யு டாக்டர்!”

“என்ன, என் மேல் புகார்களா? என்ன சார் அபாண்டமா இருக்கு…” டாக்டர் ஒன்றும் புரியாமல் குமுறினார்.

“அபாண்டம் ஒண்ணுமில்லை டாக்டர். வந்திருப்பவை எல்லாம் மொட்டைப் பெட்டிஷன்களா இருந்தால் அதை கேர் பண்ண மாட்டேன். எல்லாம் கையெழுத்துப் போட்டே ஊர்ப் பிரசிடெண்ட், வில்லேஜ் முனிசீப், பஞ்சாயத்து யூனியன் சேர்மன், ஊர்ப் பெரிய மனுஷர்கள்னு ஒர்த்தர் விடாம உங்க மேல் ஏன் புகார் செய்யணும்? ஓ.பி.க்கு வர்ற நோயாளிகள்ட்ட வீட்டுக்கு வந்து பிரைவேட்டாப் பார்த்தாத்தான் நோய் குணம் ஆகும்னு சொல்றீங்களாம். ஆஸ்பத்திரி மெடிசின்களை வீட்டுக்குக் கொண்டு போய் வெச்சு பிரைவேட் ப்ராக்டீஸ் செய்றீங்களாம். அவசரம் ஆபத்துன்னு வர்ற பேஷண்டுக கிட்டே பணம் கொடுத்தாத்தான் ட்ரீட்மெண்டையே தொடங்கறீங்களாம். பணம் வாங்கிக்கிட்டு பொய் சர்ட்டிபிகேட் தர்றீங்களாம். இன்னும்.. சொல்லவே வாய் கூசுது. ஆஸ்பத்திரிக்கு வர்ற லேடி பேஷண்ட்ஸ் கிட்டே தவறா நடக்கறீங்களாம். மெடிகல் ப்ரொஃபஷனுக்கே அவமானம்.. சே!”

“ஐயோ கடவுளே! எல்லாம் வடிகட்டின பொய் சார். எல்லாம் அபாண்டம் சார்! நடந்ததைச் சொல்றேன் கேளுங்க. அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க சார்..”

“என்ன சொல்லப் போறீங்க?”

அதிகாரியிடம் டாக்டர் சாம்பலான் மகன் மண்டை உடைக்கப் பட்டு சிகிச்சைக்கு வந்தது, அவனுக்குச் சிகிச்சை தரக்கூடாது என்று நாட்டாமை வந்து டாக்டரை மிரட்டியது, இதனால் பழி வாங்க ஊர்ப் பெரிய மனிதரான அவர் தம் செல்வாக்கால் பலரைப் பெட்டிஷன் போட வைத்திருப்பதை எல்லாம் எடுத்துக் கூறினார்.

“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையா? மண்டையில் அடிபட்ட பையனை நான் விசாரிக்கலாமா?” என்றார் அதிகாரி.

“ஓ… தாராளமா விசாரிங்க சார். அவன் அப்பா சாம்பலானையும் விசாரிச்சுக்குங்க. இப்பவே அவங்களை அழைச்சுவர ஆள் அனுப்பறேன்..”

டாக்டர் ஒரு ஆளை அனுப்பி சாம்பலானையும் அவன் மகனையும் அழைத்து வருமாறு சொன்னார். “இதோ பாரப்பா, அதிகாரி என்கொயரிக்கு வந்திருக்கிற விஷயமெல்லாம் சொல்லாம அழைச்சுகிட்டு வா, என்ன?”

“சரி சார்!”

போன நபர் அரை மணியில் திரும்பி வந்தான். அவன் முகம் பேயறை பட்டவன் போல் காட்சியளித்தது. திக்கித் தடுமாறி அவன் கூறிய செய்தி…

சாம்பலான் குடிசை நேற்றிரவு தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு சார்.சாம்பலானும் அவன் மகன் முத்தனும் வெளியே வர முடியாம உள்ளேயே தீயீல் சிக்கி அக்கினிக்கு இரையாகிட்டாங்க சார்…”

“என்னது?” டாக்டர் சிலையாகிப் போனார். அவன் கூறிய செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை. பிரமை பிடித்தவர் போல, “நீ சொல்வது நிஜம்தானா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

மாவட்ட அதிகாரி எழுந்தார். மெல்ல யோசனையுடன் வெளியேறி ஜீப் அருகே சென்றவர், திரும்பி டாக்டரைப் பார்த்துக் கூறினார். “டாக்டர், உங்க பேச்சில் எனக்கு நம்பிக்கை போயிடுச்சு… செத்துப் போனவங்களை சாட்சியாகக் கூப்பிட்டு வர்றேன்னு நாடகம் ஆடுறீங்க. கிராமத்தில் இருக்கும் ஆஸ்பத்ரிக்கு டாக்டராக இருக்கும் நீங்க கிராமத்து மனிதர்களை அரவணைச்சு அனுசரணையா நடந்துக்க மறுக்கறீங்க. பப்ளிக் ரிலேஷன்ஷிப் இல்லாம நடக்கறீங்க. உங்களுக்கு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பர் கொடுக்கணும்னு மாநில அதிகாரிக்கு ரெகமண்ட் செய்யப் போறேன்.”

கண்ணில் நீர் துளிர்க்க டாக்டர் சிலை போல நின்றார்.

அதிகாரி ஏறிக் கொண்டதும் ஜீப் புழுதியைக் கிளப்பிப் பறந்தது.

டாக்டரின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி வழிந்தது.

தனக்குப் பனிஷ்மெண்ட் மாறுதல் வரவிருப்பது குறித்துக் கவலையினால் பெருக்கிய கண்ணீர் அல்ல அது…

நியாயம் கேட்ட அப்பாவியான சாம்பலானும் அவன் மகன் முத்தனும் உயிரோடு குடிசைக்குள் அடைக்கப்பட்டு, எரித்து சாம்பலாக்கப்பட்ட கொடுமையை நினைத்து வடித்த இரத்தக் கண்ணீர்!

(நெல்லை தினமலர் – ஞாயிறு மலர்)

Print Friendly, PDF & Email

2 thoughts on “புயலில் சில தனி மரங்கள்!

  1. தலைப்பே கதையைப் படிக்கத் தூண்டியது. சுவாரசியமாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர். தீயவர்கள் எத்தனை காலம்தான் கெடுதல் அடையாமல் இருக்க முடியும்? அவர்களுக்குப் பயந்து நல்லவர்கள் மாறாவிட்டால் சரி.

  2. நாட்டாமை மின் அட்டூழியங்களை நாம் படித்திருக்கிறோம் தான் ஆனால் ஆசிரியரின் தேர்ந்த நடையை சொல்ல வேண்டும். காட்சிப்படுத்துதல் அருமை. தி.தா.நாராயணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *