புத்தாண்டு சபதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 4,428 
 

ஆயிற்று… புது வருடம் 2019 சீக்கிரம் பிறந்துவிடும்.

ஒவ்வொரு வருட துவக்கத்தையும் சில முக்கிய சபதங்களுடன் நான் ஆரம்பிப்பேன். அதில் மிகவும் முக்கியமான சபதம் சிகரெட் புகைப்பதை விட்டுவிடுவது. .

சிகரெட் புகைப்பதை முற்றிலுமாக விட்டுவிட வேண்டும் என்பதுதான் பல வருடங்களாக என்னுடைய புது வருட வைராக்கியம். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் விஷயத்தில் மட்டும் என்னுடைய வைராக்கியம் மிகப் பரிதாபமாக தோல்வியடைந்துவிடும். ஏனோ அதைமட்டும் என்னால் விடவே முடியவில்லை.

அதனால் வரும் 2019ம் ஆண்டு முதல் சபதம் என்று ஒன்றை எடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்… இல்லையெனில் சபதமே எடுக்காமல் இருந்துவிட வேண்டும். வீரமாக சபதம் எடுத்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் இருப்பது கோழைத்தனம் என்று எண்ணினேன்.

அதனால் 2019ம் ஆண்டிற்காக எடுக்கப்போகும் சபதத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற உறுதி எனக்குள் உண்டானது.

பதினெட்டு வயதில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் படிக்கும்போது சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். ஒரு ஸ்டைலுக்காக கல்லூரி நண்பர்களுடன் ஆரம்பித்த பழக்கம், என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுவிட்டது. வீட்டுக்குத் தெரியாமல் அடிக்கடி திருட்டு தம் அடிக்க ஆரம்பித்தேன்.

ஒருமுறை திம்மராஜபுரம் அக்ரஹாரத் தெருவிலிருந்து சற்று விலகியிருந்த சம்சுதீன் கடையில் நின்றுகொண்டு ரகசியமாக தம் அடித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக சைக்கிளில் சென்ற அக்ரஹாரத்து ஆசாமி ஒருவர் என் அப்பாவிடம் அதைப் போட்டுக் கொடுத்துவிட்டார்.

அப்பா என்னை உட்கார வைத்து சிகரெட் புகைப்பது உடலுக்கு எவ்வளவு தீங்கானது என்பதை என்னிடம் விலாவாரியாக பொறுமையாக விளக்கினார்.

ஆனாலும் நான் அதை விடவில்லை.

சிகரெட் புகைத்த பிறகு, வாசனைப் பாக்கு வாங்கி வாயில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வருவேன். ‘சுண்டைக்காய் கால் பணம், அதைச் சுமக்க முக்கால் பணம்’ என்பதைப்போல் சிகரெட் வாசனையை அப்பாவிடமிருந்து மறைக்கத்தான் நிறையச் செலவழிப்பேன். ஆனால் என் அப்பா எமகாதகர். கண்டுபிடித்துவிடுவார். கோபமாக என்னை முறைத்துப் பார்ப்பார்.

கல்லூரி முடிந்து அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மெண்ட்டில் ஒரு நல்ல வேலை கிடைத்து வந்ததும் புகைப்பதை மிகச் சுதந்திரமாகத் தொடர்ந்தேன்.

அப்போது என் அறை நண்பர்களும் புகைப்பவர்களாக அமைந்து விட்டார்கள். எனக்கு பிரேக்பாஸ்ட் முடிந்து காபி குடித்தவுடன் அன்றைய முதல் சிகரெட் பிடித்தேயாக வேண்டிய அர்ஜ் ஏற்படும். அருணாச்சலம் என்ற நண்பனுக்கு காலையில் காபி குடித்தவுடன் டாய்லெட்டில் நுழைந்து புகைத்தால்தான் ஆய் வரும். அவனுக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்துக் கொள்வேன்.

பிறகு பெங்களூரில் வேலை கிடைத்து வந்தேன். பெங்களூரின் குளிருக்கு புகைத்தல் எனக்கு இதமாக இருந்தது.

முப்பது வயதில் எனக்கு சரஸ்வதியுடன் திருமணமாயிற்று.

நான் சிகரெட் புகைக்கிற நாற்றம் சரஸ்வதிக்கு குமட்டிக்கொண்டு வரும். எனக்கும் அவளுக்கும் இதனாலேயே அடிக்கடி சண்டை வரும். அவள் என்னை அடிக்கடி கண்டித்தபோதும், கெஞ்சியபோதும் நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை.

தினமும் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்து போர்டிகோவில் என் காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழையும்போது, சரஸ்வதி என் அருகில் வந்து மூக்கை உறிஞ்சி வாசனை பிடிப்பாள். உடனே முகம் சுளித்து கேள்விமேல் கேள்வி கேட்டு என்னிடம் சண்டை போடுவாள். அப்போது என் ஒரே செல்ல மகன் ராகுல் என்னை விரோதமாகப் பார்ப்பான். இதுவே தினசரி வாடிக்கையாகிப் போனது.

காலையில் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டதும் காபி குடித்துவிட்டு ஆபீஸுக்கு கிளம்பி காரில் வெளியே வந்ததும், தெருவின் திருப்பத்தில் காரை நிறுத்தி நிதானமாக அன்றைய முதல் சிகரெட்டை பற்றவைத்து அதன் புகையை இழுத்து வெளியே விடும்போது அதன் சுகமே அலாதியானது. இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை என்று சும்மாவா விளம்பரம் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். அதன்பிறகு ஆபீஸில் நண்பர்களுடன் ஐந்து சிகரெட், திரும்பி காரில் வரும்போது ஒன்று என ஒரு நாளைக்கு ஏழு அல்லது எட்டு சிகரெட்டாகி விடும்.

சரஸ்வதி ஊரில் இல்லாதபோது வீட்டிலும் சிகரெட் புகைப்பேன்.

நீண்டதூர ரயில் பயணங்களில் டாய்லெட்டுக்குள் நுழைந்துகொண்டு, அதன் மூத்திர நாற்றத்தையும் சகித்துக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்து அதன் புகையை டாய்லெட் ஜன்னல் வழியாக வெளியே விடுவேன்.

ஒருமுறை சரஸ்வதி ஊரில் இல்லாத இரவில் என்னிடம் இருந்த எல்லா சிகரெட்டும் தீர்ந்துவிட்டன. மணி பன்னிரண்டு. அனைத்து கடைகளையும் மூடியிருப்பார்கள். எனக்கோ கண்டிப்பாக புகைத்தேயாக வேண்டும். உடம்பும், மனசும் பரபரத்தன. சரி, ஆபத்துக்கு பாவமில்லை என்று நினைத்துக்கொண்டு, ஆஷ்ட்ரேயில் ஏற்கனவே புகைத்து அணைத்த சிகரெட்களை பொறுக்கி எடுத்து ஒரு நான்கு தேற்றினேன். அவைகளை ஒவ்வொன்றாக பற்ற வைத்து இழுத்துப் புகைத்தேன். அவைகளைப் புகைத்தபோது ஒரு மக்கலான தீய்ந்த வாடை அடித்தது. வாய் நாறியது. அந்த வாடை எனக்குப் பிடிக்கவில்லை.

எனவே அடுத்தமுறை இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டபோது, என் காரை எடுத்துக்கொண்டு ஐந்து நட்சத்திர தாஜ் ரெசிடென்சி ஹோட்டலுக்கு சென்று ஒரு பாக்கெட் வாங்கினேன். மிகவும் விலை அதிகம். என்ன செய்ய என்னுடைய urge ஐ தீர்த்துக்கொள்ள வேண்டுமே…!

சற்று மன முதிர்ச்சி பெற்ற வயதில் எனக்கென அலுவலகத்தில் இரண்டு மால்பரோ சிகரெட் பாக்கெட்கள், ஒரு லைட்டர்; வீட்டில் ஒரு பாக்கெட் அத்துடன் ஒரு லைட்டர் (மனைவிக்குத் தெரியாமல்) வைத்துக்கொண்டு வீட்டின் டெரசில் புகை பிடிப்பேன். அதன்பிறகு எப்போதும் என்னிடம் ஸ்டாக் இருக்கும். மால்பரோ லைட்ஸ் சிகரெட் பாக்கெட்டில்தான் ‘Less tar and nicotine’ என்று போட்டிருப்பார்கள். அதனால் மற்றவைகளை விட அது நல்லது என்று எனக்கு ஒரு நம்பிக்கை.

மிகச் சமீப காலங்களாக பொது இடங்களில் புகைப்பதை முற்றிலுமாக தவிர்க்கச் சொல்லி சட்டமே இயற்றி விட்டார்கள். அதனால் சிகரெட் பிடிக்கும் மசக்கையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். தவிர புகைப்பது உடலுக்கு எவ்வளவு தூரம் தீங்கானது என்பதை அடிக்கடி பத்திரிக்கைகளில் பெரிய பெரிய கட்டுரைகள் எழுதி என்னைப் பயமுறுத்துகிறார்கள். இந்தப் பயத்திலிருந்து நிரந்தரமாக மீண்டு விடவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

எனவே இந்தப் புத்தாண்டிலிருந்து கண்டிப்பாக விட்டு விடுவது என்று முடிவு செய்து விட்டேன்; ஆமாம்… இந்த மாதிரி சிகரெட் பற்றிய பயமுறுத்தும் கட்டுரைகளைப் படிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விடுவது என்று.

எனவே இந்தப் புத்தாண்டு முதல், சபதத்தை கண்டிப்பாக மீறவே மாட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *