புதிய பாலம்

 

சமூகத் தொண்டன் பொன்னம்பலம் நாயாக அலைந்தான். அலையாவிட்டால் முடியுமா? எடுத்துக் கொண்டிருப்பது எத்தனை பெரிய காரியம்? எவ்வளவு பெரிய பொறுப்பு? தொண்டு செய்வதும், பொதுக் காரியங்களுக்காக அலைவதும் தான் அவனால் செய்ய முடிந்த சுலபமான காரியங்கள். இதை இப்படிச் சொல்வதைக் காட்டிலும். பொதுத் தொண்டுகளுக்காக அலையாமலும் பாடுபடாமலும் இருக்க முடியாத ஆட்களில் அவனும் ஒருவன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவன் சர்வ சாதாரணமாக ஏழை மனிதன்தான். பணத்தை வாரி வழங்க அவனால் முடியாது. ஆனால் உழைப்பை வழங்க முடியும். அந்த உழைப்பு என்னும் குறையாத நிதியைச் சமூகப் பணிக்கும். பொதுக் காரியங்களுக்கும் செலவழித்துக் கொண்டிருந்தான் பொன்னம்பலம்.

வடக்குக் கரையில் உள்ள ஊரையும் தெற்குக் கரையில் உள்ள ஊரையும் ஓர் ஆறு குறுக்கே பாய்ந்து பிரித்துக் கொண்டிருந்தது. சிறிய ஆறுதான். வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மணல்தான் ஓடும். எஞ்சிய நான்கு மாதங்களிலோ இருகரையும் மீறிக் கடுமையாகத் தண்ணீர் பாயும். இந்த ஆற்றுக்குச் சரியான பாலம் இல்லாமல் அக்கரை ஊர்க்காரர்களும். இக்கரை ஊர்க்காரர்களும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். எவனோ சோழ அரசன் காலத்தில் கட்டின பழைய கல்பாலம் ஒன்று ஊரிறீருந்து வெகு தூரத்திக்கு விலகிப் பத்தாவது மைலிலோ. பதினைந்தாவது மைலிலோ இருந்தது.

கரையோரமாகவே அந்தப் பாலம் வரை போய்ச்சுற்றி வளைத்து அக்கரை அடையலாமே என்றால். சுற்று வழி காரணமாக அநாவசியமான காலதாமதம் ஆயிற்று. அந்த இரண்டு ஊர்களுக்கும் வசதியாக ஊரை ஒட்டி ஒரு பாலம் இருந்தால் எவ்வளவோ நன்மையாக இருக்குமென்று எல்லோரும் விரும்பினார்கள். சமூகத் தொண்டன் பொன்னம்பலம் இந்த விருப்பத்தை வளர்த்தான்.

ஐந்தாண்டுத் திட்டம். சமூக வளர்ச்சித் திட்டம். கிராம நலத் திட்டம் என்று என்னென்னவோ திட்டங்கள் போட்டிருக்கிறார்களே. அதற்கெல்லாம் இரண்டு ஊர் மக்களிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பம் அனுப்பினான் பொன்னம்பலம். பாலத்துக்கு அஸ்திவாரக்கல் போடுவதற்கு ஒரு மந்திரி. பாலம் முடிந்தபின் அதைத் திறந்து வைப்பதற்கு வேறொரு மந்திரி என்று வருவதைச் செய்தித்தாள்களில் நிறைய படித்திருக்கிறான் பொன்னம்பலம். தங்கள் ஊர்ப் பாலத்தையும் ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் எடுத்துக்கொண்டு அரசாங்கத்தார் முடித்து வைப்பார்கள் என்று பொன்னம்பலம் கருதினான்.

ஆனால் அரசாங்கத்தாருக்குக் குருவிப்பட்டிக்குப் பாலம்போட முயல்வதைவிடப் பெரிய வேலைகள் எல்லாம் இருந்தன.

குருவிப்பட்டிக்குப் பாலம் போடாவிட்டால் இப்போது ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று பேசாமல் இருந்து விட்டார்கள். எத்தனையோ உள்நாட்டு. வெளிநாட்டுப் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டிய தீவிரமான அரசியல் சூழ்நிலையில். குருவிப்பட்டியின் பாலத்தைப் பற்றி நினைவு வைத்துக் கொள்வதே கேவலமல்லவா? எனவே குருவிப்பட்டியிலும் அதன் எதிர்க்கரையிலும் உள்ள மக்களைத் தவிரக் “குருவிப் பட்டிப்பாலம்” பற்றி வேறெவரும் நினைவு வைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

அதெற்கென்ன செய்வது? அரசாங்கத்திறீருப்பவர்களுக்குக் கண்டதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு திரிய முடியுமா? தாங்கள் அரசாங்க்தில் இருப்பதே சில சமயங்களில் மறந்துவிடுகிறதே அவர்களுக்கு. “ஆகவே குருவிப்பட்டியும் அதன் பாலமும் எக்கேடு கெட்டுப்போனால் என்ன?” என்று விட்டுவிட்டார்கள்.

ஆனால் குருவிப்பட்டி வாசிகள் அப்படி விடுவதற்குத் தயாராயில்லை.அந்தப் பட்டிக்காட்டு மனிதர்களிடம் உழைப்பு இருந்தது. தன்மானம் இருந்தது. தங்களையும். தங்கள் ஊர்ப் பாலத்தையும் பற்றித் தங்களிடம் ஓட்டு வாங்கிக்கொண்டு பதவிக்குப் போனவர்களே மறந்ததை. அவர்கள் மன்னித்துத்தான் தொலைக்க வேண்டியிருந்தது. மன்னிப்பு என்கிற பரஸ்பர பலவீனம் இல்லாவிட்டால் இந்த உலகம்தான் என்றைக்கோ உருப்பட்டுத் தேறியிருக்குமே! எத்தனையோ அயோக்கியர்களையெல்லாம் சுலபமாகப் புண்ணிய பாவங்களின் பேர் சொல்றீ மன்னித்துவிட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்க் கொண்டிருக்கிற பெருமை இந்தப் பாரத நாட்டிற்குப் புதிதா என்ன?

குருவிப்பட்டிப் பெருமக்களும். அவர்களின் அன்புக்குரிய சமூகத் தொண்டனாகிய பொன்னம்பலமும் இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். தங்கள் ஊரைப் பற்றி அக்கறையும்.

நினைவும் இல்லாத அரசாங்கத்தை நம்பிப் பயன் இல்லை. ஒருவேளை அரசாங்கத்துக்குத தங்களுடைய ஆட்சியின் கீழே குருவிப்பட்டி என்று ஒரு கிராமம் இருப்பதே மறந்து போயிருக்கலாம். எனவே தங்கள் ஊர்ப்பாலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்வது என்ற திடமான முடிவுக்கு வந்தார்கள்.

அந்த முடிவுக்கு வருமாறு அவர்களுக்கு ஊக்கமும். உற்சாகமும் அளித்தவன் பொன்னம்பலம்தான்!

ஊர்ப் பக்கத்திறீருந்த கருங்கல் குன்றிலிருந்து பாலத்துக்கான கற்கள் உடைக்கப்பட்டன. ஊர்ப்பொதுவில் ஒரு பெரிய சுண்ணாம்புக் காளவாய் போட்டுக் காரை நீற்றினார்கள். சில அவசியமான செலவுகளுக்காக இரண்டு ஊர்ப் பொது மக்களிடமிருந்தும் பொன்னம்பலம் ஒரு நிதி வசூல் செய்திருந்தான். அதற்காகத்தான் அவன் நாயாக அலைந்து பாடுபட்டான் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.

இரண்டு கிராமத்து மக்களும் தங்கள் வேலை நேரம் போக எஞ்சிய நேரமெல்லாம் பாலத்துக்காக உழைத்தனர். ஆண். பெண். இளைஞர். முதியோர் வேறுபாடின்றி எல்லோரும் பாலத்துக்காகப் பாடுபட்டனர்.

ஏழெட்டு மாதங்களில் பாலம் முடிந்தது. மிகவும் நல்லவரான குருவிப்பட்டிப் பஞ்சாயத்துத்தலைவரைக் கொண்டு ஊரார் உழைப்பால் உருவான அந்தப் பாலத்தைத் திறந்து வைக்கச் செய்தான் தொண்டன் பொன்னம்பலம். எல்லோரும் பொன்னம்பலத்தின் உழைப்பைப் பாராட்டினார்கள்; கொண்டாடினார்கள்.

விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட இரண்டு ஊர் மக்களும் அந்தப் பாலம் உண்டானதால் ஏற்பட்ட நன்மையை அநுபவித்தார்கள். ஏர் பூட்டிய உழவு மாடுகள், கட்டை வண்டிகள், வைக்கோல் வண்டிகள் எல்லாம் பாலத்தின் வழியாக வந்து போய்க்கொண்டிருந்தன. இரு ஊர்களின் உறவும் பழக்கமும் பாலத்தால் நெருங்கிற்று. இரண்டு ஊர் மக்களும்3விவசாயிகள் ஆதலால். பாலம் வண்டிகளின் போக்கு வரவுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இன்றியமையாததாகவும் இருந்தது.

குருவிப்பட்டிக்கு அப்பாலுள்ள பிரதேசம் வேறு மாகாணத்தைச் சேர்ந்தது. அங்கே மதுவிலக்கு இல்லை. குதிரைப் பந்தயம் உண்டு. எனவே குடிப்பதற்கும். குதிரைப் பந்தயத்துக்கும் பத்து மைல் சுற்றிச் சோழ அரசன் காலத்து கல்பாலம் வழியாகப் போய்க்கொண்டிருந்த பணக்காரர்கள் அது சுற்று வழி என்று கருதி இப்போதெல்லாம் குருவிப்பட்டிப் பாலம் வழியாகப் போகத்தொடங்கினார்கள். சமூகத் தொண்டன் பொன்னம்பலமும் ஊர்ப்பொதுமக்களும் கட்டின பாலம்.

ஏதோ சுய தேவைக்காகச் சுருங்கிய அளவில் கட்டப்பட்டிருந்தது. முக்கியமாக கிராம மக்களின் தேவையை உணர்ந்து உழவு மாடுகளும். கட்டைவண்டிகளும். வைக்கோல் பார வண்டிகளும். போவதற்காகக் கட்டப்பட்ட அந்தப் பாலத்தில் இப்போது கார்களும். லாரிகளும் போகத் தொடங்கிவிட்டதால் கிராம மக்கள் இடையூறு அநுபவித்தனர். கட்டை வண்டிகளும், மாடுகளும், ஊடே நுழைய நேரமே இன்றி அந்தப் பக்கமிருந்தும். இந்தப் பக்கமிருந்தும். லாரிகளும் கார்களும் மொய்த்தன.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்றுவந்தவன் கொண்டு போனான் என்பது போல் ஊர்க்காரர்கள் போட்ட பாலம், ஊர்க்காரர்களுக்குப் பயன்படாமல் கார்க்காரர்களுக்குப் பயன்படத் தொடங்கிவிட்டது. ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போய்விட்டுத் திரும்பிய பட்டினத்துப் பணக்காரர் ஒருவர் நிறையக் குடித்துவிட்டுப் போதையோடு மிகப் பெரிய “பியூக்” காரில் வந்தார். கார் குருவிப்பட்டிப் பாலத்தில் வரும்போது ஒரு கட்டை வண்டியில் மோதி வண்டிக்காரன் கீழே கார் சக்கரத்தினடியில் விழுந்து நசுங்கி இறந்துபோனான். இந்தச் சம்பவம் குருவிப்பட்டிக்காரர்களின் கண்களைத் திறந்தது. மறுநாள் முதல் அந்தப் பாலத்தில் கார்களையும். லாரிகளையும் விடுவதில்லை என ஊர்க்காரர்கள் எல்லோருமும் சேர்ந்து மறியல் செய்தார்கள்.

குதிரைப் பந்தயத்தையும். குடியையும் நினைத்துக்கொண்டு ஆவலோடு குருவிப்பட்டிப் பாலத்தை நோக்கி வந்த கார்கள் மறியலின் காரணமாக ஏமாற்றத்தோடு திரும்பிப் போயின.

பாலத்துக்குள் நுழைகிற இடத்தில் சமூகத் தொண்டன் பொன்னம்பலம். இன்னும் நாலைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு நுழைய இடமின்றிக் கைகோத்து நின்றான். ஒரு பெரிய கார்க்காரர் அவர்களுடைய மறியலைப் பொருட்படுத்தாமல் இறங்கி கூப்பாடு போட்டார்.

“இது உன் அப்பன் வீட்டுப் பாலமில்லை. நீ யார் மறியல் செய்வதற்கு? அத்தனை “மினிஸ்டரையும்” எனக்குத் தெரியும். ஒரு வரி எழுதிப் போட்டால் உங்களையெல்லாம் உள்ள தள்ளிவிடுவார்கள்.”

பொன்னம்பலம் அவருடைய பேச்சைக் கேட்டுக் கோபம் அடையவில்லை. அமைதியாகவே அவருக்குப் பதில் சொன்னான். “ஐயா! இது ஊர் மக்களின் உழைப்பால் உருவான பாலம். கட்டைவண்டிகளும். உழவு மாடுகளும் போவதற்காகத்தான் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் இந்தப் பாலத்தை கட்டினோம். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்காக அரசாங்கம் கால் பைசா எங்களுக்குத்தரவில்லை. இப்போதோ எந்நேரமும் கார்களும். லாரிகளும் இந்தப் பாலத்தை ஆக்கிரமதித்துக் கொள்கின்றன. இரண்டு கிராமத்து வண்டிகளும் போக முடிவதில்லை. நாங்கள் உழைத்ததன் பயன் வீணாவதை எங்களால் மன்னிக்க முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இந்தப் பாலத்தில் ஒரு கட்டை வண்டிக்காரன் காரில் நசுங்கி இறந்து போனான். இனியும் குடிகாரர்களுக்கும் குதிரைப் பந்தய வெறியர்களுக்கும். இந்தப் புனிதமான பாலம்
பயன்படுவதை நாங்கள் அனுமதிக்கத் தயாராயில்லை.”

“நான்சென்ஸ்! நான் யார் தெரியுமா? என்னிடம் இவ்வளவு திமிராகப்பேசுகிறாயே? நான் சுட்டு விரலை ஆட்டினால் இந்த நாட்டை ஆளும் அத்தனை மந்திரிகளும் ஓடி வந்து கைகட்டி நிற்பார்கள். தெரியுமா உனக்கு?”

“அது எனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை ஐயா! இப்போது நீங்கள் இந்தப் பாலத்தின் வழியாகப் போக முடியாது. வணக்கம். திரும்பிச் செல்லலாம். நீங்கள்” என்று பேச்சை முடித்தான் பொன்னம்பலம்.

அவனை முறைத்துவிட்டுக் காரில் போய் ஏறிக்கொண்டு திரும்பினார் அவர்.

மறியல் தொடர்ந்து நடந்தது. கட்டை வண்டிகளையும் உழவு மாடுகளையும் தான் பாலத்தில் போகவிட்டார்கள்.

கார்களையும் லாரிகளையும் போகவிடவில்லை. அதற்காகக் கார்காரர்களையும் லாரிக்காரர்களையும் கொடுமைபடுத்தவில்லை.

“இந்தச் சிறு பாலம் கிராம மக்களின் நலனுக்காக நாங்கள் போட்டது. தயவு செய்து இதை நாங்கள்
உங்களுக்கு விடாமலிருப்பதற்காக மன்னியுங்கள். சிறிது தொலைவு போனால் கல்பாலம் ஒன்றிருக்கிறது. அது அரசாங்கத்துக்குச் சொந்தமான பொதுப் பாலம். அதை உபயோகப்படுத்துங்கள். இங்கே வராதீர்கள்.” என்று பணிவாகச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.

கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் பண்காரர்கள் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு வேண்டியவர்கள். கேவலம் ஒரு பட்டிக்காட்டுப் பாலத்தில் போக முடியாது என்றால் சும்மா இருப்பார்களா? அவர்களால் ஆகாததும் உண்டோ? இருந்த இடத்திலிருந்தபடியே மினிஸ்டரோடும் ஹைவேஸ் கமிஷனரோடும் டெலிபோனில் பேசினார்கள். அந்தப் பட்டிக்காட்டான்கள் செய்யும் “அக்கிரமத்தை” எடுத்துக்கூறினார்கள்.

அதன் விளைவு? …. மறுநாள் குருவிப்பட்டி பாலத்தில் “ஹைவேஸ் அதாரிடி” யோடு கூடிய விளம்பரப் பலகை ஒன்று தொங்கியது.

இந்தப்பாலத்தின் வழியாக கார்கள். லாரிகள் தவிர கட்டைவண்டிகள் போகக்கூடாது. இது அரசாங்க உத்தரவு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இப்படிக்கு,
கமிஷனர்
அரசாங்க ஹைவேஸ் இலாகா.

சமூகத் தொண்டன் பொன்னம்பலமும் ஊர்க்காரர்களும் மறியலை நிறுத்தவில்லை. அரசாங்க உத்தரவையும் எதிர்த்து மறியல் செய்தனர்.

சும்மா இருப்பார்களா அரசாங்கத்தார்? வண்டி வண்டியாக லாரி நிறைய ஸ்பெஷல் ரிசர்வ் போலீஸார் வந்து இறங்கினார்கள். அடிதான். உதைதான். அடி உதைக்குப் பயந்து பெரும்பாலோர் மறியலைக் கைவிட்டு ஓடி விட்டனர்.

பொன்னம்பலமும் இன்னும் இரண்டு மூன்று ஆட்களும் மறியலை நிறுத்தவே இல்லை.

“இந்தப் பாலம் எங்கள் பிறப்புரிமை. இதை விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்கள் உழைப்பு எங்களுக்கே சொந்தம்.” என்று கோஷமிட்டான் பொன்னம்பலம்.

“போடுடா அவன் மண்டையிலே” முரட்டு போலீஸ்காரன் ஒருத்தன் அவனை அடித்தான்.

மண்டையிலிருந்து குருதி ஒழுகக் கீழே வீழ்ந்தான் பொன்னம்பலம். பிரக்ஞை தவறியது. மறுபடி அவன் தன் நினைவுற்றுக் கண்திறந்து பார்த்தபோது பாலத்தில் கார்களும். லாரிகளும் சுகமாகப் போய்க்கொண்டிருந்தன.

“இந்த உருப்படாத சமூகத்துக்கு இது மாதிரிப் பாலங்கள் இன்று தேவை இல்லை. ஏழைகளுக்கும் நியாயத்துக்கும் நடுவிலிருக்கிற தூரத்தை இணைக்க முதலில் ஒரு புதிய பாலம் போடவேண்டும். அதைக் கல்லாலும். காரையாலும் போட முடியாதே!” என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்து தள்ளாடி நடந்தான் அவன். 

தொடர்புடைய சிறுகதைகள்
1 பல்கலைக் கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும்போல் இருந்தது. விளக்கடியில் தேங்கி நிற்கும் இருட்டைப் போல ஒவ்வொரு பேராசிரியரிடமும் தேங்கியிருந்த விருப்பு வெறுப்புக்களும் பழிவாங்கும் மனப்பான்மையும், சுயசாதி அபிமானமும் பயங்கரமாயிருந்தன; ...
மேலும் கதையை படிக்க...
1 அடைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத - மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால் தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனனவி, பத்து வயதுச் சிறுவன், ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது ...
மேலும் கதையை படிக்க...
1 ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் 'பகடர்' என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. "பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்" - என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் ...
மேலும் கதையை படிக்க...
1 என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த வெறுப்பு அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. அந்த வெறுப்பின் காரணத்தையோ மூலத்தையோ அவர் ஆராய்ந்ததில்லை. சமய சந்தர்ப்பங்களும் அவள் காண்பித்த திறமைகளும் கூட ...
மேலும் கதையை படிக்க...
1 பத்திரிகை ஆபீஸ் காண்டீனில் மாதம் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒரு சரக்கு மாஸ்டர் எதிர்கொண்டு அழிக்க முடியாத பகையாக இருந்தது அது. அடுப்படியில் வேர்வை சொட்டச் சொட்ட மாடாக உழைக்கும் ஒரு சரக்கு மாஸ்டருக்கு இத்தனை அழகான மகள் பிறந்திருக்கக் ...
மேலும் கதையை படிக்க...
கடைசியாக ஒரு வழிகாட்டி
கொத்தடிமைகள்
ஹைபவர் கமிட்டி
ஒரு வெறுப்பின் மறுபுறம்
கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

புதிய பாலம் மீது ஒரு கருத்து

  1. Thasmeen says:

    Intha kadhai oda mozhi nadai ,kadhaikaru ,ulladaka uthimurai ,samuga avazangal sikallgal intha topic la podungala plz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)