புதிய ஆத்மாக்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 6,165 
 

எள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது உயிரை நிறுத்தச் சுற்றியிருந்து சுற்றம் பாலூற்றவில்லை. பஞ்சில் நனைத்த ஏதோவொரு கொழுப்பு என் உதட்டில் பூசப்பட்டது. காதிற்கும், மனதிற்கும் இனிய தேவாரம் பாடப்படவில்லை. பிதிர்க்கடன் கொடுக்கும் பிள்ளைகள் என் கால்மாட்டில் நிற்கவில்லை. பிதிர் என்கின்ற சொல்லின் அர்த்தம் தெரியாத பிள்ளைகள், பாசம் என்கின்ற பிணைப்பு அறுத்து, தூரதேசத்தில் வாழ்கிறார்கள்.

கூடுவிட்டுப் பிரியும் நாள் நெருங்குவதை அறிந்தபோது நான் கோதானம் வேண்டாம், எள்ளும் நீரும் வேண்டாம், என் மக்களைப் பார்த்துவிட வேண்டும் என்று தசரதனின் புத்திர சோகத்திற்கு ஒப்பாய் ஏக்கமெடுத்து இழைத்தேன். இணையத்தால் மனிதர்களுக்கான இடைவெளி தொலைந்து, பூமியின் மறுகரையில் இருப்பவனுக்கு நொடியில் செய்தி பறக்கிறது. நவீன யுகத்தில்… ஐரோப்பிய வாழ்வில்… நாங்கள் அகதிகள் என்றிருந்த முகவரியைக்கூடத் தொலைத்து விட்டோம். சிரிக்காதீர்கள். என்பிள்ளைகளின் முகவரி என்னிடம் இல்லை. என் முகவரி என் பிள்ளைகளிடம் இல்லை. நாங்கள் சந்திக்க முடியாத திக்குகளில் சமுத்திரத்தில் வேவ்வேறு திசைகளில் பயணிக்கும் கட்டுமரங்கள் போல. கரை சேருமா. கரை சேர்ந்தாலும் ஆளையாள் கண்டுகொள்வோமா? கூடுவிட்டுப் பிரியும் எனது முடிவிற்கூட அவர்கள் பயணித்த கோடுகள் என்னைச் சந்திக்கவில்லை. சந்திக்காத சமாந்தரக் கோடுகள் ஆகிவிட்ட இயந்திர வாழ்வில் இதயமற்ற மனிதர்களாய் நாங்கள் உலாவி வருகிறோம்.

நான் கூடுவிட்டுப் பிரிந்தாலும், அமைதி கொள்ளமுடியாத மனிதத்தின் எச்சமா? குளிர்ப் பெட்டியில் உறையப்போட்ட கூட்டைச்சுற்றி உறக்கமில்லாது அலைகிறேன். எனக்கு யாரும் கொள்ளிவைப்பார்களா? இங்கு கொள்ளி வைக்க மாட்டார்கள், எரியும் போறணைக்குள் தள்ளி விடுவார்கள். என்னைத் தள்ளிவிடப் போவது யார்? கிடங்கு வெட்டித் தாட்டுவிடப் போவது யார்? நான் எதையும் எழுதிவைக்க வில்லையே. இப்பொழுது கூடில்லாத பறவையான என்னால் எதையும் எழுத முடியாதே? எரிப்பார்களா? புதைப்பார்களா? மீண்டும் ஒருமுறை எனது கூட்டிற்குள் சென்று எனது கடைசி ஆசையை எழுதி வைத்துவிட்டு வந்தால். அப்படி இனி எழுதமுடியாது. இயற்கையை வெல்ல முடியாது. இறைவன் எனக்கு வரம்தரமாட்டார். விஞ்ஞாம் நிறுவியதைப் பொய்யாக்க முடியாது. கூடுவிட்டுப் பிரிந்த எனக்குக் கூடு கிடைக்கும் பாக்கியம் கிடையாது. இறந்தவரை உயிர்ப்பிற்கும் வித்தை இவ்வுலகில் செல்லுபடியாகாது. எனக்கு உமையவள் வந்து ஞானப்பால் தரப்போவதில்லை. எடுத்த உயிரை இயமன் கூட்டிற்குள் திருப்பி விடப்போவதில்லை. எனக்காக எந்தச் சாவித்திரியும் இயமனோடு போராட வரவில்லை. அகதியாய் வந்த என்னாத்மா அகதியாய்ப் போய்விட்ட அவலம்.

பதினைந்து நாட்கள் விறைக்கப்போட்ட என்கூட்டை விட்டுவிட்டுப் போக மனம் இல்லாது இங்கேயே பதுங்கி இருக்கிறேன். என் மகன் கையால் எள்ளும் நீரும் இறைக்காது நான் போக மாட்டேனா? வறட்டுப் பிடிவாதத்தால் நிரந்தரமாக ஆவியாக அலையும் அவிப்பிராயம் என்னிடம் இல்லை. எங்கள் ஆசைகள் நிராசைகள் ஆகின. எங்கள் வாழ்க்கையே அலைச்சலாகியது. சொந்தம் துறந்து… பந்தம் அறுத்து… விழுமியம் மறந்து… இலட்சியம் இல்லாத பயணத்தில் ஏதோ உயிர்வாழ்ந்து… அந்த உயிரையும் இயமன் பறித்த பின்பு… பிதிர்கூடக் கிடைக்காத பிண்டங்களாய்… ஐயோ… ஐயோ என்னைப் போல்… என் இனத்தைப் போல்…எத்தனைக் கூடுகள் நித்தமும் இங்கு வருகின்றன? குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர். மனிதன் சொந்தம் கொண்டாடும் கூடு, நீயே உனக்கு இல்லை என்கின்ற ஞானத்தைப் புகட்டுகின்ற பிணவறை. நீயே நீ இல்லை. எங்கிருந்து வந்தாய் என்பது புரிந்தாலும் எங்கே போகிறாய் என்பது புரியப்போவது இல்லை. சொல்லாமல் கொள்ளாமல் பறிக்கப்படும் என்பது புரியாத மாயையில், சாகா வரம் பெற்றதாகப் பறக்கும் மனிதர்கள். அழகு பார்த்து வந்த கூடு ஆத்மா கூடு நீங்கிய கணத்தில் இருந்து அழுகிப் போகும் மாறாத யதார்த்தம். ஒரு கணத்தில் உங்கள் கூடுகள் உங்களுக்கச் சொந்தமில்லாது போக… நீங்கள் ஆவியாக அலையவிடப் படுவீர்கள் என்கின்ற உண்மை.

அன்று ஒரு நாள் நிர்வாணமாக்கப்பட்ட அழகிய இளம் பெண்ணொருத்தியின் கூடு இங்கே வந்தது. அவளைக் கொண்டுவந்தவன் கண்ணால் கற்பழித்த பின்பே ஒரு குளிர்ப் பெட்டிக்குள் உறைவதற்குத் தள்ளிவிட்டான். அவள் ஆன்மா துரே நின்று அழுவது கேட்டது. ஏன் அது அழுதது என்பது எனக்குப் புரியவில்லை. தன் நிர்வாணத்தைப் பார்த்தா? நிரந்தரம் அற்றுப் போன வாழ்வை எண்ணியா? ஆவியில்லாத கூட்டின் மேற்கூட அற்ப மனிதனுக்குக் காமம் என்கின்ற கொடுமையைக் கண்டா. எல்லாமே பொய்யாகிப் புழுத்துப் போவதைப் பொய்யாக்க உறைய வைப்பவனுக்குக்கூட ஏது ஞானம் என்கின்ற தவிப்பிலா?

என் மண்ணிலே வாழ்ந்திருந்தால் எனக்கு எள்ளும் நீரும் கிடைத்திருக்கும். இரக்கத்திலாவது நான்குபேர் என்னைக் காவியிருப்பார்கள். சுடலையில் எரித்து… கேணியில் குளித்து… பிதிர்க்கடன் தீர்ந்து… பரலோகம் போவென்று வழியனுப்பி வைத்திருப்பார்கள். என்னைப் போலவே கூட்டை விட்டு ஆவி பிரிந்த பின்பு நாறிப்போகும் கூட்டை விட்டு நகரமுடியாத அவஸ்தையுடன் பல ஆத்மாக்கள்…

வாழ்க்கை அடியோடு மாறியது. நிலையில்லாப் பணம் என்னையும் ஏமாற்றிச் சென்றது. பழம் தின்னும் கிழியாக என் நண்பர்கள் இலையற்ற மரமான என்னைத் திரும்பிப்பார்க்க மறந்தார்கள். பிள்ளைகள் பரதேசம் பறந்து போனார்கள். தனிமை. என் தனிமை என்னை வாட்டியதில்லை. ஞானம் வளர்க்கும் யாக காலமாய் அதை நான் மாற்றி அமைத்துக்கொண்டேன். முனிவனுக்கும் மோட்சம் பற்றிய ஆசையுண்டு. எனக்குப் பிதிர்க்கடன் பற்றிய ஆசை கூடு பிரிந்த பின்பும் குன்றாது இருக்கிறது. வீடு பெறுவதற்கு வாயலாக் கூட்டின் தகனத்தை அது பார்க்கிறது. ஆவி பிரிந்தபின் கூட்டிற்காக அழுவதேன் என்பதை மறுத்து நிற்கிறது.

சூ சத்தம் போடாதீர்கள். என்கூட்டை எடுத்துக்கொண்டு செல்ல யாரோ வருகிறார்கள். பாருங்கள்… பாருங்கள்… என்னுடலை எடுத்துச் சென்று அலங்கரிக்கிறான். பின்பு அதைப் பெட்டியில் வைக்கிறான். என்னை அலங்கரிப்பவன் நித்தமும் இதைச் செய்பவனாக இருக்கவேண்டும். எந்தவித சலனமும் இல்லாது மரப் பொம்மையைச் சோடிப்பது போல என்னை அலங்கரித்துப் பெட்டியில் வைத்து, பின்பு ஒரு வண்டியில் வைத்து, என்கூட்டைத் தள்ளிக்கொண்டு செல்கிறான். எங்கே கொண்டு செல்கிறான்? என்ன செய்யப் போகிறான்? இதுதான் என் கடைசி யாத்திரையாக இருக்குமா? என்னோடு வாருங்கள். என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குச் சொல்கிறேன்.என்னை சீ என்கூட்டை அவன் வண்டியில் தள்ளிச் சென்று லிப்றில் ஏற்றுகிறான். நீங்களும் வாருங்கள். இது ஒரு சிறிய தேவாலயம். இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவன் சென்று விட்டான். மீண்டும் தனிமை. யாருக்காகவோ எனது கூடு காத்திருக்கிறது. சற்றுப் பொறுங்கள் ஏதோ சத்தம் கேட்கிறது. வெள்ளைத்தேவனாகக் குருவானர் ஒருவர் வருகிறார். இந்துவாய்ப் பிறந்து, இந்துவாய் வாழ்ந்தேன். பிதிர்க்கடன் கிடைக்குமா என்று இப்பொழுதும் ஏங்குகிறேன். என் ஆசைகள் எவர் காதிலும் விழவில்லை. என்னை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனக்கு ஞானஸ்தனாம் நடக்கவில்லை. தீட்சை கேட்டுத் திரும்பவும் பிரால் சட்டி தேடிய ஞாபகம் இருக்கிறது. அதற்கான தண்டனைகள் இனி அளந்து தரப்படுமா? சரி அந்தத் தலையிடி உங்களுக்கு வேண்டாம். அங்கே அவர்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். குருவானவர் இறுதிக்கடன் செய்யத் தொடங்குகிறார்.

கும்பம் வைத்து… மந்திரம் சொல்லிப்… பூசை செய்து… பாட்டுப்பாடிச் சுண்ணம் இடித்து… பேரப்பிள்ளைகள் பந்தம் பிடித்து… பறையடித்து, மாதரெல்லாம் மார்பு நோக அடித்து வசையாகவும்,இசையாகவும் ஒப்பாரி வைத்து… ஐயோ எதுவும் இல்லை. எனது அடையாளங்கள் எல்லாம் என்னைவிட்டு எப்பொழுதோ தொலைந்து போனது? தேசம் தொலைத்த நாங்கள் அடையாளமும் தொலைத்து, முகவரியற்ற அகதிகளாகி… கொஞ்சம் பொறுங்கள். குருவானவர் ஏதோ சொல்லுகிறார். மண்ணால் உருவாகி மண்ணாய் போய்… இல்லையே குருவானவரே! நாங்கள் நீராலே பிறந்து நீரிலே சங்கமிக்கும் முறையைப் பின்பற்றுபவர் அல்லவா?நீராலே பிறப்பது இன்னும் மாறவில்லை. நீரிலே சங்கமிப்பது மாறுகிறதா? என் சங்கமிப்பு மாறிவிட்டது. கங்கையில் கரைக்கப்படாவிட்டாலும் வடகடலில் கரையக்கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

குருவானவர் அவசரமாக ஏதோ சொல்லுகிறார். அவரைவிட ஒருவன் அந்த மூலையில் நிற்கிறான். அவன்தான் எனது இறுதிக்கடனுக்கு வந்தவனா? எனக்காகவும் ஒருவன் வந்து இருக்கிறானா?குருவானவர் தனது கடமையைச் செய்து முடிப்பதில் அவசரம் காட்டுகிறார். அவர் தனது அலுவலை முடித்துவிட்டு அந்த மனிதனைப் பார்த்து கையைக் காட்டிவிட்டுச் செல்கிறார். அந்த மனிதன் என்கூட்டை நோக்கிச் சென்றான். வண்டிலோடு என்கூட்டை வெளியே தள்ளிச் செல்கிறான். என்ன செய்யப் போகிறான்?

ஓ என்கூட்டைக் கொண்டு போகும் வாகனம் அதுவா?

எள்ளும் நீருமற்று… நீரிலே சங்கமிக்காது… ஏக்கத்தில் மிதக்கும் புதிய ஆத்மா நான். இல்லை நாங்கள். நாங்கள் விட்டுவந்த தேசத்து ஞாபகம் இன்னும் மாறாது…

Print Friendly, PDF & Email

1 thought on “புதிய ஆத்மாக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *