புகை நடுவில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 10,730 
 

பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து எழுந்து பால்கனியில் வந்து நின்றால், இருளைக் கரைத்துக்கொண்டு யாருமற்ற தெருவில் மழை தனியே நடந்துபோய்க்கொண்டு இருக்கும் அபூர்வ காட்சியைக் காண முடியும்.

பால்யத்தின் பொழுதுகளும் பின்னிரவு மழைக் காட்சிகள்தான்.

திடீரென, எப்போதோ உடன்படித்த சிறுவர்களின் முகம் கனவில் ததும்பத் துவங்குகிறது. பெயர்கூட மறந்துபோன வகுப்புத் தோழன், காக்கி டிராயரும் வெள்ளைச் சட்டையும் திருநீறு பூசிய முகமுமாய் கனவின் படிகளில் வந்து அமர்ந்திருக்கிறான். என்ன சொல்வ தற்காக அவன் கனவில் பிரவேசிக்கிறான் என்று தெரியாது. ஆனால், அடுத்த நாள் முழுவதும் மனம் பிரிவின் துக்கத்தில் ஊறிக்கொண்டே இருக்கும். ஏதேதோ நகரங்களில் சுற்றியலையும்போது, இது போன்று வெவ்வேறு வயதில் நடந்தவை கனவுகளாக வந்திருக்கின்றன.

கடந்த ஆண்டின் மழைக்காலத்தில் மதிய பொழுதில் எனக்கொரு போன் வந்தது. போனில் பேசிய பெண் மிகவும் தயக்கமான குரலில், நான் எஸ்.ராமகிருஷ்ணன் தானா என்று நாலைந்து முறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்.அவள் பெயர் சித்ரா என்றும், என்னோடு பள்ளியில் படித்தவள் என்றும் அவள் நினைவுகூர்ந்தபோதும் அவளது முகத்தை என்னால் நினைவு படுத்திப் பார்க்க முடியவில்லை.

அவள் திருத்தணியில் வசிப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள். எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்று சொல்லிய பிறகு, ‘எனக்கு ஒரு உதவி செய்யணும். உன்னால முடிஞ்சா நீ செய்வாயா?’ என்று மிக உரிமையுடன் கேட்டாள். ‘கட்டாயம் செய்கிறேன்’ என்று அவளை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.

அன்று மாலையில், அவள் தன் இருபது வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நேரில் பார்த்தபோதும், மனதில் அதற்கு முன்பு அவளை பார்த்திருந்த நினைவின் அடையாளங்களே இல்லை. அவளின் தலை பாதி நரைத்துப் போயிருந்தது. முகத்துக்குப் பொருந்தாத கண்ணாடி அணிந்திருந்தாள். ஏதோ நேற்றுதான் பள்ளியிலிருந்து பிரிந்து சென்றதைப் போல, கடகடவென ஏதோ கேட்கத் தொடங்கினாள்.

அவள் எந்த வகுப்பில் எப்போது படித்திருப்பாள் என்று நானாக நினைவில் தேடிக் கொண்டேயிருந்தேன். சில நேரம் அவள் பரிச்சயமானவள் போல் தோன்றினாள். சில வேளை யோசிக்கையில் முற்றிலும் அறியாதவளாக இருந்தாள். அவளின் மகன், விருப்பமில்லாத ஒரு இடத்துக்குத் தன்னை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் போல தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தான்.

அவளது கையில் சிறிய மஞ்சள் பை இருந்தது. அவள், தான் காதிகிராஃப்டில் வேலை செய்வதாகவும், தனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள், இவன் ஒருவன் மட்டும்தான் பையன் என்றும், அவளின் கணவன் அம்பத்தூரில் வெல்டராக வேலை பார்ப்பதாக வும் சொன்னாள். இரண்டு நிமிஷங் களுக்கு ஒரு முறை, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத புகை மூட்டம் உருவானது.

பிறகு, அவள் தன் பையில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்து கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தட்டில் வைத்து, தன் மகளுக்குத் திருமணம் என்று சொல்லி நீட்டினாள்.

நான் திருமணப் பத்திரிகையை வாங்கிப் பிரித்துக்கொண்டு இருந்த போது அவள் தயக்கத்தோடு திரும்பவும் கேட்டாள்… ‘‘உன்கிட்டே ஒரு உதவி கேட்கணும்னு சொன்னேனில்லே… கேட்கக் கூச்சமா இருக்கு’’ என்றாள். ‘‘பரவாயில்லை, சொல்லு!’’ என்றதும், வார்த்தைகளை மென்று விழுங்கிய படியே சொன்னாள்… “என் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு பேர்கிட்டே தானம் கேட்டு பணம் வாங்கி தாலி செய்றேன்னு கோயில்ல வேண்டிட்டு இருக்கேன். அவளுக்குக் கல்யாண தோஷம். அதுக்குத்தான் இந்த வேண்டு தல். ஆறாயிரம் ரூபாய் வேணும். சொந்தக்காரங்க யார்கிட்டேயும் கேட்டு வாங்கக் கூடாது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரு இருக்கா… அப்போதான் உன் நினைப்பு வந்துச்சு. சரி, கேட்டுப் பார்க்க லாமேனு உன் போன் நம்பரை பத்திரிகை ஆபீஸ்ல கேட்டு வாங்கினேன்!”

‘‘அதனால என்ன… நான் தருகிறேன்’’ என்று சொன்னதும் அவள் முகத்தில் லேசான வெட்க மும், சந்தோஷமும் துளிர்த்தது. என்னுடைய அறையில் இருந்த புத்தகங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், ‘‘எப்பவும் புத்தகம் படிச்சுட்டே இருப்பியா?’’ என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையாட்டினேன். பிறகு, அவளுக்கும் என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றுப் போனதைப் போல மௌனமாக என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அந்த சிரிப்பின் நுனியில் சொல்ல முடியாத வேதனை படிந்திருப்பதைக் காண முடிந்தது.

பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் தந்தபோது அவள் கைகள் லேசாக நடுங்குவதைக் கவனித்தேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வர வேண்டும் என்று நாலைந்து முறை கேட்டுக் கொண்டாள். பிறகு அவள் பையில் இருந்து பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

அது 1979-ல் திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த போட்டோவில் இரண்டாவது வரிசையில் நிற்கும் சிறுவனைக் காட்டி, ‘‘நீ எப்படி இருந் திருக்கே, பாரு’’ என்றாள். நான் மௌனமாகச் சிரித் துக்கொண்டேன். ‘‘இந்த போட்டோ வில் நான் எங்கே இருக்கேன் என்று உன்னால் சொல்ல முடிகிறதா?’’ என்று கேட்டாள்.

நான் தயக்கத் துடன் சொன்னேன்… ‘‘திருப்பத்தூரில் நான் படித்ததே இல்லை. இந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை.’’ அவள் முகம் சட்டென மாறியது. பதற்றம் அடைந்தவள் போல சொன்னாள்… ‘‘இல்லை, எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. திருப்பத்தூர்ல கோயில் பக்கம் உங்க வீடு இருந்தது. உங்க அக்கா பேருகூட சுந்தரிதானே?’’

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்காவே கிடையாது; வேறு யாரையோ நினைத் துக்கொண்டு பேசு வதாகச் சொன்னேன். அவள் என்ன செய்வதெனத் தெரியாமல், ‘‘பேருகூட ராமகிருஷ்ணன்னு போட்டிருக்கு’’ என்றாள். ‘‘அது நானில்லை’’ என்று உறுதியாகச் சொன்னதும், அவள் சேலை நுனியால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவளாக,

‘‘அப்போ அது வேறு யாரோவா? ஸாரி சார்! என்கூடப் படிச்சவர்னு நினைச்சுத் தப்புப் பண்ணிட்டேன்!’’ என்றபடி மஞ்சள் பைக்குள் போட்டிருந்த பணத்தை அவசரமாக எடுத்து என்னிடமே திரும்பக் கொடுத்தாள்.

‘‘பரவாயில்லை, வெச்சுக்கோங்க’’ என்றபோதும் கேட்க வில்லை. ‘‘இல்லை சார்! உங்க போட்டோவைப் பார்த்தப்ப தெரிஞ்ச முகம் மாதிரி இருந்துச்சு. நான் ஏமாத்தணும்னு செய்யலை. என்னை மன்னிச்சிருங்க’’ என்றாள்.

நான் பணத்தை வாங்க மறுத்தவனாக, ‘‘அதனால் என்ன, இப்போயிருந்து நாம ஃப்ரெண்டாக ஆகிக்கொள்ளலாம் தானே?’’ என்றேன். அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தவள், பணத்தை எனது மேஜையில் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தாள்.

‘‘உங்களோட படிக்காம போனதுக்காக நான் உண்மையில் இப்போதான் வருத்தப்படுறேன்’’ என்றேன். கைகளைப் பிசைந்துகொண்டே இருந்தவள், பிறகு அந்தப் பள்ளிக்கூட புகைப்படத்தை வாங்கிக்கொண்டு, தான் புறப்படுவதாகக் கிளம்பினாள். எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரிய வில்லை. வாசல் வரை போனவள் திரும்பவும் உள்ளே வந்து, ‘‘என்னை மன்னிச்சிடுங்க சார்! உங்களைச் சிரமப் படுத்திட்டேன். நீங்க கல்யாணத்துக்கு அவசியம் வரணும்’’ என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போனாள். அவளோடு படிக்கவில்லை என்ற உண்மையை எதற்காகச் சொன்னேன் என்று என் மீதே கோபமாக இருந்தது.

பால்யத்தின் புகைமூட்டத்தில் நாம காண்பது எல்லாம் அழிந்த சித்திரங்கள் தானா? அந்தப் பெண்ணின் திருமணப் பத்திரிகையைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே இருந்தது. உலகில் மிகக் குறைவான நிமிடங்களில் தோன்றி மறைந்த நட்பு இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ? என்ன உறவு இது!

பிராயத்தின் நினைவுகள் மழை விட்டும் மரக்கிளைகளில் இருந்து சொட்டிக்கொண்டு இருக்கும் மழை நீரைப்போல உதிர்ந்துகொண்டுதான் இருக்கும்போலும்! என்னோடு படிக் காமலே எனக்கு மிகவும் நெருக்க மாகிப்போன சித்ராவின் நட்புக்காக இப்போதும் மனதில் மெல்லிய ஏக்கம் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன உறவில் அவளோடு நான் பேசுவது என்றுதான் தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *