பீமாஸ்கப்

 

இப்போது இருக்கும் ஐபிஎல் / ட்வென்டி ட்வென்டிக்கெல்லாம் முன்னோடி (மாட்ச் ஃபிக்சிங் உட்பட) எண்பதுகளில் காஞ்சீபுரத்தில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் தான் சுருக்கமாக கே சி எல்

மே மாதம் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மூன்று முதல் நான்கு வாரங்கள் நடக்கும் லீக் போட்டிகள் ஏறக்குறைய ஒரு கிரிக்கெட் திருவிழா போன்றிருக்கும். ஒவ்வொரு லீக் போட்டியிலும் சுமார் 12 டீம்கள் போட்டி மிக கடுமையாக இருக்கும். டீம்களுக்கென்று தனித்தனியாக ஸ்பான்ஸரர்கள். இதுதவிர ஃபைனல்சில் வெற்றி பெறுபவர்களுக்கும் மற்றும் சிறப்பு பரிசுகளுக்கென்றும் மொத்தமாக ஒரு ஸ்பான்ஸரர். அவர் பெயராலேயே அந்த வருடம் போட்டிகள் நடைபெறும்.

துரதிஷ்டவசமாக ஒரு முறை சிறப்புப் பரிசுகளுக்கென்று ஸ்பான்சர் செய்பவருக்கு அடுத்த முறை எங்கள் போட்டிகளை காணும் பாக்கியம் கிடைப்பதில்லை. சிவலோக/வைகுண்ட ப்ராப்தி அடைந்துவிடுவர்.

இதனாலேயே ஸ்பான்சரர்களை தேடிச் செல்லும்போது அனைவரும் ஓடி ஒளிந்து கொள்வர். கண்ணில் படும் சில பெரிய மனிதர்களும் “போங்கப்பா உங்க கே சி எல்லுக்கு ராசியே இல்லை!” என்று அங்கலாய்த்துக் கொள்வர்.

கடைசியாக நான் ஆடிய லீக் ஆட்டங்களை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.

காஞ்சியில், கல்லூரியில் முதுகலை தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்துக் கிடந்த நேரம்.

அந்த முறை எங்களுக்கு ஸ்பான்சர் செய்தவர் பீமா பிரசாத், பெயருக்கேற்றார் போல் நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர், அரசியல் செல்வாக்கும் உள்ளவர். இதைத்தவிரக் கடைத்தெருவில் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்திருந்தார்

திடீரென எங்கள் டீமின் ஒருங்கிணைப்பாளர் செந்திலை வீட்டில் சந்தித்த பீமா பிரசாத் அணியின் கேப்டன்கள் யார் யார் என்று தெரிந்து கொண்டு இந்த முறை சிறப்புப் பரிசுகளுக்கு தான் ஸ்பான்சர் செய்ய விரும்புவதாகக் கூறினாராம். டீம் கேப்டன் 22 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டுமென்று ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டிருந்தார். செந்திலுக்குக் குஷி தாங்கவில்லை எங்கே அவர் மனசு விடுவாரோ என்று எதுவும் பேசாமல் உடனே ஒப்புக்கொண்டான்..

அவர் மகன் ராம் பிரசாத் ஆரம்பக் காலத்திலிருந்தே எங்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான் இருந்தபோதும், எங்கள் ராசி தெரிந்திருந்தும், எப்படிச் சம்மதித்தார்? என்பது எங்களுக்கு புரியாத மர்மமாகவே இருந்தது. பின்னர் விசாரித்த போது தான் தெரிந்தது அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லையாம்.

பரிசுகளுக்கான ஸ்பான்ஸரர் கிடைக்கும் வரை அனைவரும் மெத்தனமாக இருப்பர் ஸ்பான்ஸரர் கிடைத்ததும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பயிற்சிக்கு ஆயத்தமாகிவிட்டார்

ஒரு நாள் நாங்கள் அனைவரும் அவ்வாறு பிராக்டீசில் இருந்தோம்.

அப்போது எங்கிருந்து அந்த வதந்தி கசிந்ததோ தெரியவில்லை பயிற்சியைக் கூட நிறுத்திவிட்டு அனைவரும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே பேச ஆரம்பித்தனர்

விஷயம் இதுதான் பைனலில் வெற்றி பெறும் டீமின் கேப்டனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து தரப் போவதாக பீமா ப்ரசாத் அறிவிக்க இருக்கிறாராம்! இந்த விஷயத்தைக் கடைசிவரை சஸ்பென்ஸாக வைத்திருந்து இறுதியில் அறிவிக்கப் போவதாக வதந்தி..

அவர் பெண்ணை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவளுடன் அவர் குடும்பத்தினர் ஆட்டோவில் போவதென்றால் அவளுக்கு தனியாக ஒரு ஆட்டோ வைக்க வேண்டியிருக்கும், தொலைவிலிருந்து வரும் போது நடந்து வருகிறதா அல்லது உருண்டு வருகிறாளா என்று தெரியாது. உடலுழைப்பும் இல்லை!, உணவிலும் கட்டுப்பாடில்லை! இத்தனைக்கும் அவள் பன்னிரண்டாம் வகுப்புத்தான் படித்துக்கொண்டிருந்தாள்!

கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பவர் அதை பலவிதங்களிலும் வசூலிப்பவர் ஆள் பலம் பண பலம் கொண்டவர் அரசியலிலும் செல்வாக்குள்ளவர் எனவே அவரை நேரடியாக எதிர்க்க எங்கள் யாருக்கும் துணிவில்லை, மேலும் வலிய வந்த ஸ்பான்ஸரரை விடவும் மனதில்லை, எனவே முடிவில் பார்த்துக்கொள்ளலாம் என்று எப்போதும் போல் எங்கள் ப்ராக்டீசை தொடர்ந்தோம். கேப்டன்களுக்கு மட்டும் ஒரு இனம் புரியாத பயம் தொற்றிக் கொண்டது, என்னையும் சேர்த்து.

வழக்கமாக நடக்கும் போட்டிகளில் எங்கள் டீம் தான் வெற்றி பெறும் என்பதால் “ கேப்டனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு எப்ப ட்ரீட்” என்று சிலர் கேட்க, “அவருகென்ன இனிமே ராஜா வீட்டு கன்னுகுட்டி, எப்ப வேணா எங்க வேணா ட்ரீட் தருவார்” என்று என்னை கலாய்த்தனர்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது ராமபிரசாத் வந்தால் “கேப்டன் உங்க மச்சான் வர்றார்” என எச்சரிக்கையும் கிண்டலும் கலந்து சிலர் எச்சரித்தனர்.

அதற்குப்பின் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஒன்றில் கூட நான் சோபிக்கவில்லை

தெரிந்தோ தெரியாமலோ ராமபிரசாத் இதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் சில சமயம் எங்களை அப்பாவிபோல் பார்ப்பதும் சிரிப்பதும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது

இறுதியாக அந்த புகழ்பெற்ற மேட்ச் துவங்கியது!

அனைத்து டீமின் கேப்டன்களும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தோம் அதாவது அனைவரும் தோற்பதென்று!.

ஒரு டீமில் பீமா பிரசாத்தின் மகன் வைஸ் கேப்டனாக விளையாடிக் கொண்டிருந்தான். அவனை எப்படி சரிக்கட்டுவது என்று தெரியாமல் அந்த டீமின் கேப்டன் விழித்துக்கொண்டிருந்தது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது

தோற்பதற்காகவே நடக்கின்ற மேட்ச் என்பதால் எல்லா பௌலர்களும் அழகாக போட்டுப் போட்டுக் கொடுத்தார்கள். ஒவ்வொரு முறை வைடில் பவுண்டரிக்குச் செல்லும்போதும் பேட்ஸ்மென்கள் தலையில் அடித்துக் கொள்வதும், ஃபீல்டர்கள் கை தட்டுவதும் பேட்ஸ்மென்கள் தரையில் ஓங்கி அடிப்பதும் கேப்டன்கள் பார்வையாளர் இடத்தில் இருந்து அவர்களை வசைமாறிப் பொழிவதும், ‘டக்’ அடித்த வீரர்களைப் பார்த்து செஞ்சுரி அடித்து சாதனை செய்தவர் போல் அந்த டீமின் கேப்டன்கள் அவர்களைக் கட்டி அணைத்துப் பாரட்டியதும் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது

வழக்கமாக ஐந்து முதல் ஆறு நாட்கள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் இந்த முறை இரண்டே நாட்களில் பைனல் வரை வந்துவிட்டது. கடைசி பந்தில் ராம் பிரசாத் ஒரு சைடில் விளையாடிக்கொண்டிருந்தான். ஒரே ஒரு ரன் எடுத்தால் அவன் டீம் வெற்றி பெறும் சூழல். மெதுவாக வந்த பந்தை மிக லாவகமாக கையாண்டு வேகமாக எதிர்ப்புறம் ஓடிவிட்டான். இருந்தும் எதிர்புறத்தில் இருந்த அந்த அணியின் கேப்டன் க்ரீசிலிருந்து நகரவேயில்லை. ஏனென்றால் ஃபைனலில் எப்படி ஆட வேண்டும் என்று ஏற்கனவே முன்பே திட்டமிட்டிருந்தோம். அதாவது – எந்த வகையில் எப்போது எத்தனை ரன் எடுக்க வேண்டும் என்பது முதற்கொண்டு! எப்போது யார் அவுட் ஆக வேண்டும் என்பது வரை!! ( நானும் அந்த டீமின் கேப்டனும் அம்பையரையும் மிரட்டி ஒரு வழியாக சரி கட்டியிருந்தோம்! )

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. ராம் பிரசாத் ரன் அவுட் ஆனதாகவும், வேறு வழியின்றி அம்பையர் (ஏற்கெனவே பேசிவைத்த படி) அந்த பைனல் மேட்ச் டிராவில் முடிந்ததாக அறிவித்தார்

மேடையில் நன்றாக விளையாடிய வீரர்களுக்குப் பரிசளிக்கும்போது பேசிய பிரசாத் தனக்கு கிரிக்கெட்டில் இருக்கும் ஆர்வத்தையும் ஒரு காலத்தில் தான் மாவட்ட அளவில் விளையாடியதையும் பெருமையாகக் குறிப்பிட்டார். தனக்குக் கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக வெற்றி பெறும் டீமின் கேப்டனுக்குத் தனது மூத்த மகளை திருமணம் செய்விக்க இருந்ததாகவும் இனி அது சாத்தியமிலை எனவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

எங்களுக்குத் தெரிந்து அவருக்கு ஒரே மகள் தானே ‘அது என்ன மூத்த மகள்?’ என்று ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராமபிரசாத்திடம் விசாரித்தான்.

அப்போதுதான் ராம் பிராசாத் நாங்கள் பார்த்தது அவருடைய இளைய தாரத்தின் மகளை என்றும், மூத்தவர் இறந்தவுடன் அவர் தன் மகள் சித்தியின் கொடுமைக்கு ஆளாகக்கூடாதென்று சென்னைக்கு அனுப்பிவிட்டதாகவும், அங்கே அவள் பெரியம்மா வீட்டில் தங்கி பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன்ஸ்-மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாளென்றும் சொன்னான்.

கடந்த ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வானவள் என்பது எங்களுக்குக் கிடைத்த உபரி தகவல்!

மேடையில் இறுதியாகப் பேசிய பீமா பிரசாத் தனக்கு கிரிக்கெட்டின் மீதிருந்த தீராத காதலைப் பற்றி குறிப்பிட்டு அடுத்த முறை வெற்றி பெறும் டீமின் கேப்டனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துதற விரும்புவதாகக் கூறினார்.

என்ன எங்கள் கே சி எல்லுக்கே இருந்த ராசியால் அது இயலாமல் போயிற்று !! 

தொடர்புடைய சிறுகதைகள்
அவன் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் கனவு தேசத்திற்குச் செல்வதற்கு விசா கிடைத்ததே அதற்குக் காரணம். போனமாதம் பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. அவன் படித்த எலெக்ட்ரிகல் டிப்ளமோவிற்கு வெளி நாட்டில் அதுவும் அரசாங்க கம்பனியில் வேலைக் கிடைக்குமென்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
கார் ஆக்சிடென்டில் அம்மா வசுந்தராவையும் அப்பா சுகுமாறனையும் இழந்ததில் பரணி மிகுந்த துயரத்தில் திக்பிரமை பிடித்தது போன்றிருந்தான். ராணுவத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வந்து காரியமெல்லாம் முடிந்த நிலையில் தான் யாருமற்ற ஒரு அனாதை போல் உணர்ந்தான். பணிக்குத் திரும்பவும் மனமில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட நாட்களாக மனைவி ஜானகிக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தாலும், ரேஷன் கார்டில் இன்னமும் பெயர் சேர்க்கப்படாத காரணாத்தாலும், பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. (பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை, அது வேறு விஷயம்!) இன்னிலையில் ஒரு நாள் செய்தித்தாளில் இனி அனைவரும் தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
வித்யாவின் பர்த்டே பார்ட்டியில் மூன்றாவது மாடி ஃப்ளாட்டே கோலாகலமாகியிருந்தது. அவள் கர்ல் ஃப்ரெண்ட்ஸ் பாய் ஃப்ரெண்ட்ஸ், என ஒரு கூட்டமே திரண்டிருந்தது. ““பாத்துடீ, மத்த ‘ஃப்ளாட்’காரங்கல்லாம் சண்டைக்கு வந்துடப்போறாங்க, கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று அதட்டினாள் அம்மா சுமதி. “எஞ்சினியரிங் முடிச்ச பசங்க அப்படித்தான் ...
மேலும் கதையை படிக்க...
கி.பி. 2030 வியாஸின் இன்பமான பொழுதுகள், தன் ஏழு வயது மகள் சுஹாவிடம் மாலை நேரங்களில் விளையாடுவதுதான். ஒரு சிவில் எஞ்சினியரான வியாஸ் தன் அலுவலக டென்ஷன் முழுவதும் மறந்து அவளுடன் விளையடுவதும், கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், கிண்டல் செய்வதும், பார்ப்பவர்களை ...
மேலும் கதையை படிக்க...
ஜாயல்!
முற்றுப்புள்ளியில் ஆரம்பம்
பின் புத்தி – 2.0
என்ன மாயம் செய்தாய்?
காலக்கோடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)