கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 10,824 
 

அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக அதற்குச் சம்மதித்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது அவளுக்கு தன் வயதென்ன, அனுபவம் என்ன, முதுமை என்ன? – யாரோ ஒரு முந்தாநாள் கத்துக்குட்டி நடிகையைத் தான் எதற்காகச் சந்தித்து அவளோடு சரிசமமாக எதிரும் புதிருமாய் உட்கார்ந்து பேசுவது என்று எண்ணிய போது முதலிலேயே சரி என்று சொல்லியிருக்க வேண்டாமோ என்று இப்போது பட்டது அவளுக்கு.

ஒரு வாரப் பத்திரிகை சமீபகாலமாக இரண்டு தலைமுறைகள் என்ற தலைப்பின் கீழ் தொழில், கலை, அரசியல் ஆகிய துறைகளில் ஐம்பது வயதை எட்டிய பிரமுகர் களையும், அப்போதுதான் அடியெடுத்து வைக்கும் இளம் தலைமுறையினரையும் சந்திக்கச் செய்து அவர்கள் பேசுவதைத் தொகுத்து வெளியிட்டு வந்தது.

அதில் கலை என்ற வகையில் முந்திய தலைமுறையின் சிறந்த நடிகையாகிய தான் இளைய தலைமுறையின் புதிய நடிகையான குமாரி ஜெயமாலாவைச் சந்தித்து உரையாட வேண்டும் என்று பத்திரிகைக்காரர்கள் கேட்ட போது மறுத்துச் சொல்லாமல் சம்மதித்திருந்தாலும் இப்போது மீண்டும் எண்ணியபோது அந்தச் சந்திப்பு வேண்டாமென்று பட்டது மேனகாதேவிக்கு . மறுபடியும் அந்தப் பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டுத் தனது சம்மதமின்மையை எப்படிச் சொல்வதென்று இப்போது மேனகாதேவி யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘இசையிலும் நடிப்பிலும் சக்கரவர்த்திகளைப் போல் விளங்கிய கடந்த காலக் கதாநாயகர்களோடு நடித்துப் புகழ்பெற்ற நான் எப்படி இந்த ஊர் பேர் தெரியாத புது நடிகையைச் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டேன்?’ – என்று எண்ணியபோது அவள் மனம் அதற்கு மறுத்தது.

நேரடியாக மறுப்பதற்குப் பதில் சாக்குப் போக்குச் சொல்லியே அதைத் தட்டிக் கழித்துவிடலாம் என்று மேனகாதேவி எண்ணினாள்.

நகரில் உள்ள ஏதோ ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பகல் உணவுக்கோ இரவு டின்னருக்கோ ஏற்பாடு செய்து அங்கேயே அவர்கள் சந்திக்கவும், பேசவும், அதை அந்தப் பத்திரிகைக்காரர்கள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.

“என்னால் ஓட்டலுக்கெல்லாம் வர முடியாது. யார் என்னைப் பார்த்துப் பேச வருவதானாலும் என் வீட்டுக்குத்தான் வர வேண்டும்” என்று சொல்லிச் சந்திப்பதைக் தட்டிக் கழித்துவிட எண்ணினாள் மேனகாதேவி. அந்த நிபந்தனைக்குக் குமாரி ஜெயமாலா ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று மேனகாதேவி நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதுவும் பலிக்கவில்லை. மேனகாதேவி போன் செய்து அந்தப் பத்திரிகைக்காரர்களிடம் தன்னால் ஓட்டலுக்கு வர முடியாது என்று கூறிய பத்து நிமிஷங்களுக்கெல்லாம் மறுபடியும் அவர்களே அவளை போனில் கூப்பிட்டு ‘உங்கள் வீட்டுக்கே வந்து உங்களைச் சந்திப்பதில் தனக்கு முன்னைவிட அதிக மகிழ்ச்சி என்று ஜெயமாலா தெரிவிக்கச் சொன்னார்!’ என்பதாகக் கூறிவிட்டார்கள்.

என்னவென்று பெயர் சொல்லிச் சுட்டிக்காட்ட முடியாத ஓர் உணர்வு காரணமாக அந்த இளம் நடிகை குமாரி ஜெயமாலாவை வெறுத்தாள் மேனகாதேவி. புதிதாகத் தலையெடுத்து வந்திருக்கும் அத்தனை இளம் நடிகைகளும் தத்தாரிகள், ஓடுகாலிகள் என்பதுபோல் ஓர் அசூயை அவள் மனத்தில் புகைந்தது. அதைத் தனியாக அசூயை என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. கலை உலகின் பொற்காலம் எல்லாம் தன் நாட்களோடு தீர்ந்து போய்விட்டது என்று நினைக்கும் ஒருவித மனப்பான்மையோடு அதன் மறுபுறமாக இந்த அசூயையும் கலந்திருந்தது.

அதோடு கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்ததில் அந்தப் பத்திரிகைக் காரர்களின் குறும்பும் புரிந்தது, தான் ஏதோ மறைந்துவிட்ட தலைமுறையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரம் போலவும் அந்தக் குமாரி ஜெயமாலா வளரும் தலைமுறையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரம் போலவும் அபிப்பிராயம் வரும்படி பேட்டியை அவர்கள் அமைத்திருப்பதாகத் தோன்றியது. அதையே ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லி அதற்கு இணங்காமல் மறுத்துவிடலாமா என்று யோசித்தாள் மேனகா.

இந்த யோசனைப்படி மேனகாதேவி தன் ஆட்சேபணையைச் சொல்லிய போது பத்திரிகை ஆசிரியர் அதை மிகவும் நாசூக்காக மறுத்துவிட்டார்.

“பேட்டி உங்களுடைய செர்வீசையும் ஸீனியாரிட்டியையும் பெருமைப் படுத்துகிற மாதிரித்தான் இருக்கும். இதில் உங்களுக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகமே வேண்டாம்..”

மேனகாதேவிக்கு மனம் ஒரு நிலைக்கொள்ளாமல் தவித்தது. அப்போது பகல் மணி மூன்று. ஏர்க்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த படுக்கை அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து வேலைக்காரி காப்பி டிரேயை வைத்து விட்டு, “அம்மா, காப்பி” என்று குரல் கொடுத்தாள்.

“முத்தம்மா! இந்தா! உன்னைத்தான்… வெளியிலே ஹாலுக்குள்ளார டீப்பாயிலே கிடக்கிற பத்திரிகை புஸ்தகங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து வை” என்று வேலைக்காரிக்கு உத்தரவு போட்டுவிட்டு முகங்கழுவிக் கொள்ள எழுந்து போனாள் மேனகாதேவி.

குளியலறையிலிருந்து அவள் திரும்ப வந்து காப்பி குடிக்க அமர்ந்தபோது பல வண்ண அட்டைகளோடு கூடிய ஐந்தாறு சினிமாப்பத்திரிகைகளும், தினசரிகளும் அங்கே காப்பி டிரே அருகில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பத்திரிகைகளில் சிலவற்றில் மேனகாதேவியை அன்றிரவு ஏழரை மணிக்குச் சந்திக்கப் போகும் குமாரி ஜெயமாலாவின் படங்கள், வாழ்க்கை வரலாறு குறிப்புக்கள் எல்லாம் வந்திருந்தன. அதில் ஒரு பத்திரிகை ஜெயமாலாவின் மூவர்ணப்படம் ஒன்றை அட்டையிலேயே பிரசுரித்திருந்தது. ஜெயமாலா மிகவும் அழகாயிருந்தாள். அவளுடைய முகமும், கண்களும் துறுதுறுவென்று அழகாக இருந்தன. முல்லை அரும்புகள் சரம் கோர்த்தது போல் படத்தில் காண்போர் மயங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள் ஜெயமாலா. ஒல்லியுமில்லை, பருமனுமில்லை, அழகாக, அளவாக உடற்கட்டு.

ஜெயமாலாவின் படத்தைப் பார்த்ததும் திடீரென்று தன்னுடைய இளமைக்காலத்து ஆல்பங்களை எடுத்துப் பார்க்கவேண்டும் என்று மேனகாதேவிக்கு ஆசையாயிருந்தது. எதிரே தன் அறையில் ஒரு பீரோ நிறைய ஆல்பங்கள் இருந்தன. பீரேவைத் திறக்குமுன் அதில் பதிந்திருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைத் தானே ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் மேனகாதேவி.

கண்ணாடியின் மேல் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. இன்னும் தன் கண்களுக்குள் அப்படியே நினைவிருக்கும் கட்டுவிடாத நெருக்கமான ஜெயமாலாவின் முல்லைப் பல் வரிசையை மறக்க முடியாமல் தன் பற்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டபோது மேனகாதேவிக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

“இளமைக்கும் உனக்கும் இடைவெளி அதிகமாகிறது என்பதற்கு முன்னடையாளமாக உன் பல் வரிசையில் இடைவெளி அதிகமாகும்” என்று எங்கோ படித்திருந்தது அவளுக்கு நினைவு வந்தது. நேற்று வரை சகித்துக்கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடிந்த அந்த முதுமை இன்று உறுத்துவது போலிருந்தது. தன் முதுமையைத் தானே ஏற்றுக் கொள்ளவும் அங்கீகரிக்கவும் அவள் அருவருப்புக் கொண்டாள்.

நிகழ்கால முதுமையை மறக்கவும் மறைக்கவும் அந்தப் பழைய ஆல்பங்கள் பயன்படும் என்பதனால் பீரோவின் கதவைத் திறந்து ஆல்பங்களை எடுத்தாள் அவள்.

ஒவ்வோர் ஆல்பமாகப் பார்க்கப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. இளமையில் இன்று ஜெயமாலா எப்படி இருக்கிறாளோ இதைவிட தான் அழகாயிருந்திருக்கிறோம் என்று பெருமையாயிருந்தது அவளுக்கு.

மாலை மணி ஆறு. இரண்டு மூன்று மணி நேரம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. நாடக மேடைக் காலத்திலிருந்து எடுத்த பல புகைப்படங்களைப் பார்த்ததில் மேனகாவுக்குத் தெம்பு பிறந்தாற்போலிருந்தது.

இப்போது தன்னுடைய கடந்த காலத்தின் சாதனைகளையெல்லாம் நினைவ கூர்ந்துவிட்டு மறுபடியும் எண்ணியபோது ஜெயமாலாவைப்போல் ஒரு கத்துக் குட்டியை நினைத்துத் தன்னைப்போல் ஒருத்தி பொறாமைப்பட்டதே தவறென்று தோன்றியது அவளுக்கு.

சிங்கம் கொசுவை நினைத்துப் பொறாமைப்படுவதாவது?

டெலிபோன் மணி அடித்தது. வேலைக்காரி இருந்தால் போனை முதலில் அவள் தான் எடுத்து யார் என்று கேட்க வேண்டும். அவள் இல்லாததால் மேனகாதேவியே போனை எடுத்தாள்.

எதிர்ப்பக்கம் ஓர் இனிய குரல் ஒலித்தது.

“வணக்கங்க. நான்தான் ஜெயமாலா பேசறேன்.”

“உம்ம்…. வணக்கம். என்ன விஷயம்?…”

“ஒண்ணுமில்லேங்க… அதான் அந்தத் தாழம்பூ’ வார இதழ் பேட்டி விஷயமா உங்க வீட்டுக்கு வரணுமே..?”

‘எப்படி வரப்போறீங்க? நான் வண்டி அனுப்பட்டுமா? டாக்ஸின்னா கிடைக்கிறது கஷ்டம்… செலவும் ரொம்ப ஆகும்…”

“அதொண்ணும் சிரமமில்லீங்க… எங்கிட்ட ஒரு சின்ன வண்டி இருக்கு.. டிரைவர் இன்னிக்கு வரலே…. அவன் வரலேன்னா எப்பவாவது நானும் ஓட்டறதுண்டு; இன்னிக்கு உங்க வீட்டுக்கு நானே ஓட்டிக்கிட்டு வரலாம்னு இருக்கேன்.”

“நாலு படத்திலே நடிக்கிற பொண்ணு நீயே காரை ஓட்டிக் கிட்டு வந்தால் தெருவிலே வேடிக்கை பார்ப்பாங்களே…?” முதலில் கொடுத்த ‘நீங்க’ மரியாதையை மாற்றி மேனகாவே ‘நீ’ போட்டாள்.

“அதெல்லாம் பழைய காலம். இப்பல்லாம் அப்படி யாரும் பார்க்கமாட்டாங்க…”

“சரி! உன் இஷ்டப்படி நீயே ஓட்டிக்கிட்டுத்தான் வாயேன்.”

போனை வைக்கும் போது எரிச்சலோடு வைத்தாள் மேனகாதேவி. ‘நடிக்க ஆரம்பிச்சுப் பத்து வருஷங்களுக்கு அப்புறம்தான் அந்த நாளிலே நான் ஒரு காரைப் பற்றியே யோசிக்க முடிஞ்சுது. இப்ப என்னடான்னாப் போன வருஷம்தான் நடிக்கத் தொடங்கின இந்தக் கத்துக்குட்டி இப்பவே தங்கிட்டக் கார் இருக்குங்கிறா. ஏதோ இவதான் நவீன நாகரிகத்தின் பிரதிநிதி போல, ‘அதெல்லாம் பழைய காலம்’னு என்னைக் குத்திக் காட்டிப் பேசறா. ஓட்டத் தெரியாம ஓட்டி எங்கேயாவது கையைக் காலை, ஓடிச்சுக்கப் போறா, என்று மேனகாதேவி நினைத்தாலும் அவளுடைய உள்மனம் வேறு எதை எதையோ எண்ணிப் புகைந்தது.

‘நான் பார்க்காத காரா? பெட்ரோல் விலை ஏறினதாலே சின்ன வண்டியை வைச்சிக்கிட்டுப் போன வருஷம்தான் கப்பல் போன்ற காடிலாக்கை விற்றேன். ஒரு மரியாதைக்கு நான் இங்கேயிருந்து வண்டி அனுப்பட்டுமான்னு கேட்டால் உடனே தங்கிட்டவும் வண்டி இருக்குன்னு சொல்லிக் காமிக்கிறா. சரியான திமிர்ப்பிடித்தவளா இருக்கிறாளே.’

மணி ஆறரைக்குத் தாழம்பூ ஆசிரியர் போன் செய்து தங்கள் அலுவலக உதவி ஆசிரியர் புறப்பட்டு விட்டதாகவும், ஜெயமாலா அவளுடைய வண்டியிலேயே வந்துவிடுவாள் என்பதாகவும் தெரிவித்தார்.

‘ஜெயமாலா வருகிறாள்’ என்று கட்டியம் கூறுவதுபோல் அவளும் மற்றவர்களும் சொன்னது மேனகாதேவிக்கு எரிச்சலூட்டியது.

‘வந்தால் வரட்டுமே! இதற்கு ஏன் இத்தனை ‘பராக் பராக்’ போடுகிறார்கள்? நான் என்ன வாசலில் போய் ஆரத்தி எடுக்க வேண்டுமோ?’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தாள் அவள் அந்த ஆத்திரத்தில் வேலைக்காரி முத்தம்மாவைக் கூப்பிட்டு,

“இந்தா முத்தம்மா! யாரோ வெட்டிப் பசங்க பார்க்க வராங்க. காப்பி, டிபன், எதுவும் வேணாம். கேட்டால் மட்டும் குடிக்கத் தண்ணி குடு, போதும்!” என்று கடுமையாக உத்தரவு பிறப்பித்தாள். பின்பு தன்னை அலங்கரித்துக் கொண்டு தயாராக முன் ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

முதலில் பத்திரிகை உதவி ஆசிரியரும் சுருக்கெழுத்தரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தார்கள். அப்புறம் கால் மணி நேரம் கழித்து பியட்கார் மெல்ல வந்து நின்றது. அதிலிருந்து குமாரி ஜெயமாலா இறங்கி வந்தாள்.

படத்தில் தெரிந்ததைவிட நேரில் அவள் மேலும் அதிக அழகோடு இருப்பதாக மேனகாதேவி உணர்ந்தாள்.

என்றாலும் கொஞ்சம் அமுத்தலாகவே அவளை வரவேற்றாளே ஒழிய உற்சாகம் காட்டவில்லை. மலர்ச்சியாகவும் இல்லை.

“நீங்கள் எனக்கு அம்மா மாதிரி. என்னை ஆசீர்வாதம் பண்ணனும்” என்று வணங்கிவிட்டு ஜெயமாலா கூறியபோது கூட அவள் தன் வயதைச் சுட்டிக்காட்டிக் கிண்டல் செய்யவே ‘அம்மா’ மாதிரி என்று சொல்வதாக மேனகாவுக்குக் கோபம் வந்தது.

பேட்டி தொடங்கியதுமே அந்தக் கோபத்தைத் தன் பதிலில் காட்டினாள் மேனகாதேவி.

“எங்க நாளிலே எல்லாம் இந்தக் காலத்தைப்போல யாராவது ரெண்டு புரொட்டியூஸருக்கு முன்னாலே பல்லிளிச்சுக் காட்டி மறுநாளே ஹீரோயினா ஆயிட முடியாது. எவ்வளவோ உழைச்சு நடிச்சாத்தான் படிப்படியா முன்னுக்கு வரமுடியும்; இன்னிசை மன்னர் எல்லப்ப பாகவதர் பதினைஞ்சு வருஷங்கள் முடிசூடா மன்னராக இருந்தார். அப்ப இந்த ஃபீல்டிலே அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கவும் பாடவும் முடிந்த கதாநாயகி நான் ஒருத்திதான். இப்ப மாதிரி வாயசைச்சு யாரோ பின்னாலே இருந்து பாடற காலமில்லே அது.”

இதைக் கேட்டு ஜெயமாலா மிகவும் கடுமையாகப் பதில் சொல்லக்கூடும் என்று மேனகாதேவி நினைத்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்குப் பின்பும் ஜெயமாலா மிகவும் வினயமாகவும் அடக்கமாகவுமே பதில் சொன்னாள்.

“இவங்க சொல்றது உண்மை. அந்த நாளிலே இவங்க உழைச்ச அவ்வளவு உழைப்பு இன்னிக்கு நடிக்கிற எங்ககிட்டே இல்லே. ஆனா அந்த நாளிலே இவங்களுக்குக் கிடைக்காத பல வசதிகளெல்லாம் எங்களுக்கு இப்பக் கிடைக்குது. அதிகத் தியேட்டர்கள் பெருகித் தொழில் வளர்ந்ததுதான் காரணமே ஒழிய எங்கள் உழைப்பு, வளர்ந்தது என்று கூற முடியாது. இந்த வகையிலே மேனகா அக்கா மாதிரி இருக்கிறவங்கதான் எங்க குரு மாதிரி இருந்து வழி காட்டணும்.”

அவள் தனக்கு அக்கா பட்டம் போட்டதுகூடத் தன் முதுமையைத் தனக்கு ஞாபகப்படுத்துவதற்குத்தானோ என்று தோன்றியது மேனகாவுக்கு.

மேலும் முக்கால் மணி நேரம் அவர்கள் உரையாடல் நீடித்தது. முதலிலிருந்து ஜெயமாலாவையும் அந்தப் பத்திரிகைக்காரர்களையும் தன் எதிரிகளாகப் பாவித்துக் கொண்டதால் மேனகாதேவியின் பதில்களெல்லாம் காரமாகவும் இளம் நடிகைகளையும் புதுக் கதாநாயகிகளையும் குத்திக் காட்டுவதாகவுமே இருந்தது. ஆனால் ஜெயமாலாவின் பதில்கள் எல்லாம் நிதானமாகவே இருந்தன. இறுதியாக, “சென்ற தலைமுறையின் சிறந்த நடிகை என்ற முறையில் நீங்கள் கலைத்துறையில் விரும்புவது என்ன?” என்ற கேள்வியை மேனகாவிடம் கேட்டபோது, அவள் காட்டமாக, “புதிய தலைமுறைக் கத்துக்குட்டி நடிகைகளுக்குப் பாடம் புகட்டுவதற் காகவாவது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துக் காட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னாள். ஆனால் அதே கேள்வியை, “புதிய தலைமுறையின் இளம் நடிகை என்ற முறையில் நீங்கள் விரும்புவது என்ன?” என்று குமாரி ஜெயமாலாவிடம் கேட்டபோது,

“நான் தாயில்லாப் பெண்ணாக வளர்ந்தவள். மேனகாதேவியைப் பார்க்கும் போது என் அன்னையிடம் எழும் மரியாதை எனக்கு எழுகிறது. வாழ்வில் இல்லாவிட்டாலும் ஒரு படத்திலாவது அவர்கள் என் அன்னையாக வர நான் மகளாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று பவ்யமாகப் பதில் கூறினாள்.

இந்தப் பதில் மூலம் கூட மேனகாவின் கோபம் தணியவில்லை. ‘நீ அம்மாவாக நடிக்கத்தான் லாயக்கு’ என்று தன்னை அவள் நாசூக்காகக் கேலி செய்கிறாளோ என்று சந்தேகமாக இருந்தது மேனகாவுக்கு.

“என்ன காரணமோ தெரியவில்லை. இந்தச் சந்திப்பு, பேச்சு எல்லாமே மேனகாவும் ஜெயமாலாவும் ஒருவர் மீது ஒருவர் நடத்திய பட்டி மண்டபம் போல் அமைந்துவிட்டது. ஜெயமாலா பக்கம்தான் நிதானம் தெரிகிறது.

“மேனகாதேவி பக்கத்திலிருந்து ஒரே தாக்குதல் மயம் தான்” என்று பத்திரிகையிலிருந்து வந்திருந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பேட்டி அவர்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

ஜெயமாலாவுக்கோ தான் இவ்வளவு விட்டுக் கொடுத்து வினயமாயிருந்தும் மேனகாதேவி தன்மேல் ஏன் அவ்வளவு விரோத பாவம் கொண்டாடுகிறார் என்பது புரியவில்லை. அவள் மனம் உள்ளூறப் புண்பட்டது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளித்தாள் அவள். மேனகாதேவியைப்போல் முதிர்ந்த நடிகை இவ்வளவு தூரம் தொழிற் பொறாமை உள்ளவளாக இருக்க முடியும் என்று ஜெயமாலா எதிர்பார்க்கவேயில்லை. தன்னைப்போல் படித்துப் பட்டம் பெற்று ஓர் ஆவலோடு கலைத்துறையில் பிரவேசித்திருக்கும் இளம் நடிகையிடம் மேனகாதேவிக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று புரியாமல் – அதை எல்லார் முன்னிலையிலும் வெளிக் காட்டிக் கொள்ளவும் முடியாமல் பதறினாள் ஜெயமாலா.

பேட்டி முடிந்ததும் அதைப் பற்றித் திருப்தி இல்லாத நிலையில் அரைகுறை மனத்தோடு முதலில் பத்திரிகையாளர்கள் விடைபெற்றுக் கொண்டு வெளியே புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டதும் மேனகாதேவி தன்னிடம் ஏதாவது பேசுவாள் – அப்படிப் பேசினால் அவளுடைய தேவையில்லாத கடுமையையும் வெறுப்பையும் விரோத பாவத்தையும் மாற்ற முயற்சிக்கலாம் என்று எண்ணிச் சிறிது நேரம் அங்கேயே தாமதித்தாள் ஜெயமாலா.

ஆனால் அந்தத் தாமத்துக்கு ஒரு பயனும் விளையவில்லை. “அப்போ… எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு…” என்று வெட்டிவிட்டாற்போலக் கூறிவிட்டு மேனகாதேவி எழுந்துவிடவே ஜெயமாலாவும் புறப்பட வேண்டியதாயிற்று.

“நான் வரேன் அக்கா!” என்று வணங்கிவிட்டுப் புறப்பட்ட ஜெயமாலாவுக்குக் கையும் காலும் பதறியது. மேனகாதேவி முகத்தை முறித்தாற்போல் தன்னை அனுப்புவதாகப் பட்டது அவளுக்கு. இவ்வளவு பாசத்தோடும் மரியாதையோடும் பழகிய தன்னிடம் மேனகாதேவி ஏன் அவ்வளவு கடுமையாக இருக்கிறாள்?’ என்றெண்ணிக் குழம்பிய மனத்தோடு காரை ஸ்டார்ட் செய்த ஜெயமாலா பதற்றத்திலும், மனக்குழப்பத்திலும் கியரை நியூட்ரல் செய்யாமல் கிளப்பவே மின்வெட்டும் வேகத்தில் காரியம் கைமீறி விட்டது. கார் சீறிப் பாய்ந்து போர்டிகோ சுவரில் மோதி ஸ்டியரிங்கில் ஜெயமாலாவின் முகம் இடித்து மூக்கிலும் நெற்றிப் பொட்டிலும் இரத்தம் கசியத் தொடங்கியது. கார் மோதிய சத்தம் கேட்டு மேனகாதேவியும் வேலைக்காரி முத்தம்மாவும் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள்.

மோதிய சுவர் சரிந்து வண்டி நின்று போய் என்ஜின் ஆஃப் ஆகிவிட்டது ஜெயமாலா டிரைவர் வீட்டிலேயே நினைவு தப்பி மூர்ச்சை ஆகியிருந்தாள்.

“அடிபாவி! என்ன காரியம் பண்ணினே? பார்த்து ஓட்டப்படாதா?” என்று பதறிக் கூவியபடியே ஓடிவந்த மேனகாதேவி வேலைக்காரியின் உதவியோடு முன் வீட்டின் கதவைத் திறந்து ஜெயமாலாவைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டுக்குள் படுக்கையில் கிடத்தினாள். முதலுதவிகளைச் செய்துவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையிலிருந்து ‘பிரக்ஞை’ வந்ததும் டாக்டருக்கு போன் பண்ணினாள்.

“என்ன? ஏன் இப்படி ஆச்சு? பார்த்து ஓட்ட வேண்டாமா?” என்று மேனகா கேட்டபோது, “ஏதோ மனக்குழப்பதிலே ஓட்டினேன், இப்படி ஆயிடுச்சு. என்னாலே வீணா உங்களுக்குச் சிரமம்?” என்று ஜெயமாலா பயந்தபடியே சொன்னாள். நல்லவேளை சிராய்ப்பைத் தவிர பெரிய காயம் எதுவுமில்லை.

“அசடுமாதிரிப் பேசாதே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நான் தெய்வத்தைப் பிரார்த்திச்சேன். எனக்கென்ன சிரமம்? சுவர் போனால் கட்டிக்கலாம். உயிர் போனா வருமாம்மா? நீ இனிமே கார் ஓட்டப்படாது” என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் அருகே அமர்ந்து அவள் தலையை ஆதரவாகக் கோதிவிட்டாள் மேனகா.

ஜெயமாலாவால் இந்தப் பரிவை நம்பவே முடியவில்லை. சற்றுமுன் அவ்வளவு கடுமையாக இருந்த மேனகாவா இப்படி மாறினாள் என்று வியப்போடு அவளை ஏறிட்டுப் பார்த்தாள் ஜெயமாலா.

“யார் கண்ணோ பட்டிருக்குதம்மா! திருஷ்டி கழிக்கணும்…” என்றாள் அருகே நின்ற வேலைக்காரி முத்தம்மா.

“பாவி! என் கண்ணேகூடப் பட்டிருக்கும்டீ” என்று மேனகாவே வாய் திறந்து கூறியபோது,

“அப்படிச் சொல்லாதீங்க அக்கா! என் ஆசை இப்ப நிறைவேறிடிச்சு. ஒரு படத்திலேயாவது நீங்க என் அம்மாவா நடிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். இப்ப நிஜமாவே நீங்க என் அம்மா மாதிரி ஆயிட்டீங்க!”

“என் செல்லக்கிளியே! நீ கொள்ளை அழகும்மா ஆண்டவன் புண்ணியத்திலே உன் முகத்துக்கு ஒரு குறையும் வராமத் தப்பினியே; எனக்கு அது போதும்!”

“நீங்க இப்படிப் பேசணும்னு தவிச்சுத்தான் நான் மனம் பதறினேன் அக்கா…”

“என்னவோ என் புத்தியைச் செருப்பாலே அடிக்கணும். பொறாமை என் கண்ணை அவிச்சுது. என்னென்னமோ பேசினேன். பாவி என் கண்ணேறுபட்டே இப்படி ஆகியிருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பத்திரிகை ஆசிரியர் வீட்டுக்குப் போன் பண்ணி, “இன்னிக்கு எடுத்த பேட்டியைப் போட வேண்டாம் ஸார். அதிலே எங்க ரெண்டு பேருக்குமே திருப்தி இல்லே. நாளைக்கு வரை ஜெயமாலா இங்கே எங்க வீட்டிலேதான் இருப்பா. மறுபடியும் நாளைக்கு உங்க உதவி ஆசிரியரையும் ஸ்டெனோவையும் இங்கே அனுப்புங்கோ” என்றாள் மேனகா. கார் விபத்தை அவள் பத்திரிகை ஆசிரியரிடம் சொல்லவில்லை.

டாக்டர் வந்தார். மூக்கில், நெற்றியில் சின்ன பிளாஸ்திரி போட்டுவிட்டு ஓர் ஏடிசி இன்ஜெக்ஷன் கொடுத்தார்.

“பெரிசா ஒண்ணுமில்லே. ரெண்டு நாள் ஸ்டுடியோ பக்கம் எங்கேயும் போக வேண்டாம். கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுத்துக்கணும்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

“ஏன் அக்கா அந்தப் பேட்டி வேணாம்னீங்க?” என்றாள் ஜெயமாலா.

“பேட்டியா அது? அதை யாராவது படிச்சா என் வயிற்றெரிச்சல்தான் அதில் தெரியும்.”

ஜெயமாலா பதில் சொல்லாமல் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறே?”

“ஒண்ணுமில்லே! அந்தப் பேட்டி முடியறப்போ நீங்க ஓர் உயர்ந்த கலைஞர்னு மட்டுமே நினைச்சேன். உங்களை உயர்ந்த மனிதப் பண்புள்ளவங்கன்னும் இப்போ புரிஞ்சுக்கறேன். நாம ரெண்டுபேரும் கலைஞர்கள் என்பதைவிட மனிதர்கள் என்பதுதான் நிரந்தரமான உண்மை அக்கா.”

“என்னை மன்னிச்சுடும்மா! நான் ஒரே காழ்ப்பு வெறியிலே இருந்தேன். என்னென்னமோ உளறிக் கொட்டினேன்” என்று கூறியபடி கண்களில் நீர் நெகிழ மேனகாதேவி ஜெயமாலாவின் பக்கம் திரும்பியபோது தற்செயலாக எதிரே நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் பிரதிபிம்பத்தைத் தானே பார்த்துக் கொண்டாள். தான் மூத்திருப்பதாகவோ, கிழடு தட்டியிருப்பதாகவோ இப்போது அவளுக்குத் தெரியவில்லை. எப்போது அகங்காரம் அழிகிறதோ அப்போதுதான் பெண் தாயாகிறாள்.

மூப்பு, துயரம், பகை எல்லாமே சொந்த அகங்காரத்தின் பிரதிபிம்பமாகத்தான் இருக்க வேண்டும் என்று இப்போது மெல்ல மெல்ல அவளுக்குப் புரிந்தாற்போல் இருந்தது. பிறரைப் பொறுத்துக்கொள்ள முடியாதபோது ஏற்படுகிற காழ்ப்புணர்ச்சியின் பிரதிபிம்பம்தான் மூப்பாகிவிடுமோ என்னவோ? அந்த மூப்பு இப்போது அவளிடம் இல்லை.

– அமுதசுரபி, தீபாவளி மலர், 1964, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *