பிணம் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,240 
 

மிக உயரமான பாறை மேல ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பொந்தில் இருந்த கருநாகம் தீண்டி உயிர் போய்விட்ட மலைஜாதி இளைஞன் ஒருவனை அவனுடன் சென்றிருந்த மலைஜாதி இளைஞர்கள் அவன் உடம்பை நார்களால் கட்டி ஒரு தொட்டில் போல வைத்து,பிணத்தை சுமந்து கொண்டு மெல்ல இறங்கிக் கொண்டிருந்தனர்.

ம். வேகமா நடந்தா, குடிலுக்கு கொண்டு போயிடலாம்,

செங்குத்தா இருக்கு மெதுவாத்தான் போகமுடியும், கொஞ்சம் தடுமாறினாலும், நாலு பேரும் உருண்டுடுவோம். நேரம் ஆக ,ஆக, கனம் கூடிகிட்டே போகுது.

இதுக்கொசரம் ரோடு வெட்டி கொடுத்தா என்ன இந்த கவெர்ன்மென்ட்டு !

சும்மா புலம்பாத, அப்புறம் காட்டுக்குள்ள இருக்கற நம்மளை நாட்டுக்குள்ள வந்து இருன்னு சொல்லுவானுங்க, நம்மளை மாதிரி மலைசனுங்க நாட்டு மனுசங்ககூட இருக்க முடியாது, எல்லாம் பொறாமை புடுச்சவனுங்க. நம்ம வெள்ளாமையை கூட குறைச்ச விலைக்கு ஏமாத்திதான வந்து வாங்கிக்குக்கறான், ஆளு செத்து தேன் எடுக்கறோம், வந்து வாங்கறவன் ஏமாத்திதானே வாங்கறான்.

இன்னொரு மலைஜாதி இளைஞன் சொன்னான், பாரு செத்தானே இருளப்பன் இவனுக்கு இந்த காடுன்னா ரொமப இஷ்டம், அவன் சுத்தாத இடமே இல்லை, இந்த காடு மலை இதுதான் நம்மபூமி, தாய் எல்லாம் அப்படீன்னு சொல்லிகிட்டே இருப்பான். பாவம் அவன் நேசிச்ச காட்டுலயே அவனால முழுசா வாழமுடியலை.

கொஞ்சம் இறக்கி வைச்சுட்டு அந்த சுணையில தண்ணி குடிச்சு, உட்கார்ந்து போவமே பிணத்தை இறக்கி வச்சு போனா நரியோ, காட்டுநாயோ வந்து இழுத்துடுச்சுன்னா? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, சீக்கிரம் தண்ணி குடுச்சுட்டு வந்து உக்காந்துக்கலாம்.

அவர்கள் சுணையில் தண்ணீர் குடித்து வந்தபொழுது பிணம் காணாமல் போயிருந்தது. பிணத்தை காணோம், அப்பவே சொன்னேன், நாய் நரி இழுத்துட்டு போயிருமுன்னு,

நரி இழுத்திருந்தா நமக்கு சத்தம் கேட்டிருக்கும், அவனை காட்டியிருந்த கயிறு ஒண்ணுகூட கலையாம இருக்கு பாரு. அப்படீன்னா பிணம் எப்படி போயிருக்கும்.

அவர்கள் தலைமேல் கைவைத்து, உட்கார்ந்தவர்கள், சரி தேடி பாப்போம், தேடுகிறார்கள், தேடுகிறார்கள்,…இரவு முழுக்க தேடுகிறார்கள். பிணத்தை காணோம். சோர்ந்து போய், இறக்கி வைத்த இடத்துக்கே மீண்டும் வந்து பார்க்க, பிணம் அப்படியே கட்டுக்குள் பத்திரமாய் படுத்துக் கிடக்கிறது.

பிணம் இருக்குதுடா, மகிழ்ச்சியாய் கூவிக் கொண்டு பிணத்தின் அருகில் சென்று பார்க்க, பிணத்தின் கால்பாதம் முழுக்க சேறும் சகதியும், கால்ளை சுற்றி செடிகொடிகளின் துண்டுகள் சிக்கியிருந்தன !…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *