பாவனாசம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 7,703 
 

அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம்.

மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட கனா தந்திராதே, நோய் ,நொடி தந்திராதே என்று வேண்டுதல் முடித்தான்.

பாவனாசத்திற்கு ஆத்துப்பால இசக்கியம்மன் மேல அத்தனை பயம்.

கல்யாணி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திட்டு கல்லிடைக்கு போக பயந்து முத்தாச்சி வீட்டிலயே தங்கிடுவான்.

குறிப்பன் குளம் தாண்டி அப்பத்தா வீட்டுக்கு ஆலங்குளம் போகையில வழி முழுக்க அருவா தூக்கிய சுடலைமாட சாமிகளை கண்டா அன்னிக்கு சிவராத்திரி தான்.

அப்படியே தூங்கினாலும் டவுசர் படுக்கை எல்லாம் நனைஞ்சு போயிருக்கும்.

ஆத்தா கோமதி கேன்சர் கட்டி வந்து பாளையங்கோட்டை பெரியாஸ்பத்திரியில செத்தா.
அடுத்த மாசம் அப்பன்காரன் சிவந்திபுரத்துக்கார அழகம்மாவ இரண்டாந்தாரம் கட்டினார்.

அது தொடக்கம் புடிச்ச சனி இப்பம் வரை விடவில்லை.

பள்ளிக்கூடத்தை நிறுத்தி லேனா கொத்தனாருக்கு எடுபிடி ஆகி ரண்டு வருஷம் ஆயாச்சு.

நெதமும் கூலிக் காசை கொடுத்தாத்தான் சோறு போடும் சித்தி.

இந்த வெளங்காதவனை எந் தலையில கட்டிட்டு போயிட்ட மவராசின்னு அம்மாவே திட்டிக் கிட்டே நெட்டி முறிக்கும்.

இப்படி எதோ நினைப்பில் வந்தவன் பின்னால் பாக்காம வலப்புறம் சைக்கிளை ஒடிச்சான்.

அசுர வேகத்தில் வந்த செங்கோட்டை பேருந்து மோதி செத்துப் போனவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை.

வானத்திலிருந்து வந்திரங்கிய கந்தன் பாட்டையா ‘வாடா பாவனாசம்’ நம்மூட்டுக்கு போலாம் என்றார்.

காத்தா பறந்துக்கிட்டே பாட்டையா கையப் பிடிச்சபடி அம்பையை பார்க்க சொர்க்க லோகமா இருந்தது.

ஆத்துப்பால சுடுகாட்டு இசக்கியம்மன் கோவில் ஒட்டி வந்த பாட்டையா அவனை , “ ஏல நல்லா கும்டுக்க இன்னமே இங்கதான் இருக்கப் போறோம்” என்றார்.

இப்ப இசக்கியம்மன் கோயிலோ, எரிச்சாமுடையார் கோவிலோ இல்ல நடுக்காட்டு மாடனோ பார்க்க பயமாயில்லை பாவனாசத்துக்கு.

கும்பிட்டு துன்னூறு பூசி பாட்டையா கூட அந்த ஆலமரத்தில் கதை கேட்க வந்தால் அங்க திசையன்விளையில கட்டிக் கொடுத்த, தூக்கு மாட்டி செத்துப் போன பகவதி அக்காவை பார்த்ததில் அவனுக்கு தலைகால் புரியாத சந்தோசம்.

வாழ வந்தா கோவிலில வில்லுப்பாட்டு கதை கேட்டபடி, கந்தன் பாட்டையா மடியில தலையும், பகவதி அக்கா மடியில் காலுமா சிரித்தபடி தூங்கிப் போனான் பாவனாசம்.

ரஹ்மத் புரோட்டா ஸ்டால் வாசலில் விபத்து நடந்த இடத்தில் தலை விரி கோலமா, “தவிக்கவுட்டு போயிட்டயே. தாயில்லா உன்னை தாயாயிருந்து வளர்த்தேனே”, என்று அழது சீன் போட்டுக் கொண்டிருந்த அழகம்மையை தேற்றிக் கொண்டிருந்தார் பாவனாசத்தின் அப்பா.

Print Friendly, PDF & Email

1 thought on “பாவனாசம்

  1. பாவனாசம் பாத்திரப்படைப்பு ரசிக்கும்படியாக இருந்தது. விறுவிறுப்பான நடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *