பாலூத்தியாச்சு…!

 

நான் முதன்முதலாக எந்த பெரு நகரங்களுக்குச் சென்றாலும் அந்த ஊர் பேருந்து நிலையத்தை நன்றாக சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதில் நிறைய பிரயோஜனங்கள்.

நகர பேருந்து நிற்குமிடத்திற்குச் சென்றால்….. பேருந்துகளில் இருக்கும் பெயர் பலகைகளைப் பார்த்து சுற்றுப்பட்ட ஊர்களைத் தெரிந்து கொள்ளலாம். அங்கு கூடி இருக்கும் மக்களை பார்த்து அவர்கள், பேச்சு, நடைமுறை பழக்க வழக்கங்களை ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளலாம்.

தொலைதூர பேருந்து நிற்பிடங்களுக்கு வந்தால்… இங்கிருந்து என்னென்ன நகரங்களுக்குத் தொடர்பு என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது அடுத்து வரும் எனக்கும் வசதி. புதிதாக செல்பவர்கள் வந்து கேட்டால் விபரம் சொல்லலாம்.

நான் சேலம் பேருந்து நிலையத்தில் இப்படித்தான் நின்றேன். அந்த புதிய பேருந்து நிலையம் பல ஏக்கர் நிலங்களில் பிரமாண்டமாக இருந்தது. பல பிரிவுகளாக இருந்தது. நூற்றுக் கணக்கான பேருந்துகள் நின்றன.

” ஐயா. ..ஆ ! தர்மம் ! ” ஒரு பிச்சைக்கார முதியவர் எதிரில் நின்றார்.

” சில்லறை இல்லை ! ” சொல்லி நகர்ந்தேன்.

எனக்கு பிச்சைக்கார்களைப் பிடிக்காது.

‘நமது பரோபகார சிந்தையை மூலதனமாக்கி உழைக்காத சோம்பறிகள் அவர்கள். தொழிலாகவே ஆக்கி விட்டார்கள். ! ‘ – வெறுப்பு.

வாசலில்…… பெரிய வரிசையில் நிறைய கடைகள்.

கூட்டம் இல்லாத டீ கடையில், ” டீ ” – சொன்னேன்.

அவன் உடனே கொடுத்த டீயை ஊதி குடிப்பதற்குள்….

குரங்கு வேடம் போட்ட ஒரு சிறுவன் பெறுவான் அசல் ராமர் அனுமார் போலிருந்தான்.

அவனுடன் சீதை வேடம் போட்ட சிறுமி ஒருத்தி.

இருவரும்… நிற்பவர்களிடம் கையேந்தி வந்தார்கள்.

அவர்கள் வேடத்தைப் பார்த்து, ”ராமா ! ராமா ! ” என்று ஒரு பாட்டி பயபக்தியாக கன்னத்தில் போட்டு முந்தானையை வெகு சிரத்தையாகப் பிரித்து காசு போட்டாள்.!!

அதை பார்த்த எனக்கு, ‘ மக்கள்கள் திருந்தவே மாட்டார்கள் ! ‘ – எனக்குள் வெறுப்பு வந்தது.

அடுத்து… அவர்கள் என்னிடமும் வந்தார்கள்.

நான் டீ குடிப்பதை நிறுத்தி, ” நகரு..! ” என்று சொல்லியும் நின்றார்கள்.

டீக்கடைக்காரனுக்குக் கோபம் வந்தது.

” சுடுதண்ணியை ஊத்திடுவேன். வியாபாரத்தைக் கெடுக்காம போங்க அந்தண்டை ! ” பாய்லரைத் தொட்டான்.

சிறுவர்களுக்குப் பயம். நகர்ந்தார்கள்.

” இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற சனியன் ! ” முணுமுணுத்தார்.

” வரிசையா வருவானுங்க போட்டுத் தொலையனும். ” அழுது கொண்டே என்னிடம் மீதி காசை நீட்டினார்.

வெள்ளி, செவ்வாய் என்றால் கோவில்களிலும் தொல்லை.! கடைக்கார்களுக்கும் தொல்லை. !!

பக்கத்து கடையில் நான் சிகெரட் வாங்குகையில்… ஒரு பாட்டில் மேல் மூடியில் ஒன்று, இரண்டு ருபாய் நாணயங்களாக இருந்தது.

” எதுக்கு இது. .? ” விபரம் புரியாமல் கேட்டேன்.

” எல்லாம் வெள்ளிக்கிழமை விசேசம்தான் ! ” என்றார் வெறுப்பாய்.

” பிச்சைக்காரர்களுக்கா. .? ”

” ஆமா. .”

” தானா எடுத்துப்பாங்களா. .? ”

” ஆமாம் ”

” அதிகமா எடுத்துக்க மாட்டாங்களா. .? ”

” ஆளுக்கு ஒத்தை ரூபாய்க்கு மேல் எடுத்தால் உதை ! ” அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

” இப்படி… இன்னைக்கு எவ்வளவு செலவாகும். .? ”

” ஐம்பதுக்கு மேல் காலியாகும் ! ”

எனக்கு சிகரெட் கையைச் சுட்டது. தூக்கி எரிந்து மிதித்தேன்.

பேருந்து நிலையத்தின் மேற்கு பக்கம் போகலாமா, கிழக்குப் பக்கம் போகலாமா. . பார்த்தேன்.

கிழக்குப் பக்கம் உள்ள பிளாட்பாரங்களில் கூட்டம் இல்லை. கடைசி நிறுத்தம் வெறிச்சோடிக் கிடந்தது. எவரெவரோ திக்காலுக்கொருத்தராய்ப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

மேற்கில் நடந்தேன். பெங்களூரு, கோயம்பத்தூர், சென்னை, திருச்சி பிளாட்பாரங்களில் கூட்டம் அதிகமிருந்தது. வந்த பேருந்துகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். அவரவர்களுக்கு அவசரம்.

” ஐயா. .! பசி ! தர்மம் பண்ணுங்க. .” எதிரில் பதிமூன்று பதினான்கு வயதில் வளர்ந்த சிறுமி ஒருத்தி தோளில் ஒரு மாத குழந்தையுடன் கையேந்தினாள்.

குழந்தை சிகப்பாய் இருந்தது. நாறுந்தோலுமாக துவண்டிருந்தது. உடலில் உயிர் மட்டும் இருந்தது. கண் விழிக்காமல் தூங்கி… வாயில் ஈ மொய்த்தது.

அவளைத் தொடர்ந்து கோவணம் கட்டிய ஐந்து வயது சிறுவன். அழுக்குப் பாவாடை அணிந்த மூன்று வயது சிறுமி.

‘ கூன், குருடு, செவிடு, நொண்டி, முடம், காவி கட்டிய சாமிகள் , இப்படி குழந்தையைக் கட்டி கெஞ்சுபவர்கள். அட. .’ எத்தனைக் கொள்ளைக்கு கூட்டங்கள். ?! ‘ எனக்குள் வெறுப்போ வெறுப்பு. !!

” குழந்தை பசியால் வாடிப்போச்சு சார் பாலூத்தனும். ..” அவள் நீட்டிய கையை மடக்கவில்லை.

” குழந்தை யாருது. .? ” கேட்டேன்.

” என் தங்கச்சி ! ”

” அம்மா அப்பா ..? ”

”இல்லே ! ”

” இந்த பொடிசுகள். .? ”

” தம்பி, தங்கச்சி ..”

” மொதல்ல இந்த குழந்தைக்குப் பால் வாங்கி ஊத்து. உசுர் போயிடும்போலிருக்கு. ” பிச்சையே போடாத நான்… குழந்தை நிலைப் பார்த்து ஐந்து ருபாய் கொடுத்தேன்.

இதுதான் அவர்கள் பலம். நகர்ந்தார்கள்.

நானும் நகர்ந்தேன். நகர்ப் பேருந்து நிறுத்தங்களில் நிறைய நாட்டுக்கட்டைகள்.!?

” எலோ .. ராமசாமி ! மேட்டூர் பஸ் எப்போ வரும். .? ”- யாரோ குரல்.

” அதோ. . அங்கெ நிக்கிது ஆத்தா. .” சிறுவன் கூக்குரல் பதில்.

” எங்க ஊர் பஸ் எப்போ வரும். .? ”

” இப்போ வந்திடும். .! ” இப்படி நிறைய பேச்சுகள், விதவிதமான கரைச்சல்கள்.

இப்போது அந்த சிசுவை சிறுவன் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கையேந்தினான். சிறுமி பக்கத்தில் வந்தாள். அந்த வயசு பெண்ணைக் காணவில்லை. அவசரம் எங்காவது போயிருக்கலாம்.

குழந்தை தலை அவன் தோளை விட்டுத் தொங்கியது. அதை அவனால் சரி செய்ய முடியாது. பாரம்!

தூரத்தில் அந்தப் பெண் கக்கூசுலிருந்து ஓடிவந்தாள். குழந்தையை அவள் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு அவள் என்னிடமும் கையேந்தினாள்.

” நான் இப்போதானே கொடுத்தேன் ! ” அதட்டினேன்.

நகர்ந்தாள்.

” பாலூத்தியாச்சா ..? ”

” ஊத்தியாச்சு ! ” – தொழிலைத் தொடர்ந்தாள்.

நான் அரைமணி நேரம் கழித்து கிழக்குப் பக்கம் வரும்போது மூன்றாவது முறையாக அவர்கள் எதிர்ப்பட்டார்கள்.

இப்போது அந்த குழந்தையை சிறுமி தோளில் போட்டிருந்தாள்.

பேருந்து துப்புரவு தொழிலாளி ஒருவர் அருகில் வந்த அவர்களை பார்த்து…..

” அந்த பொட்டாச்சு புள்ளையைத் தூக்கி வந்து ஏன் இப்படி அநியாயம், அக்குறும்பு பண்றீங்க. .? ” அதட்டினார்.

அவர்கள் மிரண்டு ஒதுங்கினார்கள்.

எனக்கு அதிர்ச்சி.

” அது அவுங்க குழந்தை இல்லியா சார். .? ” என்றேன்.

” இல்லே. ! ஆனா. .. அதுங்க அப்படித்தான் சொல்லும். இங்கே ரெண்டு கண்ணும் தெரியாத பெண்ணொருத்தி இருக்கா. பதினெட்டு வயசு. அவளை எவனோ ஒரு பொறம்போக்கு கெடுத்து புள்ளைக்குடுத்துட்டான். பாவம். . அவள் புள்ளையைக்காட்டி பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாள். இப்போ சுரம். அவளுக்கு உடல்நிலை சரி இல்லே. மூலையில் சுருண்டிருக்காள். ரெண்டு நாளா குழந்தையை வாடகைக்குப் பேசி இந்த பிசாசுங்க தூக்கிக்கிட்டு அலையுதுங்க. ” என்றார்.

எனக்கு அவளையும் குழந்தையையும் நினைக்க பாவமாக இருந்தது.

” இன்னொரு தடவை இந்த சிசுவை உங்க கையில பார்த்தேன். .கொன்னு போட்டுடுவேன் ! ” தூரத்தில் சென்றவர்களை பார்த்து இவர் சத்தமிட்டார்.

அவர்கள் திரும்பி பார்த்து மிரண்டார்கள்.

அவர் மீதுள்ள பயம். ! இனி தொழிலுக்கு ஆபத்து என்கிற எண்ணம். ! – பெரியவள் பயத்தில் அவசர அவசரமாக அவர்களை அழைத்துக் கொண்டு ஆள் அரவமற்ற பிளாட்பாரம் ஒதுங்கினாள்.

குழந்தையை வெறுந்தரையில் படுக்க வைத்துவிட்டு அவர்கள் பணம், காசுகளை எண்ணி வசூல் பார்த்தார்கள். பெரியவள் மற்றவர்கள் காசுகளையும் வாங்கி முந்தானையில் முடிந்தாள்.

அடுத்து. . திருப்தியாய் குழந்தையைத் தொட்டவள் துணுக்குற்றாள்.

பரபரப்பாக குழந்தை நெஞ்சைத் தொட்டு, மூக்கில் வைத்து முகம் வெளிறினாள்.

எனக்கு எதுவோ உரைத்தது.

அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தாள்.

இரண்டு சிறுவர், சிறுமிகளும் அவளைத் தொடர்ந்தார்கள்.

பின் தொடர்ந்தேன்.

அந்த இருட்டு மூலையில் சுத்தமாக முக்காடிட்டு யாரோ படுத்திருந்தார்கள்.

குழந்தையின் தாய்தான் !

அவளை நெருங்கிய இவள் அருகில் வந்த தம்பி, தங்கைகளை பார்த்து ‘ சத்தம் வேண்டாம் ! ‘ என்பது போல் வாயில் விரல் வைத்து எச்சரித்தாள்.

அவர்கள் அப்படியே நின்றார்கள்.

பெரியவள் மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து தோளில் கிடந்த குழந்தையை மெல்ல இறக்கி அவள் அருகில் கிடத்தி விட்டு திரும்பி அப்படியே வந்து தம்பி, தங்கையை நெருங்கி அவர்களை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

தாய்க்குக் குழந்தை வாசம் தெரியுமோ என்னவோ. இல்லை .. அவர்கள் ஓடிய அதிர்வை உணர்ந்தாளோ என்னவோ. போர்வைக்குள்ளிருந்து ஒரு கையை நீட்டி குழந்தையைத் தொட்டாள்.

பின் பரபரப்பாக குழந்தையின் நெஞ்சு, மூக்கு இடங்களுக்கு அந்த கை சென்றது.

அடுத்த வினாடி அடித்துப் பிடித்து எழுந்தவள்….

” ஐயோ. .! என் குழந்தையை யாரோ எடுத்துப்போய் கொன்னுட்டாங்களே. ..! ? ” அந்த சிசுவை இறுக்கி கதறினாள்.

நான் உறைந்தேன்.

குழந்தைக்குப் பாலூத்தியாச்சு . ! !

நெஞ்சு கனக்க அழுகை வந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பெஞ்சில் மாலை போட்டு இருந்த மாதவி உடலைச் சுற்றி உற்றார், உறவினர், ஊர் கூட்டம். தலைமாட்டில் தாய் ஆண்டாள் தலைவிரிகோலமாய் அமர்ந்து, ''அம்மா...! அம்மா...! என் மவளே !'' என்று கதறினாள். ''மவளே! தாயீ,...'' மாதவன் தன் மனைவிக்கருகில் நின்று மனசுக்குள் கதறி வாயில் ...
மேலும் கதையை படிக்க...
மனம் முழுக்க கனம். கணேஷ் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தான். கூடவே தினேசும் அவன் அருகில் அமர்ந்தான். இருவரும் தர்மலிங்கத்தின் சொந்த அக்கா, தங்கை மகன்கள். கணேஷ் பத்து வயதாகும்போதே அவன் அம்மா விதவை. அது மட்டுமில்லாமல் ஏழை. கிராமத்தில் தாயும் மகனும் கஷ்டப்பட்டார்கள். ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள். மெரினாவின் கடற்கரை ஓரச் சாலையில்....கருப்பு கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டு அந்த வெள்ளை நிற இன்னோவா கார் பத்துக் கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவான ...
மேலும் கதையை படிக்க...
கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்... அந்த ஓய்வறையில் மூச்சு விட முடியாதவள் போல் தவித்தாள். எதிரில் அமர்ந்து அவளைக் கவனித்த சுகுணா. .. '' என்ன கவிதா ஒரு மாதிரியா இருக்கே. ..'' சக ஆசிரியைக் ...
மேலும் கதையை படிக்க...
நான் விமான நிலையத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். 'அமெரிக்காவிலிருந்து வெடி வர போகின்றதா..? இடி வர போகின்றதா..?'- என்று எனக்குள் கலக்கம். இப்படி ஏடாகூடமாக ஏதாவது நடக்குமென்று எனக்கு முன்பே தெரியும். அண்ணன் பையன் அமெரிக்காவில் பொறியியல் படிப்பு படிக்கின்றான். தங்கை பெண் இந்தியாவில் மருத்துவம் படிக்கிறாள். ...
மேலும் கதையை படிக்க...
'யோக்கியன்னு மரியாதை குடுத்தா... இப்புடி இழுத்தடிக்கிறான் !. இதோட பதினோரு நாள்ல பத்தாவது தடவை. இனி பொறுக்காது. ஆளை நடு ரோட்டுல பார்த்;தாலும் ஈட்டிக்காரன் போல கழுத்துல துண்டைப் போட்டு வசூல் பண்ணியே ஆகனும். கேட்டு குடுக்கலைன்னா... 'உன் பவிசுக்கு என் ...
மேலும் கதையை படிக்க...
திருமணம் முடிந்த அடுத்த நாளே.... என் தம்பி தனஞ்செயன் புதுமாப்பிள்ளை ! மணமேடையில் விழுந்த மச்சான் மோதிரங்களையெல்லாம் கழற்றி என்னிடம் கொடுத்தான். வாங்கி எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஒன்று குறைந்தது. சபையில் மோதிரம் போடும்போதே நான் கவனித்தேன். எனது நான்கு தங்கைகளின் கணவன்மார்களும் ஆளுக்கொரு மோதிரம் ...
மேலும் கதையை படிக்க...
' அறுபது வயதில் ஒருவருக்குத் திருமணம் ! அதுவும் இரண்டாவது திருமணம், மறுமணம் !! ' - கேட்கவே உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது. அதே சமயம். .. அவர்.... அப்பாவின் நண்பர் என்பதால் எனக்கும் பழக்கம், நெருக்கம், உலகம் தெரிந்தவர். அவரா இப்படி. ..?! ...
மேலும் கதையை படிக்க...
இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்.... என்று குரல்கள் மாறி மாறி கேட்டது. கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான். படித்துக்கொண்டிருந்த என்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் தனித்து அமர்ந்திருந்த அமலாவிற்கு மனம் கஷ்டமாக இருந்தது. கணவனுடன் சேர்ந்து காலாற நடந்து கடை கன்னிகளுக்குக் கூட போக முடியவில்லையே ! - என்கிற வருத்தம் மனதை வாட்டியது. வழக்கம் போல்...காலையில் அவன் நாற்காலியில் உட்கார்ந்து தினசரி படித்துக்கொண்டிருந்த போது கூட அழைத்தாள். "என்னங்க..!" "என்ன..? ...
மேலும் கதையை படிக்க...
மாதவி மரணம்….!
ஓ…பாஞ்சாலியே…!
மேடம்..! மேடம்…!! மர்டர்..!!!
குரு தட்சணை…!
உள்ளம்
பதிலில்லை பாடம்
மோதிரம்
அப்பாவின் நண்பர்…!
நேர்க்கோடு..!
சின்ன சின்ன ஆசை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)