பாலத்தை உடைத்து விடு!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,671 
 

புழுதி கிளப்பியபடி வந்து நின்றது, 11.00 மணி பேருந்து. பலரும் இறங்கினர். சண்முகமும் இறங்கினான். 28 வயது; முதிர்ந்த முகம். முன் தலையில் வழுக்கை விழத் துவங்கி இருந்தது. தோளில் கையகல துண்டு போட்டிருந்தான். வாயில் பப்பிள்கம்மோ, என்னமோ மென்ற வண்ணம் இருந்தான். முன்பு பாக்கு போடுவான். இப்போது நிறுத்தியிருக்கிறானோ என்னவோ.

பஸ்சை விட்டு இறங்கியதும், தலை கவிழ்ந்தபடி, வீடு நோக்கி நடந்தான்.

“”சண்முகம்…” என்ற குரல், அவனை தடுத்து நிறுத்தியது.

நிமிர்ந்தான்.

குணநாதன் சார்.

அசட்டு சிரிப்புடன், “”சார்…” என்றான்.

“”இப்பதான் வர்றியா?”

“”ஆமாம் சார்.”

“”இந்த முறையாவது படம் ஏதும் கமிட்டாச்சா?”

அதே சிரிப்புடன், “”ஆகிடும் சார்,” என்றான்.

“”வாய்ப்பே இல்லை. இனியாவது, நீ உன்னையும் ஏமாத்திக்கிட்டு, மத்தவங்களையும் ஏமாத்தறதை விட்டுட்டு, ஏதாவது பெட்டிக்கடை வச்சு பிழைக்கிற வழியைப் பாரு,” என்று, கறாராக சொல்லிவிட்டு, குடையை விரித்தபடி நடையை போட்டார் குணநாதன்.

விக்கித்து போனான் சண்முகம். அவன் மனம் வேதனைக் கடலில் விழுந்தது. அதிர்ச்சியாக இருந்தது, அவன் கேட்ட வார்த்தைகள். “வாய்ப்பே இல்லை… உன்னை ஏமாத்திக்காதே, மத்தவங்களையும் ஏமாத்தாதே… பெட்டிக்கடை வச்சு பிழைச்சுக்கோ…’ என்ன வார்த்தைகள் இவை. முயற்சியை முனை மழுங்கச் செய்யும் கொள்ளிக் கட்டைகள். தெரிந்தும் அவர் என் மேல் பிரயோகித்துச் செல்கிறாரே… நெஞ்சில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல்… என்ன ஆயிற்று இவருக்கு? என்று குடை பிடித்து, போகிறவரின் முதுகையே புதிராக பார்த்து நின்றான்.

பத்து வருடங்களுக்கு முன், கவிதை, கதைகள் அடங்கிய நோட்டை எடுத்து, இதே குணநாதன் சார் வீட்டு வாசலில்தான் நின்றான். எட்டு, ஒன்பது வகுப்புகளில் படிக்கும் போது, அவனுக்கு கணக்கு பாடம் எடுத்தவர் அவர். கணக்குக்கு அப்பால், இலக்கியத்தில் ஈடுபாடு அவருக்கு. மாணவர்களை ஊக்கப்படுத்துவார். பாரதி, பாரதிதாசனை பற்றிப் படிக்கச் சொல்வார். கண்ணதாசன், வாலி, வைரமுத்துவும் படிக்கலாம் தப்பில்லை என்பார்.

“ஒரு சினிமா வசனத்தை உன்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமானால், பாடத்தையும் உன்னால் நினைவில் வைத்திருக்க முடியும்…’ என்று வித்தியாசமாக போதித்தவர்.

அவரால் கண்டெடுக்கப்பட்டவன் தான் சண்முகம். இயல்பிலேயே அவனிடமிருந்த சினிமா ஆர்வம், அதையொட்டி அவன் எழுதிப்பார்த்தவைகள் எல்லாம், சக மாணவர்கள் மூலமாக, அவர் பார்வைக்கு போயிற்று.

அடி வாங்கப் போகிறான் சண்முகம் என்று நினைத்திருக்கும் போது, அவரோ, அவனை கட்டித் தழுவினார்.

“நல்லா வருவே… தொடர்ந்து எழுது…’ என்று, ஊக்கப்படுத்தினார்.

பாலத்தை உடைத்து விடு

அவன் அவ்வப்போது, எழுதுவதையெல்லாம் தட்டி, கொட்டி சரி செய்து கொடுப்பார். டிகிரி முடித்ததும், “என்ன செய்யப் போறே?’ என்று கேட்டதற்கு, “சினிமாதான் சார். டைரக்டராகணும்…’ என்றான் உறுதியாக.

“என்ன வாத்தியாரே… பையன் இப்படி சொல்லுறான். கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்க. நீங்க சொன்னா கேட்பான்…’ என்று சண்முகத்தின் பெற்றோர் முறையிட்டனர்.

“போகட்டும். சினிமா ஒன்றும், மோசமான தொழிலில்லை. அது கலை. எவ்வளவுக்கெவ்வளவு சிறப்பாக செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு பேரும், புகழும், பணமும் வரும். அனுப்பி வைங்க…’ என்று, அவர்களுக்கு தைரியம் சொன்னார் குணநாதன்.

உற்சாகமாக கிளம்பி போனான். அனைத்து இயக்குனர் அலுவலகங்களுக்கும் ஒரு ரவுண்டு அடித்தான். விண்ணப்பம் கொடுத்தான். சந்திக்க முடிந்தவர்களிடம், கவிதைகளை காட்டினான். கதை சொன்னான். திரும்பி வந்தான். சாரை பார்த்து, தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டான். ஆர்வமாக கேட்டுக் கொண்டார்.

ஓரிரு நாள் இருந்து விட்டு, மீண்டும் கிளம்பினான்.

பத்து நாளில் திரும்பினான்.

“ஒரு இடத்தில் சொல்லி வச்சிருக்கேன். படம் பண்ணும் போது நிச்சயம் கூப்பிடறேன்னு சொல்லி இருக்காரு. அது வரைக்கும், இன்னும் கொஞ்சம் படைப்புகளை யோசிக்கலாமேன்னு வந்தேன்…’ என்றான். சாருடன் சேர்ந்து கதைகளை விவாதித்தான். நிறைய படம் பார்த்தான். சிறிது இடைவெளிக்கு பின், பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இந்த முறை ஒரு மாதம் இருந்து விட்டு வந்தான்.

ஷூட்டிங்கில் நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஸ்டில்களை கொண்டு வந்து, எல்லாருக்கும் காட்டினான். குணநாதன் ஆர்வம் காட்டவில்லை.

“இதற்காக சென்னைக்கு போகவில்லை நீ. உன் லட்சியம் வேறு. கடலேறி அக்கரைக்கு போக வேண்டியவன். அலையாடி பொழுதை போக்கக் கூடாது…’ என்றார்.

அடுத்த முறை, ஒரு வசன கர்த்தாவிடம் உதவியாளர் வாய்ப்பு கிடைத்ததாக சொன்னான். “அவர் சொல்லச் சொல்ல எழுதணும்; பல இடங்களில், நான் சொந்தமாக எழுதிக் கொண்டிருக்கேன்…’ என்று கர்வப்பட்டுக் கொண்டான்.

ஒரு வாரம் ஊரில் தங்கி ஓய்வெடுப்பதும், பிறகு கொஞ்சம் பணம் தேற்றி, சென்னைக்கு போவதும், கையில் உள்ள பணம் செலவழியும் வரை முயற்சி செய்து விட்டு, காலியானதும், திரும்பி வருவதுமாக இருந்தான்.

“எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்காதே சாமி… வேளா வேளைக்கு, வயிறார சாப்பிடு. பணம் போதலைன்னா, வந்து வாங்கிகிட்டு போ. அப்பாகிட்ட சொல்லி, மணியார்டர்ல பணம் அனுப்பச் சொல்றேன். சான்ஸ் தேடறேன்னு சொல்லி, வெயில்ல மழையில அலைஞ்சு, உடம்பை கெடுத்துக்காதே. உனக்கு சினிமா முக்கியமா இருக்கலாம். எனக்கு நீதான் செல்லம் முக்கியம்…’ என்று, அம்மா திடமாக சொல்லியிருந்தாள்.

ஆண்டுகள் கரைந்தன.

ஒரு கட்டத்தில், அவனே சலித்தான்.

“நினைச்சது போல இல்லை சார். திறமை மட்டும் போதாது அங்கே. அதுக்கும் மேல ஒண்ணு தேவைப்படுது. போட்டி பொறாமை அதிகம். இன்னும் என்னென்னமோ…’ என்றான்.

“சுலபமான விஷயம்ன்னா, முயற்சி செய்த எல்லாரும் வெற்றி பெற்று விடுவர். பிறகு வெற்றிக்குன்னு ஒரு தனித் தன்மை இல்லாமல் போகும். விடாதே மோதிப் பார்…’ என்றெல்லாம் உற்சாகப்படுத்துபவரா, இப்படி குரல் வளையை அறுத்து விட்டுப் போகிறார். சொல்லப் போனால், அவரை பார்த்து, கொஞ்சம் உற்சாக டானிக் ஏற்றிக் கொண்டு போகலாம் என்று தான் வந்திருந்தான் அவன்.

அவர் பஸ் ஏறிப் போய் விட்டார்.

வீடு திரும்பினான்

சண்முகம். மகன் வரப்போவது தெரிந்து, நாலு வகை பதார்த்தத்தோடு சமைத்து வைத்திருந்தாள் அம்மா. எப்போதும், வந்ததும் வராததுமாக சாப்பாட்டை ஒரு பிடிபிடிப்பவனுக்கு, இப்போது அதன் மேல் மனம் செல்லவில்லை.

“”பசிக்கலைம்மா…” என்றான்.

“”படம் பண்ணாவிட்டாலும் பரவாயில்லை. காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்க. உன் கூட்டாளிகளுக்கெல்லாம் வரிசையா கல்யாணம் ஆகிட்டிருக்கு,” என்றார் அப்பா.

சினிமா அனுபவங்களைக் கேட்க நண்பர்கள் வந்தனர். யாரிடத்திலும், அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.

டவுனுக்கு போயிருந்த தன்னுடைய குரு திரும்பும் வரை காத்திருந்தான்.

வந்துவிட்டார் என்று தெரிந்ததும், எதிரில் போய் நின்றான்.

“”என்னை நீங்கள் அப்படி சொல்லலாமா சார்? அஞ்சு வருஷமென்பது, சினிமா உலகில் சொற்பம் சார். இருவது, முப்பது வருஷமா முயற்சி பண்ணிகிட்டிருக்கறவங்க அதிகம். ஒரு நாளைக்கு ஜெயிச்சுடுவோம்ன்னு நம்பிகிட்டுதான் சார் முயற்சி பண்ணிகிட்டிருக்கேன். வாழ்த்திய வாயாலயே, சபிச்சிட்டீங்களே சார்?” என்று, கோபமும், துக்கமும் குழையக் கேட்டான்.

தோள் துண்டை எடுத்து, நாற்காலி மீது வைத்துவிட்டு அமர்ந்தார் குணநாதன்.

“”நான் சொன்னது உன்னை காயப்படுத்திஇருந்தால் மன்னிச்சுக்கோ. நான், உன்னை நோகடிக்கணும்ன்னு அப்படி சொல்லலை. எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது…

“”சண்முகம்… உன் திறமையிலோ, நம்பிக்கையிலோ, எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உன் முயற்சியில் தான் எனக்கு உடன்பாடில்லை. உன் முயற்சி தொடர்ச்சியா இல்லை. ஓட்டப்பந்தயத்தில் முயல், ஓய்வெடுத்து ஓய்வெடுத்து ஓடிய கதைதான். விடா முயற்சியோடு தொடர்ந்து நகர்ந்த ஆமைதான், வெற்றி பெறுகிறது…

“”திரும்பி வருவதற்கு ஒரு இடம் இருக்குன்னு தெரிஞ்சாலே, முயற்சியில தொய்வு வரும். வேறு வழியே இல்லை… முழு முயற்சியாய் மோதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகாத வரைக்கும், வெற்றி கிடைப்பது அபூர்வம்.

“”நெப்போலியன் மாவீரன். படையெடுத்த நாடுகளில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியவன். அவன் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா? எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும், திரும்பி வர வழியில்லாதபடிக்கு செய்து கொள்வான். ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தால், அவனும், படைகளும் பாலத்தை கடந்தவுடன், அந்த பாலத்தை உடைத்து விடுவர். ஏன் தெரியுமா? போரிடும் போது, பின்னடைவு ஏற்பட்டால், திரும்பி ஓடிவிடலாம் என்ற எண்ணம் வீரர்களின் மனதில் தோன்றிவிடக்கூடாது.

அதற்காகத்தான்…

“”திரும்பிப்போக முடியாதபடி வந்த பாதை அழிக்கப்பட்டால், வீரர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் வென்றே தீர வேண்டும் அல்லது வீர மரணம் அடைய வேண்டும். செய் அல்லது செத்துமடிங்கற சித்தாந்தம் தான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாதவனுக்கு தான், வெற்றி பெற்றுத் தீரவேண்டிய கட்டாயமும், அதற்கான உத்வேகமும் ஏற்படும். அம்மா மடியில் செல்லம் கொஞ்சிகிட்டிருக்கிற குழந்தைக்கு, எப்படி போராட்ட குணம் வரும்?” என்று நிறுத்தினார்.

சார் என்ன சொல்ல வருகிறார் என்று சண்முகத்துக்கு புரிந்தது.

“”ஓடி களைக்கும் போதெல்லாம், ஆசுவாசப் படுத்திக்கதான் நான் வீட்டுக்கு வந்து போறதா நினைச்சுகிட்டிருந்தேன் சார். அதுவே, எனக்கு பலவீனமாய் இருந்திருக்குங்கறதை உணர்றேன். இப்பவே மீண்டும் கிளம்பறேன். வெற்றிச் செய்தியோடு வர்றேன் சார்,” என்று எழுந்தான்.

“”ஒரேடியா திரும்பாம இருந்துடாதே. அவ்வப்போது பெத்தவங்களை வந்து பார்த்துட்டு போய்க்கிட்டிரு. இங்கே தங்காத. காசு, பணம் கேட்காதே. அது போதும். நீ ஜெயிக்கிற குதிரை. அதனால தான் பந்தயத்துல இறக்கி விட்டிருக்கேன். நீ சோடை போயிடக் கூடாதுங்கற ஆதங்கத்துலதான் அப்படி சொன்னேன். கிளம்பு. வெற்றி உன்னை வரவேற்கட்டும்,” என்று ஆசிர்வதித்தார்.

வீட்டுக்கு வந்து, பெற்றோரிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

“”ஏண்டா சண்முகம்… உடனேயே கிளம்புறங்கற. எப்படியும் வந்தால், ஓரு வாரம், பத்து நாள் தங்குவ… இப்ப என்னாச்சு?”

“”வேலை வந்திருக்குமா,” என்றான்.

வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போகும் மகனை, புரியாமல் பார்த்தனர். அவனோ, புரிந்து கொள்ள வேண்டியதை புரிந்து, புதிய வேகத்துடன் புறப்பட்டு விட்டான். வெற்றி அவனை எதிர்கொண்டு காத்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ!

– எஸ். ஆதிகேசவன் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *