Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள்!

 

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தவாறே பொழுதைப் போக்க கதைப்புத்தகங்கள் வாசிப்பது என் வழக்கம். வழக்கம்போல அன்றும் அலுமாரியிலிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து கைகள் பக்கங்களைப் புரட்டியது. அச்செழுத்துக்களுக்கு மத்தியில் அழகான கையெழுத்தில் “பாமா” என்று எழுதியிருந்தது.

பாமா -

அவள் என் பள்ளித்தோழி. ஏழ வருடங்களுக்கு முன் உடுப்பிட்டியிலுள்ள மகளிர் கல்லூரியொன்றில் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம். பணக்காரியாக இருந்தாலும் “வாணி! வாணி!” என்று என்மேல் உயிரையே வைத்திருந்தாள். பாமா படிப்போடு மட்டும் நின்று விடவில்லை. நாடகம், எழுத்து, பேச்சு இவற்றில் எல்லாம் வல்லவளாக விளங்கினாள். ஏராளமான கதை, கட்டுரை, கவிதைகளi எழுதியதோடு நல்ல நாடகங்களையும் நெறிப்படுத்தினாள். எனக்கு அவற்றிலொன்றும் திறமையில்லாத போதும் கதைகள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. பாடப் புத்தகங்கள் வாங்க வசதியில்லாமல் திண்டாடியபோது, கதைப் புத்தகங்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்தித் தந்தவள் பாமாதான். அந்தப் பாமா கதைப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பாமாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போது மேசை மேலிருந்த “வயலின்” வாத்தியத்தைப் பார்த்து விட்டேன்.

“அடி பாமா? உனக்கு வயலின் கூட வாசிக்க வருமா?” என்றேன்.

பாமாவின் சிரிப்பு. “வாணி! கொஞ்சம் வாசிக்கத் தெரியும். எஸ். எஸ். ஸி சோதனை முடிந்ததும் யாரிடமாவது பழகவேண்டும். வயலின் பழகி முடிந்ததும் ஆர்மோனியம், வீணை எல்லாம் வாசிக்கப் பழகப்போகிறேன். அது மட்டுமல்ல, யாரிடமாவது மிருதங்கம் அடிக்கவும் பழகவேண்டும். இலங்கையிலேயே முதல் முதல் மிருதங்கம் வாசிக்கும் பெண் உன் சிநேகிதி பாமாவாகத்தானிருப்பாள்.

என் எண்ணத்தில் பட்டதைத் தட்டுத் தடுமாறி கொண்டு பாமாவுக்குச் சொன்னேன். “நீ வயலின் வாசிப்பதில் தவறொன்றுமில்லை. பள்ளிக்கூடப் படிப்பு முடிந்த பின் கலைத்துறையில் ஈடுபடுவதே நல்லதென நினைக்கிறேன். இப்போதே சதா நாடகம், பேச்சு என்று பொழுதைப் போக்கிக் கொண்டு இருப்பதால் படிப்பில் போதிய கவனம் செலுத்த வசதி கிடைக்காது. போதாக்குறைக்கு ஒரு பத்திரிகை விடாமல் எழுதுகிறாய். வானொலியிலும் பெண்கள் நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அதிலும் ஓரிடத்தைப் பிடித்துக் கொள்கிறாய். இவற்றோடிருந்தால் படிப்பதற்கு நேரம் எப்படிக் கிடைக்கும்?”

பாமா செல்லமாகக் கோபித்தாள். “வாணி, நீ நினைப்பது போல நாடகம், எழுத்து, பேச்சு என்றெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் எனது படிப்பையும் கவனிக்கின்றேன். எங்கள் வகுப்பிலேயே எல்லாப் பாடங்களிலும் நான் அதிக புள்ளிகள் எடுத்து வருகிறேன் என்பது உனக்குத் தெரியும். மற்ற மாணவிகள் ஒரு நாள் முழுவதும் படிப்பதை நான் இரண்டொரு மணி நேரத்திலும் படித்து முடித்து விடுவேன். வகுப்பில் படிப்பிக்கும் போது நடக்கும் நிகழ்ச்சிகளை வகுப்பு முடிந்ததும் அப்படியே நடித்தும் காட்டுவேன். இவற்றில் கலந்து கொள்வதால் எனது படிப்பு பாதிக்கப்படுவதில்லை”

என் தோழி சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. எல்லாச் கலைகளிலும் சிறந்து விளங்கியது போலவே படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்தாள். இருந்தாலும் அவள் எல்லாத் கலைகளிலும் ஈடுபாடு கொண்டது. எனக்குப் பிடிக்கவில்லை. “நீ ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதிலேயே உன் கவனத்தைச் செலுத்தி முழுப் பயிற்சி பெற்றால் புகழ் மிக்க கலைஞர்களில் ஒருவராக வரலாம். வயலினிலும் கொஞ்ச நாள், ஆர்மோனியத்திலும் கொஞ்ச நாள், மிருதங்கத்திலும் கொஞ்ச நாள் என்று பழகிக் கொண்டு வந்தால் , காலம் தான் வீணே கழியும் தவிர ஒன்றையும் ஒழுங்காகப் பயில முடியாது. உனக்கு ஆர்வமும் திறமையும் இருக்கும் கலை ஒன்றைத் தெரிவு செய்து அதிலே முழுக்க முழுக்க ஈடுபடவேண்டும். எந்த ஒரு துறையிலுமே உடனடியாகப் பலனை எதிர்பார்க்க முடியாது. நல்ல பயிற்சி பெற்றுத் திறமைசாலியாகிய பின்தான் புகழையும் பலனையும் எதிர்பார்க்க முடியும். நீ வயலினைக் கையில் தூக்கிய உடனேயே எல்லோரும் உன்னை வயலின் மேதையெனப் பாராட்ட வேண்டுமென்று ஆசைப்படுகிறாய். அது நடக்கக்கூடியதொன்றல்ல. எங்கள் தோழி என்பதற்காக நாங்கள் பாராட்டலாம். உன்னைப் போல ஒருவரும் வயலின் வாசிக்கமாட்டார்கள் என்று போற்றலாம். ஆனால் எல்லாரும் அப்படிப் போற்றுவார்களா என்ன?” என்றேன்.

என் கருத்தை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை அவளுக்கு “எங்கள் ஓவிய ஆசிரியர் பெருமானைப் பார்த்தாயா? எமது கல்லூரியில் அவரைப் போல ஆங்கிலம் கற்பிக்க வேறு எவராலும் முடியாது. அவர் இல்லாமல் கல்லூரியில் எந்தக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதில்லை. நாடகமானால் அவர் பழக்க வேண்டும். நடனமென்றால் அதற்கும் பெருமான் தான் முன்னுக்கு வரவேண்டும். பாட்டுக் கச்சேரி என்றாலும் அவர் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். விளையாட்டு விழா என்றாலும் அவரை விட்டுவிட்டு நடாத்த முடியாது. ஆசிரியர் பெருமான் தனியொருவராகவே எல்லாத் துறையிலும் மற்றவர்களின் பாராட்டைப் பெறவில்லையா? அவரைப் போல நானும் வர நினைப்பது தவறா?” உதாரணம் காட்டிப் பேசினாள் பாமா.

நானும் உதாரணங்களோடு அவள் கருத்தை மாற்ற முனைந்தேன். “ஆசிரியர் பெருமான் எல்லாத் துறைகளிலும் கைவைத்துப் புகழ் பெற்றுள்ளார் என்பது உண்மைதான். இரண்டொருவர் அவரைப்போல் இருக்கலாம். அதற்காக எல்லோரும் பெருமானாக முடியாது. இல்லாமலும் இன்னொன்றைக் கவனித்தாயா? பெருமானின் திறமையும் புகழும் எங்கள் கல்லூரி என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது. அவருக்கேற்ற துறை நாடகம். நாடகத்தோடு மட்டும் அவர் திருப்திப்பட்டு, அதற்காக உழைத்தால் அவர் புகழ் எங்கள் கல்லூரிக்கு வெளியேயும் பரவும். தரமான நாடகங்களை மேடையேற்ற முடியம். நல்ல வானொலி நாடகங்களையும் எழுதலாம். எல்லாத்துறைகளிலும் கைவைத்து கொஞ்சக்காலம் ஒவ்வொரு துறையிலும் புகழ் பெறுவதை விட ஒரு துறையை முழுக்கக் கற்று மேதையாவது நல்லதல்லவா? இந்தியாவில் வீணைக்கு பாலசந்தர்,சித்தாருக்கு ஒரு ரவிசங்கர் என்றில்லையா? ஏன் எங்கள் நாட்டிலும் நாதஸ்வரத்தில் புகழ்பெற்ற அளவெட்டிப் பத்மநாதன்- கதாகாலாட்டசேபத்தில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் நாடகத்தில் கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோர் இல்லையா? இவர்களெல்லாம் இரண்டொரு நாள் முயற்சியில் பெரும் புகழ் தேடிக்கொள்ளவில்லை. எத்தனையோ வருட முயற்சிக்குப் பின்புதான் புகழ் அவர்களைத் தேடிவந்தது. ஆர்வமுள்ள கலையில் திறமையும் இருந்தால் குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது பலனை எதிர்பாராது பாடுபட வேண்டும். பணமும் புகழும் தானாக வரும்” என்றெல்லாம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்.

பாமா எஸ்.எஸ்.ஸி சித்தியடைந்து யாழ்ப்பாணத்திலுள்ள மகளிர் கல்லூரி ஒன்றுக்குச் சென்றாள். அதன்பின் சந்திக்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் கடிதங்கள் கதை பேசின.

“புதிய கல்லூரியில் பாமாவைவிட நாடகம், எழுத்து, பேச்சு ஆகியவற்றில் பலர் சிறந்து விளங்குவதாகவும் தன்னால் அவர்களைப் போலச் சிறப்பாகச் செய்து பெயர் பெற முடியவில்லை” என்றும் முதல் எழுதிய கடிதத்தில் குறைப்பட்டு கொண்டாள்.

“எல்லாரும் கலைஞர்களாக இருந்தாலும் ஒரு சிலர் தான் புகழ்பெற முடியும். இதற்காக வருத்தப்படாதே. காலம் வரும் வரை பொறுத்திரு” என்றெழுதினேன்.

“நடனம் ஆடக்கூடியவர்கள் குறைவாக இருப்பதால் நான் இப்பேர்து டான்ஸ் பழகி வருகின்றேன். நான் நல்லாக ஆடுவதாக நடன ஆசிரியை பாராட்டியுள்ளார். இப்போது அநேகமானவர்கள் நடனமாடி நல்ல பெயர் பெற்றுள்ளார்கள். நானும் ஒரு நடனராணியாக வரவிரும்புகின்றேன். வசதியானால் இந்தியாவுக்குச் சென்று நடனம் பயில எண்ணியுள்ளேன்” என்று பாமாவின் கடிதத்தைப் படித்ததும் பதில் எழுதினேன் இப்படி.

“நடன ஆசிரியை எப்படிப் பாராட்டினாலும் ஐந்தாறு வருடங்களாவது நடனத்தைத் துறைபோகக் கற்க வேண்டும். அப்போது தான் பிரகாசிக்க முடியும். அதற்குள் மணவாழ்க்கையில் ஈடுபடவேண்டி நேரிட்டால் பணத்தைக் கொட்டி நடனத்தைப் பழகுவதால் ஏற்படும் பலன்தான் என்ன? பணமுள்ளவர்களின் சிலர் பரத நாட்டியம் பயில்வதை ஒரு நாகரிகமாக் கருதுகின்றனர். படிப்புத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பரதம் ஆடத்தெரிருந்திருக்க வேண்டும். என்று சில பெற்றோர் எண்ணுகின்றனர். பணத்தைச் செலவழித்துப் படிப்பதானால் ஏதாவது பலன் கிடைக்கவேண்டும்”

அந்தக் கடிதத்துக்கு அவள் பதிலே எழுதவில்லை. எஸ்.எஸ்.ஸி சித்தியடைந்து எச்.எஸ் லியில் படித்துக்கொண்டிருக்கும் போது, கொழும்பிலுள்ள அரசாங்க அலுவலகமொன்றில் எழுதுவினைஞராக வேலைபார்க்க வருமாறு அழைப்புக் கிடைத்தது.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகிழ்ச்சியான செய்தியை பாமாவுடன் பகிர்ந்து கொண்டேன். அவள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. காரணத்தையும் அவளே சொன்னாள்.

“வாணி நான் இப்போது நடன வகுப்புக்குச் செல்வதில்லை. என் உடல் நிலை நடனமாடுவதற்கு ஒத்துக்கொள்ளாததால் சங்கீதம் படிக்கப் போகின்றேன்” ஒரு கலையையாவது ஒழுங்காகக் கற்கமால் எல்லாவற்றிலும் கை வைத்து ஏமாற்றடைந்த பாமாவைத் தேற்ற என்னால் முடியவில்லை.

***

“வாணி….என்ன சிந்தனை போல இருக்கிறதே?” அறைத்தோழி அமிர்தா அழைத்தபோது தான் பழைய காட்சிகள் மணமேடையிலிருந்து மறையத் தொடங்கின.

“ஒன்றுமில்லை….பள்ளிக்கூட நினைவுகள்” என்றேன்.

அமிர்தா கேலியாகக் கேட்டாள்…. “ஓகோ காதலா?…”

“சும்மா போடி அதொன்றுமில்லை. இதோ இந்தப் புத்தகத்தைப் பார்த்தாயா? என் பள்ளித்தோழி பாமாவின் புத்தகம். அதுதான்…” சொல்லிக் கொண்டு வரும் போது அமிர்தா என்னை விரைவுபடுத்தினாள்.

“பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் ஐந்து மணிக்கு ஆசிரியர் அரியரத்தினம் எழுதுவினைஞர் சேவையின் கிளாஸ் ரூ வகுப்புகள் நடத்துகிறாரல்லவா? நாம் போக வேண்டும் புறப்படு” என்றாள் அறைத்தோழி. ஆசிரியர் அரியரத்தினம் நடாத்தும் எழுதுவினைஞர் சேவை வகுப்புக்கு வந்தவர்களைப் பார்த்தேன். “இந்துமதி, சந்திரகலா, மேரி, தெய்வானை, சடாட்சரநாயகி, ராஜேஸ்வரி,பரமேஸ்வரி, பாக்கியம் என்று ஒவ்வொருவராகக் கவனித்துக் கொண்டு வந்த கண்கள் ஒருத்தியைக்கண்டு களிப்பால் துள்ளியது. வெற்றிப்புன்னகையுடன் அவளை அழைத்தேன்.

“பாமா”

அவள் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது.

“பாமா நீ இங்கே எப்படி வந்தாய் ?” எனது கேள்விக்கு அவள் அளித்த பதில், “நானும் எழுதுவினைஞராகத் தெரிவு செய்யப்பட்டு இங்கே தான் கடமையாற்றுகின்றேன்”
“எனக்குத் தெரியவே தெரியாது” என்றேன்.

“உனது முகவரியை எங்கோ தொலைத்துவிட்டேன். அதனால்தான் அறிவிக்க முடியவில்லை” என்று அவள் சொல்லி முடிப்பதற்கும் ஆசிரியர் அரியரத்தினம் வகுப்புக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“இன்று அலுவலக நடைமுறைகளைக் கவனிப்போம்” என்று அன்றைய பாடங்களை ஆரம்பித்தவர்.

“இத்துடன் வகுப்பை முடித்துக்கொள்வோம். மீண்டும் நாளை மாலை ஐந்து மணிக்கும் ஐந்தே காலுக்கும் இடையில் சந்திப்போம்’ என்றதும் வகுப்பைவிட்டு வெளியேறினோம்.

பழைய சிநேகிதியை- பள்ளித்தோழியை ஐந்து வருடங்களுக்குப் பின் சந்தித்ததால் எவ்வளவு வி~யங்களைப் பற்றிப் பேசலாம்? அவ்வளவையும் அப்போதே கதைத்துவிட வேண்டுமென்ற அனல், “வேலைகள் எல்லாம் எப்படிப் போகிறது? இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லையா? வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதில்லையா? வயலின், நடனம், சங்கீதம் எல்லாம் என்னாச்சு?

ஏமாற்றத்தோடு சொன்னாள். “பத்திரிகைக்கும் வானொலிக்கும் எழுதுவதால் நேரமும் வீணாகிறது. அவ்வப்போது சிறிது பணம் கிடைத்தால் உண்டு. இருந்தாலும் பாடுபடுமளவுக்குப் பலன் கிடைப்பதில்லை. அதனால் இப்போது அவற்றை விட்டுவிட்டேன். வசதி கிடைத்தால் வானொலி கேட்பதுண்டு. பணப்புழக்கம் இருக்கும் நேரம் பத்திரிகை படிப்பதுண்டு.

அதற்கு மேலே அவளிடம் கலைகள் பற்றிக் கேட்க விருப்பமில்லை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவள் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

“இன்று வருவதற்கு வசதியில்லை. கோபிக்காதே. ஏழு மணிக்கு பிரைற்றன் கலாசாலையில் கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ் கணக்கியல் வகுப்புக்குச் செல்ல வேண்டும். கொழும்பில் தானே இருக்கிறோம். இன்னுமொரு நாளைக்கு கட்டாயம் வருவேன்” என்றாள்.

அவள் வர மறுத்தது கோபத்தை உண்டாக்கவில்லை. ஒரு பரீட்சை முடியுமுன்பே இன்னொரு பரீட்சைக்குப் படிப்பது வேதனையை உணடாக்கியது. என் வேதனையை மொழிபெயர்த்தேன். “கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ் கணக்கியலுக்கு இப்போது என்ன அவசரம்? கிளாஸ் ரூ சோதனை முடிந்த பின்பு அடுத்த வருடம் எடுக்கலாமே? இரண்டு சோதனைக்கும் ஒரே நேரத்தில் படிப்பது சிரமமாயிருக்கும். ஒரு பாடத்திலாயினும் போதிய கவனம் செலுத்த முடியாதல்லவா?”

வழக்கமான அவள் சிரிப்பே பதிலளித்தது.

“இரண்டு சோதனையல்ல…இருபது பரீட்சையென்றாலும் என்னாலும் படிக்கமுடியும் கிளாஸ் ரூ பரீட்சையில் தேறினால் கணக்காளர் உத்தியோக உயர்வே கிடைக்கும். எப்படியும் அறுநூறு எழுநூறு ரூபா சம்பளமும் கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் எழுதுவினைஞராக இருக்க விரும்பவில்லை. எப்படியாவது ஓர் அக்கவுண்டன்ற் ஆகி விடவேண்டும்” என்றாள்.

கிளாஸ் ரூ பரீட்சையில் சித்திடைந்தபோது தோழிகளுக்கு விருந்து வைத்தேன். விருந்தில் கலந்துகொள்ள வந்த பாமா என்னைப் பாராட்டினாள். நான் அவளைப் பாராட்டும்படியாக மறுமொழி திருப்தியாக இருக்கவில்லை. எனவே அவளைத் தேற்றிவிட்டு கையிலிருப்பது என்ன புத்தகங்கள் என வினவினேன்.

“ஓ இதுவா? இப்போது அட்வான்ஸ்லெவல் படிக்கின்றேன். எப்படியும் ஐந்து வருடங்களுக்குள் பி.ஏ சித்தியடைந்துவிடலாம். பின்பு ஏதாவது வேறு உயர்ந்த வேலைகளைத் தேடிக்கொள்ளலாம்” கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள்.

“அப்படியானால் கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ்….” சந்தேகத்தோடு கேட்டேன்.

ஆங்கிலத்தில் படிப்பிக்கிறார்கள். தெளிவாக விளங்கவில்லை. அதனால் கோஸ்ற் அன்ட் வேர்க்ஜ் விட்டு விட்டு அட்வான்ஸ்லெவல் படிக்கிறேன். என்னிடத்தில் திறமையும் பணமும் இருக்கிறது. நான் எப்படியும் ஒரு பட்டதாரியாகிவிடுவேன்.

குளிர்பானத்தை அவள் கைகளில் திணித்த என்ன பேச்சு சூடாக இருந்தது, “பாமா, உன்னிடம் பணம் இருக்கின்றது என்பதற்காக எல்லாவற்றையும் படிக்க வேண்டுமா? நடனம், நாடகம், வயலின், சங்கீதம், எல்லாம் கற்றாயே, அவற்றால் விளைந்த பயன் என்ன?”

“கிளாஸ் ரூ சோதனைக்குப் படிக்கும்போது கூட உன் திறமையை அதிகமாக மதிப்பிட்டு கிளாஸ் ரூ பரீட்சைக்கும் கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ் கணக்கியல் பரீட்சைக்கும் ஒரே சமயத்தில் படித்தாய், பலன்? இரண்டு பரீட்சையிலும் தோல்வி. எவ்வளவு திறமையிருந்தாலும் அந்தத் திறமையிலும் அளவுக்கதிகமான நம்பிக்கை வைக்கக்கூடாது. ஒரு பரீட்சையில் சித்தியடைந்த பின்புதான் இன்னொரு பரீட்சையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். எல்லாப் பரீட்சைக்கும் ஒரே நேரத்தில் முயற்சி எடுத்தால் பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் என்பது போலத்தான் முடியும். எண்ணித் துணிய வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக வீணாகச் சிந்திச் செலவழிப்பதா? நேரமும் வசதியும் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் படித்து ஒன்றிலுமே தேர்ச்சியடைய முடியாமல் போவதானால் வீண் படிப்பு எதற்கு?”

விருந்துக்கு வந்தவள் என்னோடு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள். பின்பு அவளைச் சந்திக்க முடியவில்லை.

பாமா “அட்வான்ஸ் லெவல் பரீட்சையிலும் தவறி விட்டதாகவும் இப்போது கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியில் ஏதோ படித்துக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகின்றேன்.

- ஈழநாடு 1972 – சிங்கள மொழியிலும் பிரசுரிக்கப்பட்டது – நிர்வாணம் (சிறுகதை) – பதிப்பு: ஒக்டோபர் 1991 – புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு 

தொடர்புடைய சிறுகதைகள்
கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது இலக்க மேடையில் ஆண்களும் பெண்களுமாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் பிரயாணிகள் நிறைந்து நிற்கின்றனர். வழக்கமாகவே கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் ஆட்கள் அதிகம் தான். அன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது கூட்டம். “கொழும்பு கோட்டையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
“அண்ணா வந்து விட்டாரம்மா!” ஆனந்தன் வந்து விட்டான் என்பதைச் சொல்லும் போது அருணாவின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்! வீடு கூட்டிக் கொண்டிருந்தவள் தும்புக்கட்டையை விறாந்தையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு “வாங்கண்ணா” என்றாள். பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ஆனந்தனின் தம்பியும் ஓடிவந்தான். ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பு நகரில் நாகரீகமானவர்கள் வாழும் பெரிய மாடமாளிகைள் நிறைந்திருந்த கல்லூரி வீதியில் செல்வரத்தினத்தின் மாடி வீட்டை பார்த்தபடி இருந்தது ரங்கனின் சிறிய தகரக் கொட்டில், செல்வரத்தினத்துக்கு கார் நிறுத்தும் கராஜாகப் பயன்பட்ட அந்தக் கொட்டில் இன்று ரங்கனின் வீடாக மாறியிருக்கிறது. வீடு ...
மேலும் கதையை படிக்க...
செல்வச் சந்நிதி முருகன், பக்தர்கள் புடை சூழ, பவனி வந்து கொண்டிருந்தார். இறைவனுக்கு முன்னாலும் பின் னாலும் கற்பூரச் சட்டிகளும், காவடிகளும் வந்து கொண் டிருந்தன. வீதி வலம் வந்து கொண்டிருந்த முருகனுக்குப் பின்னால் பாடவல்ல பஜனைக் கோஷ்டியினர் தோத்திரப் பாடல்களைப் ...
மேலும் கதையை படிக்க...
“அரோகரா...அரோகரா...” செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால் பக்தி வெள்ளத்தில் தத்தளித்து நின்ற அடியார்களின், “அரோகரா...” ஒலி கோவிலை அதிரக் செய்து கொண்டிருந்தது. மூலஸ்தானத்தை மூடியிருந்த திரை விலகியதும் ஐயர் வேல்முருகனுக்குத் தீபாராதனை செய்யும் காட்சியை கண்ட பக்தர்கள் தம்மை மறந்து பக்திப்பரசவத்தில் சுத்திக் ...
மேலும் கதையை படிக்க...
“குடையைக் கண்டனீங்களோ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை தேடு படலம் தான்- “குடையைக் கண்டனீங்களோ?” வீட்டுக்கும் கடைக்கும் இடைத்தூரம் அதிகமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மூன்று நிமிட நேர நடை ...
மேலும் கதையை படிக்க...
அன்று நடந்தது - எனக்கு அது புது அனுபவம். அவளுக்கும் அப்படித் தான். இழகக்கூடாததொன்றை இழந்த சோகம். சோர்ந்து போய்ப் படுக்கும் அவள் முகத்தில் தெரிகிறது. மெதுவாக இந்த இடத்தை விட்டு நழுவுகின்றேன். "ஸ் மணி ஏழாகுது. நான் போயிட்டு வாறன். இங்கே நடந்ததொண்டையும் ...
மேலும் கதையை படிக்க...
இதுவும் ஒரு காதல் கதை
காலம் காத்திருக்குமா?
விருந்து
வாசக் கட்டி
சந்நிதிக் கோயில் சாப்பாடு
குடையைக் கண்டனீங்களோ?
ஒரு சோக நாடகம் தொடர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)