‘பாதாள’ மோகினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 12,199 
 

கலைஞன் சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும் வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப் பிழம்பான அந்த அழகு ஜோதியிலே தன்னை மறந்து வீற்றிருந்தான் அவன். சிவப்பு ரோஜாவையும் செந்தாமரையயும் மேகப் புரவி மீது பவனிவரும் முழுநிலவையும் அழகின் எல்லை என்று கவிஞர்கள் பாடினார்கள். அவற்றின் மோகனத் தோற்றத்திலே வாழ்வின் திருப்தியைக் கண்டார்கள். சாந்தி எய்தினார்கள்.கலைஞன் சிவகுமார் இதற்கு மாறானவன். கருங்கற் பாறை பிழந்து, வெள்ளியை உருக்கி வார்த்தார்களோ என்னும்படி பாய்ந்துவரும் வேகமான அருவியிலும் ஏன் ரமணீயமான ரோஜா மலரிலும், சிவந்த கமலப் புஷ்பத்திலும்கூட அவன் குறை காணுவான். குளிர்ந்த பூரணை நிலவின் அழகிலும் அவன் கலைக் கண்ணுக்குக் குறைபாடு தென்படும். அவன் இலட்சியவாதி. அழகின் லட்சியமான பேரழகை தெய்வீகமான ஒரு விந்தையழகைத் தேடி அலைந்து அவன் உள்ளம் அவன் ஆத்மா அமைதியற்றுத் துடிதுடித்தது.

கலைஞன் சிவகுமார் இவ்வுலகை வெறுத்தான். சாதாரண மக்களிடையே காணும் அவலட்சணமான் தோற்றமும், பண்பற்ற செயலும் பேச்சும், அவர்களின் பொறாமையும் துவேஷமும் சுயநலமும் அவனை மானிடர் மீதே அருவருப்புக் கொள்ளும்படி செய்தன. இதனால் சாதாரண பாமர மக்களினது போலிருந்த தனது இயற்பெயரான ராமலிங்கம் என்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்பெயர் தாங்கிய எத்தனையோ ரெளவுடிகளை முட்டாள்களை ரசிகத்தனம் அற்ற கோவேறு கழுதைகளை அவன் வாழ்க்கையில் கண்டிருந்தான். தனது இயற்பெயர் தன்னையும் இந்தக் கேவலப் பிராணிகளோடு சேர்த்துவிடும் என அஞ்சி ‘சிவகுமார்’ என்ற புதுப் பெயரைச் சூடினான்.

அவன் பருவ வாலிபர்கள் தலைமயிரை வெட்டி காற்சட்டை அணிந்தனர். இங்கும் தன் பெயருக்கு இருந்த பேராபத்து விளங்குவதை அவன் கண்டான். ஆடை அலங்கார விஷயத்திலும் மற்றவர்களுக்குப் புறம்பாக விளங்க வேண்டுமென எண்ணிய அவன் தனது மேன்மையான பளபளக்கு கேசத்தை நீள வளர்த்தான்; நீண்டதோர் பட்டு அங்கியை அணிந்தான். இயற்கையிலே உயர்ந்த கம்பீரமான தோற்றமும் நீலோற்பலம் போல் நீண்ட பெண்மை ததும்பும் நேத்திரங்களும் அமைந்த சிவகுமார் இந்த அலங்காரங்களுடன் உண்மையில் பாபக்கலப்பற்ற பசுமையான குழந்தை உள்ளம் படைத்த ஒரு தேவகுமாரன் போலக் காட்சி அளித்தான்.

அழகுத் தெய்வத்தின் உபாசகனான அவன் ஒரு சமயம் களியாட்ட விழாவொன்றிற்கு அழகு ராணிகளைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளில் ஒருவனாக அழைக்கப்பட்டான். நீதிபதிகள் மிஸ்.ரதிப்பிரியா என்னும் உயர்குலச் சுந்தராங்கியைக் களியாட்டத்தின் அழகு ராணியாகச் சிபார்சு செய்தனர். அவளது அழகிலும் குறை கண்டான் கலைஞன். எனவே அழகுப் போட்டியின் முதலாம் இரண்டாம் இடங்களைக் காலியாக வைத்து மூன்றாவது இடத்துக்கு மிஸ் ரதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கருதினான். கூந்தல் கரி போல ஒரே கருமையாகவில்லாமல் பஞ்சு போலப் பறிக்கும் அலைகளைக் கொண்டு ஒரு மன மோகனத் தோற்றத்தை அளிக்க வேண்டும்; கொங்கைகள் அண்ணாந்து பார்க்கும் இரு கலசங்கள் போல் இலங்க வேண்டும்; கொடி போன்ற இடை அவசியம்தான். ஆயினும் மிகவும் மெலிந்து பஞ்சையின் இடைபோல் இருக்கக் கூடாது; பாதங்கள் இரு மாடப்புறாக்கள் போல் சிறிதாகவும் மல்லிகை மொக்குப் போல பூரித்தும் விளங்க வேண்டும்; – இனி அவள் கண்கள்! “அவை அற்புதமான நீலோற்பல நேத்திரங்கள் போலவே விளங்க வேண்டும்” இவ்வாறு அவன் கற்பனையிலே குளிர் நிலவும் பூந்தென்றலும், பூவின் மென்மையும், விண் மீன்களின் ஒளியும் ஒன்று சேர்ந்து உருவானது போன்ற ஒரு தோற்றம் எழுந்தது.

அதனைத்தான் சிவகுமார் கடந்த இரு நாட்களாக தன் அறையில் உட்கார்ந்தபடி சித்திரமாகத் தீடினான். ஆனால் அந்த ஓவியத்தை எழுதுகையில் எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. கண்ணெழுதும் போது கரிய மையில் ஒரு துளி அக்கண்ணாடிக் கன்னங்களில் தவறி வீழ்ந்து விட்டது. சிவகுமார் ஒரு கணம் யோசித்தான். இதனை அழித்து அக்கன்னத்தை மீண்டும் எழுதும் பட்சத்தில் அதற்கு திரும்பவும் இவ்வர்ண வாய்ப்பு ஏற்படுமா என்பது சந்தேகமே. இவ்வாறு நினைத்த அவன் அக்கரிய புள்ளியை இயற்கையில் அமைந்த ஒரு மச்சம் போல அமைத்து நிறுத்தினான்.

பின்னும் ஒருமுறை படத்தை நோக்கினான். அவன் நீண்ட நேரம் தியானத்தமர்ந்து எழுதிய அச்சொப்பன சுந்தரி ஒரு தெய்வீகத் தன்மையுடன் கொலு வீற்றிருந்து தன் உதயத்தையும் உலகத்தின் இதர கலை உள்ளங்களையும் ஆட்சி செலுத்துவது போலிருந்தது அவனுக்கு! தன் வாழ்வின் அரும்பணி முற்றுப் பெற்றதென மமதையும் இறும்பூதங்கொண்டு ஆனந்த உலகில் சஞ்சரித்தான் அவன்.

அன்று பிறைச்சந்திரன் வானில் பவனி வந்தான். கலைஞன் ஜன்னலண்டை உட்கார்ந்து கீழே நகரத்து அலைமோதலை ஒரு முறை பார்த்துவிட்டு மேலே ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்தான். அப்போதுதான் அவன் நண்பன் பாலச்சந்திரன் அந்த அறையில் பிரவேசித்து “சிவகுமார்” என்று குரல் கொடுத்தது கேட்டது.

நண்பர்கள் சேஷமம் விசாரித்தனர். “பாலசந்திரன்! அருமையான படமொன்றை எழுதுவதில் கடந்த இரண்டு நாட்களும் கழிந்தன. அற்புதமான படம்! அதோ பார்!” பாலச்சந்திரன் அந்தப்புறம் பார்த்தான். சிலைபோல் அமைந்துவிட்டான் அவன்.

சிறிது நேரம் கழித்து “சிவகுமார், உனக்கு அவளை எவ்வளவு காலமாகத் தெரியும்? அல்லது அவள் வசிக்கும் விடுதியிலா?”

“என்ன சொல்லுகிறாய்?…இவள் போன்ற பெண் எங்காவது இருக்கிறாளா? எங்கே?”

“நீ அவளைப் பார்க்காமல் இந்தப் படத்தை என்பதை என்னால் நம்ப முடியாது. அதோ அவளது கன்னத்திலுள்ள நீல மச்சத்தைக் கூடக் கணக்காக எழுதியிருக்கிறாயே?”

சிவகுமார் பதிலளித்தான்:

“கண்னின் புருவ வளைவைச் செப்பனிடும்போது ஒரு துளி மை தவறி வீழ்ந்தது. அதைத்தான் மச்சமாக அமைத்தேன் நான்….அவள் என் கற்பனைச் சுந்தரிதான். என்ன சொல்லியும் நம்ப மறுக்கிறாயே!”

“சரி அப்படியானால் அக்கண்கள் எவ்விதம் வந்தன?..உனக்கு ஞாபகமிருக்கிறதா? இரண்டு மாதங்களின் முன் நான் ஏழாம் குறுக்குத் தெருவிலிருக்கும் ஒரு இடத்துக்கு உன்னை என்னுடன் வரும்படி அழைத்தேன்….. நீ பெரிய சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு வர மறுத்துவிட்டாய்……”

“ஆம் நினைவில்லாமல் என்ன? நினைவிருக்கிறது”

“ஆனால் நான் போய் வந்தேன். வந்தபோது உன்னிடம் அற்புதமான பேரழகி ஒருவள் அந்த விபசார விடுதிக்குப் புதிதாக வந்திருக்கிறாள் என்று கூறி அவளை அதிகநேரம் வர்ணித்துக் கொண்டேயிருந்தேனல்லவா?…”

“ஆம்”

“அவள் கண்களைப்பற்றி என்ன சொன்னேன்? அக்கண்கள் உனது கண்களைப் போலவே விளங்கின என்று வர்ணித்தேன்.அவ்விதம் சொன்னேனா இல்லையா?”

“ஆம்….சொன்னதுண்டு” என்று வேண்டாய் வெறுப்பாய்க் கூறிய கலைஞனை பாலச்சந்திரன் இடைமறிப்பது போன்று “பார் கண்ணாடியில்! உன் கண்களுக்கும் இக்கண்களுக்கும் ஏதாவது வித்தியாசமுண்டா?” என்று கூறினான் வெற்றித் தோற்றத்துடன்.

“பாலச்சந்திரன் நீ சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது என் கண்களைப் பார்த்துத்தான், அந்தக் கண்களைப் நான் வரைந்தேன். ஆனால் நீ நம்ப மாட்டாய்! ஏனெனில் உனக்கு அருமையான சாட்சிகள் இருப்பது போலத் தெரிகிறது. நான் சத்தியம் செய்கிறேன். இப்பெண்ணை நான் கற்பனை உலகத்தில்தான் கண்டு பிடித்தேன்…இருந்த போதிலும் இலட்சிய அழகுபடைத்த மோகினி போன்றவள் விபசார வீட்டில் இருக்கிறாள் என்றால் அதை நான் நம்பமாட்டேன்.”

“இது விந்தையாகவல்லவா இருக்கிறது! என்ன அதிசய ஒற்றுமை! ஆனால் நீ விரும்பும் பேரழகு நீ வெறுக்கும் விபசார விடுதியில் வசிக்கும் ஏழையிடம்தான் காணப்படுகிறது! வேண்டுமானால் நாளை வா – நான் காட்டுகிந்றேன்”

சிவகுமாருக்கு எல்லாம் பெரிய விந்தையாக இருந்தது. முதலில் அவன் விபசார விடுதிக்குப் போகத்தயங்கினான். ஆனால் முடிவில் “இது பரிசோதனை போகலாம்” என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

ஏழாம் குறுக்குத் தெருவில் இருந்த அந்த விடுதி அந்த நகரின் “பாதாள லோகத்துக்”கே ஒரு அரிய அணிகலனாக இலங்கி வந்தது. நாகரிகமான அந்தஸ்து படைத்த கனவான்கள் கூசாமல் போககூடியதாக இருந்த ரகசிய இன்பவீடு அது ஒன்றுதான் என்பதே பாலச்சந்தர் அபிப்பிராயம்.

எந்த நகரிலும் தடுக்கப்பட்ட பொருட்கள் கஞ்சா, அபின், குடிவகை, ரேஸ் பந்தயம் என்பன பொலிஸ் காவல் அமைந்த வெளியிலுள்ள உலகில் கிடைக்காவிட்டால் நகரின் மேல் மூடிக்குக் கீழே இருக்கும் இன்னோர் உலகிலே தாராளமாகக் கிடைத்தன. இந்த உலகை நகரின் ‘பாதாள லோகம்’ என்று கூறுவது பொருத்தமானதுதானே?

அந்த இல்லம் பார்ப்பதற்கு ஒரு விபசார விடுதிபோலத் தோன்றவில்லை. அக்கம் பக்கத்திலுள்ள எவருமே அதனை அவ்விதம் சந்தேகிக்க முடியாது. பாதாளலோகத் தரகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமே அது தெரியும்! மிகுந்த திறமையோடு ஜாக்கிரதையாகவும் மிக ரக்சியமாகவும் தொழில் நடைபெற்றது.

பாலச்சந்தரும், சிவகுமாரும் அங்கு சென்றனர்.பீடிகையான பண விஷயங்கள் பைசாலானதும் சிவகுமார் அவனுக்குக் காட்டப்பட்ட ஒரு அறையினுள் நுழைந்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை!

அந்த அழகி – அதே கன்னத்து மச்சம். அதே கருநெடும்நீலோற்பல நேத்திரங்கள் – கூந்தல் அலை அலையாகப் புரண்டு கிடக்க ஒரு மெத்தையிலே ஒரு பட்டுப் பாவாடையுடன், ஒரு ஜாக்கட்டு பட்டுமணிந்து அலங்கோலமான நிலையில் காணப்பட்டாள். அவன் கற்பனைச் சுந்தரி- அழகு தெய்வம் கண்ணெதிரே உயிர்ப்பெற்றுக் காட்சியளித்தாள்!

அவன் திக்பிரேமை பிடித்தவன் போல் ஆகி விட்டான்! பேச்சுக்கோ செயலுக்கோ எழுச்சி ஏற்படவில்லை.

அந்த மோகினி அவனைப் பார்த்து முல்லைச் சிரிப்புதிர்த்தாள். வாருங்கள் என்று அழைப்பதுபோல் இருந்தது. அவளது மயக்கும் பார்வை – அதில் கள்ளின் போதையும் கவிதையின் போதையும் காணப்பட்டன.

ஆனால் அவன் நகரவில்லை. அழகின் தெய்வம் விபசாரியா என்ற சிந்தனை அவனைக் கலக்கியது.

ஆனால் அவளோ அவனை ஆசையுடன் நோக்கினாள். இதுவரை – இது போன்ற அழகன் அவளை நாடி வந்தது கிடையாது. அழகுமட்டும் போதாது. ஆண்மையும் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாகும் என்பதை அவள் அறியாதவளல்ல. அவன் இத்துறையில் நல்ல அனுபவசாலியாக இருந்தபோதிலும் ஒருகணம் அவனது பேரழகு அவளை அடிமை கொண்டது.

சிவகுமார் இவ்வாறு வெகுநேரம் நிற்கவில்லை. அங்கிருந்து வெளியேறுவது நல்லதுபோல் தோன்றியது. அவனுக்கு அவன் கனவுகள் சிதைந்தன. மெல்ல வெளியேறினான்.

“இது என்ன விசித்திரப்பிரகிருதி!” என்றூ கூறிக்கொண்டே பெருமூச்சு விட்டாள் அந்தப் பாதாளமோகினி. ஆனல், சீக்கிரமே அறைக்கதவு திறந்து மூடியது. பாலச்சந்தர் சர்வ சகஜமாக உள்ளே நுழைந்தான்.

இரவு 11 மணியளவில் பாலச்சந்தர் அன்று சிவகுமாரைச் சந்திப்பதற்கு அவன் அறைக்குச் சென்றான். சிவகுமார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் எழுதிய அற்புத ஓவியமோ கிழிந்து கிடந்தது. அழகின் தெய்வீகத்தில் அவன் கொண்ட் நம்பிக்கை சிந்தைது போய்விட்டது என்பதை அது காட்டியது.

சிவகுமார் இப்பொழுது யதார்த்த உலகிற்கு வந்தான். அங்கே அழகிற்கும் அலங்கோலத்திற்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. அவன் குழம்பிப் போய்விட்டான்! உலகை அவன் இதுவரை நோக்கிய நோக்கு கோணல் நோக்குப் போல அவனுக்குத் தோன்றியது.

அவன் அயர்ந்து தூங்கிப்போயிருந்தான். அவனைக் குழப்ப வேண்டாமென பாலச்சந்தர் வெளியேறிவிட்டான்.

ஒரு வாரங்கழித்து சிவகுமாரைக் கண்ட அவனது நண்பர்கள் அவனை அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம் அவன் சிலை உடை எல்லாமே மாறிப்போயிருந்தன – ஏன் அவன் பெயர்கூட மாறிப்போய்விட்டது. ராமலிங்கம் என்றே அவன் தன்னை வர்ணித்துக் கொண்டான். மொத்தத்தில் அவன் இப்போது கலை மணம் வீசும் கற்பனத் தேவ உலகில் வசிக்கவில்லை. பாதாளத்திற்கு போய் வந்ததின் பயனாக அவன் இப்போது பூவுலக வாசியாக மாறிவிட்டான்!

[நன்றி: சுதந்திரன் 01.04.1951]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *