Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள்

 

எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி. கோவணம். இடுப்பில் கடியாரம். கையில் குச்சி. தண்ணியிலிருந்து விடுட்டென ஊரை நோக்கி எழுந்து வருவதுபோன்ற நடையில் சிலை;முகத்தில் பால் சிரிப்பு. அவருக்கு நேர் எதிரே நேரு மாமாவின் சிலை. சட்டையில் ரோஜா குத்தியிருக்கும். இருவரையும் நடக்கவிட்டால் மோதிக்கொண்டிருப்பார்கள். நடுவே புகுந்த கடற்கரைச் சாலை இவர்களிருவரையும் பிரித்திருந்தது.

பாண்டிச்சேரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அங்கிருக்கும் இடங்களைவிட பல மனிதர்களே அதிகமாக நினைவிற்கு வருகின்றனர். பலரை நான் சந்தித்தது என் தாத்தாவுடன் காலை நடைபயிற்சிக்காக கடற்கரை வரை போகும்போதுதான். பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்த காலமது. அதற்குப்பிறகு நண்பர்களுடன் ஊர் சுற்றத் தொடங்கிய பின் அனுபவங்கள் குறைந்து போனது என்றே சொல்ல வேண்டும்.

`நம்ம ஊருக்குள்ள வர எத்தனை வழிடா தெரியும் உனக்கு ` – கடலையை கொறித்துக்கொண்டே அழகு வந்து சேர்ந்தான். என் பள்ளி நண்பர்கள் கூட்டம் நான்கும் ஒன்றாக சேருமிடம் கடற்கரை. பாண்டிச்சேரி பீச்சுன்னா சும்மாவா.காற்று அடித்து ஆளையே தள்ளிவிடும். சும்மா, வெள்ளென பொங்கும் அலை வந்து காலில்பட்டால் உச்சிமுடி வரை சிலிர்க்கும். ஆனால் எந்த ஊரில் இல்லாத ஒரு குறை ஒன்றுண்டு. எங்க பீச்சில் மணல் கிடையாது. பிரெஞ்சுக்காரன் தூக்கி வித்துட்டான் என தாத்தா சொல்லிக் கேள்வி. அந்த சின்ன வயதிலேயே இவ்வளவு மணலை எப்படி எடுத்துப் போனான் எனக் கேட்டு தாத்தாவின் நண்பர்கள் மத்தியில் சுட்டிப்பயல் எனப் பேர் வாங்கியிருக்கிறேன்.

என் தாத்தாவோ ஒரு விஷயத்தை சும்மா விடமாட்டார்.அது நல்லதாயிருந்தாலும் சரி, கெட்டதாயிருந்தாலும் சரி. எங்கோ தொடங்கி எப்படி வந்து எந்த இடத்திற்கு வந்துவிட்டேன். என் செட் நண்பர்களைப் பற்றி சொல்லும்போது தாத்தா எங்கே வந்தார்? எங்கூரிலே கோஷ்டி எனச் சொல்லமாட்டோம், செட் என ஸ்டைலாக விளிப்போம். எங்க செட்டுக்குன்னு கடற்கரையில ஒரு இடமுண்டு. அரவிந்தர் ஆசிரமத்திற்குப் எதிரில், டுபே பூங்காவிற்கும் அரசு தலைமைச் செயலகத்திற்கும் எதிரில் இருக்கும் கற்குவியலே எங்கள் இடம்.

`வந்துட்டார்யா அறிவுப்பய, டேய் அழகு பஸ்ல வரலாம், ஓடியே வரலாம், உன்ன மாதிரி M80 வெச்சிருந்தா சூப்பர் ஸ்பீடுல வரலாம்` – அழகு ஏற்றப்போகும் அறிவுமணிச்சுடரைக் கிண்டல் செய்தேன்.

`இப்படி வெடைச்சு வெடைச்சே விளங்காம போப்போறீங்க. நம் காந்தி சிலைக்கீழ ஒரு சுரங்கப் பாதை இருக்காம்டா தெரியுமா?`

இது எனக்கு புது கதையே கிடையாது. என் தாத்தா சொன்ன பாண்டிச்சேரியின் மறு சரித்திரம். அதை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஒவ்வொரு ஊருக்கும் தொடக்க கதை இருக்குடா என்பார் தாத்தா. பல்லாயிரம் கதையிருக்கில்ல அதில பல ஆளுங்க, அவங்க வாழ்ந்த காலமும் புதைஞ்சிருக்குடா. நம்ப மக்கள் புழங்க புழங்க ஊர் மாறியதா, அல்லதா ஊர் மாறியதால் மக்கள் மாறினாங்களா? என தாத்தா தனக்கே கேட்டுக்கொள்வார். அதிகாலை ஓஸோனில் நடை பழகும் சில பெருசுகள். அவர்களுக்காக மட்டுமே நடக்கும் பதநீர், அருகம்புல் சூஸ் போன்ற தள்ளுக் கடைகள். பதநீர் மிக விஷேசமான பாண்டிச்சேரி சரக்கு. நூறு சதவிகிதம் பாண்டிச்சேரி சரக்காகும். காலையில் இதற்காகவே தென்னை மரத்திலேரி மாலைக்கள்ளாவதற்குள் இறக்க வேண்டிய பானம்.காலையில் குடித்தால் குளிர்ந்த பதநீர்; மாலையில் கள்ளு. ஆகா, அதனை பனைஓலையில் ஊற்றி சின்ன சின்ன டம்பளர்களிலும்,குவலைகளிலும் தருவார்கள்.விலை ஐம்பது பைசா இருக்கும்.அதற்கு இணையான ருசிகர பானத்தை நான் இதுவரை குடித்ததில்லை.

இதெல்லாம் எனக்கு தாத்தாவுடன் நடை பழக்கத்திற்காக தினமும் பீச்சுக்கு செல்லும்போது கிடைக்கும் முத்துக்கள்.தாத்தா ரிடையர்ட் பாங்க் மேனேஜர். அவர் வாயிலிருந்து கேள்விப்பட்ட சரித்திரம் நூறு சதவிகிதம் உண்மையானது என்றால்,அதே நூறு சதவிகிதம் பொய்களும் கலந்திருக்கும்.ஆனால், அந்த பொய்களும் போதை தரும். அந்த மோகனக் கதைகளை கேட்டபடி பல நாட்கள் நடந்திருக்கிறேன்.

வெள்ளை குதிரையில் வந்த வீரன் இசைத்த சிகப்பு சங்கு, சிகப்பு் குதிரையில் வந்த வீரம் இசைத்த வெள்ளைச் சங்கு – இதன்வழியே தோன்றியதுதான் பாண்டிச்சேரி.

இதில் மாசோசான் செட்டி, மாணிக்கம் செட்டிகளின் கதையும் அடங்கும். வட்டிக்கு பிரெஞ்சு மன்னர்களே கடன் வாங்கும் செட்டிக்கள் இருந்த ஊர்.

மூன்று விதமான சித்தர்கள் காத்த ஊர்.அவர்களுடைய அசாதாரணக் கதையே அந்த மண்ணுக்கு உரமிட்டது என்றெல்லாம் தாத்தா சொல்லும்போது பாதி புரியாமல் தலையை மட்டும் ஆட்டுவேன்.

கடற்கரை அரவிந்தர் ஆசிரமத்துக்கருகே இருந்த பூக்கடைகளுக்குப் பக்கத்து பங்களாவிலிருந்த அறுவைக்கு தாத்தாவை ரொம்ப பிடிக்கும். இத்தனைக்கும் அறுவை சில மாதங்கள் முன் தான் எங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அவர் வீட்டின் வாசலிலிருக்கும் செடியிலிருந்து என் அம்மாவுக்கு பிச்சிப் பூவைப் பறிக்கும்போது தான் எங்களை முதலில் பார்த்தார்.முதலில் என் தாத்தா வழிந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் `உள்ள வாங்க,மிஸ்ஸே` என்றார். அதற்குப் பிறகு எங்கள் நடைபயிற்சியின் போது பல நாட்கள் பழகியது போல் எங்களை அவர் வீட்டுக்குள் தினமும் அழைத்து டீயும் , நவு நவு என்றிருக்கும் பிஸ்கெட்டும் தருவார். ஓசி பிஸ்கட் கிடைப்பதாலும் தன் கதைகளைக் கேட்க இன்னொருவர் கிடைத்ததில் தாத்தாவுக்கு ரொம்பவே சந்தோஷம். பள்ளிக்கு நேரமாகிவிட்டது என நான் நச்சரிக்கும்வரை அறுவையுடன் பேசிக்கொண்டேயிருப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சும்மா விடமாட்டார். இரண்டாம் யுத்தத்தின் போது தனக்கு நடந்தவை, தன் பங்களாவை பிரெஞ்சு அதிகாரியிடமிருந்து தந்திரமாய் விலை குறைத்து வாங்கியது, சொல்தாவாக பிரான்ஸில் பட்ட கஷ்டங்கள், பிரெஞ்சு மனைவி தன் ஊரை (Roen) விட்டு தனக்காக இங்கு வந்து சேர்ந்தது, தன்னுடம் சண்டை போட்டதினால் பிள்ளை பிரான்சிலேயே இருப்பது என தினமும் பிஸ்கெட்டுடன் வகை தொகையாக கதை கேட்போம்.

நாளாவட்டத்தில் அவர் கதைகளுக்கு `ஊம்` என்று கூடச் சொல்ல வேண்டாம் என்ற நிலை வந்தது. நான் அவர் வீட்டில் மேலும், கீழும் அலைந்து கொண்டிருப்பேன். என் தாத்தா அவர் பேச்சில் ஒரு காது, ஓசி தினசரியில் ஒரு கண் என இருப்பார். நேரமாகிவிட்டது என்றாலும் என்னால் தாத்தாவை தனியாக விட்டுச் செல்ல முடியாது. அதற்கு அறுவையின் கதைகளும் காரணம். அறுவை சொல்லும் சம்பவங்களில் இருக்கும் கவர்ச்சி , அவர் உபயோபப்படுத்தும் வார்த்தையிலும் இருக்குமே.

`அந்த கம்மணாட்டி ஜெனரல், எனக்கு குழந்தை பிறந்திருக்கு எனத் தெரிஞ்சும் லீவு குடுக்கல.சரிதான் போடா மசுரான்னு நான் உதறிவிட்டு கப்பலேறிட்டேன்`

`திரும்ப போனீங்களா?`

`தேவைப்படாம என்னய கூப்பிடுவானா? முத வருஷம் முழுக்க பீலயே மூழ்கணுமில்ல. எவன் செய்வான்?`

இந்த பீ கதை என்னை இழுக்க,மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

`ஆமாண்டா மொளகா குஞ்சான், எல்லா சொல்தாக்களும் கழுத்து வரை பீல ஒரு கம்பில தொங்கணும். இதுக்குதான் ஃபிராங்கு கொடுத்தான்`

இவன் என்னடா இப்படி வாயப் பொத்தி பொத்தி சிரிக்கிறான் என சொல்தாவாக அறிமுகமான தாத்தாவின் நண்பர்கள் கேட்பார்கள். பலர் பீ கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

அப்போதுதான் காந்தி சிலைக்கு கீழேயிருந்த சுரங்கப்பாதையை பற்றிக் கூறினார். அது சென்று முடியும் இடம் செஞ்சிக் கோட்டை. செஞ்சி மன்னன் பதினேழாம் நூற்றாண்டில் தன் தற்காப்புக்காகவும், தன் தலைமை அமைச்சர்கள் உடனடியாகத் தப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அது. இப்போது மூடி விட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதன் வழியே பல காலமாய் மன்னர்கள் சென்றுவந்து கொண்டிருந்தனர்; பிரெஞ்சு அதிகாரிகள் அதை தானியங்கள் பதுக்கும் இடமாக வைத்திருந்தனர் என பெரிய பிரசங்கம் கொடுத்தார். அதை இன்றும் நான் நம்பவில்லை. ஆனாலும், அப்போது இக்கதையின் சுவாரஸ்யம் கனவிலும் என்னை விடவில்லை.

அவர் வீட்டில் பெரிய பியானோ ஒன்று இருந்தது. அதன் மூலைகளில் தங்கம் போல் இழைக்கப்பட்டிருக்கும்.கடற்கரையிலிருந்து எழும்பும் காலை வெயிலால் பியானோ ஜொலிக்கும். தாத்தா அறுவையுடன் பேசும்போது மாடியிலிருக்கும் பியானோவை நோண்டுவது என் வேலை. மாலை வேளைகளில் தினமும் தன் மனைவி சோஃபியா பியானோ இசைப்பாள் என அதைத் தடவிப்பார்த்தபடி பழைய ஞாபகங்களில் மூழ்குவார்.

எனக்குத் தெரிந்த வரையில் அறுவையைப் பார்க்க யாருமே வரமாட்டார்கள்.நாள் முழுக்க அவர் வாழ்வது தன் நினைவுகளிலிருக்கும் மனிதர்களுடன் மட்டுமே. பத்து வருடங்களுக்கு முன்னர் அவரது மனைவி இறந்ததால் அன்றிலிருந்து தன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்தார்.ஆனாலும் பழைய கதைகளை அவர் சோகத்தோடு சொல்லி நான் கேட்டதில்லை. எல்லா கதைகளிலும் துளி கம்பீரம் இருக்கும். பழைய கதைகளில் மட்டுமே தன் உயிர் இருக்கு என தாத்தாவிடம் பொக்கை பல்லோடு கெக்கெளிப்பார். நம்மகிட்ட கதை சொல்லி ஏதோ அவன் வாழ்க்கையை ஓட்டிக்கிறான் – என தன்னுடைய பல கதைகளுக்கு நடுவே தாத்தா அறுவையைப் பற்றி அனுதாபப்படுவார்.

வழக்கம்போல் நடை பயிற்சி முடித்து விட்டு அறுவை வீட்டு வழியாகப் போனோம். வழக்கத்திற்கு மாறாக அவர் வீட்டு வாசல் கதவு உட்புறமாய் பூட்டியிருந்தது. காலிங்பெல்லை பலமுறை அழுத்தியபின்னரே மெதுவாகக் கதவைத் திறந்தார்.

அறுவையின் கண்கள் சிவந்திருந்தன. மெதுவாக ஒரு கடிதத்தை தாத்தாவிடம் காட்டினார்.

உங்க மகன் உங்க கூட தங்க வருவது நல்ல விஷயம் தானே; வியாபாரம் நஷ்டமானால் என்ன ? அவருக்கு உங்க கூட இருக்கிற தைரியம் இருக்குமே. சந்தோஷமான விஷயம் தானே? ஏன் அழுவறீங்க? என தாத்தா கேட்டுக்கொண்டிருக்கும்போதே பியானோவில் சாய்ந்துகொண்டு ஓவென ஓலம் விட்டு அழத்தொடங்கினார் அறுவை.

- 02/26/2011 

தொடர்புடைய சிறுகதைகள்
Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம். வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே ...
மேலும் கதையை படிக்க...
இப்போது கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் முத்துகிருஷ்ணன். இரு உலகப்போர்களுக்கு இடையே 1925 இல் நான் பிறந்த சமயத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் போர் பற்றி யாருக்கும் பெரிய அக்கறை இருக்கவில்லை. பிரிட்டிஷருக்காகப் போரிட ஒவ்வொரு மாதமும் நம்மூர் சிப்பாய்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பெருங்குழுவாகக் கப்பலேறினர். ஸ்ரீமுஷ்ணத்தைப் பொருத்தவரை ...
மேலும் கதையை படிக்க...
நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன.தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது. மதிய நேர சோம்பல் உள்புகுமுன் ஜன்னலை மூடினேன்.சரியாக இரண்டு நாட்களாக எங்குமே செல்லாமல் அஜந்தா விடுதியில் கடலைப் பார்த்த அறைக்குள்ளேயே முடங்கிக் ...
மேலும் கதையை படிக்க...
இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26. 1942 ஜனவரி மாத இரவு. அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் ...
மேலும் கதையை படிக்க...
மெளன கோபுரம்
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்
நந்தாதேவி
தேவதைகள் காணாமல் போயின
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)