Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பஸ் பயணம்

 

அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது காலை 5.00 மணிக்கு திரு நெல்வேலிக்குக் புறப்படும் END TO END பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது.உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ் நிரம்பி வழிந்தது. பெண்கள் பட்டுப் புடவைகளிலும் ஆண்கள் ஜரிகை வேட்டி களிலும் காட்சி தருவதிலிருந்து அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதும் வெல்லன முகூர்த்தம் என்பதும் தெளிவானது. நானும் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் அவ்வளவு சீக்கிரம் பஸ்ஸைப் பிடிக்க ஓடி வந்தேன். தெரிந்த முகம் ஏதாவதுள்ளதா என்று நான் சுற்றுமுற்றும் பார்க்க என் இடது பக்கத்திலிருந்த இரண்டு பேர் அமரும் இருக்கையில் வாட்டசாட்டமாக ஒருவர் வெள்ளைக் கதர் சட்டை வேட்டியில் அமர்ந்திருந்தார்.மோண்ட பனை மரம் போலிருந்தவரது வெள்ளை ஆடைகள் அவரின் நிறத்தைச் சற்றுத் தூக்கலாகக் காட்டியது.நல்ல வெளிச்சத்தில்தான் அவர் வைத்திருக்கும் பெரிய மீசை யாரையும் பயமுறுத்தும். விரைப்பாக முழு இருக்கையையும் அடைத்துக் கொள்வது போல் உட்கார்ந்திருந்தார்.அருகே ஒரு வயதானவர் பல்லி போல் ஜன்னலோடு ஒட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென்று பின்புறமிருந்து ” அண்ணாச்சி வணக்கம்” என்று சத்தம் வந்தது. அப்பொழுததான் ஏறிய இன்னொரு கதர் சட்டைக்காரர் பஸ்ஸின் கடைசி வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே சத்தமாக ” கலயாணத்துல தலைவர் வந்து தானே தாலி எடுத்துக் கொடுக்கிறார். ஏதோ அவசர வேலை இருப்பதால் முகூர்த்தம் முடிஞ்ச கையோடு சென்னைக்குத் திரும்பவும் பறக்கப் போகிறார்னு சொல்றாங்களே! அப்படியா!” என்றார் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கதர் சட்டைக்காரர் ” ஆமாம்” ஒரு வார்த்தையில் பதில் சொன்னார் என்னருகிலிருந்த அந்த வர்ட்ட சாட்டக் கதர் சட்டைக்காரர்.

பின்னாலிருந்தவர் மீண்டும் சத்தமாக ” “எப்படியாவது உங்கள் காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இப்போழுதெல்லாம் பஸ்ஸில் பயணம் பண்ணுவது மிகவும் கடினம். ஓரே சத்தந்தான். அங்கங்கு கைபேசிகளில் பலர் சத்தமாக பேசி சிரித்து அழுது சண்டைப் போட்டு ஆரவாரிப்பார்கள். பொது இடம் என்ற நினைவே இல்லாமல் வீட்டையே தெருவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். போதாதற்கு பஸ்காரர்கள் பாட்டுக்களை வேறு சத்தமாக வைத்துவிடுவார்கள். நாற்பது வயது தாண்டும் பொழுது எவருக்கும் சரியாகக் காது கேட்காத நிலைக்கு தள்ளி விடுவார்கள் என்பது நிச்சயம் என்னை ஒரளவாது தற்காத்துக் கொள்ள எப்பொழுதும் கையில் பஞ்சு வைத்துக் கொண்டிருப்பேன். அது என் காதுகளுக்கு அரண் என்று குருட்டு நம்பிக்கை.

விசில் ஊதிக் கொண்டே பின்வாசல் வழியாக கண்டெக்டர் ஏற முன் வாசல் வழியாக பட்டுப் புடவையில் ஒரு நடுத்தரவயது ப் பெண் ஏறி டிரைவர் அருகே ஏதாவது இருக்கை இருக்கா என்று கண்களை ச் சுழட்ட கண்டெக்டர் பின்னால் ஒரு இருக்கையில் இரு பெண்கள் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிடம்
” பின்னால் வாருங்கள் அம்மா! இடமிருக்கிறது” ”

“எனக்குப் பின்னாடி வேண்டாம்”

“அப்படியா! ஒன்று செய்யுங்கள். முன்னால் டிரைவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்”

எல்லோரும் கொல்லென்று சிரிக்க அந்தப் பெண் கோபத்தோடு பஸ்ஸை விட்டு இறங்கப் பஸ் புறப்பட்டது. மிந்தின நாள் இரவு நல்ல மழை பெய்திருந்ததால் நல்ல தணுப்பு. பஸ்ஸில் முக்கால்வாசி ஜன்னல்கள் கண்ணாடிகள் இழுத்துவிடப் பட்டு மூடப் பட்டிருந்தன. பஸ் ஒழுகினசேரி பாலம் தாண்டியதும் வாடைக் காற்று விர்ரென்று வீச பயணிகள் மீதியுள்ள ஜன்னல்களையும் சாத்த ஆரம்பித்தார்கள்.

என் இடப்பக்கமிருந்த வயதானவரும் ஜன்னலைச் சாத்த முயற்சிக்க அந்தக் கதர் சட்டைக்காரர் காத்து வேணும் சாத்தக்கூடாது என்று தடுத்தார். வயதானவர் வாடைக் காற்று வீசுகிறது என்று சொல்ல, வேண்டுமானால் நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொள்கிறேன் என்றார் கதர் சட்டை. வயதானவருக்கு தயக்கம். நான் பெரியவரிடம் ” இந்தப் பக்கம் வந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சிரமமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பஞ்சையும் கொடுத்து காதுகளில் வைத்துக் கொள்ள ச் சொன்னேன். வேறு வழியில்லாமல் இருக்கையில் உட்பக்கம் நகர்ந்து கிடைத்த கொஞ்ச இடத்தில் ஒட்டிக் கொண்டு வந்தார்.

நாலு வழிப் பாதையை அடைந்ததும் “கார் ரேசில்” கலந்து கொண்டிருப்பது போல் அனைத்து வண்டிகளும் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. விடிய ஆரம்பிக்கவில்லை. திடீரென்று பஸ்ஸின் மேல் தண்ணிரை வாரி இறைத்து போன்ற சத்தம். இடது பக்கமாக பஸ்ஸை முந்தின காரொன்று ரோட்டில் எதிர்பாராத விதமாக த் தேங்கிக் கிடந்த செம்மண் கலந்த மழைத் தண்ணிரை கடந்து செல்ல மழை நீர் பஸ்ஸின் மீது வாரி இறைக்கப் பட்டது. நம்ம கதர் சட்டைக்காரர் ஐயோ! என்று சத்தம் போடவும் தான் விஷயம் தெரிந்தது.

வாரி இறைக்கப் பட்ட மழை நீர் அவரை அபிஷேகம் செய்து விட்டது. மற்றவர்களெல்லாம் ஜன்னல்களைச் சாத்தியிருந்ததால் மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவுமில்லை. நல்ல வெள்ளைச் சட்டை செம்மண் கலந்த நீர் தெளிக்கப் பட்டு கறையாகப் போனது. முகத்திலெல்லாம் சென்னீர் வழிந்து கொண்டிருந்தது. வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கதர் சட்டை அண்ணாச்சியிடம் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்து கழுவச் சொன்னார்கள். ஆனால் என்ன கழுவியும் சட்டையிலுள்ள கறை போகவில்லை.

பின்னாலமர்ந்திருந்த கதர் சட்டைக்காரர் ” அண்ணாச்சி! திரு நெல்வேலி போனதும் புதுச் சட்டை வாங்கிக் கொள்வோம்” என்றார்.

உடனே நான் காலையில் இவ்வளவு சீக்கிரம் ஜவுளிக் கடைகள் திறந்திருக்குமா என்று கேட்டேன்.

நான் சொல்வதைப் புரிந்து கொண்ட கதர் சட்டை அண்ணச்சி மற்றவரை முறைத்துவிட்டு வண்டியிலேறினார். ஏறிய கையோடு ஜன்னலைச் சாத்திவிட்டு வயதானவரை ஜன்னலோரம் அமரும்படி வேண்டினார். உட்பக்கமாக அமர்ந்த பின்பும் ஈர வேட்டி சட்டையுடனிருந்த வாட்டசாட்ட அண்ணாச்சியின் உடம்பு வாடைக் காற்றில் வெடவெடவென்று நடுங்கியது.

பின்னாலமர்ந்திருந்த கதர் சட்டைக்காரர் எனக்கும் அண்ணாச்சிக்கும் இடையில் நின்று கொண்டு அண்ணாச்சியிடம் இப்படியாகிவிட்டதே என்று அங்கலாய்த்தார். அண்ணாச்சியின் மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவர்களதுப் பேச்சிலிருந்து அண்ணாச்சி திடீரென்று காலியாகிவிட்டிருந்த மாவட்ட செயலாளர் பதவியை லோக்கல் மலை மூலமாக கலயாணத்துக்கு வரும் தலைவரை சந்தித்து எப்படியாவது வாங்கி விடவேண்டும் என்ற பெரிய திட்டத்துடன் தான் கிளம்பியிருக்கின்றார் என்பது தெரிந்தது.

அண்ணாச்சி பஸ் ஏற வரும்பொழுது பெரிய மனக் கோட்டைகள் எல்லாம் கட்டிக் கொண்டு ஏதோ இந்திரப் பதவி கிடைக்கப் போவது போல் இறுமாந்து போய் ஆணவத்துடன் பஸ்ஸில் ஏறி, அமர்ந்திருந்த பெரியவரை புழுவைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு முழு இருக்கையும் தனக்கே சொந்தம் என்பது போன்ற பாவனையுடன் அமர்ந்த திமிறு . அதற்குக் காரணம் நாலு நாட்கள் முன்னால் திடிரென்று மாரடைப்பில் அவர் கட்சி மாவட்டச் செயலாளர் மண்டையைப் போட்டுவிட அந்தப் பதவியை நம்ம வாட்ட சாட்ட அண்ணாச்சிக்கு வாங்கித் தருவதாக திரு நெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. போட்டி பலமாக இருப்பதால் தலைவரிடம் நேரில் பேசி சரி செய்ய வேண்டும். சீக்கிரமே வந்துவிடு. தலைவர் தங்கியிருக்கும் இடத்துக்கே போய் பார்த்துவிடுவோம் என்று அண்ணாச்சியிடம் சொல்லியிருந்தார் மலை என்பதும் அவர்களின் உரையாடல்களிலிருந்து தெரிந்தது.

இப்பொழுது இவ்வளவு அலங்கோலமாகத் தலைவர் முன்னாடி எப்படிப் போய் நிற்பது என்று அண்ணாச்சி அங்கலாய்த்தார். கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதே என்று மனது கொதித்தது. திருநெல்வேலிக்குப் போய் ஆகப் போவதொன்னுமில்லை. இறங்கிவிடலாமா என்றால் பாதி வழியில் இறங்கினால் திரும்பப் போவதற்கும் நடு வழியில் பஸ் கிடைக்காதென்பதால் வேறு வழியில்லாமல் அண்ணாச்சி பயணத்தைத் தொடர்ந்தார். கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் வாடைக் காற்றின் வெடவெடப்பாலும் காரியம் கெட்டுவிட்டதாலுண்டான மனப் புழுக்கத்தாலும் இருக்கையில் நெளிந்து கொண்டிருந்ததார். பார்க்க பரிதாபமாக இருந்தது.

பெரியவரிடமிருந்து லேசான குறட்டைச் சத்தம் வர ஆரம்பித்தது. முழித்துப் பார்த்த அண்ணாச்சிக்கு இதுவரை அவர் பேரில் அவருக்கே இருந்து வந்த கோபம் மெள்ள பெரியவரின் மேல் தாவியது போல் தோன்றியது. அந்தப் பெரியவர் முரண்டு பண்ணி ஜன்னலைச் சாத்தியிருந்தால் தனக்கு இந்த கதி வந்திருக்காது என்று குருரமாக எண்ண ஆரம்பித்துவிட்டாரோ என்னவோ அவர் தூக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி அவரை வேண்டுமென்றே இடித்துத் துன்புறுத்தினார். தான் புழுங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு வருகின்றாரே என்ற பொறாமையும் காரணமாக இருக்கலாம். பெரியவ்¡ திடுக்கிட்டு முழித்து திரு நெல் வேலி வந்து விட்டதா என்று அரக்கப் பரக்கக் கேட்டுக் கொண்டு அவசரமாக இருக்கையை விட்டு எழுந்திருக்கப் போனார்.

இல்லை! இல்லை ! என்று நான் சொல்ல அண்ணாச்சியின் முகத்தில் ஒரு விதமான குருர புன்னகை அரும்பியதைப் பார்க்க முடிந்தது. அண்ணாச்சியின் புழுங்கிக் கொண்டிருந்த மனதில் ஒரு பொறி தட்டியது. சின்ன விஷயங்களில் கூட அடுத்தவனைத் துன்பப் படுத்தி சந்தோஷப் படும் மனதுடைய தான் அரசியலில் கண்டிப்பாக முன்னுக்கு வந்து விடலாம் என்று தோன்றியதும் அன்று எதிர்பாராத விதமாக தலைவரை சந்திக்க முடியாமல் போய்விட்டதால் ஏற்பட்ட தோல்வியை நினைத்து கனத்திருந்த மனசு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக, தூங்கிக் கொண்டிருந்த பெரியவரை துன்புறுத்தி எழுப்பி காவலுக்கு வைத்துவிட்டு அவரைவிட சத்தமாகக் குறட்டைவிட முயற்சிக்க ஆரம்பித்தார்.

நடந்தவைகளையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு வந்த எனக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.காட்டிலுள்ள புலி சிங்கமெல்லாம் தங்கள் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் மற்ற மிருகங்களைஅடித்துக் கொல்கிறது. ஆனால் நாட்டிலுள்ள ரெண்டுகால் மிருகங்களோ எந்த அவசியமுமில்லாமலிருந்தால் கூட அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி சந்தோஷப் படும் குருர மனதுடைய ஜந்துக்கள் என்பது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மெக்கானிக் சுதனுக்கு ஞாயிறு தோறும் ஷிப்ட் மாறும். அந்த வாரம் அவனுக்கு இரவு ஷிப்ட் கடந்த இரண்டு நாட்களாகவே கனத்த மழை பெய்வதால் சைக்கிளில் செல்லாமல் நடந்தே தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தான். அன்று மழையும் மிக அதிகமாக இருந்தது, மின்சாரமும் போய்விட்டிருந்தது. பணிக்குக் ...
மேலும் கதையை படிக்க...
சிவராமன் அவசர அவசரமாக குளித்து ரெடியாகிக்கொண்டே வாட்சைப் பார்த்தால் மணி 7.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேக், பால் பாத்திரத்துடன் வேகமாக வெளியே வந்து ஆத்தைப் பூட்டி பக்கத்தில் சியாமளா மாமியாத்து வாசற்படியில் சாவியையும் பால் பாத்திரத்தையும் வைத்தபடி “மாமி ...
மேலும் கதையை படிக்க...
முரளி சித்தார்த்திடம் அங்குள்ள புராதானமானதும் நல்ல முறையில் ஒழுக்கத்தையும் கல்வியையும் சேர்த்து போதிக்கும் பெருமை வாய்ந்ததுமான அந்த ராமகிருஷினா பள்ளியில் நகுலைச் சேர்த்து விடுவோம் என்றான். ‘அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது "குதிரைக் கொம்பாயிற்றே"- சித்தார்த் ‘எனக்கு அங்கு நல்ல ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தருக்குக் கல்லூரி கிடையாது.காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு பொழுது போகாமல் டீவியில் நல்ல நிகழ்ச்சிகள் எதுவுமில்லாதிருந்தாலும் விடாமல் ஒவ்வொரு செனலாகப் புரட்டிக் கொண்டிருந்தான் அவனுக்குப் பிடித்தது ஏதாவது கிடைக்குமாவென்ற நப்பாசையில்.அவன் என்னதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் அவனது ஆங்கில ...
மேலும் கதையை படிக்க...
பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும் அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைத்தபாடில்லை. குமாரவேலின் தந்தை ராசு ஆசா¡¢ வீட்டின் பின்புறம் வைத்திருந்த பட்டறையில் இரு நண்பர்களும் படிக்கிற ...
மேலும் கதையை படிக்க...
மழை வெள்ளம்
நூற் கண்டு
அடுத்த வீட்டு திருட்டுப் பூனை
நாணயம்
பால் மாடு

பஸ் பயணம் மீது ஒரு கருத்து

  1. சுரேஷ் says:

    அருமையான கதை. இது போன்ற கதைகளை தேடிப் பிடித்துப் படிக்க ஆவல். நன்றி ஆசிரியருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)