பலாமரத்து வீடு கதை!

 

எப்படி? எப்படி இது சாத்தியம்? யாராலும் நம்பவே முடியவில்லை. வியப்பும் தவிப்புமாகத் திணறினார்கள். அக்ரஹாரத்துக் காற்றில் சற்று முன் பலாமரத்து வீட்டம்மா சொன்ன சேதி கும்மியடித்துக் கொண்டிருந்தது. அய்யன் குளக்கரை அரச மரம் கூட இலைகளை சலசலத்துப் பேசிக்கொண்டது.

பலாமரத்து வீடு, அந்த அக்ரஹாரத்தின் நடுவே தனித்திருந்தது. மற்ற எல்லா வீடுகளும் ஒரு பக்கத் தாய்ச் சுவரோடு ஒடுங்கியிருக்க, அந்த வீடு மட்டும் குட்டி காம்பவுண்டுக்குள் பளிச்செனத் தெரிந்தது. வீட்டு வாசலில் அந்த வீட்டுக்காரம்மாவைப் போலவே பரந்து விரிந்திருந்தது ஒரு பலாமரம்.

அவள் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. பலாமரத்து வீட்டம்மா. அப்படித்தான் அவள் அறியப்பட்டாள். கறுப்பில் சேர்த்தியாகிற நிறம். குட்டையாய், இரட்டை நாடியாய் இருப்பாள். காதில் அது என்ன கல்லோ! பளபளக்கும். மூக்கின் இருபுறங்களிலும் பேசரி. குறுகலான நெற்றி. நடுவே பெரிய குங்குமம், மூன்று பட்டை விபூதி நடுவே பளிச்சிடும். சின்னக் கொண்டை. கழுத்தே அடைந்து போகிற அளவு சங்கிலிகள். கைகளிலும் பதிந்து கிடக்கும் நெளி வளையல்கள். சிரிப்பே வராத முகம். எதிலும் லாபக் கணக்கு மட்டுமே அவள் பார்ப்பாள். யாரோடும் சகஜமாய் பேசிவிட மாட்டாள். மொத்தத்தில் ‘ரப்பும் ராங்கியும் புடிச்சவ!’

‘லாபக் கணக்கில் நஷ்டம் வந்தது எப்படி? இல்லை. இதிலும் ஏதாவது லாபம் இருக்குமோ?’ புரியவில்லை ஜனங்களுக்கு.

குட்டையான அவள் வீட்டுப் பலாமரம் நாய்க்குட்டிகள் மொய்த்தது போலக் காய்க்கும். ‘இந்தா’ என்று யாருக்கும் ஒரு சுளை தந்ததில்லை. வீட்டின் பின்புறம் கிணற்றடி, துவைகல், நீர் பாயும் இடத்தில் வாழை, ஜிமிக்கிப் பூக்கள் செறிந்த சம்பங்கி, நாமடிசம்பர், வயலட், ஊதா, வெள்ளை டிசம்பர், கனகாம்பரம், அடுக்கு மல்லி எல்லாம் உண்டு. டிசம்பர் பூக்கும் மார்கழியில், பெண் குழந்தைகள் காலையில் கூடையும் கையுமாக ஓடும். காசு வாங்கிக் கொண்டு தான் பறிக்க விடுவாள்.

சும்மாதானே கொட்டிப் போவும்? டிசம்பர் பூவுக்குக் கூட காசு வாங்கறா. பொண்ணா இருக்கு அவளுக்கு? எனப் பொருமித் தீர்ப்பார்கள்.

காய்க்காரன், சாயவேட்டிப் பூக்காரன் எல்லோருக்குமே அவளைப் பார்த்தால் பயம். சாய வேட்டிக்காரனிடம் பூ வாங்கினால் அவளாகவே ஒரு கை பூவை அள்ளிப் போடுவாள். அவன் கத்துவதைப் பொருட்படுத்தவே மாட்டாள்.

காய்க்காரனிடம் அதே கதைதான். பாதி நேரம் பலாமரத்து வீட்டம்மாளுக்குத் தெரியாமலே ஓடி விடுவான். பின்னே பச்சைமிளகாய், இஞ்சி எல்லாம் ஓசி கொடுத்து முடியுமா?

‘தனக்கும் மகனுக்கும், எப்போதோ வரும் கணவனுக்கும் இரண்டு அறைகளே போதும்’ என்று சிறியதாய், வீட்டை ஒட்டின மாதிரி ஒரு ஒண்டுக் குடித்தனம். அதில் குடியிருந்த தேவகியோடும், அப்படி ஒன்றும் உறவாட மாட்டாள் பலாமரத்து வீட்டம்மா. சாயங்காலமானால், பெரும்பாலும் பாக்கு அல்லது பாசிப் பச்சையில் புடவையைக் கட்டிக் கொண்டு பிள்ளையாரைப் பார்க்க வருவாள். துக்குணியூண்டு கிண்ணியில் எண்ணெய், சில சமயம் தொடுத்த மல்லிகைப் பூ.

பலாமரத்து வீட்டம்மாதான் யாருடனும் பேசி வம்பளக்க மாட்டாளே தவிர, அவளைப் பற்றி மற்றவர்கள் பேசாத நாளே கிடையாது.

தெரியுமா? சொந்த அண்ணன் பொண்ணைக் கட்ட மாட்டேன்னுட்டாளாம். அரை கிலோ தங்கம் கேக்கிறாளாமே!

அப்பாடி! எதுக்குடி இவ்ளோ ஆசை?

பாத்துக்கிட்டே இரு. ஒண்ணும் கொண்டு வராம அந்தத் திலகா வரப் போறா!

திலகா சிவப்பாக அழகாக இருந்தாள். ஆனால் ஏழை. பலாமரத்து வீட்டம்மா மகன் ரங்கனுடன் சுற்றுகிறாள். எப்படியும் தன்னை அவன் கட்டிக் கொள்வான் என்று நம்பிக்கை!

நடக்குமா? பையனுக்குப் புடிச்சா போதுமா? திலகாவையெல்லாம் பண்ணிக்க விட மாட்டா மகராசி!

உச்சுக்களும், பெருமூச்சுகளுமாய் கூட்டம் கலையும்.

அந்த திலகா என்றால் கூட அக்ரஹாரம் வாயைப் பிளந்திருக்காது. கல்யாணம் என்று வெள்ளி மயிலின் முதுகு திறந்து குங்குமம் தந்தாள் பலாமரத்து வீட்டம்மா. அவள் சொன்ன பெண்ணின் பெயர்தான் எல்லோரையும் திகைத்து நிற்கச் செய்தது.

ரங்கனைக் கட்டிக்கப்போறது செல்வியாம்!

அடக் கலிகாலமே!

செல்வி. பலாமரத்து வீட்டம்மாள் வீட்டில் வேலை செய்யும் பெண். அந்த செல்வியைப் பற்றியும் அக்ரஹாரம் பேசியது.

அது ஒரு அரைக் கிறுக்குப்பா. மாங்கு மாங்குனு வேல செய்யுதாம். யாருமே இல்லையாம்!

போதுமே. அதைப் பார்த்தாலே தெரியுது. சோறு கூட வேண்டியிருக்கலே.

அதும் பல்லும் அதுவும். ஸ்ஸ்ஸ்ஸ்.

உண்மைதான். வாய் மூடவே முடியாத பல் வரிசை. தெறித்து விழுவது போல முட்டையாய். எங்கோ நிலை கொள்ளாமல் வெறிக்கும் கண்கள். பம்பைத் தலையை சொறிந்து கொண்டு, கழுத்தில் கிடக்கும் சாயம் போன பாசியைக் கடித்துக் கொண்டு. தொளதொளத்த ரவிக்கையில் மெலிந்த கைகள், பழைய சேலையைச் சுற்றிக் கொண்டு. அவள் உருவத்தால் பெண், அவ்வளவுதான்.

என்ன செல்வி. வேலையை முடிச்சிட்டியா?

இந்தா பேக்கு. உன்னைத்தான்!

அவ்வளவுதான்.

தே. என்னா, என்னா, எனச் சாடுவாள். அடிக்க வருவாள்.

நாளை வெள்ளிக்கிழமை, இந்த பேக்கு செல்விக்கும் ரங்கனுக்கும் கல்யாணம். பிள்ளையார் முன் சிம்ப்பிளாக. எப்படி சாத்தியம்? அக்ரஹாரம் ஆச்சர்யப்படாமல் என்ன செய்யும்? மகன் எப்படி சம்மதித்தான்? திலகா இல்லாவிட்டாலும் செல்வியையா? ஏன்? ஏன்? ஏன்? மண்டை வெடித்து விடும் போல் குழப்பம்.

திலகாவை சீர் இல்லாவிட்டாலும் அழகுக்காகவாவது பண்ணிக்கலாம். இது?

கடைசியில் பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் கோயில் மாமா கேட்டே விட்டார்.

என்னம்மா. இப்படி ஒரு கல்யாணம்..?”

ஒரே பையன். சீரும் சிறப்புமா நடக்க வேண்டாமா? இப்படி.

கொடுப்பினை இல்லியே? என்ன பண்ண?

பையன் அப்பாக்குத் தெரியுமா?

இல்ல சாமி. அவசரமா முடிச்சாகணும். அவர் வந்த பின்னே தெரிஞ்சுக்கட்டும்.

அப்படி என்ன அவசரம்? வேற பொண்ணா கிடைக்கல? இப்படியெல்லாம் கேக்கணும்னு தோணுதில்லீங்களா சாமி?

கோயில் மாமா தலையை மட்டும் ஆட்டினார்.

பலாமரத்து வீட்டம்மா ஒரு நிமிடம் மௌனமாக நின்றாள். பிள்ளையாரை வெறித்துப் பார்த்தாள்.

தப்பு நடந்து போச்சு சாமி. ரங்கன் தப்பா நடந்துட்டான்.

‘செல்வியிடமா? ரங்கனா?’ கோயில் மாமாவால் நம்ப முடியவில்லை.

என்னது? என்னம்மா சொல்றீங்க..? பதறினார் அவர்.

ஆமாங்கறேன். பேக்குன்னா என்னவும் செய்யலாம். எப்படியும் நடக்கலாமா? அவன் செய்யலனு சொல்ல முடியாது. ஏன்னா கண்ணால பாத்த சாட்சியா நா இருக்கேன்!

“அதுக்காக.”

அவளை முடிக்கி விடவில்லை.

எதையாவது கொடுத்தோ, கொடுக்காமலோ விரட்டி விட்டிருக்கலாம்தான். அதுக்கு எதுத்துக் கேக்கத் தெரியாதுதான். ஆனா அதும் ஒரு பொண்ணில்லையா? நியாயம் வேண்டாமா?

எதிலும் லாபக் கணக்கு மட்டும் பார்க்கும் பலாமரத்து வீட்டம்மாளா இது? கோயில் மாமா திகைத்து நின்றார்.

என்ன சாமி! ஒண்ணும் பேச மாட்டேன்றீங்க? நானும் ஆச புடிச்ச பொம்பள. என் மனசு மாறிடக் கூடாதுனுதான் நாளைக்கே கல்யாணம் வச்சேன்.

ரங்கன்.ரங்கன் சம்மதிச்சுட்டானா?

சம்மதிக்கலைன்னா நான் உயிரையே விட்ருவேன்னு சொல்லி வச்சிருக்கேன்!

அப்போ திலகா?

உண்மையான அன்போ, காதலோ இருந்தா புத்தி இப்படி அலையுமா சாமி? இந்த செல்விகிட்டே எதையோ கண்டுதானே போனே? அப்ப அவ கூடவே வாழு.
கோயில் மாமா வாயடைத்து நின்றார்.

பலாமரத்து வீட்டம்மாளும் அவள் வீட்டுப் பலாப்பழம் போலவே அவருக்கு எட்டாதவளாகத் தோன்றினாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ். வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை. என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
காலை நீட்டி, உடம்பை லேசாய் முறுக்கிப் படுத்த விசாலத்துக்கு அப்பாடி என்றிருந்தது. எத்தனை பெரிய காரியம் நல்லபடியாய் நடந்து முடித்திருக்கிறது. ஒண்டிப் பொம்பளையாய் இருந்தாலும் நாலு ஜனம் பாராட்டுகிற மாதிரி காலாகாலத்தில் பெண்ணை ஒருத்தனிடம் ஒப்படைத்துவிட்டது எத்தனை பெரிய காரியம்! ஸ்ரீ வெங்கடாசலபதியின் அனுக்கிரகமும், அந்த ...
மேலும் கதையை படிக்க...
அவன் கண்களை மூடிக்கொண்டான். மனசுக்குளே அவளை முழுசாய் நிறுத்திப் பார்க்க முயற்சித்தான். கிட்டத்தட்ட ஒரு மாசமாய் நினைத்துநினைத்துப் பழகி இருந்ததால் கூப்பிட்ட உடன் ஓடிவரும் நாய்க்குட்டி மாதிரி மனசுக்குள் வந்து நின்று கொண்டாள். அவள் ரொம்ப உயரமில்லை. ஐந்து இருநாடு இருந்தால் அதிகம். அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
தாய்மை..ஒரு கோணம்
சுத்தம்
நான் மட்டும்?
ஆசை ஆசை ஆசை
ட்ரங்கால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)