கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,258 
 

ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’

ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை காது வழி கேட்டிருத்தாலும் இப்போதுதான் அது தெஞ்சை முழுமையாகத் தாக்குவதாக இருந்தது.

வாடிய பயிருக்கும் வாடும் மனுஷ மனமா? அவனுள்ளே ஏதோ குலுங்கியது. என்னகருணைக் கடல் இது? தன்னைப் போன்ற மனிதனுக்காக மட்டுமல்ல, வலியையும் வேதனையையும் முழுமையாக உணரக்கூடிய சக ஜீவராசிகளுக்காக மட்டுமல்ல, ஓரறிவு தாவரங்களுக்காகவும் கண்ணீர் சிந்த முடியுமா? மிருகத்திலிருந்து பிரிந்து வந்த மனிதனுக்கு எப்படி சாத்தியமாயிற்று இது?

இந்தப் பரவசத்திலிலேயே அவன் அப்படியே உறங்கிப் போனான்.

அடர்ந்த கானகம்.

அரசு கால்நடைப் பண்ணையில், கால்நடை அறிவியல் பாடம் எடுக்கும் பேராசிரியர் போல யானை நின்று கொண்டிருந்தது. அதற்கு முன்னால் மாணவர்களைப் போல அரைவட்ட வடிவமாக ஒரு நாற்பது ஐம்பது மிருகங்கள்.

யானை பேசியது: இந்த இடத்தில் நின்றுதான் அந்த மனிதக் குரங்கு எங்களிடம் விடைகேட்டது. எனக்குப் பகுத்தறிவு என்னும் வரம் இடைத்திருக்கிறது. நான் மனிதனாக, அப்புறம் அதி மனிதனாக, அப்புறம் தேவனாக, கடைசியாக கடவுளாக பரிணாமப்பட வேண்டும். நான் புறப்படுகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்’ என்று கேட்டது.

நாங்கள் சொன்னோம்: இல்லை நண்பா, இயற்கை ரொம்பவும் நியாயமானது. எந்த ஒரு ஜீவராசிக்கும் தனிச் சலுகைகள் கொடுக்க அதற்குத் தெரியாது. நீ எதையோ தவறாகப் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. நீ வரம் என்று சொல்வது சாபமாகக் கூட இருக்கலாம். நன்றாக யோசி, வேண்டாம் என்றோம்.

அது கேட்கவில்லை. புறப்பட்டுப் போனது. இப்போது மனிதனாகி அனுபவிக்கிறது.

ஞானக்கிறுக்கன் யானையிடம் கேட்டான், ‘மனிதன் என்ன கெட்டுப் போனான்? உங்களைவிட அவன் என்ன கஷ்டம் அனுபவிக்கிறான்?’

மிருகங்கள் எல்லாம் கொல்லென்று சிரித்தன. அவைகள் சிரித்ததைப் பார்த்தால் மனிதன் கெட்டுக் குட்டிச்சுவராகிப் போனது. மற்ற முடிவாக தெளிவாகிப் போன விஷயமென்றும், இனியும் அதைப் பற்றிய சந்தேகமோ கேள்வியோ எழுப்புவது விழுந்து விழுந்து சிரிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக ஆகிப் போனதாகவும் பட்டது.

ஞானக்கிறுக்கனுக்கு மூக்கு மேல் ரோஷம். அவன் சொன்னான், ‘பரிணாமப்பட்டதால்தான் மனிதன் இன்று வானவெளியில் பறக்கிறான் தெரியுமா?’

பறந்து சக மனிதன் தலையில்…. கரடி சொல்ல மிருகங்கள் மீண்டும் சிரித்தன.

“எவ்வளவு நாகரீகமான வீடுகள்! பார்த்திருக்கிறீர்களா?’

‘வீடுகள் நாகரீகம்தான். வீடுகளுக்குள்ளேதான்…’ தாடி வைத்த வெள்ளாடு சொல்ல மீண்டும் சிரிப்பு,

நாங்கள் மரணத்தையே வெல்லப் போகிறோம். மருத்துவத்தில் அப்படியொரு முன்னேற்றம்.

‘மரணத்தை வெல்லப் போகிறீர்களா? ஆர்.டி.எக்ஸ். சாப்பிட்டா?’ – சொல்லிவிட்டு சேவல் கொக்கரக்கோ என்று கூவ, சில மிருகங்கள் அப்படியே செய்தன.

தாங்கள் உலகத்தில் நானூறு கோடி பேர் இருக்கிறோம். உன்களில் எந்த ஜாதியிலும் இவ்வளவு தொகை இருந்திருந்தால் அடித்துக் கொண்டே செத்துப் போயிருப்பீர்கள்.

கழுதை பக்கத்திலிருந்த மானிடம் கண் சிமிட்டிவிட்டு இவனைப் பார்த்துச் சொன்னது! ‘அது சரிதான் அய்யா, நீங்கள் ரொம்ப ரொம்ப ஒற்றுமை, உங்களுக்கு இடையே தடுப்புச் சுவராக மசூதியும் கோயிலும் கூட வந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான் மசூதிகளையும் கோயில்களையும் இடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.’

கானகம் அதிர மீண்டும் சிரிப்பு.

ஞானக்கிறுக்கன் நினைத்தான், இதற்கெப்படித் தெரியும் மானுடம் என்னும் கற்பூர வாசனை. அவன் சொன்னான், எங்கள் அறிஞன் ஒருவன் எங்களைப் பற்றி என்ன சொன்னான் தெரியுமா? மனிதன்! ஆ. அதுதான் எவ்வளவு கம்பீரமான சொல் என்று சொல்லியிருக்கிறான்.

கழுதை பழையபடி ஒருமுறை கண் சிமிட்டிவிட்டு, மரத்தில் இருந்த காக்கையிடம் கேட்டது. ‘கன்னங் கரிய காக்கையே உன் அருமைக் குஞ்சின் பெயர் என்ன?’

காக்காய் சொன்னது. ‘பொன் குஞ்சு’.

விலங்குகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து சிரிக்க ஆரம்பித்து

ஊ…. கூம், இதுகள் தேறாது என்று ஞானக்கிறுக்கன் புறப்பட்டான்.

ஞானக்கிறுக்கன் ஊருக்குள் வந்த போது. கண்ணில் பட்டவை இரண்டு வண்டி எருதுகள்.

அவைகளைக் கண்டபோது அந்த வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை இவனுள்ளும் பொங்கிப் பிரவகித்தது. ‘ஒரு ஜீவனின் ஜீவிய காலம் முழுதுமே வண்டியிழுப்பதிலும் அசை போட்டுக் கிடப்பதிலுமே கழிவதா?’

இதையவன் அந்த எருதுகள் ஒன்றிடம் கேட்டான்.

என்ன செய்வது? வண்டியிழுப்பதும் சும்மா இருப்பதும் என் பொறுப்பில் இல்லை. சும்மா இருக்கும்போது அசை போடுவதுதான் என் பொறுப்பில் இருக்கிறது. அதை நான் சிறப்பாகச் செய்வதாகவே நினைக்கிறேன்.

வாய் உணவை அசை போடும் போது மனசு எதை அசை போடுகிறது?

எத்தனையோ. என் அம்மாவின் அந்த புஷ்டியான மடி சுரந்து தெறித்த பால். சகோதரியின் குறும்பு. சகோதரனோடு ஓடிய ஓட்டம்.

இவ்வளவுதானா உன் நினைவுத் தளத்தில் இதையேதான் ஒரு ஜென்மம் முழுக்க அசை போட்டுக் கொண்டிருப்பாயா?

நீ என்ன செய்கிறாய் மனிதா?

நாங்களா? மனிதர்களா? அடேயப்பா, நாங்கள் நினைத்துப் பார்க்க ஒரு கடலே இருக்கிறது நண்பனே. நாங்கள் எவ்வளவு பெரிய சமூகம். எங்களுக்கு என்னென்ன அற்புதமான அனுபவங்கள் இருக்கின்றன தெரியுமா? காதல் ஒன்றே போதுமே.

காதலா? அப்படி என்றால்?

ஞானக்கிறுக்கனுக்கு ஜீவ கருணையோடு கலந்த ஒரு பெரும் அதிர்ச்சி. அயற்சி. காதல் தெரியாதா? உனக்குக் காதல் தெரியாதா? அதுதானே உயிர்களின் மூலாதாரக்கூறு. அற்றது அது எனில் உற்றது எது? காதல் போயின் சாதல் இல்லையா? ஓ. அவன் அந்த வண்டி நுகத்தடியில் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்தே விட்டான்.

எருது சொன்னது. ‘இதோ பார் மனிதா, எங்களுக்கு அழகான வால் இருக்கிறது. அது போல் உங்களுக்கு இருக்கிறதா? ஆனால் அதற்காக நீங்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதேபோல உங்களிடம் இருக்கிற ஏதோ காதல் என்ற ஒன்றிற்காக நாங்களும் கவலைப் படப் போவதில்லை. அதற்காக நீயேன் கவலைப்படுகிறாய்?

காதல் மட்டுமல்ல. நட்சத்திரங்களையே எங்களால் எண்ண முடியும்.

நட்சத்திரங்களை ஏன் எண்ண வேண்டும்?

ஒரு நாள் நாங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தையே கண்டு பிடித்து விடுவோம்.

கண்டுபிடித்து என்ன செய்வீர்கள்? அதையும் அசை போட்டுக் கொண்டிருப்பீர்களா? எருது சிரித்தது.

ஊ… கூம். இந்த விதமாக தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாது என்று நினைத்த ஞானக்கிறுக்கன் வேறு வழிபற்றி யோசித்தான்.

இல்லை என் சகோதர ஜீவனே. நான் இருதய சுத்தமாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து கேள்.

சரி சொல்.

நாங்கள் யாரென்று தெரிகிறதா?

தெரியாமல் என்ன, மனிதர்கள்.

ம். மனிதர்கள் என்றால் இங்கு மனிதர்கள் மட்டும்தான் மனிதர்கள் இல்லை. அது தெரியுமா?

எருது மெல்ல ஆரம்பித்து பின் பெரிதாகவே சிரித்தது. “தெரியாமல் என்ன பைத்தியங்களும் கூட மனிதர்கள்தான்.”

இல்லை இல்லை. அதை நான் கேட்கவில்லை. சரி, நானே சொல்கிறேன். நீ பார்க்கிறாயே இந்தக் கார், ரயில், விமானம், எந்திரங்கள், எல்லாமே மனிதர்கள்தான். அது தெரியுமா உனக்கு?

அவைகள் மனிதர்கள் செய்தது என்பது தெரியும். ஆனால் அவைகளே மனிதர்கள் என்று எப்படிச் சொல்கிறாய் நீ?

ஞானக்கிறுக்கன் விளக்கிப் பேச ஆரம்பித்தான்.

விலங்கிலிருந்து பிரிந்து, நிமிர்ந்து நடந்து. கையையும் மூளையையும் உபயோகிக்கக் கற்று ஒரு நிலையடைந்த மனிதன், அதற்கு மேலும் பரிணாமப்பட நினைத்த போது அதாவது ஆகாயத்தில் பறப்பவனாகவும். தண்ணீரில் நடப்பவனாகவும், வாயு வேகம் மனோ வேகமாக தூரங்களைக் கடப்பவனாகவும் தான் ஆகவேண்டுமென்று நினைத்தபோது, அதற்கான அமைப்புகளை தன் உடலிலேயே உண்டாக்கும் சாத்தியம் இல்லையென்பதால் தன் உடலுக்கு வெளியே வளர்த்தான்.

‘எப்படி எப்படி’ என்று கேட்டது சற்று முன் அங்கே வந்து நின்றிருந்த குறும்பாடு ஒன்று.

அதாவது, உதாரணமாக இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையை அவன் பார்க்க வேண்டுமென்று வைத்துக் கொள். அதற்கு. அவனுக்கு இன்று இருக்கும் கண் பார்வையைப் போல நான்கு லட்சம் மடங்கு பார்வை வேண்டும். அதற்காக அவன் தனது கண்ணை நான்கு லட்சம் மடங்கு வளர்த்துக் கொள்ள முடியுமா? வளர்த்தால் அவன் பார்ப்பதற்கு எப்படியிருப்பான்? அதை எப்படிப் பாதுகாப்பான்? அதற்காகத்தான் அவன் டெலஸ்கோப்புகளை உருவாக்கி வைத்துக்கொண்டான். தனது அதிகப்பட்ட பார்வை தேவைக்காக மனித மூளையின் படைப்பு தானே டெலஸ்கோப்? ஆகவே மனித மூளையின் அல்லது கண்ணின் நீட்சியாகவே ஆகிறது இல்லையா?

அப்படித்தான் அவன் பறப்பதற்கு விமானம் அமைத்துக் கொண்டதும், தண்ணீரில் நடக்க கப்பல் களைச் செய்து கொண்டதும், மனோ வேகத்தில் தூரங்களைக் கடக்க ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டதும்.

அதோடு அப்போது அந்தப் பக்கமாக ஒரு லாரி போகவே, அதைக் காட்டி ஞானக்கிறுக்கன் சொன்னான், இந்த லாரி என்ன தெரியுமா? மனிதனின் முதுகு. தன்னால் நூறு மூட்டை நெல்லை தூக்கி நடக்க முடியாது என்பதால் தனது முதுகின் நீட்சியாக லாரியை வடிவமைத்தான்.

அப்போது அந்தக் குறும்பாடு சிரித்தபடிக் கேட்டது. ‘அப்படியானால் உனது மனிதனின் முதல் முதுகு நீட்சியாக இருந்தது எங்கள் கழுதை என்று சொல். அதுதானே ஒரு மூட்டைக்கு இரண்டு முட்டையாகச் சுமந்தது’.

அதுவரை சும்மா இருந்து கொண்டிருந்த இரண்டாவது எருது சிரித்தது. அப்புறம் அதுவே கேட்டது. ‘உனது மனிதன் ஏன் ஒரு மூட்டைக்குப் பதிலாக நூறு மூட்டை சுமக்க ஆசைப்பட்டான்? சுமை குறையக் குறையத்தானே சந்தோஷம், சுதந்திரம்?’

ஞானக்கிறுக்கனுக்கு வெறுத்துப் போய்விட்டது. எங்காவது போய் செவிடன் காதில் சங்கு ஊதிக் கொண்டிருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான் அவன்.

அவன் திரும்புவதற்கு காலடி எடுத்தபோது எருது கேட்டது. ‘இதையெல்லாம் எதற்காக எங்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறாய்?’

அப்படிக் கேள். அதில் நியாயம் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் மட்டும் பரிணாமப்பட்டு மேலே வந்தது போதாது. எல்லா ஜீவராசிகளுமே அந்த நிலைக்கு உயர வேண்டும். அதைத்தான் சொல்ல வந்தேன்.

அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்களும் கனவு காண வேண்டும். கற்பனை செய்ய வேண்டும். மனிதர்களாகிய நாங்கள் யார் தெரியுமா? ஒரு காலத்தில் நாங்கள் கண்ட கனவுகளும் கற்பனைகளும் தான் இன்றைய நாங்கள். இன்று நீங்கள் ஆசைப்படுங்கள். நாளை அப்படியே ஆவீர்கள்.

பார்க்கலாம் என்றது எருது.

அடுத்த மாதம் ஞானக்கிறுக்கன் அந்தப் பக்கம் வந்தபோது அந்த எருதுவின் முகத்தில் உண்மையில் ஏதோ ஒரு ஒளி. கண்ணை மூடியிருந்தது. அசை நின்று போயிருந்தது.

ஞானக்கிறுக்கன் கேட்டான், என்ன வேறு மாதிரியாக இருக்கிறாய்?

நீ சொன்னபடியே கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

சபாஷ்.

ஆனால் சில விஷயங்கள்தான் தெளிவாக வர மறுக்கிறது.

என்ன அவை?

நாங்கள் வண்டி செய்தால் அதில் இரண்டு மனிதர்களை மட்டும் பூட்ட முடியாதே. இரண்டு மனிதர்களால் ஒரு வண்டி பாரத்தை இழுத்து விட முடியுமா என்ன?

ஞானக்கிறுக்கன் பதறியடித்து விழித்துக்கொண்டான்.

– ஜனவரி 1994 (ஞானக்கிறுக்கன் கதைகள்: 5)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *