கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 5,203 
 

“பரமு காலமாகி விட்டான்!” என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு வேகத்தில் சென்று விட்டது. அகில் தாமரை இயக்கத்தில் சேர்ந்த போது இருந்த பிரதேச அரசியல் அமைப்பில், இவர்களுடைய தலைமையில், பரமுவும் ஒருத்தன். மெலிந்த தேகம்.எளிமையான ஆடை.நட்பான பார்வை. முக்கியமாய் அவனை விட ஒன்று, இரண்டு வயசு மூத்தவன். அகிலை, கிராமப்பொறுப்பாளர் ஏதோ…விசயத்திற்கு சுளிபுரம் அனுப்பி இருந்தார். அவனுடைய நண்பன் சேகருடன் சென்றிருந்தான். சேகர், ஆதரவாளன்.தோழனாகவில்லை. இருவருமே எங்கும் திரியிற நண்பர்களாக இருந்தவர்கள். இவன் சேர்ந்து விட்டான். ஆனால், திரியிறது நிற்ககவில்லை.தவிர, அவனுக்கு வட்டுக்கோட்டையில், உறவினர்கள் பலர் இருக்கிறார்கள்,திருத்திய வானொலிப்பெட்டி ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. “குடுத்திட்டுப் போவோம்”என்று கையளித்து விட்டு,சிறிய கூலியைப் பெற்றுக் கொண்டு வந்தான். அவனோடு திரியிறதால் சுளிபுரம் முன்னமே சிறிது தெரியும். ஆனால், அன்று தான் வலக்கம்பறை தேர்முட்டியில் இருந்த கிளி,மதன், வனபால், செந்தில் , பரமு எல்லொரும் அறிமுகமாகிறார்கள். கூட இருந்த பாபுவை அவனுக்கு, யாழ் புதியசந்தையில் தொழினுட்பக்கல்லூரியில் படிக்கிற போது வந்து தேனீர் குடிக்கிற கடைக்கு…அவனும் வருவான். கதைக்கிற போது ‘மூளாய்’ என்ற போது சுளிபுரத்திற்கு அருகில் ஊர் என்பதால்…நட்பு எற்பட்டு விட்டது. காலையில் அங்கிருந்து வார மினிபஸ் ஒன்றில் வந்து விட்டு எப்படியோ பொழுதைக் கழித்து விட்டு மாலையில் போய் விடுகிறேன்”என்றான். ‘ வாழ்வே மாயம் ! ‘ என்றால் என்ன என்று அகிலுக்கும் தெரியும். ஆனால், அவனுக்கு தொழில்னுட்பவேலைகள் அத்துப்படி. அங்கே இருக்கிற பொயிலரில் பிரச்சனை வந்து விடும். திருத்தி இயங்க வைத்து விடுவான். மின் இணைப்பு வேலைகளையும் நன்கு தெரியும். அதனால், கடையில் இருந்த குலம் அவனுக்கு சிலவேளை இலவசமாக தேனீர்க் கொடுப்பான். கடனுக்கும் தேனீரைக் கொடுத்து எழுதி வைத்திருவான். குலம் கூறுற‌வன்.”இவன் மாச முடிவிலே எப்படியும்…கணக்கை இல்லாமல் செய்து விடுவான். நல்லவன்”. இயல்பான ஒரு வேலை…? யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் என்றால் ?, யாரைப் போய் நோவது !…தெரியவில்லை. எப்பவுமே ஒரு சமூகம் எந்தகாலத்திலும் இரவல் ஆட்சியில் கிடக்கக் கூடாது. பல்லைக்கடித்துக் கொண்டு விடுதலையப் பெற்று விட்டால் தான் உய்யும். இல்லையேல் சந்ததி பாலையைக் காண வேண்டியது தான்.

“கடைசியில் நீயும் வந்து விட்டாயா ?”என்று அந்த‌ பாபு சிரித்தான்.”ஓட்டைபாபுவை தெரியுமா, அப்ப நீயும் எங்கட ஆள் தான்”என்று கிளி கூற…அவர்களில் ஒருத்தனாகி விட்டான். பாபுக்கு முன் பல்லிலே சிறிது உடைவு இருக்கிறது. பரமுவை அவனுக்கு நிறையப் பிடித்திருந்தது.”பரமு எனக்கு அண்ணை முறை”என்று சேகர் கூறினான். மதன் அவனைப் பற்றிக் கேட்டான். செந்தில்”நானும் அராலி ஆள் தான், தெற்கராலி”என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.”இங்கே, விக்ரோரியா கல்லூரியில் படிக்க அத்தை வீட்டிலே வந்து தங்கி… வீடாகி விட்டது. மாச‌த்திலே அங்க ஒரிரு தடவ போய் வந்தாலும் இருப்பு இங்கே தான்”என்றான். குடும்ப உறவுகளில் இப்படி தங்கி விடுறதும் நிகழ்கிறது தான். அகிலின் அக்காவும், அண்ணரும் யாழ்ப்பாணத்திலே இருக்கிற ஆச்சி வீட்டுவாசிகள். அண்ணர் இப்ப வெளிநாடு போய் விட்டார். கலவரத்திற்குப் பிறகு”நான் வேலைக்கு திரும்ப போக மாட்டேன்.வெளிநாடு போகப் போறேன்”என்று அண்ணர் நின்றார். அப்ப தான்”இனப்பிரச்சனை”என்பது புரியத் தொடங்கி இருந்தது. யார் தான் இவர்கள் எல்லாம் போவார்கள் என்று நினைத்தார்கள். அண்ணர் நல்ல வேலையில் இருந்தார். போக வேண்டிய அவசியமே இல்லை. கொலைவெறி பிடித்த ஒரு கும்பல் துரத்தியதை… அவரால் மறக்க முடியவில்லை. இலங்கையில் இருப்பது பாதுகாப்புப் படை அல்ல, கும்பல்க‌ள். அண்ணரின் முயற்சியால்…அக்காவும் ஜேர்மனிக்குப் போய் விட்டார். அவனையும்… கேட்ட போது தான் இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.

“கூட்டம் வைக்க இன்னமும் தீர்மானிக்கவில்லை.அடுத்த மாசத் தொடக்கத்தில் …அறிவிப்போம். இடத்தை நாமே தெரிவு செய்கிறோம்.அந்தரப்பட வேண்டாம்”என்று கிளி கூறினார்.அவர் எ.ஜி.எ பொறுப்பாளர். அமைப்பின் தலைவர். வனபால், உபதலைவர். பரமு, தொழிற்சங்கம் தொட்டு, நிதிப்பொறுப்பாளர்.மற்ற மூவரும் உயர் உறுப்பினர் தாம்.”நீ சேர்ந்ததைக் கொண்டாட… வா தேனீர் குடிப்போம்”என்று கிளி சிரித்துக் கொண்டு கூற,இறங்கி கீழே வீதி ஓரத்தில் இருக்கிற கடைக்கு வந்தார்கள். வடையுடன் தேனீரும் அருந்தினார்கள். பரமு,”கணக்கிலே எழுது அண்ணை”என்று தெரிவித்தான்.

பரமுடனே அவர்களும் கழன்றார்கள்.”எப்படி நீ எங்களுடன் சேரத் தீர்மானித்தாய் ?”என்று பரமு கேட்டான்.”என்னுடன் தொழினுட்பக்கல்லூரியில் படித்த கதிர்,உங்கட இயக்கத்தைச் சேர்ந்தவன்.இங்கே தான் பெரிய புலம் எனக் கூறினான்.படிக்கிற போதே இந்தியாவிற்கு பள்ளம் ஏறி விட்டான்.அப்ப தீர்மானித்தேன். ஒரு வேலையைப் பெறுவதற்கு என தகுதிப் படிப்பு இருக்கவில்லை. எனவே வகுப்பு முடிந்த பிறகு நான் வருகிறேன். இயக்கம் பற்றி எதுவுமே தெரியாது என்பதால் முதலிலே முழப்பம் இருந்தது தான். ரஸ்ய லெனின் கட்சியை பிரதி எடுத்த மாதிரி இந்த இயக்கம் இருப்பது தெரிந்தது. நிறைய உங்கட பிரசுரம் நோட்டீஸ் எல்லாம் வாசித்த பிறகு தான் வருகிறேன்.”நீ சொல்றது சரி தான். ஒரு கனவுடன் கால் பதித்திருக்கிறோம். நடைமுறையில் எப்படிப் போகப் போறது என இப்பத் தெரியாது. நல்லதே நடக்கும் என்கிற கீதையை நம்புவோம்”என்று பரமு சிரித்தான். கிராமப் பொறுப்பாளர் எ.ஜி.எ உடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவனையே நெடுக அனுப்பிக் கொண்டிருந்தார். அதனால் அவன் அவர்களில் ஒருத்தனானான். ஓட்டைபாபு,பரன் அவனுடைய நண்பர்கள். தீடீர் கூட்டங்கள் வைக்கப்படுகையில் பரனும் அயல் வீடுகளிலிருந்து சாப்பாட்டுப் பாசல்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறான். தொழிற்சங்கக் கூட்டங்களும் அதில் அடக்கம். பாசறை வகுப்புகள் நடத்தப்படுகையில் பாசல்கள் அதிகம் வேண்டியிருந்தன. இளவாளைத் தொட்டு பல்வேறு இடங்களிலிருந்தெல்லாம் வருவார்கள். மகளிர் கூட்டம் வைக்கும் போது இவர்களையே பாசல்கள் பெறுவதற்கு நாடுவார்கள். பரமுவும் உதவுபவர்களில் ஒரு கை. அகில் வீட்டிலே இருந்து வேலை செய்பவன். ஆனால், வவுனியா,திருமலை இருந்தெல்லாம் பெடியள் ஒரிருவர் என வருவார்கள். மகளிருக்கும் வருவது இருந்தது. வீட்டை அறுத்துக் கொண்டு வருபவர்.தோழர்களை ஒரிரு நாள்கள் வீடு போல இருக்கிற காம்பிலே தங்க வைப்பார்கள்.கூடிய சீக்கிரமே குடும்பத்தினரை தெரிந்து அவர்களில் ஒரு உறவுப் பையன் போல செருகி விடுவார்கள். அச்சமயங்களில் இலங்கை இராணுவம் இவர்கள் பகுதியிலும் நடமாடும் நிலமை இருந்தது. அடையாள அட்டையை பரிசோதிக்கிறது, சந்தேகப்பார்வை பார்க்கிறதுக்கும் ரெடியாக இருக்க வேண்டும். பையன்கள் பள்ளிப்பாடங்கள் பாடமாக்கிற மாதிரி புதிய வீட்டு உறவினர் பெயர்களை எல்லாம் பாடமாக்க வேண்டி இருந்தன. சவால் தான். மகளிர் வார போது காம் வீட்டில் இல்லாது நேரடியாக குடும்பப் பெண்னாக பழக வைக்க வேண்டி இருந்தது. இவற்றை எல்லாம் அரசியமைப்பே செய்தது. பரமுவின் அம்மா ஒரு ஆசிரியை. எனவே அவர்கள் வீட்டில் சித்திரா இருந்தாள். விதானைத் தொட்டு பல நல்ல இதயங்களும் உதவிக்கரம் கொடுத்தார்கள். இலங்கை இராணுவம் என்றால் என்ன என்று தெரியும். அவர்கள் போர்க்குற்றப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இன்று இலங்கை அதிபர் ஒருவர். பல அரச அதிகாரிகள் இவர்கள். ஒவ்வொரு நாடுகளிலும் ஐரீஸ் குழுவைப் போன்றவை எழ இவையே போதுமான காரணங்களாயிற்றே !. அப்ப நல்லிணக்கம்; நற்போக்கு என கூறுபவை என்ன‌ ?, அடிமையாய் அடங்கி வாழ்வதையே குறிப்பதாய் இருக்கின்றன.

பரமு, உயர் வகுப்பில் படிக்கிற போதுஒரு பள்ளி விடுமுறையின் போது வவுனியாவில் தோணிக்கல்லில், அவனைக் கவர்ந்த இளைஞர் பேரவையைச் சேர்ந்த குறும்தாடியுடன் ஒளிபடைத்த கண்ணுடன் விளங்கும் தனவந்திரியார் வீதியில் நடந்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். சைக்கிள்ளை விட்டு இறங்கி “என்ன அண்ணை, எங்கே ?… இந்தப்பக்கம் ? “கேட்டான். அவரை ஆரம்பத்தில் கூட்டங்களில் பேசுற போதுக் கண்ட அவன், சுளிபுரத்து மறவன் வாத்தியோடு திரிகிற போது நேரிலேயும் கதைத்து சிறிதுப் பழக்கம்.”நான் கேட்க வேண்டிய கேள்வி. நான் போற இடமெல்லாம் நீயும் வாராய் போல இருக்கிறது. இங்கே என்ன செய்கிறாய் ?”என்று சிரித்துக் கொண்டு கேட்டார் . “இங்கே, அத்தை இருக்கிறார். லீவு நாள்களிலே இங்கே வருவது இருக்கிறது”என்று அவன் விபரத்தைக் கூறினான் “. “அத்தைக்கு மகள் இருக்கிறாளா?”என்று கண்ணைச் சிமிட்டினார். “இருக்கிறாள். ஆனால் , அது எங்கை என்னைப் பார்க்கிறது ?”என்றான் சோகத்துடன். சிரித்தார். அப்ப, நீ சும்மா தானே இருக்கிறாய். வாவன் காந்தியத்துக்கு”என்று கேட்டார். அவன் காந்தியம் பற்றி எதுவும் அறியாதவன். அவன்”இங்கேயும் பேரவைப் போல ஒரு அமைப்பு தொடங்கி விட்டீர்களா”என்று கேட்டான்.”உனக்கு காந்தியம் பற்றி எதுவும் தெரியாதா ?”என ஆச்சசியப்பட்டு கேட்க‌, ‘ இல்லை ‘என தலையை ஆட்டினான். அவர் விலாவாரியாக விபரித்தார். வீட்டிலே சொல்லிப் போட்டு இந்தப் பண்ணைக்கு போ.உனக்கு இன்னமும் விளங்கும்”என சிறு துண்டிலே விலாசத்தை எழுதிக் கொடுத்தார்.”இங்கே இருந்து சிறிது தூரத்திலே தான் இருக்கிறது. சென்றால் இரண்டு, மூன்று நாளுக்குப் பிறகு தான் வீட்டிற்கு திரும்ப‌ முடியும்.சொல்லிப் போட்டு வா. பிடித்திருந்தால், சில நாட்கள் இருந்து சிரமதானம் செய்து பார் . பிறகு , உன் விருப்பம். வரேல்லை என்றால் வீட்டுகாரர்கள் பயப்படக் கூடாது பார்,சொல்லிப்போட்டு வா”என்றார்.

77ம் ஆண்டுக் கலவரத்தில் இலங்கை இனவாதிகள் மலையகமக்களை மோசமாகத் தாக்கி, கொலையும் செய்து வீடுகளை, கடைகளை எரித்தது நிகழ்ந்திருந்தது. பிராஜவுரிமைப் பறிப்பின் தொடராகவே நிகழ்ந்து வாரது. தமிழரசுக்கட்சி அறிவுபூர்வமான கட்சியாக இருந்தாலும் அக்கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் சிலர் கருணை பூர்வமாகச் செயல்படவில்லை. கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் குவிந்தவர்களுக்கு”எங்களால் உதவ முடியாது”என கைவிரித்து விட்டார்கள். இலங்கை அரசுக்கும் தமிழ்க்கட்சிகளுக்குமிடையில் சுமூகமாக உறவு நிலவவில்லை. இளஞர்பேரவை இளைஞர்கள் இதை சிறிதும் எதிர் பார்க்கவில்லை. தலைவர்களுடன் பிரச்சனைப் பட்டார்கள். கிளிநொச்சியில் தோன்றிய காந்தியம் என்ற சமூகசேவா அமைப்பு இவர்களுக்கு உதவ முற்பட்டது. பெரும்பாலான இளைஞர் அமைப்பினர் ஒரேயடியாகவே பிளவுபட்டு சேவா அமைப்புடன் சேர்ந்து இயங்கினார்கள். காடுகளை வெட்டி காந்தி அமைத்த டோல்ஸ்டோய் ஆச்சிரம் போன்ற முறையில் இவர்களுக்கு குடியிருப்புகளையும் ஏற்படுத்தி, விவசாயம் தொட்டு சுயதொழில்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் ஈடுபட்டார்கள். எம்பி மார்கள் இவர்களுக்கு உடனடியாக‌ ஆதரவளித்திருந்தால், இளைஞர்கள் இவ்வளவு தூரம் திசை மாறிப் போய் இருக்க மாட்டார்கள். பிறகு, இனவரசின் தூத்தெரியமான நடத்தைகளுக்கு எதிராக மறைவாக ஆயுதம் ஏந்தி போராடவும் தொடங்கி விட்டார்கள்.

அவருடைய நண்பரைச் சந்தித்து விட்டு தனவந்திரியார் சென்றார். இவன் காந்தியம் சென்றான். அங்கு ஸ்தாபகரான‌ மருத்துவர் இராஜ சுந்தரத்தை நன்கு பிடித்து விட, ஒரு பள்ளி மாணவன் மலயகமக்களுக்கு முதல் தடவையாக சேவை செய்யப் போகிறான். இராஜசுந்தரம் தம்பதியினர் இங்கிலாந்தில் படித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள். தியாகப்பொறி சிலருக்குள் இறங்கி விடுகிறதைப் பார்க்கிறோம். அதே போலவே கட்டிடக்கலைஞரான டேவிட் ஐய்யாவும் காந்தியத்துடன் சேர்ந்து தமது மூளை உழைப்பை வழங்கத்தொடங்கி இருந்தனர். உள்நாட்டிலே அகதியாக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்க்கைக்கான திட்டங்களை தீட்டி, மதிப்பிட்டு வெளிநாடுகளில் இயங்கும் சேவா அமைப்புகளின் கொடைகளைப் பெற்று வேரூன்றி வளர்ந்து கொண்டிருந்தது. இதேப்போல சிங்களவர் பகுதியில் இயங்கிற சர்வோதய அமைப்புக்கு காந்தியத்தில் சிறிது பொறாமை இருந்ததாகவே படுகின்றது. பரமு சிலநாள்கள் அங்கேயே தங்கி விடுறது அத்தைக்கு பயத்தையும் , குழப்பத்தையும் அளித்தது. அண்ணருக்கு விளக்கி எழுதினார்.”இங்கே இருந்தால் கெட்டுப் போவான். வந்து கூட்டிக் கொண்டு போங்கள் “. பரமுவின் அப்பா தாபால் அதிபராக இருந்தவர். அம்மா ஆசிரியை.இருவருக்குமே காந்தியம் பற்றிச் சிறிது தெரியும்.”அறிவு தெரிந்த பையன். இந்த விடுமுறையை அங்கேயே கழிக்கட்டும். அடுத்த முறை பார்க்கலாம். தம்பியோடு அன்பாகவே இருங்கள். விசாரித்து எழுதுங்கள்.”என்று பதில் வந்தது. திரும்ப யாழ்ப்பாணம் வந்து உயர் பரீட்சை எழுதியதில் பரமு, பல்கலைக்கழகம் செல்லும் முறையில் தேர்ச்சியைப் பெற்றிருக்க‌வில்லை. கவலை தான். ஆனால், தெய்வம் நினைப்பதை யார் தான் அறிவார் ?. ஒவ்வொரு பிள்ளைகளுடன் கூடவே ஒரு காக்கும் கடவுளும் உறைந்தே இருக்கிறார் என்பது தமிழரின் நம்பிக்கை. கெல்தியாக வளர்த்து விட்டாலே போதும். மற்றதை அந்த கடவுள் பார்த்துக் கொள்வார். எனவே தான் கடவுளை வழிபடு என சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அந்தசூழலில் தான் உன் கடவுளுடனும் பேச முடியும். அறிய முடியாத பல சக்திகள் மத்தியில் ஒரு சக்தியை அறிந்ததாக கற்பனை செய்து கொள்வது தவறில்லை என்ற கொள்கை பரவாய்யில்லை போலவே இருக்கிறது.

வெளிநாட்டுச் சினிமாவிலே வார நாயக, நாயகிகள் ஒரே வேற்றுக்கிரக மனிதர்கள் தாம். சுப்பர்மான்…பெண்…கள். கணனியில் கூட சுத்தல்கள். பெரும்பாலும் இவர்கள் இந்தக் கதைகளை எடுப்பது கீழைத்தேய கடவுள் கதைகளிலிருந்து தான். அதை அங்கிருக்கிற ஒருவர் நாவலாக எழுதி விட, அவர்கள் சினிமா எடுப்பதற்கு ரோயல்டி கட்ட வேண்டியதில்லை அல்லவா. அறியாத நமக்கோ அக்கரையிலிருந்து தான் வெளிச்சம் வருவதாக நினைப்புகள். விதியின் பிரகாரமே வாழ்க்கை நகர்கிறது. நமக்குத் தெரியாததை சொல்லி தம்பியை மேலும் குழப்ப வேண்டாம் .”தம்பி, வேலை ஒன்றுக்கு படிப்புத் தகுதி ஒன்று வேண்டும் மறந்திடாதே”என்று மட்டும் அவனுக்கு எழுதினார்கள். தரப்படுத்தலாலும் பாதிப்பு இருக்கலாம். ஆணிவேர் இனப்படுத்தல். அவனுக்கு காலம் பாலையாக உருண்டு போவது அவர்களுக்குத் தெரிந்தது.தாமரை இயக்கம் உருப் பெற்ற போது, அவன் அதன்பால் ஈர்க்கப்பட்டு விட்டான். அவன் சேர்ந்ததுக்கு காரணம், மறவன் வாத்தியும் , தனவந்திரியாரும் அதிலே இருந்ததும் தான். காந்தியம் பற்றி இப்ப கொஞ்சம் தெரிய வந்திருந்தது.

“தனம் அண்ணை தலைவராக இருந்ததால் தான் நான் இதிலே சேர்ந்தேன்”என்று அகிலிடமும் ஒரு தடவை கூறி இருக்கிறான். அமைப்பினர் மனம் திற‌ந்து கதைப்பார்கள். இப்ப தான் அகிலும் அவர்களின் நம்பிக்கைக்குரியவனாகி இருக்கிறானே. அகிலின் குருஜியாக கிளி விளங்குகிறார். ஒருசமயம் தாமரையின் பெருந்தலைவர் ஒருவர் சுளிபுரம் வந்தடைந்தார். அவருடன் வந்திருந்த இரானுவப்பிரிவினர் அவ்விடத்தில்,”காணாமல் போன கழுகுத் தோழர்கள் சிலருக்கு காரணமாக இருப்பார்களோ ?”என்ற சந்தேகம் ஏற்பட்டது. நேரடியாக கேட்கவும் செய்தார்கள்.”உங்களுகென்ன விசரே !, மாதல்காம்பிலே இருக்கிற ஆமி தான் செய்திருக்க வேண்டும் ‘என்று பதிலளித்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள். சந்தேகம் ஏற்பட்டு விட்டதென்றால் லேசிலே விட்டுப் போகாதல்லவா. பின் தளத்தில் பல கொலைகள் நிறைவேற்றப்பட்ட செய்திகளும் கசிந்து வந்தன. அதிலே, ‘ தனவந்திரியாரும் கொல்லப்பட்டு விட்டார்’ என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியும் வந்தடைந்தது. பரமு கலங்கிப் போனான்.

விடுதலைப் போராட்டதிற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது, தாக்குதல் என செய்யாதிருக்கிற போது இவை கெட்ட சகுனமாகவே பட்டன. சரிவர தலைமை விளக்கமளித்து தெளிவு படுத்தவில்லை. தொழிற்சங்கமும் , மகளிர் அமைப்பும் தற்காலிகமாக தம் வேலைகளை நிறுத்தி கொள்வதாக‌ அறிவித்தன. பரமுவும் அமைப்புப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்தான். விலகினாலும் அகில் இடையிடையே பரமுவை வீட்டிலே, வெளியிலே சந்திப்பான். சிந்து அந்த வீட்டிலே ஒரு மகளாகவே தொடர்ந்தும் இருந்தாள். திடும் திடுமென ஏற்படுற நிகழ்வுகளைச் சமாளிக்கிறது கஸ்டமாகவே இருந்தன. எல்லாக்கொலைகளும் தாமரை இயக்கத்தாலே நிகழ்த்தப்பட்டன என பிறகு ஒரு காலத்தில் வெளியானது. காலம் உருண்டு வேகமாக போய் விட்டிருக்கின்றது.

இயக்க மோதல்ச் சூழ்நிலை மோசமாகக் கவிந்து விட்டது விரக்தி அலைகளை ஏற்படுத்தின. தாமரையின் தள அமைப்பு தனது செயற்பாடுகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி விடுவதாக அறிவித்தது. முல்லை இயக்கத்தில் விட்டில்பூச்சிகள் போல இறந்தது போல தோழர்கள் இறப்பதைத் தவிர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கை. ஒருகாலத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தோழர்களும் இருப்பது அவசியம். அரசின் அவசரப்பட்ட இராணுவ நடவடிக்கையால் இந்தியனாமி இலங்கைக்கு வந்திறங்கியது. வரலாற்றுச் சக்கரம் சுழல்வதை யாரால் நிறுத்த முடியும் ?. தாமரை இயக்கம் உறைநிலையிற்குப் போனது. அகிலும்,கொழும்பு வந்து புலம் பெயர்வுக்குள்ளாகி வானிலே பறந்தான். முற்பது வருசங்கள் ஓடிப் போயே விட்டன. வாழ்வில் வருகிற பருவக்காலம் திரும்ப வருவதே இல்லையோ? இனமுகத்தால் குறைந்த பட்ச வேலையும் கிடையாமல் பாலையில் வெந்த போது இயக்கம் தான் இளைஞர்களிற்கு உயிர்த்துடிப்பை ஏற்படுத்தியது. இப்ப என்னவென்றால் நிலம் பழுது,விதை புதிது என மாறி விட்டிருக்கிறது.விடுதலைப்பயிர்கள் விளைந்து மகசூல் கிடைக்குமா ? என்பது கானலாகவே நீள்கிறது. வெளிநாடு சென்றதால் தான் நட்புகள் அறுந்து விட்டனவா ! இல்லை, அறுபட வேண்டும் என்பது தான் விதியா ?. இன்று, சேகருடன் கூட பேச்சு வார்த்தை இல்லை. ஏன் ? எனப் புரியவில்லை. கணபதி கூறினான்.”ஒவ்வொரு பருவக்காலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல் ஒவ்வொரு உலகமாக இருக்கிறது. அதனால் தான் இப்படி நிலை”என்கிறான்.”விடுதலைப் போராட்டத்தை இளைஞர்களால் மட்டுமே நடத்த முடியும்”என்ற அவனுடையக் கருத்தையும் கூறினான்.”நாம் இளைஞர்களாக இருந்த போது அரசியல் துப்பரவாக‌ தெரியவில்லை. குழப்பநிலையில் அகப்பட்டிருந்தோம். அந்த அரசியலைத் தெளிவுபடுத்த வேண்டிய பணி இப்ப‌ நம்முடையது. அதைச் செய்வோம். அடுத்த முயற்சி நிச்சியமாக வெற்றி பெறும் என நம்புவோம்”என்றான். சிந்திப்பதை நிறுத்தி விடக் கூடாது தான். இன்றைய இலங்கையின் தலைவர் ஒரு போர்க் குற்றவாளி. ஆடுகளம் நெடுக‌ திறந்தே கிடக்கிறது.

“கல்யாணம் கட்டிய நாம் பலவீனம் அடைந்து விட்டோமே ?”என்று அகில் சோர்ந்து போய் சொன்னான்.”நெஞ்சில் எரியும் கனலை எதுவுமே ஒன்றும் செய்து விட முடியாது. இனி நாம் இளைஞர்கள் இல்லை.அடல். அவரவர் வேலையை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். பகவத்கீதையின் சாரம் தான். வெற்றி தானாகக் கிடைக்கும். அலட்டிக்காதே”என்கிறான். இலங்கை சிங்கள நாடு இல்லை. அங்கே ஜனநாயகமும் இல்லை. போராட வேண்டிய வெளிகளே கிடக்கின்றன.

உலகத்தில் உள்ள சிறிய நாடுகள் அனைத்திலுமே போர்க்குற்றவாளிகளையே தலைவர்களாக நிறுத்த வல்லரசுகள் விரும்புகின்றன.ஈராக்கில் சதாம். அவ்கானிஸ்தானில் தலபான்கள் (இவர்களும் அமெரிக்க தயாரிப்பு தான் ). வேட்டையை நிகழ்த்துற போது ஐ.நா.சபை பச்சைக் கொடி காட்டும். எந்த பிரச்சனையும் இல்லாத இலகு முறை. நம் விடுதலைக்குழுக்களும் சோரம் போனதாகவேப் படுகின்றன. அமெரிக்கா, கதாநாயக கழுகு இயக்கத்திற்கு அது நவீன தொலை தொடர்பு கருவிகளை எல்லாம் வாரி வழங்கின. போரின் போது ஜி.பி.எஸ் மூலம் அவர்களது இருப்பிடங்களை இலகுவாகக் கண்டறிந்து கொன்றும் தள்ளி விட்டது. இலங்கையரசு, அதற்கான‌ கூலியை மேசைக்கு கீழாக கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் வாங்காமலும் விடாது.

மறுபடியும் மீள சந்திப்போம் என்பது நிறைவேறாமலே மனக்குழப்பத்தின் மத்தியிலே காலம் கரைந்து கொண்டு போகிறது. பரமுவும் காலமாகி விட்டான். “முக நூலிலே பசிர் எழுதி தெரியப்படுத்தி அறியத் தந்திருக்கிறான் என்று கணபதி கூறினான். முகநூல்,வட்ஸப்…இப்ப முன்னேற்றகரமான தொடர்பாடல் கருவிகள்.இவனிடம் முகநூல் கணக்கு இல்லை. வட்ஸப்..இருக்கிறது. ஆனால் அதையும் சரிவர உபயோகிக்கிறான் இல்லை. சேகர் நோர்வேயில் இருக்கிறான். அவனுடனே தொடர்ப்பில் இல்லை. ஏன் ?. கல்யாணம் ஆன பின்பு… வெள்ளம் அடித்துக் கொண்டு போறது போல அடித்துக் கொண்டு போய் விடுகிறது. பிறகு, சமூக அந்தஸ்து வேண்டி இருக்கிறது. சரிவரக்கட்டிக் கொள்ளா விட்டாலும் பழகல் அவுட். அன்றிலிருந்து தேவையில்லாதை எல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதில் எங்களை யாரும் வெல்ல முடியாது தான். நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள். இனப்பிரச்சனை தான் குழப்புறது என்றால் நாமும் வேறு குழப்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கணபதியும் சிலவேளை அவனுடன் ஒத்துப் போவான். “நீ சொல்றதும் சரி தான். எமக்கு தொடர்பு கிடைக்கிறதும் பிந்தி தான். இந்த முகநூல்,வட்ஸப்…வந்து ஒரு ஐந்து,பத்து வருசமிருக்குமா…? இப்ப போய் கதைக்கிற போது சிலவேளை”நீ யாரப்பா…?” என்று கேட்டு விட்டால், நாமெல்லாம் வசந்த மாளிகை வாணஸிரீகள் தாம்”என்று சிரிக்கிறான். பொம்பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த‌ சிடுமூஞ்சிப் போக்குகள் இருக்கிறதில்லை, எமக்கும் தான் இருந்து தொலைக்கின்றன‌. எம்மையும் ஒரு தாய் வளர்க்கிறாள் இல்லையா, அந்தக் குணங்கள் வராமலா போகும்,என்ன !

கணபதி “இப்ப நாம் வேற பழைய ஆட்களில்லையடா. தலையில் மொட்டை விழுந்து, நரை ஏறி எங்களுக்கே நாம் வேற ஆள் போல மாறிப்போய்க் கிடக்கிறோம். முதியவராக லொடலொடுக்கிறோம். அந்த நாள் ஞாபகம் வர வேண்டுமானால் ஒரே நாட்டிலே தெரியக் கூடியதாக மாறிக் கொண்டிருந்தால்…எதுவுமே பிரச்சனை இல்லை.இப்ப ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்த வேண்டும். வீட்டிலேயும் சண்டை வேண்டாம் என்றால் ‘தெரியாது ‘என்று சொல்லி விடுறது நல்லதில்லையா ?”என்று குறும்பு விடுறான்.”இனப்பிரச்சனை என்பது செத்த பிறகும் துரத்திக் கொண்டே இருக்கிற ஒரு தொல்லை”என்கிறான். உண்மை தான். திரும்பவும் ஒரு தடவை ‘உண்டா,இல்லையா? என விடுதலைக்குப் போராடிப் பார்க்கவே வேண்டும். ஆனால் வெல்லுவோம் என்ற நம்பிக்கை வர மாட்டேன்! என்கிறதே!. ‘தர்மம் தனை சூது கவ்வும். மறுபடியும் வெல்லும்’ என்பதைப் போல, தர்மத்தை தவற விட்டவர்கள், திரும்பவும் தர்மத்தைக் கை கொள்ளவும் மாட்டார்களா?. “பரமுவோடு சும்மாவாச்சும் ஏதாவது அலம்பி இருந்தால் மனசு ஆறுதல் அடைந்திருக்கும். எனக்கும் இலங்கையை விட்டு விலகிய பிறகு, மீள‌ சென்ற போதும் சந்திக்க கொடுத்து வைக்கவில்லை. அவன் திருமலையில் எ.ஜி.எ யிலே வேலையிலே இருக்கிறான் என்றார்கள்”. இயக்கத்திலே எ.ஜி.எ பிரிவிலே இருந்தவன் உண்மையிலேயும் அப்பிரிவிலேயே வேலையும் இருந்து இளைப்பாரி இருக்கிறான். அகிலுக்கு தான் தன் நாட்டிற்கு போக சந்திர்ப்பமே இருக்க மாட்டாது போல இருக்கிறது. மனமும் கூடுதலாக அடித்துக் கொள்கிறது. காலம் எழுதும் கோலத்தையும் யார் அறிவார்?.

***

தொழினுட்பக்கல்லூரியில் கூடப் படித்த‌ நண்பனும் வேற நோர்வேயிலே இருக்கிறான். வட்ஸப் மூலம் அவனுடனாவது கதைக்கத் தான் வேண்டும் என பரமுவின் சாவு நினைக்க வைக்கிறது. இந்தக்கடிகாரமும் தீடீரென நிற்கப் போறது தான். எதற்காக கதைக்க வேண்டும் என்ற குரலும் எழாமலும் இல்லை. விடுதலை தான் கிடைக்கவில்லையே. குறைந்த பட்சம் மீளச்சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு பேச்சு வார்த்தை தொடர்வது அவசியம் இல்லையா. சந்திப்பு நிகழா விட்டாலும் கூட வட்ஸப்பிலே எழுதியாவது பேசுறது அவசியமானது தான்.

முன்புறமாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒன்று பின்புறமாகவும் இயங்கிக் கூடியது தான். பின்புறமாக சென்று விட்ட நாமும் முன்னோக்கியும் செல்லச் சாத்தியம் உள்ளவர் தாம். தாழ்வுச்சிக்கல்களை, கோழைத்தனங்களை விடுத்து நம்பிக்கையுடனே முயன்று கொண்டிருப்பது தான் உண்மையான விதி. உலகக்குழப்பங்களுக்கெல்லாம் மறைமுகக் காரணமாகக் கிடக்கிற அமெரிக்கா உருப்பெற்றதும் இந்த நிலையை எய்தியதும் ஒரு ஐந்நூறு, அறுநூறு ஆண்டுகள் தான் ஆகின்றன. வரலாற்றில் குறுகிய வருசங்கள். எமது பிரச்சனைகளிற்கு…..நேசநாடுகளும் (உலகம், நேசநாடு, அச்சு நாடு,கம்யூனிசநாடு என பிரிந்து கிடக்கின்றது) எதிரி தான். இவர்களின் வலையில் சிக்குப்பட்ட சிறு மீனாகவும் இருக்கிறோம். அதிலிருந்து விடுபட்டு வெளியில் ஒரு சுதந்திர மீனாக வருவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். மனித மூளை என்பது எல்லாருக்கும் ஒன்று தான். எம்மாலும் இவர்களுக்கு சமமாகவும் சிந்திக்க முடியும். சவால்களை சந்திக்கவும் முடியும். பரந்த அளவிலும் சிந்திப்போம்! சந்திப்போம்!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *