பரதேசி நடையும் அந்த அலறலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,486 
 

நடப்பது சுகமாய் இருந்தது. வெய்யிலின் உக்கரம், வியர்வை நாற்றம், மழையின் சகதி, கால் நோவு, அசதி- இதைத் தவிர வேறொன்றுக்கும் கவலைப்படும்படி இல்லாதிருந்தேன். என் ஆவி, ஆத்மா, சரீரத்தை பயப்படும்படி செய்வது ஒன்றே ஒன்றுதான். அவள். அவளின் அந்த அலறல். பேருந்திலும் இரயிலிலும் என் முன்னாள் உட்கார்ந்திருப்பவளை அல்லது நின்றுக் கொண்டிருப்பவளை ஒரு நிமிடம் போல பார்த்துக் கொண்டிருந்தால் அவளாகிறாள். கழுத்து நரம்புகள் தெரிய அலறுகிறாள். உடனே அவ்விடத்தை விட்டு நான் காணாமல் போக நேர்கிறது.

கருவிழிகள் உருளும் கண்சிமிட்டும் சன்னலோரக் காட்சிகள் திருப்திப்படுத்தவில்லை என்னை. கண்கள் சொருகி உறங்கிட நேருகிறது. கனவு வருகிறது. கனவிலும் அவளின் அந்த அலறல். தூக்கி வாரிப் போடுகிறது, அடிக்கடி.

கனவையும் தூக்கத்தையும் தவிர்ப்பதற்காக பகலெல்லாம் நடந்து திரிகிறேன். இரவானதும் ஜனத்திரள் இருக்கும் தலைநகரின் இருதய இடத்தில் உட்கார்ந்து கிடப்பேன். உட்கார்ந்தே கிடப்பதென்பது பெரும் வேதனை. பின் பக்க முதுகும் இடுப்பும் அதற்குக் கீழுள்ள பகுதியும் வலிக் கொடுக்கிறது. அந்த மன வலியை விட இந்த உடல் வலியை துச்சமென தாங்கிக் கொள்கிறேன். இங்கேயும் பெண்கள் என் பக்கத்திலும் முன்னாலும். இவர்கள் என்னை கவனிப்பதில்லை. பத்திரிகையிலும் புத்தகத்திலும் கைப்பேசியிலும் தங்கள் தலைகளை கவிழ்த்துக் கொள்கிறார்கள். எந்த நிமிடத்திலும் அவர்களின் தலை நிமிரலாம் என்ற எச்சரிக்கை உணர்வு வந்தவுடன் கல்தூணில் தலைசாய்ந்து கண்களை மூடிக் கொள்கிறேன். அந்தச் சமயம் பார்த்து சமையலின் நெடி மூக்கைத் துளைத்து உட்புகும். வயிறு பசியின் அனலை எழுப்பும். கோயில் மணியோசை அழைக்கும். மேம்பாலத்தைத் தாண்டி இறங்கி கொஞ்சம் நடந்து மேடேறினால் பக்தர் கூட்டம் தெரியும். தண்ர் குழாயண்டைக்குச் சென்று பாதங்களை மட்டும் கழுவி படிகள் ஏறுவேன். நீண்டிருக்கும் வரிசையில் நின்று, நகர்ந்து, எனக்கான உணவை பெற்றுக் கொள்வேன்.

சில நேரங்களில் பிரசாதமெனும் பொட்டலம் பெரிதாக இருக்கும். லட்டும் கேசரிகளையும் சேர்த்து புளிச்சோறும் தரப்படும். சூடான காப்பி அல்லது தேநீரும் வழங்கப்படும். கூட்டம் கலைந்து மிச்சமிருப்பதை அள்ளி யெடுத்திருக்கிறேன். அது அநேகமாக விடியற்காலையோ அல்லது பலத்த மழையோ காரணமாக இருக்கும். இந்தத் தருணங்களில் என் கால் வயிறு பஞ்சம் அடங்கி ஆறும்.

கோயிலுக்கருகே இருக்கும் மரத்தடியில் உண்டு முடித்து கைகழுவப் போகும் போது தயக்கம் ஏற்படும். அங்கே, மடிப்பிச்சை ஏந்தி நிற்கும் நரைக்கூந்தல் கொண்ட சிவப்புத் தோலுடையாள் என்னை உற்றுப் பார்ப்பாள். `தினம் நான் ஒரே உடையில் இருப்பதை பார்க்கிறாளா அல்லது என் தாடியும் மீசையும் சீவாத தலைமுடியும் பயமுறுத்துகிறதா அல்லது எங்கோ பார்த்த முகமென்று நினைக்கிறாளா…’ என்று மனம் யோசிக்கும். நிச்சயமாக நான் விநாயகருக்காக வரவில்லை என்று மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கும். அவரின் அந்தப் பார்வையால் என் கால்கள் அந்த மேட்டை ஏறாமல் பின்வாங்கிக் கொண்டன, அடுத்த வந்த நாளில்.

நடுநிசியாகும் சமயத்தில் நடமாட்டம் குறைந்திருக்கும். சிறு வியாபாரக் கடைகள் மூடியிருக்கும். ஒன்றிரண்டு கடைகள் மட்டும் ஏதோவொரு நம்பிக்கையில் திறந்தே இருக்கும். ஆங்கிலம் அல்லது மலாய்ப் பாடலை சத்தம் வைத்து ஒலிப்பரப்பும். காலியான இடம் பார்த்து கால்நீட்டி படுத்திருப்பேன். முப்பதாவது நிமிடத்திற்குள் காவலாளியின் விசிலொலியில் ஆத்திரம் தெரியும். எனக்கு ஆத்திரம் பொங்கும். அசையவில்லையெனில் அவர் கரம் தட்டியெழுப்பும். முறைத்துக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் வெளியேறுவேன்.

பேருந்து பெருநிலையத்தையொட்டி வட்டக் கல்லிருக்கையில் படுத்திருப்பேன். கொசுவின் ஓயாத ஒற்றை ரீங்காரம் மிகத் தொல்லை தரும். ஒரு முகமூடி கொள்ளைக்காரனைப்போல இரு காதுகளையும் சேர்த்து சிறு துண்டினால் கட்டிக் கொள்வேன். வானத் தெளிவு மனதை குளிர வைக்கும். அப்போது பார்த்து வானம் மழை தந்தால் தவம் கலைந்த முனிவன் போல என் ஆவேசச் சாபங்களை வாங்கிக் கட்டிக் கொள்ளும்.

கால் போன போக்கில் கால்நீட்டி படுக்குமிடமும் மாறிக்கொண்டே போகும். இரயில் நிலையம், டயாபூமியின் கீழ்தளம், பாலத்தினடி, தெருக்கடை ஐந்தடி என இருக்கும் இடமெல்லாம் மனிதனே இருக்கவிடுதில்லை. அடையாள அட்டையை சோதித்தனர். `பங்களாவா, பாகிஸ்தானா, நேப்பாளா….?’ என்று கேட்டனர். ஒன்றுமில்லாத வயிற்றில் `சிறுநீர் கழி…. இதில் நிரப்பிக் கொடு….’என்றனர். அவர்கள் பேசிய மலாய் மொழி விளங்கிக் கொண்டாலும் பேந்தப்பேந்த முழித்து இளித்துச் சிரித்தேன். அருகில் வந்ததும் துர்நாற்றம் தாங்காமல் விலகியோடினர். `சமுதாயக் குப்பை….’ என்றுச் சொல்லி என்னை விட்டு அகன்றனர். மோந்து மோந்துப் பார்த்ததில் நாற்றம் எதுவும் எனக்குத் தெரியவில்லை.

தலைமைத் தபால் நிலைய ஆற்றோரமாய் நடந்தேன். இடுப்புவரையிருந்த சுவரில் கைகளை வைத்து மூச்சிழுத்தேன். சகிக்க முடியாமல் இருமினேன். ஆற்றைப் பார்த்தேன். தேநீர் வண்ணத்தில் இருந்தது. குப்பைக் கூளங்கள் குட்டிக்கரணங்களோடு அடித்துச் செல்லப்பட்டன. எங்கோ கனத்த மழை பெய்திருக்க வேண்டும். ஒரு சீன கனவான் அருகில் நான் நிற்பது மாதிரியே நின்று, நான் நினைத்ததையே என்னிடம் சொன்னதும் `ஆம்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி தலையாட்டினேன். “இங்கு நான் உன்னை அடிக்கடி பார்க்கிறேன்…” அவனும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். நான் பேசாதிருந்தேன். “உனக்குத் தெரியுமா ஒன்று… நான் முகரும் இந்தக் காற்றின் துர்நாற்றத்தை விட உன்மேல் அதிகம் நாறுகிறது…” மூக்குக் கண்ணாடியை சரிபடுத்திக் கொண்டே மீண்டும் பேசினான். “உனக்கு என்ன நடந்தது?” ஏன் இப்படி இருக்கிறாய்?… எனக்குச் சொல்” என்றான். “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை உன்னிடம்” என்றேன். “ஒவ்வொருவனுக்கும் பிரச்சனை இருக்கிறது, தெரியுமா உனக்கு… நீ இப்போது செய்துக் கொண்டிருப்பது வாழ்க்கையை வீணடிப்பது. என்னைப் பின்பற்று. என் வீட்டில் நீ குளிக்கலாம். என்னறையில் படுக்கலாம். இந்த இரவை அருமையானதொரு இரவாக நீ மாற்றலாம். காலையில் எழுந்ததும் உனக்கு பணம் தருகிறேன்” என்றான். “என் உடலும் என் விந்தும் விற்பனைக்கல்ல, வேறு ஆளைப் பார்” என்றுச் சொல்லி நகர்ந்தேன். படைத்தவன்மேல் கோபம் வந்தது.

‘மண்டு மண்டு மண்டு
உண்டுனக்கு ஒரு நாள் என்றாய் – என்
சிண்டு பிடித்த திந்த நாளில் சொல்வேன்
மண்டு மண்டு மண் டென்று’

வானத்தைப் பார்த்துக் கத்தினேன். இடி இடித்தது. மின்னலடித்தது. வானத்தில் மேகமொன்றையும் காணமுடியவில்லை. கேட்டவருக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்திருக்கும் போல. சும்மா பயமுறுத்துவதில் மட்டும் குறைச்சலில்லை.

பசித்தது. இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் உணவக வாசலில் நின்றுக் கொண்டிருந்தேன். பார்த்தார்கள். ஒன்றும் கேட்கவில்லை. குல்லா அணிந்த ஒருவர் அருகே வந்தார். என்ன என்பதுபோல் பார்த்தார். “சாப்பிட ஏதாவது கொடுங்கள். காசில்லை” என்றேன். “நல்லாத்தானே இருக்கே. உழைச்சு சாப்பிடுவதற்கு என்ன கேடு? போ போ. வந்துட்டே…” என்றார். வேறொரு கடையில் உட்கார்ந்து சாப்பிட்டேன். கைகழுவி நழுவினேன். மனதின் ஏதோவொரு இடத்தில் வலித்தது. இப்படி அனுதினமும் வலித்தது.

‘ரோலெக்ஸ்’ கட்டிடத்தின் பக்கத்தில் மரத்தடி இருக்கையில் அமர்ந்தேன். அவசரமாய் வேலைக்குப் போகும் மெத்தப் படித்த மனிதர்கள். சாலையோர மலாய் மாது `நாசி லெமா` மற்றும் பலகாரங்களை விற்றுக் கொண்டே அவ்வப்போது என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். வியாபாரம் முடிந்து மிச்சப்பட்டதை வண்டியில் ஏற்றினாள். என்ன நினைத்தாளோ, திடீரென்று இரண்டு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து, “அடேக்! மாக்கான் லா…” என்றாள். வாங்கிச் சாப்பிட்டேன். அவளின் சிறு மகள் தன்னுடைய பால் போத்தலை நீட்டினாள். வேண்டாமென கையசைத்தேன். வண்டியில் போகும் முன் அச்சிறுமி கையசைத்தாள். இளித்துச் சிரித்து என் மஞ்சள்கறைப் படிந்த பற்களை காட்டிக் கொண்டேன். கைகளை துடைத்தப் பின்பு அப்பலகை இருக்கையிலே படுத்துக் கொண்டேன். அம்மாது வந்தாள் கனவில். `நாசி லெமாக்’ கொடுத்து அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்பி அலறினாள். திடுக்கிட்டெழுந்து திசையறியாமல் ஓடினேன்.

மூச்சு வாங்கியது. இருகரங்களையும் முழங்கால்களில் வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். நடந்தேன். ஒரு பக்கமாக ஏதோவொன்று சாய்த்ததுபோல் நடந்தேன். தள்ளாட்டம் மதுவின்றியே ஏற்பட்டது. `டெலிக்கோம்’ கட்டட மேட்டிலொரு மரம் இருந்தது. சண்டைக் கோதாவில் வீழ்ந்தவன்போல விழுந்தேன். விரல்கள் யாவும் நடுங்கின. வியர்வைத் துளிகள் கண்ர்த் துளிகளாய் கன்னத்தில் வழிந்தன. உதடுகளின் பிளவில் பட்டு கரிப்புச் சுவை தந்தது.

தொலைவிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டே கடந்துப் போன ஒரு மலாய்க்காரர் மறுபடியும் திரும்பி என்னிடம் வந்தார். “தினமும் நானுன்னைப் பார்க்கிறேன். கிட்ட வந்துவிட்டாய். இன்னும் சில அடிகள்தான். வா என்னோடு. உன் உணவுக் கஷ்டம் முடிந்தது என நினைத்துக் கொள்” என்று மலாயும் ஆங்கிலமும் கலந்து பேசினார். ஒன்றும் யோசிக்காமல் அவர் பின் நடந்தேன். மேடேறினேன். `எனக்கு ஒத்தாசை வரும் இடமெல்லாம் மேடோ ` என நினைத்தது மனம். ஒரு தேவாலயத்தின் வளாகத்துக்குள் நுழைந்தோம். தேவாலயம் வலதுபுறம் இருக்க இடது புறமாய் நடந்தோம். ஓர் அலுவலகக் கட்டிடம் மாதிரி ஒன்றிருந்தது. அதனையொட்டி வேலியோரமாய் போகையில் பச்சை வண்ண தகரப்பெருங்கதவு. ஒரு பக்கம் மட்டும் திறந்திருப்பதைக் கண்டேன். என்னை அழைத்துப் போனவர் சிறிய மேசையிலிருந்த காகிதத்தையும் பேனாவையும் காட்டி, பெயரையும் அடையாள அட்டை எண்களையும் பதிவுச் செய்யும்படிப் பணித்தார். எனக்கு முன் 76 என்றிருந்ததால் 77 என்றெழுதி நிரப்பினேன். நெட்டையாக இருந்த இந்தியரிடம் என்னை அறிமுகப்படுத்தி குளிப்பதற்கும் மாற்று உடைக்கும் தேவையானதை தரும்படி ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டார். தன் உருண்டைக் கண்களால் மேலும் கீழுமாகப் பார்த்தவர் சுறுசுறுப்படைந்து தேவையானதை கையில் திணித்து குளியலறைக்கு வழி காட்டினார்.

குளிக்கும் போது கனுக்காலுக்குக் கீழ், பாதங்கள் யாவும் வெளுத்துப் போயிருந்தன. கால் விரல் இடுக்கிலெல்லாம் எரிச்சல். அடிவயிற்றுக்கும் கீழே கால் கங்குகளிலும் எரிச்சல். சவர்க்கார நுரையினால் அழுத்தி தேய்க்கையில் சிவந்து போயின. நுனித்தோலை பின்னிழுக்கையில் மாவைப்போல வெள்ளை வெள்ளையாய் ஒட்டியிருந்தன. கழுவி சுத்தப்படுத்திக் கொண்டேன். எரிச்சல் காதுமடல் வரை ஏறியது.

மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டு துவைத்தெடுத்த உடைகளை உடுத்திக் கொண்டேன். சமைத்த உணவு தட்டுகளில் வைத்து வரிசைப்படுத்தப்படுத்தப்பட்டன. அங்கிருந்த நான்கு வரிசை நீள் மேசைகளில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டேன். உணவு தரப்படுவதற்கு முன் ஆங்கிலத்திலும் சீனத்திலும் தமிழிலும் மலாயிலும் கடவுளுக்கு நன்றி சொல்லி வேண்டப்பட்டது. ஆளுக்கு ஒரு குவளை, ஒரு உணவுத் தட்டு. இரண்டு குவளை அல்லது இரண்டு உணவு தட்டு தவறுதலாக கண்டறியப்பட்டால் கூட எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்கப்படுவர். எல்லோராலும் வார்த்தைகளால் அர்ச்சிக்கப்படுவர். “இங்கேயுமா…..” என்றாரம்பிக்கும் தாக்குதல் மகா புனிதத் தன்மையுடன் இருக்கும். சாப்பிட்டு முடிந்ததும் தங்கள் தங்கள் குவளைகளையும் தட்டுகளையும் கழுவியவர்களுடனே நானும் கழுவிக் கவிழ்த்து வைத்தேன். வந்தவர்களில் சிலர் நாற்காலிகளை அடுக்கி வைத்து சுத்தம் செய்து விட்டு போயினர்.

நடக்க முடியவில்லை.

என் கஷ்டத்தை அறிந்த மலாய் நண்பர் பூசும் மருந்துகளை கேட்டு வாங்கி கொடுத்தார். “சப்பாத்து வேண்டாம். சிலிப்பரை போட்டுக்கொள். உள்சிலுவார் போட்டிருக்கிறாயா….” எனக்கேட்டார். “இல்லை, எறிந்து விட்டேன்” என்றேன். “நல்லது” என்றுச் சொல்லி “என்னைப் பின்பற்று” என்றார். பின் சென்றேன்.

மாரியம்மன் கோயில் வரிசையிலுள்ள கடைக்கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்தோர் சீனர்களே அதிகம். பெரும் பணத்தை படைத்த சீன நாட்டவர் தாம் தேடிக்கொண்டிருந்த `சத்தியம்’ இயேசுதான் என்று தன் வாழ்வை முன் வைத்து ஆங்கில உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார் டிவிடி தொலைக்காட்சியில். அம்மையத்தின் தலைவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். குடும்பத்தைப் பற்றி விசாரித்தனர். கால் ஊனமுடைய மையத்தின் வேலையாள் சவரன் கத்தியை கொடுத்து நகர்ந்தார்.கண்ணாடியும் தண்ர் குழாயும் இருக்கும் இடம் நோக்கி நடந்தேன். சவரம் முடிந்ததும் அதே இடத்தின் மூலையில் முக்காலியில் உட்கார வைக்கப்பட்டு தலைமுடி வெட்டிவிடப்பட்டேன். மீண்டும் குளியல். சுவரில் இருந்த கண்ணாடி வேறு முகத்தைக் காட்டியது.

நாற்பதைக் கடந்த சீன மாதொருவர் மொச்சைப்பயிறு கஞ்சியையும் சில ரொட்டித் துண்டுகளையும் எல்லோருக்கும் கொடுத்து உபசரித்தார். ஒவ்வொருவரும் தன் தன் பாத்திரங்களை கழுவிக் கவிழ்த்து வைப்பதைக் கண்டு நானும் செய்தேன். அவரவருக்கு வேலை இருப்பதுபோல சீக்கிரமாகவே வெளியேறினர். மலாய் நண்பரும் என்னை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

கோத்தா ராயாவின் ஒரு மாடியிலுள்ள `வீடியோ கேம்ஸ்’ அரங்கிற்குள் நுழைந்தோம். முதல் – இரண்டாம் இடங்களில் நான் பார்த்த கூட்டத்தின் பாதிப்பேர் இங்கேயும் உலாவினர். குறிப்பிட்ட நேரமானதும் `மீ’ கொடுக்கப்பட்டது. சீராப்ஃ குளிர் பானத்தை வரிசையாக நின்று எடுத்துக் கொண்டு நகர்ந்தனர். முடிய முடிய வாழைப்பழங்கள் வைக்கப்பட்டன. வயிறு புடைக்கத் தின்றேன். அங்கிருந்து சீனக் கோயில்களுக்குச் சென்று உண்ணவும் வழி பிறந்தது. கட்டணமில்லாத கவேறையை தேடிச் செல்வதே பிரதானப் பிரச்சனையாக தலையெடுத்தது.

மறுநாள் பிற்பகலில் பெட்டாலிங் ஸ்திரிட் குறுக்குத் தெரு சந்தொன்றில் கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டம் நடந்தது. இறுதி நிகழ்வாக கோழி சாப்பாடு, தேநீர் மற்றும் பழங்கள் தரப்பட்டன. இனமத பேதமின்றி திக்கற்றவர்கள் குழுமியிருந்தனர். அதே இரவில் மாரியம்மன் கோவில் வரிசையின் கட்டிடத்தில் வாராந்திர கூட்டம். அழைக்கப்பட்டகவர் பேசினார். “ஒவ்வொரு இடமாகச் சென்று இப்படி இலவச உணவை சாப்பிடுவது சரியா? இப்படிப்பட்ட கேவலமான, கீழ்த்தரமான வாழ்வு தேவையா… நீங்களெல்லாம் மனிதர்கள் என்றுதான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். கை இருக்கிறது. கால் இருக்கிறது. உழைத்து சாப்பிடலாமே…” என்றதும் வெளியேறினேன். மலாய் நண்பரும் வெளியேறினார். “மிகவும் கவலையாக இருக்கின்றது. நான் தூங்க வேண்டும்” என்றேன். மதுபானம் வாங்கி பாதி குடித்து மீதியைத் தந்தார். குடித்த கொஞ்ச நேரத்திற்குள் மேகங்களில் கால் வைத்து நடப்பதுபோல் இருந்தது. `தீஸ் இஸ் தெ டே… தீஸ் இஸ் தெ டே… தெட் தெ லோட் ஹெஸ் மேட்….” வாராந்திர கூட்டத்தின் முதல் பாடலைப் பாடி ஆடினேன். சுற்றுலா வந்த அயல் நாட்டினர் கைதட்டி ரசித்தனரா அல்லது கைகொட்டிச் சிரித்தனரா என்று சரியாக ஞாபகத்தில் இல்லை.

ஓய்வு நாளின்போது உணவிற்குப் பஞ்சமே இருந்ததில்லை. தலைநகரில் இருக்கின்ற எல்லா சீக்கியர் கோவிலிலும் காலை, மதியம் என உணவு கொடுக்கப்படும். சப்பாத்தி அல்லது பூரியுடன் மாட்டுப்பால் தேநீரும் கிடைக்கும். விசேஷ நாளில் விசேஷ உணவு வகைகள். ஒரு சிறு துண்டினால் தலைமுடியை மறைத்துக் கட்டிக் கொண்டால் போதும். நானும் ஒரு ஹிந்திக்காரன்தான். கோட்டுமலைப் பிள்ளையார் கோவில் வரிசையில், கிள்ளான் பேருந்து நிலையத்தின் பின்னால், மெர்போக் திடலின் பின்னால், சௌக்கிட்டில், தித்திவங்சாவென எங்கு நுழைந்தாலும் “ஹரே ஜீ… நமஸ்தே…” என்று சொன்னவுடன் தட்டில் சப்பாத்திகள் வைக்கப்படும். இங்கு நான் உணவை மென்றுத் தின்றதேயில்லை. எவ்வளவு சீக்கிரம் விழுங்க முடியுமோ விழுங்கி எழுந்தோடுவேன். காரணமில்லாமலில்லை. கொலுசுச் சத்தங்கள், ஆடும் குஞ்சரங்கள், மினுக்கும் மூக்குத்திகள், உரசும் துப்பட்டாக்கள் எனக்கு அவளை ஞாபகப்படுத்தும். அந்த அலறல் என்னை துரத்த ஆரம்பிக்கும். எந்த இடமென்று பார்க்காமல் வாந்தியெடுக்க வைக்கும். அடிவயிற்றிலிருந்து எழும்பும் வேகம், குடலையும் இருதயத்தையும் சேர்த்து வாய் வழி வெளியே கொட்டுவது போலிருக்கும். என் கண்ணீரைக் கண்டு பரிதாபம் தெரியும் மலாய் நண்பர் விழிகளில்.

இஸ்லாமியர்களின் நோன்புக் காலம் ஆரம்பமானது. நீதிமன்ற வளாகப் பக்கத்திலுள்ள மசூதியில் கஞ்சி கொடுத்தனர். இரவானதும் டயாபூமிக்கு எதிர்புறமுள்ள மசூதியினுள் நுழைந்தோம். தலையில் துண்டுக்கட்டு. உடலின் புறத்துவாரங்களை தண்ரைக் கொண்டலம்பி பின் சென்றேன். கைகளை பாதிவரை ஏந்துதல். மண்டியிட்டு பூமியைத் தொடும் நெற்றி. தொழுகை முடிந்ததும் சலாம் கொடுத்து கீழ் தளத்தில் வரிசை நின்று உணவை வாங்கி பாயில் அமர்தல். சூர்மா பழத்தை சாப்பிட்டு உணவை உட்கொள்ளும்போது மனம் உறுத்தியது. பார்க்க இந்திய முஸ்லிமாக இருந்தாலும் நான் விருத்தசேதனம் பண்ணாதவன். உணவுக்காக `எம்மதமும் சம்மதம்’ என்று சமாதானப்படுத்திக் கொள்ளத்தான் முடிந்தது, அப்போது.

ஒரு வெள்ளிக்கிழமையின் தொழுகை முடிந்து வயதானவர் தன் இருகரங்களிலும் பெரிய பெரிய பைகளில் உணவுப் பொட்டலங்களை கொண்டு வந்து கொண்டிருந்தார். தமிழ் மசூதிக்கு வெளியே சந்தடியில் என் கூட்டத்தினர் அவரைச் சூழ்ந்து கொண்டு துலாவி உருவினர். ஒருவர் மேல் ஒருவர் விழுந்து `தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்…’ என்ற கவி வரிகளை தங்களால் ஆனமட்டும் மெய்ப்பிக்கிறார்களா அல்லது `எனக்கில்லையென்றால் உனக்கும் இல்லை…’ என்றதொரு விதி சமைக்கிறார்களா என்றறியாது விக்கித்துப்போனேன். வயதானவர் தலைமேல் தன் கைகளை வைத்துக் கொண்டு தலையை இடதும் வலதுமாக ஆட்டிக் கொண்டிருந்தார். ஒரு பொட்டலத்தை என்னிடம் கொடுக்க வந்தார் நண்பர். `யா அல்லாஹ்…” என்றதற்கு “நாசி பிரியாணியுடன் கோழியின் சப்பை…” என்ற தொனி பெருமிதத்துடன் வந்தது. எனக்கென்னவோ என் நாவிற்கு உப்புச் சப்பில்லாமலிருந்தது.

மெர்டேக்கா சதுக்கத் திடலின் அருகேயுள்ள தேவாலயத்தில் காலைப் பசியாறுதலை முடித்துக் கொண்டு மதிய உணவுத் தரும் தேவாலயத்திற்குச் சென்றடைந்தோம். அன்றைய தினம் கன்னிகாஸ்திரீகளின் குழுவும் கல்விப் பயிலும் மாணவ மாணவிகளின் படையும் எங்களை உபசரிக்க ஆயுத்தமாகியிருந்தனர். வீடற்ற, திக்கற்ற, அனாதைகளான எங்களை விளையாட்டிற்கு அழைக்கும் சிலர்; விசாரிக்கும் சிலர்; பேட்டி காணும் சிலரென ஆங்காங்கே நேசவொலி உண்டாகி ஒரு மெல்லிசை போல் கேட்டது.

காதோரமாய் நரைத்த கன்னிகாஸ்திரீ என்னருகே வந்தார். பார்வையின் கனிவும் களங்கமற்றப் புன்னகையும் எந்த மனதையும் நெருங்கிச் சென்றடையும். அவரும் புளித்துக் கசந்து வெறுத்துப்போன அதே கேள்வியை கேட்டார். “நான் திருடவில்லை. ஒருவரிடமும் கொள்ளையடிக்கவில்லை. உங்களுக்குப் பாரமாய் இருந்தால் சொல்லிவிடுங்கள். போய் விடுகிறேன்…” என்று சொல்லியபடியே எழுந்து கொண்டேன். என் கரத்தைப் பிடித்து உட்கார வைத்து “இல்லையில்லை… தவறாக நினைத்துக் கொண்டாய். உன் நிலை ஏனிப்படி ஆனது? நீ படித்தவன் என்று உன் முகமே சொல்கிறது. எது காரணம் அல்லது யார் காரணம்?” என்றார். சொல்லலாமா வேண்டாமா, சொல்லி என்ன ஆகப் போகிறது…. எனக்குள் பாய்ந்து அதிரும் அலறலை இவர்களால் அமைதிப்படுத்த இயலுமா… யோசித்தேன். அவர் எழுந்துப் போனார். திரும்பி வரும்போது இருசிறு தட்டில் கேக் துண்டுகள். ஒன்றை என்னிடம் நீட்டினார். வேண்டாமென்றேன். ஏனென்றார். “நானாகப் போய் எடுத்துக் கொண்டால் பரவாயில்லை. நீங்கள் கொடுத்தால், வரும் கனவுகளில் வந்து அலறுவீர்கள்” என்றுரைத்தேன். நிமிர்ந்து உட்கார்ந்தார். சின்னக் கருவிகேள் என்னைத் துருவித் துருவி ஆராய்ந்தன.

அவர் விகேளை சந்திக்கத் துணிவில்லை. தலை குனியும்போது அவர் பேச ஆரம்பித்தார். “நீங்கள் செய்த தவறென்ன…ஸீ ஜென்டல்மேன்…” முடிப்பதற்குள் ஒருவர் வந்து காதோரம் ஏதோ கூறினார். “இங்கேயே இருங்கள். வந்துவிடுகிறேன்” என்றார். அங்கு வைக்கப்பட்ட எனக்கான சிறு துண்டு கேக்கை வாயில் போட்டுக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினேன்; தனியனாக.

நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். முன்புபோல வேகமாக நடக்க முடியவில்லை. நடையில் ஒரு தளர்வு. ஆனாலும் நெடுந்தூரம் நடக்க வேண்டும்போலிருந்தது. முதுகில் பெரிய சுமையை சுமந்தபடி என்னைத் தாண்டிச் சென்றுக் கொண்டிருந்தனர் சுற்றுலாப் பயணிகள். ஆணும் பெண்ணுமாய் சிரித்துக் கொண்டே. ஒரு வெள்ளைக்காரி சத்தமாய் சிரித்தாள். எனக்கு அவளின் ஞாபகம் வந்தது.

நடக்க, நடக்க, நடக்க, அலறல் நின்று போகும் என்று உள்ளம் சொன்னது. வெறும் நடை. கருத்தரித்த பொய்களும் மாய்மாலங்களும் கருச்சிதைவாக வேண்டும். அதற்காகவேணும் வெறும் நடை.

என் கால்கள் தலைநகரைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தன, மெதுநடையில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *