பயம்

 

பார்வதிக்குப் பயம்! எதற்கெடுத்தாலும் பயம்… எதிர்மறை சிந்தனைகள் எப்போதும்! ஏதோ ஒரு பயம். இந்த ‘போபியா’விற்கு என்னவென்று பெயரிடுவது?

தண்ணீர் பற்றிய பயம் என்றால் ‘ஹைட்ரோஃ போபியா!’ இருட்டைப் பற்றிய பயம் என்றால் ‘க்ளாஸ்ட்ரோ போபியா’… இப்படி பல பயங்கள்… இது பஞ்ச பூதங்கள் பற்றிய பயம்.

எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.

எங்காவது பூகம்பம் என்றால் தன் வீடே நடுங்குவது போன்ற பயம். சுனாமி என்றால் இவள் சமுத்திரத்தில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொண்டு விடுவாள்!

இந்தநப் பயம் எப்போது வந்தது…? புரியவில்லை. இவள் சிறுமியாக இருந்தபோது, திருட்டு மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய போது காவல்காரன் பார்த்துவிட்டு சப்தம் போட்டதில், இவள் மேல் கிளையிலிருந்து தொப்பென்று கீழே குதித்தாளே! அப்போது ஏற்பட்ட பயமா?

குதித்த அதிர்ச்சியில் இவள் ‘பெரியவள்’ ஆகி, செய்யாத தவறு ஏதோ செய்துவிட்டோம் என்று பயந்தாளே… அப்போது ஏற்பட்ட பயமா?

தன் கணவனை எதிர்த்துப் பேசியவள் அல்ல இவள்!

இதை அடிமைத்தனம் என்று நினைக்காமல் ஆதரவு என்று நினைத்தவள்!

கணவன் மீது பயம் காரணமாக ஏற்பட்ட அன்பு அல்ல இவள் செலுத்தியது.

கடமை காரணமாக, காதல் காரணமாக செலுத்திய பாசம்.

கணவர் வெளியில் போய்விட்டால் அவர் திரும்பி வரும்வரை அவர் பத்திரமாக வரவேண்டும் என்கிற பயம்!

“பாரூ… இதென்ன பைத்தியக்காரத்தனம்! ஏன் இப்படி பயந்து சாகறே? வெளியிலே நான் போனா கார் ஆக்ஸிடண்டுலே அடிபட்டிடுடுவேனோன்னு பயம்! வெளியூர் போனா கேட்கவே வேண்டாம். போன இடத்திலே கொஞ்சம் லேட் ஆனா, வர முன்னே பின்னே தான் ஆகும்!

இதுக்கு இப்படிப் பயமா?”

“முன்னே எங்கே வந்தேள்? பின்னே தான் வரேள்!” கணவர் சிரிப்பார்.

“என் அசட்டுப் பெண்டாட்டியே!”- என்று கொஞ்சுவார்.

மகன் தீபக் பிறந்த போது இந்தப் பயம் இரு மடங்காகிவிட்டது.

குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் பயம். ஊசி போட்டால் பயம்… தடுப்பூசி போட்டு ஜுரம் வந்தால் பயம்… ஒரு தடவை தீபக்கிற்கு டைபாயிட் காய்ச்சல் வந்து இவள் படாதபாடு பட்டுவிட்டாள்.

அப்போதெல்லாம் டைபாயிட் என்றால் பயம்தான். இப்போது போல் ‘சின்’ மருந்துகள் கிடையாது! அதுவும் டைபாயிட் ‘ரிலாப்ஸ்’ ஆகி 105 டிகிரி காய்ச்சல் வந்தபோது இரவு, பகல் கண்விழித்து, சாப்பாடு தூக்கமில்லாமல் தீபக்கின் அருகிலேயே இருந்து ஒவ்வொரு நொடியும் மரண பயத்துடன் வேண்டிக் கொண்டவள் இவள்!

தீபக் பிழைத்து எழுந்து கல்லூரியில் சேர்ந்தபோது கல்லூரியிலிருந்து திரும்பி வர சற்று நேரமாகிவிட்டால்கூட வாசலுக்கும் கொல்லைக்குமாக நடந்து

நடந்து பய பீதியுடன் வளையவரும் பார்வதி!

ஒவ்வொரு நொடியிலும் பயம்…

மரண பயம்!

எங்கிருந்தோ எப்போதோ வரப்போகும் மரணத்திற்காக இவள் ஒவ்வொரு நொடியிலும் அனுபிவிக்கும் வேதனை… மரண பயம்… கவலைகளில் கரைந்து போவதே இவளின் நித்தியக் கனவாகிவிட்டது!

எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறுவார்…

“இயற்கை ஒன்றுக்கொன்று முரணானது… பஞ்சபூதங்கள் ஒன்றுக்கொன்று பகை! நீரும், நெருப்பும், காற்றும், மண்ணும், வெளியும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் இயல்புடையவை. ஆனால், இவைகளின் இசைவில்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. இவைகள் முரண்பட்டால் அந்த நொடியில் உலகம் அழியும்!”

இந்த உண்மையைப் பார்வதி உணர்ந்து கொள்ளவில்லை. எந்நேரமும் எதிர்மறைச் சிந்தனைகள்… பயம்… அழிவு பற்றிய பீதி! ஆனாலும் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்!

அன்று…

டெல்லியில் இவள் தங்கைக்குத் திருமணம். மாப்பிள்ளை வீட்டார் டெல்லியில் இருந்தார்கள். வயதான பாட்டி ஒருத்திக்காக டெல்லியில் கல்யாணத்தை நடத்தச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள்.

ஒரே தங்கை. இவளுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள். நிறைய படித்துவிட்டாள். இப்போது திருமணம்… ‘லேட் மேரேஜ்…’ கட்டாயம் போய்த்தான் ஆக வேண்டும்.

உடல்நலக் குறைவாக இருக்கும் அம்மாவும், ஓய்வில் இருக்கும் அப்பாவும் வற்புறுத்திக் கூப்பிட்டார்கள். தீபக்கிற்குக் கல்லூரி ‘செமஸ்டர் எக்ஸாம்’. அவனால் வர முடியாது. இவளும் கணவரும் கிளம்புவதாக ஒரு மாதம் முன்பே டிக்கெட் வாங்கி விட்டார்கள். திடீரென்று இவள் கணவருக்கு அலுவலக வேலை நிமித்தம் அவசரமாக வெளியூர் பயணம் வந்துவிட்டதால் இவள் மட்டுமே தனி வழி கிளம்ப வேண்டி வந்தது.

“பயப்படாதே பாரூ… நீ முன்னால் போ… நான் ஆபீஸ் வேலை முடிச்சு ஒரு வாரத்துலே வரேன். இப்போ நீ போனா உன் அம்மாவுக்கு உதவியா இருக்கும். இந்த வண்டியிலே இத்தனைப் பேர் இருக்காங்க. இத்தனை பேரும் உனக்குத் துணை, கவலைப் படாதே” பாருவுக்குப் பயமாக இருந்தது. படபடப்பாக இருந்தது. தனியாக… அதுவும் இரண்டு நாள் பயணம்… தனி வழி… என்னமோ ஓர் இனம்புரியாத பயம் நெஞ்சைக் கவ்வியது. இனி பயணத்தை நிறுத்த முடியாது என்ற நிலையில் கிளம்பினாள்.

ஏ.ஸி. சேர் கார் பெட்டியில் இவளை அமர்த்திவிட்டு ஆறுதல் சொல்லி விட்டு டெல்லி வருகிறேன் என்று வாக்குறுதி தந்துவிட்டுத்தான் இவள் கணவர் கிளம்பினார். ஆபிஸ் அவசரம். பக்கத்து ‘சீட்’ காலியாக இருந்தது. இவள் கணவர் அமர்ந்திருக்க வேண்டிய இருக்கை, அவர் ‘கேன்சல்’ செய்ததால் யார் வருகிறார்களோ?

இவளுக்கு எப்பவுமே ஜன்னலோர இருக்கைதான் பிடிக்கும். நகரும் மரங்களை, தந்திக் கம்பங்களை, கூட நகரும் நிலவை வேடிக்கை பார்த்தபடி பயணிப்பாள். இப்போது ‘ஏஸி’ என்பதால் கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி எதையும் பார்க்க முடியாது, ரசிக்க முடியாது.

பார்வதி பேசாமல் இருந்தாள்.

அப்போது ஒரு பெண் கையில் இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையுடன் வந்து இவள் அருகில் அமர்ந்தாள். கையில் ஒரு ஷோல்டர் பேக். குழந்தை இருப்பதால் அதற்குத் தேவையான ஆகாரம் வைக்கும் ஒரு பிரம்புக் கூடை. இலேசாகச் சிரித்தபடி பார்வதி இடம் ஒதுக்கித் தந்தாள். அதன்பின் இவளின் வழக்கமான பயங்கள்… இருக்கையில் அமர்ந்தபடி கண்மூடிக் கனவுகள்…

ரயில் விபத்தில்லாமல் சரியாகப் போய்ச் சேருமோ என்ற பயம். டெல்லி ஸ்டேஷனில் தன்னை அழைத்துப் போக அப்பா வருவாரோ இல்லையோ என்ற பயம். இடையில் ரயில் நிற்கும் போதெல்லாம் கொள்ளைக்காரர்கள் ரயிலை நிறுத்தி கொள்ளையடிப்பார்களோ என்ற பயம். பார்த்த பல பழைய படங்கள்… தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் பயணித்தாள்.

கையிலேயே சப்பாத்தி, இட்லி, தயிர் சாதம் என்று கட்டிக் கொண்டு வந்ததால், எதையும் இடையில் வாங்க வேண்டிய அவசியமில்லை. பக்கத்தில் அமர்ந்திருப்பவளைப் பார்த்தால், முஸ்லீம் மாதிரித் தெரிந்தது. கைக் குழந்தைக்குப் புட்டிப் பால் கரைப்பதும், ஈரமாக்கிய துணிகளை மாற்றுவதுமாக அந்தப் பெண் மும்முரமாக இருந்தாள். சில மணி நேரங்கள் பார்த்த பரிச்சயத்தில் அவள் சிரித்தாள். விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தையை மடி மீது அமர்த்திக் கண்ணாடி ஜன்னல் வழியே நகரும் மரம், தந்திக் கம்பங்கள், ஆகாயம் என்று வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.

‘இவளும் கைக் குழந்தையுடன் தனியாகத்தான் பயணிக்கிறாளா? சிறு வயது தான், நிறைய தைரியம்!’

ஏதோ சிந்தனைகள்…

“பஹன்…”

‘சட்’டென்று நிமிர்ந்து பார்த்தாள். வண்டி ஆந்திராவைத் தாண்டிக்கொண்டிருந்தது. “குழந்தை தூங்கறான். பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன். நடுவிலே முழிச்சான்னா தட்டிக் கொடுங்கள்…”

‘சரி’யென்று தலையசைத்தாள்.

குழந்தை கொழு கொழுவென்று நல்ல சிவப்பாக அழகாக இருந்தது. இவள் பையன் தீபக்கூட இப்படித்தான் இருந்தான். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அந்த பெண் பாத்ரூமிலிருந்து திரும்பிவிட்டாள்.

“பேர்… என்ன?”

“என் பேரா? பையன் பேரா?”

அவள் சிரித்தபடி கேட்டாள்.

பார்வதிக்குச் சிரிப்பு வந்தது.

“ரெண்டு பேர் பேரையும் சொல்லுங்களேன்…”

“என் பேர் சமீரா… இவன் பேரு ராஜா ஷெரிப். சுருக்கமா ராஜான்னு கூப்பிடுவேன்…”

“ராஜா மாதிரித்தான் இருக்கான்…”

பார்வதி சொன்ன போது திடீரென்று சமீரா கண் கலங்கினாள்.

“ஏன்… என்னாச்சு?”

“இவன் பேர்லே தான் ராஜா… ஆனா…”

“என்னம்மா?”

“இவனுக்கு பேர் சொல்ல முடியாத ஒரு வியாதி. ஏதோ சிண்ட்ரோம். தசைகள் எல்லாம் திடீர்ன்னு செயலிழக்க ஆரம்பிச்சிடிச்சி… ஒரு ஊசி ஆறாயிரம் ரூபாய்ன்னு 40 ஊசி போடணுமாம். ஒரு வாரத்திலே அந்த ஊசியைப் போடணுமாம். நாங்க நடுத்தர வர்க்கம். டெல்லியிலே எங்க சொந்தக்காரங்க இருக்காங்க… அங்கே வந்தா ‘ட்ரீட்மெண்ட்’ தரோம்னு சொன்னாங்க… அதான் ராஜாவைக் கூட்டிட்டுப் போறேன். அவனால கையைக் கால அதிகமா அசைக்க முடியாது. அதுதான் அவனோட ஒவ்வொரு தேவையையும் நான்… நான் பார்த்துக்க வேண்டி இருக்கு.”

சமீரா அழ ஆரம்பித்தாள்.

பார்வதி பிரமித்துப் போனாள்.

இனம் புரியாத மரணம் பற்றிய பயம் இவளுக்கு. என்றோ வரப் போகிற மரணத்தைப் பற்றிய எதிர்கால அனுமானங்களால் மனத்தின் நிம்மதியின்றித் தவிக்கிறாள். ஆனால், இந்தப் பெண்ணோ ஒவ்வொரு நொடியையும் மரண பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! எதிர்காலம் பற்றிய அச்சத்தைவிட இவளுக்கு நம்பிக்கை அதிகமிருக்கிறது.

பார்வதி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அப்போது…

ரயில் திடீரென்று ‘ஸ்லோமோஷனில்’ ஓட, தட தடவென்று ஆட்கள் ஓடி வரும் சப்தம்… மெதுவாகப் போன ரயிலில் திடீரென்று சில முரடர்கள் ஏற… திடீரென்று வெடித்துவிட்ட கலவரம்… முஸ்லீம்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் இந்துக்களுக்கும், இந்துக்கள் அதிகமிருக்கும் பகுதியில் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட துன்பம்.

தேவாலயங்களில் வேதங்கள் ஓதப்பட வேண்டும். ஒவ்வொரு இந்துவும் குரான் படிக்க வேண்டும்! “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்? மாதா கோவில் மணி ஓசையும், ஆலய மணி ஓசையும் காற்றோடு ஒன்றாகத்தான் கலக்கிறது! ஆனால்…”

நிலைமையை பார்வதி ஒரு நொடிக்குள் புரிந்து கொள்கிறாள். மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அனுபவம்… பயங்கள் மெல்ல மெல்ல விலகுகின்றன.

ஒரு நொடிக்குள் பரபரவென்று இயங்குகிறாள் பார்வதி…

தன் கைப்பையில் தான் எப்போதும் வைத்திருக்கும் அம்பாளின் குங்குமப் பிரசாதத்தை எடுக்கிறாள்.

சமீராவின் முக்காட்டை எடுத்து விட்டு, அவள் நெற்றியில் குங்குமம் இடுகிறாள். தூங்கி கொண்டிருந்த ராஜாவைத் தன் மடியில் கிடத்திக் கொள்கிறாள். இவர்கள் இருக்கைக்கு அருகில் அந்தக் கூட்டம் நெருங்குகிறது.

“மீரா, ராஜாவுக்கு ‘டைபர்’ மாத்தணும். மாத்தி விடறியா?” என்று இயல்பாக சமீராவைப் பார்த்துக் கேட்கிறாள்.

கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்த ஒருவனைப் பார்த்து மெல்லச் சொல்கிறாள். “என் பேரன்… இது என் மக.. டெல்லிக்கு புருஷன் வீட்டிலே கொண்டு போய் விடப் போகிறேன்…”

அவர்கள் புரிந்து கொண்டார்கள். “சலோ” என்றபடி அவர்கள் போய்விட்டார்கள்.

மீராவாக மாறிய சமீரா இவள் தோள்களில் முகம் புதைத்து அழுகிறாள்.

ராஜா கண் விழிக்கிறான்.

மரணத்திலிருந்து தப்பிவிட்டான் ராஜா… இனி இவனுக்கு மரண பயம் இல்லை!

ஏன்? இவளுக்குக் கூடத்தான்!

ரயில் மெல்லக் கிளம்புகிறது.

நன்றி: ஓம் சக்தி டிசம்பர் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று பாயஸமோ, சர்க்கரைப் பொங்கலோ, இல்லை ஏதாவது ஒரு சித்ரான்னமோ படைப்பாள். பயபக்தியாகக் கற்பூர ஆரத்தி வரை காத்திருந்து, பட்டாபிஷேக ராமருக்கு ...
மேலும் கதையை படிக்க...
பெரிய தண்டனை
சேது ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பார்த்தான். அந்த வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ஏன்,என்னவாயிற்று? ""என்ன ஆச்சு ஸார்?'' அங்கே நின்று கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தவரிடம் கேட்டான். ""வேதநாயகம் ஸார் இறந்து போயிட்டார்'' சேது ஸ்தம்பித்துப் போனான். கைப் பையிலிருந்த கல்யாண அழைப்பிதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது. ...
மேலும் கதையை படிக்க...
காதல் மொழி விழியா? விலையா?
ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கீழே இருந்த காபி ஷாப்பில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. இவள் ...
மேலும் கதையை படிக்க...
பூநாகம்
நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன் நந்திவர்மன் அமர்ந்திருந்தான்.அப்போது வாயில் காப்போன் வந்து, திருமுனைப்பாடி சிற்றரசர் நரசிங்கமுனையார் வந்திருப்பதாகக்கூற, வரச்சொல்லி ஆணையிட்டபின் திருமுனைப்பாடியார் வந்தார்.   ‘‘வாருங்கள் திருமுனைப்பாடியாரே... என்ன ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: விமலா ரமணி இனி ரேவதியின் அழுகை ஓயப்போவதில்லை. நரேனுக்குத் தெரிந்து விட்டது. இனி அவன் என்னதான் சமாதானப்படுத்தினாலும் அவள் கண்ணீரைத் துடைக்க சக்தி இல்லை. ஏன்? திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. கோவில், குளம், டாக்டர் என்று எல்லா தரப்பையும் ...
மேலும் கதையை படிக்க...
கண்டேன் ராகவா!
பெரிய தண்டனை
காதல் மொழி விழியா? விலையா?
பூநாகம்
வம்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)