Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பயணம்

 

விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது வெளியில். உலோக சோதிப்புக்கருவி வைத்திருந்தவன் உடம்பு முழுதும் தடவிவிட்டு என்னைப்பார்த்து, காவி படிந்த பற்களால் இளித்து “போ” என்றான். பாதுகாப்புச் சோதனைகள் உடமை மற்றும் பயணிகளுக்கானது கழிந்து எட்டி நோக்கினேன் முகம் சிறிது நீண்டு ஏவுகணை போல் தயாராக நின்றது ஊர்தி. பின்பு வரிசை, அவ்வளவு ஒன்றும் பெரிதாக இல்லை. ஊர்ந்து ஊர்ந்து அனைவரும் தமது உடமைகளைத் தூக்கியவண்ணம் ஏறிக் கொண்டிருந்தனர். என்முறை. ஏறி எனது முன்பே கணினியில் பதிவு/உறுதி செய்யப்பட்ட இருக்கையைக் கண்டுபிடித்து உடமையை வைத்துவிட்டு (“அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை நான்கு உடுப்புகள், பற்பசை/துலக்கி, வழிப்பயணத்திற்கான பாதுகாப்பு உடைகள் ஆகியன கொண்ட ஒரு சிறிய பெட்டி”) வாகாக எனது இருக்கையில் அமர்ந்து கொண்டேன். மொத்தம் இருபது, இருபத்தைந்து பேர் இப்பயணத்திற்கென தோன்றிற்று. கதவு மூடியது கடைசியாக ஏறியவனுக்குப்பின். புறப்படத் தயாரென செலுத்துபவன் குரல் கொடுத்தான்.

ஊர்தி உந்துபொறியின் உறுமல் அனைவரையும் ஆட்டியது. புறப்படும் போது பாதுகாப்பு எஃகு உருளைகளைப் பிடித்துக்கொள்ள கட்டளை இடப்பட்டிருந்தேன். உந்துபொறியும், எனது இருக்கையும் (ஏன் அனைவருடையதும்தான்) சமதளத்தில் இருந்ததால் சீற்றத்தையும், இரைச்சலையும் உணர்ந்தேன். எத்தனை குதிரைச்சக்தி இருக்குமென யோசித்தேன். மற்ற ஊர்திகளினதும் கூடுதலே இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். புறப்பட்டது.

இழைக்கண்ணாடிப் பாதுகாப்புச்சன்னலூடே பார்வையைச் செலுத்தினேன். கும்மிருட்டு, நட்சத்திரங்கள் அனைத்தும் என்னோடு விரைவாக நகர்ந்து வந்தன. நிலவைத் தேடினேன் காணவில்லை, சிரித்துக்கொண்டேன்.

உந்துபொறியின் வேகம் அதிகரித்தது. பின்பக்கம் புகை பெரும் மண்டலமாக உருவெடுத்து ஊர்தியை முன்னுக்குத் தள்ளியது. குலுக்கல் சற்று அதிகம் தான். முன்னரே அறிந்திருந்தும் உணரும்போது வலித்தது. செலுத்துபவனின் திறமையை எண்ணி வியந்தேன். வாகாக வளைத்து அவ்வப்போது சில குமிழ்களை திருகி, பின்னுக்கும் முன்னுக்கும் இழுத்து, மானிகளின் முகங்களிலிருந்த முட்களெனும் மூக்கை நோக்கிய வண்ணம் கடமையே கண்ணாக செலுத்திக்கொண்டிருந்தான். பயிற்சி அப்படி. என்னாலும் எட்டிப்பார்க்க முடிந்தது கட்டுப்பாட்டு அறையை. ”எரிபொருள்” எனக்குறியிட்ட மானியின் முள் எனை சில நொடி திடுக்கிட வைத்தது. ”பாதுகாப்பு” எனக்குறியிட்ட அளவிலிருந்து கீழே இருந்தது. நாம் சென்றடையும் இடம் வெகு தொலைவில் இல்லை என்பதால் சமாதானமடைந்தேன்.

காற்று அறையத்தொடங்கியது. பாதுகாப்பு இழைக்கண்ணாடி சன்னல் மூடியிருந்த போதும். முன்னரே கூறியிருந்தனர் ஓரளவு தூரத்திற்கு மேல் காற்று அவ்வளவாக இராது என்று. ஆனால் எனக்கெனவோ அப்படித்தோன்றவில்லை. மேகமும் சிறு பனிப்பொழிவும் இருந்தது. இந்தக்கால நிலை பயணத்திற்கு ஏற்றதல்ல எனவும் தோணியது.

வீட்டிலிருந்த அனைவரையும் நினைத்தேன். இன்னும் எத்தனை நாளாகுமோ அவர்களை மறுபடி சந்திக்க என நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். எனது இருக்கையைச் சுற்றி நோட்டமிட்டேன். எனக்கென சிறிய விளக்கு, பொருட்களை வைத்துகொள்ள தோலாலான சிறு பைகள்,ஒளித்திரையில் ஏதோ ஒரு படம்…ம்… வசதி தான்.. கடந்த காலங்களின் தூரங்கள் இப்போது சில மணித்துளிகளில். அறிவியலின் வளர்ச்சி வியப்படையச்செய்தது. வெளியே காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது.

மீண்டும் ஊர்தி குலுங்கியது. செலுத்துபவன் எனைப்பார்த்து சிரித்தான்.ஏளனம் எக்களித்தது.பாதுகாப்பிற்கென பிடித்துக்கொள்ள, பற்றவைப்பு செய்ததே தெரியாமல் வளைத்து வைக்கப்பட்டிருந்த எஃகிலான உருளைகளை பிடித்துக்கொள்ளாததால் இருக்கையை விட்டு கொஞ்சம் உயரச்சென்று திரும்பி இருக்கையை அடைந்தேன். இளிப்பு அதற்குத்தான்.

ஊர்தி முழுவதும் குளிர்பதனம் செய்யப்பட்டிருந்தபோதும், கட்டுப்பாட்டு அறையைத் தாண்டி உந்துபொறியின் வெப்பம் எனைச் சீண்டியது. குலுக்கலும், வெப்பமும் எனைப்படுத்துவது போல் தோன்றிற்று. பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பது என்குருதியில் ஊறியிருந்தது. தூரத்து நட்சத்திரங்கள் சிறிய வெளிச்சப்புள்ளிகளாக என்னோடு விரைந்து வந்தன. கவனத்தை அதில் செலுத்த முயன்று தோற்றுப்போனேன்.

கொடுக்கப்பட்டிருந்த தாதுக்கள் அடங்கிய குடிநீரை சிறுதுளியாக குடித்துவைத்தேன். இன்னும் எத்தனை தூரமோ தெரியவில்லை. எனது மின்னணுக்கடிகாரம் இரவு 11:17 என நேரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. கண்ணயர்வு தோன்றிற்று. ஊர்தியைச் செலுத்துபவன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே அவன் முன்னாலிருக்கும் இழைக்கண்ணாடியை சன்னமான துணியால் உள்புறம் துடைத்துவிட்டான்.

மலைப்பாங்கான பகுதியில் அந்தப்பேருந்து விரைந்து கொண்டிருந்தது.!

- செப்டம்பர் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு இழூ……த்து எதிருல இருந்த என்னோட குண்டைக் குறி பாத்து அடிச்சான் செல்வா. சில்லுப்பேந்து போச்சு என்குண்டுக்கு. குழிக்குண்டு வெளயாடிக்கிட்டிருந்தோம். செல்வாவுக்கு “ர” ...
மேலும் கதையை படிக்க...
அவசர அவசரமாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். கடிகாரம் மட்டும் ஆறு மணியை வெகு சாவகாசமாக நெருங்கிக்கொண்டிருந்தது. அவர்களின் அவசரத்திற்குக்காரணம் மழை. காலையிலேயே போக்கு காட்டிக்கொண்டிருந்தது. மத்தியானம் தரையிறங்கி, இப்போது மாலையில் விஸ்வரூபமெடுத்திருந்தது. என்னத்த மழ வரப்போகுதுன்னு நெனச்சு குடையை எடுக்காது வந்தது ...
மேலும் கதையை படிக்க...
'ஐயா இங்கயே இறக்கி வெச்சிரட்டுங்களா?' என்று கேட்டவாறு அந்தப்பழைய கால ஃப்ரேம் போட்ட ஒரு தாத்தாவின் படத்தை இறக்கினார். நான் அதை முன்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய வீடு காலி பண்ணி சொந்தமாகக் கட்டிய வீட்டில் குடிபுக அன்று அனைத்து ...
மேலும் கதையை படிக்க...
அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன். எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு ”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என மனைவியை ...
மேலும் கதையை படிக்க...
விட்டாச்சு லீவு
குடை
பெல்ஜியம் கண்ணாடி
ராக்கெட் கூரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)