பத்து வருடங்களில்

 

இலங்கை.1994.

சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது.
எத்தனையோ கஷ்டப்பட்டு லண்டனிலிருந்து புறப்பட்டு,இந்தியா வந்து,அடையாறிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும்போது, ‘தான் உண்மையாவே தனது வீட்டுக்குப் போகிறேனா’? ஏன்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

செல்வகுமார் 1984ம் ஆண்டுதை மாதம் இலங்கை சிங்கள அரசின் கொடுமை தாங்காங்காமல் இலங்தையை விட்ட ஓடியவன்.இன்று பத்து வருட இடை வெளியிலபின் தனது ஊருக்குப் போகிறான்.

விமானம் இலங்கையின் தரையில் இறங்கும்போது,அருகிலிருந்த கிழவர்,’ஏன் தம்பி, நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்?’ என்று நேரடியாகவே கேட்டு விட்டார். அவன் தன்னிடம் கேள்வி கேட்ட கிழவரை நேரடியாகப் பார்த்தான்.

அப்பா உயிரோடிருந்தால் இந்தக் கிழவன் மாதிரியிருபபாரா?;
கிழவனின் கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் யோசித்தான். கிழவன் அவனை ஏற இறங்கப் பார்த்தார். அவனின் கண்கள் மிகவும் சோகமாகவிருந்தது.வயது இருபத்தாறு இருக்குமா?

‘எனது மகன் உயிரோடிருந்தால் அவன் உன்வயதாகத்தானிருப்பான்’ கிழவரின் குரல் தழுதழுத்தது.
கிழவர் தன் மகனைச் சிங்கள இராணுவத்தினரமோ, அல்லது இந்திய இராணுவத்திடமோ அல்லது ஏதோ ஒரு தமிழ் இயக்கத்திடமோ பலி கொடுத்திருக்கலாம்.

இலங்கையை ஆண்ட வெள்ளையினத்தின அதிகாரக் காலனித்துவத்திடமிருந்து ஒரு உயிரைக்கூடப் பலி கொடுக்காமல் சுதந்திரம் பெற்றுக்கொண்ட இலங்கை,சுதந்திரத்தின்பின் எத்தனை இலட்சம் மக்களையிழந்து விட்டது?

விமானம் தரை தட்டிக்கொண்டிருந்தது.’ தம்பி நாங்கள் இனி இலங்கையில இருக்க முடியாதப்பா’ கிழவன் அழுதுவிட்டார்.
அனுதாபத்தடன் அவரைப் பார்ப்பதை விட அவனால் ஏதும் செய்ய முடியவில்லை.
‘ இலங்கையிலயிருந்து தப்பி ஓடிப்போய் இந்தியாவிலயும் இருக்க முடியல்ல. அங்கேயும் சந்தேகப்பார்க்கிறார்கள். இலங்கைத் தமிழர் எல்லாரிலயும் இந்தியருக்குக் கோபம். நானா ரஜிவ் காந்தியைக் கொலை செய்தன்?’ முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கியழுதார்.

அவன் மவுனமாகவிருந்தான். இலங்கையிற் தமிழராகப் பிறந்த குற்றத்தால் தமிழர்கள் படும் பாட்டை நினைத்துத் துக்கம் தொண்டையையடைத்தது.

சென்னையிலிருந்து பறக்கத்தொடங்கிய கொழும்பு நகரை இரவு எட்டு மணிக்கு வந்தடைந்தது.
இவன் லண்டனிலுருந்து வருவதுபற்றி யாருக்கும் தெரியாது. கொழும்பிலுள்ள ஒரு நண்பனுக்கு இந்தியாவிருந்து,நேற்று ஒரு தந்தி கொடுத்திருந்தான். அது அவனுக்குக் கிடைத்திருக்கும்.

விமானத்திலிருந்து பிரயாணிகள் அவசரமாக இறங்கினார்கள். இவன் மெல்லமாகத் தலையைத் தடவிக் கொண்டான்.மனம் படபடவென அடித்துக்கொண்டது.

ஊரை விட்ட ஓடும்போது கள்ளப் பாஸ்போர்ட்டிற்தான் ஓடினான். ஊருக்கு வரும்போதும் கள்ளப் பாஸ் போர்ட்டிற்தான் வருகிறான்.

கையிலிருப்பது பிரிட்டிஷ் பாஸ்போhட்,எத்தனையோ ஆயிரம் பவுட்ண்ஸ் கொடுத்து எடுததது பாஸ்போர்ட். லண்டன் ஹீத்ரோ உயார்போர்ட்டில் அவனை யாரும் சந்தேகிக்கவில்லையே. இங்கோ கொழும்பு எயார்போர்ட்டில் கஸ்டம் ஒவ்வீசர் அவனை மேலும் கீழும் பார்த்தார்.

‘ லண்டனில் என்ன செய்கிறாய்?’ கஸ்டம் ஒவ்வீசர் கூர்மையாகப் பார்த்தபடி இவனைக் கேள்வி கேட்டார்.
‘பிஸினெஸ் செய்துகொணடிருக்கிறேன்.’ பத்து வருட லண்டன் சீவியம் கற்றுக்கொடுத்த கம்பீரத்தைக் குரலில் வரவழைத்துக்கொண்டு சொன்னாலும் இருதயத்தின் படபடப்பைக் குறைத்துக் கொள்ள முடியவில்லை.

கஸ்டம் ஒவ்வீஸைத் தாண்டி வெளியே வந்ததும் இருட்டில் என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவனின் சினேகிதன் வந்திருக்கவில்லை. மனித நடமாட்டம் மிகவாகக் கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. கார்கள் ஒன்றிரண்டு நின்றிருந்தன. பலகார்களில் விமானம் பிரயாணிகள் நிறைந்தார்கள். அரச பஸ்சும் நிறைந்து வழிந்தது.

அவன் வெளியே வந்தான் ஒரு போலிசாh சிங்கள மொழியில் அவனிடம் ஏதோ கேட்டார்.
லண்டனால் வந்தவனுக்குச் சிங்களம் தெரியாது. அவன் கொழும்பிலிருந்தபோதும் சிங்களம் பேசவில்லை. சிங்களம் கற்றுக்கொள்ள மாட்டோம் என்ற தமிழர்களில் அவனும் ஒருத்தன்.

தமிழரைத் தேடித்தேடிக் கொலை செய்த சிங்கள இனவாதக்கூட்டத்தின் கூக்குரலை அடையாளம் காண எந்த விதமான மொழியும் தேவையில்லை.

ஓரு மொழி என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் சின்னம் என்றால்,இலங்கையின் நாகரிகத்தின் சின்னமாக எந்த வித மொழியுமில்லை.

‘தனியார் வண்டியில் ஏறம்போது கவனமாக ஏறவும்’ அரைகுறைத் தமிழில் அவனுக்கு உச்சரித்து விட்டு அந்த போலிசார் போய்விட்டார்.

இவன் தயக்கத்தடன நடந்தான்.இவனுடன் விமானத்தில் வந்த முதியவர் இவனை அவசரமாகக்கூப்பிட்டார்.
அவர் மிகவும் பதற்றமாகக் காணப் பட்டார்.

‘தம்பி கெதியாய் வாங்கோ,கொழும்புக்குக் கெதியாய்ப் போய்ச் சோராமல் இஞ்ச நிண்டால் பிரச்சினை;.’

கிழவர் துரிதப் படுத்தினார்.

கிழவருக்காக வந்திருந்த வாகனத்தில் இவனையும்; ஏற்றிக்கொண்டார்கள்.

‘தம்பி நீங்கள் இலங்கைக்கு வருவது மிக மிக ஆபத்தான விடயம் என்று தெரியாத ஆள்போல இருக்கு’ கிழவர் பட படவென்று சொன்னார்.

‘ பத்து வருடங்களாக எனது தாயைப் பார்க்கவில்லை.’இவனால் அதற்கு மேற் பேச முடியவில்லை. தொண்டையடைத்தது. பீரிட்டு வரும் அழுகையை அடக்கிக் கொண்டான்.

கண்ணெதிரே தனது இரு மகன்களும் இராணுவத்தால் கொல்லப்பட்ட கொடுமையைத் தாங்காமல் வந்த நோய்களால் அவன் தாய் படுத்த படுக்கையானாள். படுக்கையிற் தவிக்கும் தாயைப் பார்க்க வரமுடியாத கொடுமையை எத்தனை தரம் நினைத்துத்துக்கப் படுவது?

அம்மா இப்போது இறந்து போயிருக்கலாம். அவனுக்கு வந்த கடிதம் வீட்டிலிருந்து பத்து நாட்களுக்கு முன் எழுதப் பட்டிருந்தது. அவன் அதற்கிடையில் பிரயாண விடயங்களை எடுக்கப் பட்டபாடு சொல்லி அடங்காது.

அவன் லண்டனில் ஒரு இலங்கைத் தமிழ் அகதி.
பாஸ்போர்ட்டை விமான நிலையத்திற் கிழித்துப்போட்டு விட்டு,பிரிட்டனில் வாழ, அகதித் தஞ்சம் கேட்ட இலங்கைத் தமிழனில் ஒருத்தன்.

‘அம்மா உயிரோடு இருக்கவேண்டும்’ இப்படி அவன் பிரார்த்திப்பது ஆயிரமாவது தரமாக இருக்கவேண்டும்.

‘ ‘அம்மா எப்படி இருப்பாள்? அவள் தலை நரைத்து பற்கள் விழுந்து….’ அவன் அம்மாவைப் பற்றி யோசித்தான். ஆவன் லண்டனில் உழைத்தனுப்பிய பணத்தில் அவள் அவனது இரண்டு தம்பிகளை இந்தியாவுக்கு அனுப்பினாள்.

ஆனால்,இலங்கைக்கு இந்தியாவின் அமைதிப் படை 1987ல் போயிருருந்தபோது,அங்கு அமைதி வந்ததாகத் திரும்பிப் போனார்கள். ஆனால் அங்கு அமைதியும் வரவில்i தமிழருக்கு நிம்மதியும் வரவில்லை. அவனின் இரு தம்பிகளும் அடுத்த ஆண்டுகளில் தொடர்ந்த பிரச்சினைகளால், இலங்கை இராணுவத்தால்ப் படுகொலை செய்யப் பட்டார்கள்.

‘தம்பி கொழுப்பில எங்க இறங்க வேணும்?’ சாரதி கேட்டார். அவன் திடுக்கிட்டுத் தன் நினைவுகளிலிருந்து தனது சுயநினைவுக்கு வந்தான்.
அவன் தனது நண்பனின் விலாசத்தைச் சொன்னான்.

வண்டி அந்த விலாசத்து வீட்டு முன்னால் நின்றது.
அவன் இறங்கிப்போய்க் கதவைத் தட்டினான். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை.
சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்தான்.

‘தம்பி அந்த வீட்டில யாருமில்லை,இரண்டு நாளைக்கு முன் ஊருக்குப் போய்விட்டார்கள்.’

கொழும்பில் அரச இராணுவத்தால் தமிழர்களைப் பிடிக்கும் வேட்டை நடக்கிறது.அவர்கள் அதிலிருந்து தப்ப தலைநகரை விட்டுப்போய்விட்டார்களா?
‘தம்பி என்ன செய்யப் போகிறாய்;?’
கிழவர் பரிதாபமாகக் கேட்டார்.

‘என்ன செய்வதென்றே தெரியவில்i’ அவன் குழப்பத்தடன் வானத்தைப் பார்த்தான்.
‘என்னுடன் லாட்ஜில வந்து நிற்கலாமே’ என்ற கிழவின் யோசனையை ஏற்பதை விட வேறோரு வழியும் தெரியவில்லை. அவருடன் சென்றான்.

அடுத்த நாள் பஸ் ஸராண்டுக்குப்போகும்போது பத்து வருடங்கள் காணாத கொழும்பு நகரை எடைபோட்டான்.
எத்தனையோ மாற்றங்கள். வான் அளாவிய கட்டடங்கள்.அதைத் தவிர வேறென்ன ‘உயர்ந்திருக்கிது’?

பஸ்சில் போகும்போது எத்தனையோ இடங்களிற் சோதனை நடந்தது. கொழும்பிலிருந்து ஊருக்குப் போகும் வரையும் சிங்கள இனவாதிகளுக்குப் பயப்படவேண்டியிருந்தது. பல தடவைகளில் பஸ்களை மறித்துத் தமிழர்களை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள்.

ஓரு காலத்தில சினேகிதமாகிய இனங்கள் அரசியலவாதிகளால் தவறாக நடத்தப்பட்டு ஒருத்தரை வெட்டிச் சாய்த்துக் கொள்கிறார்கள். முக்கியமாக,இதுவரை மிகவும் அன்னியோனினியமாயிருந்த முஸ்லிம் சமுதாயமும் இப்போது தமிழரில் ஆத்திரமாகவிருக்கிறது. இருக்காதா கோபம்?

யாழ்ப்பாண்திலிருந்த முஸ்லிம் மக்கள் இருபத்திநான்கு மணித்தியாலங்களில் அடித்துத் துரத்தப்பட்ட அனாதைகளானதை அவர்கள் மறக்க முடியுமா?

‘என்னுடைய சினேகிதன் ரஹிமும் என்னில்க்; கோபமாவிருப்பானா? என்னுடன் பேசுவதைத் தவிர்ப்பானா,’ அவன் தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.

இலங்கையில் மனிதத் தன்மையே மடிந்து விட்டதா? மனதாபிமானம் எங்கே ஓடித் தொலைந்தது?

ஊரில் அவனை யாருமே எதிர்பார்க்கவில்லை.பாட்டி பதறியழுதுவிட்டாள்.இவனின் தாய் இறந்து ஏழநாட்களாகி விட்டதாம். இவன் பாட்டியின் தோளில் முகம் புதை;து விம்மினான்.
பாட்டிக்கு எழுபது வயது. அம்மாவுக்கு ஐம்பது வயது. தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளைத்தாங்காமல் அவள் போய்விட்டாள்.

அவனால் அவன் அப்பா இறந்தபோது சொந்தங்களோடு சேர்ந்திருந்து துயர் தீர அழமுடியவில்லை.
அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட தம்பிகளுக்காக அழமுடியவில்லை. அவன் அப்போது லண்டனிலிருந்தான். இனறு அம்மா இறந்து ஏழு நாடகள் கழிந்த பின்ற சொந்தங்களோடு சேர்ந்து விம்முகிறான்.

பெரிய தங்கை ஓடிவந்து அவனைக்கட்டிப் பிடித்துக் கதறினாள்.அவள் கணவன் ஏதோ ஒரு தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு எதிரான இன்னொரு தமிழ் இயக்கத்தினர் அவளின் கணவரை ஒவ்வொரு உறுப்பாக வெட்டிச் சீர்குலைந்த உடம்பைச் சாக்கில் போட்டுக் கொண்டுவந்து அவள் கையிற் கொடுத்தார்களாம்.

‘நீ என் இங்கு வந்தாய்?’ கிழவி தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்கதறியது.
‘நாங்கள் இழந்தது போதாதா,உன்னையும் பறிகொடுக்க முடியாதய்யா’
கிழவி அழுது புரண்டாள்

ஊர் திரண்டு வந்து அவளுடன் சேர்ந்தழுதது.
ஓவ்வொருவரும் தங்கள் இழப்புகiளுயம் சோகக் கதைகளையும் சொல்லி அழுதார்கள்.

மதிய நேரம் வந்ததும் ஊரிற் கண்டபாட்டுக்குத் திரியும் சொறிநாய்களையும்,முதியவர்களையும் தவிர தெருக்களில் யாரையும் காணவில்லை.

இந்த நேரத்தில் சிலவேளை இராணுவத்தினர் ரோந்து வருவார்களாம்,அல்லது தமிழ் இயக்கப் பெடியன்கள் வருவாhர்களாம்!
ஊராhருக்கு தங்கள் ஊருக்குள் யார் வந்தாலும் பயம்தானாம்.
இந்த ஊரிற்தான் இப்படியா?
யாரிடம் கேட்பது?

அடுத்த ஊரில் ரஹிம் இருப்பான்,போய்ப் பார்க்கலாமா?.
அவன் தன் கால் போன பக்கம் நடந்தான்.
வுழமையாக ஊரைச் சுற்றிப் பரந்து கிடக்கும் பச்சைப் பசேல் என்ற வயல்கள் கருகிக் கிடந்தன.
தழிழீழ விடுதலைப் புலிகளை இந்த ஊரார் மறைத்து வைத்துப் பாதுகாப்பதாக, ஊரை முற்றுகையிட்ட இராணுவம் ‘புலிகளைப’ பிடிக்க முடியாத ஆத்திரத்தில் மக்களின் வாழ்வாதாரமான வயல்களை அக்கினி பகவானுக்கு அர்ப்பணமாக்கினார்களாம்.

ஓரு கொஞ்ச நேரத்தில் இவனின் இரண்டாவது தங்கை அவனைத் தேடி ஓடிவந்தாள்.
இரண்டாவது தங்கையின் கணவன் தனது உயிரைக் காப்பாற்ற ஊரை விட்டோடியவன் இப்போது எங்கேயிருக்கிறான் என்றே தெரியாது. அவன் இவளது மாங்கல்ய புண்ணியத்தில் எங்கோ உயிரோடு இருப்பாதாகவும்,அவன் இன்றோ நாளையோ அவளிடம் வருவான் என்ற கற்பனையில் பொட்டும் பூவுமாக வலம் வருகிறாள்.

அவளுடன் ஓடிவந்த அவளது மகன்,ஏழுவயது பையன் லண்டனிலிருந்து வந்த மாமாவை வெறித்துப் பார்க்கிறான். தனக்குப் பத்து வயது வந்ததும் தனது தாயைக் காப்பாற்றத் துப்பாக்கி தூக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

தான் ஓடிவிளையாடிய வயல்கள் எரிந்து கருகிக்கிடப்பதை பெருமூச்சுடன் வெறித்துப் பார்க்கும் லண்டன் மாமா பையனைப் பார்த்துப் பெருமூசுச்சு விடுகிறான்.
இந்தப் பேரப் பையனைத் துக்கி விளையாட அவனுக்குத் தாத்தா பாட்டி இல்லாமற் போய்விட்டார்கள். இந்த வயதில் நான் எத்தனை சந்தோசமாகவிருந்தேன்? அவன் யோசிக்கிறான்.

தனது ஏழு வயது மருமகன் தனக்குப் பத்து வயது வந்ததும் தாயைக் காப்பாற்றத் துப்பாக்கி தூக்கப் போகிறேன் என்று சொல்லிய வசனங்கள் அவனை உலுக்கி விட்டது. பத்து வருடங்களில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையிற்தான் எத்தனை மாற்றம்?

தங்கள் யாரோ ஒருத்தரையாவது அநியாயமாக இழக்காத தமிழ்க் குடும்பங்களே இலங்கையில் இல்லையா? ஓரு இனத்தின் சரித்திரத்தில் எத்தனை திருப்பம்?

அன்றிரவு அவன் சரியாகத் தூங்கவில்லை. ஊரில் பயங்கர அமைதி.
நடுச்சாமத்தில் பயங்கர சப்தத்துடன் ஒரு வாகனம் வந்து நின்றது. ‘இயக்கப் பொடியன்கள் வந்திருக்கினம்’ பாட்டி முணுமுணுத்தாள். ஊரே விழித்துக்கொண்டது.ஊர் மக்கள் இலங்கை இராணுவத்திற்கு நடுங்கியதுபோல் வந்திறங்கிய ‘இயக்கத்தினரையும்’ பார்த்து நடுங்கியது.

இவன் கட்டிலில் எழும்பி உட்கார்ந்தான். அரை குறை வெளிச்சத்தில், துப்பாக்கியுடன் ஒருத்தன் இவன் அருகில் வந்து நின்றான்.அண்மையில் வந்ததும், துப்பாக்கி தூக்கிக்குப் பதின்மூன்று வயதுக்கு மேலிருக்காது என்று லண்டன்காரன் மட்டுக்கட்டினான்.இன்னும் சிலவருடங்களில் அவனின் மருமகனும் இந்தத் தோற்றத்தில் வருவானா?

”உன்ர பேரென்ன?; துப்பாக்கி தூக்கியின் குரலில் ஒருமரியாதையுமில்லை. துப்பாக்கி கொடுத்த வீரம் அவன் குரலில் பிரதி பலித்தது.
‘ ஊரில் நடக்கும் எதையும் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்’ பாட்டி சொன்னது ஞாபகம் வருகிறது.
‘ டேய் உமது பெயர் என்ன?’ இன்னொருத்தன் இவனின் முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டினான்.
‘ செல்வகுமார்’ லண்டன் பிரயாணியின் குரல் துப்பாக்கியின்முன் தடுமாறியது.
‘நீதானா லண்டனில இருந்து வந்த ஆள்?

இவனைப் பற்றி ‘எல்லாம’; தெரிந்து கொண்டும் ஏன் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள்.
‘நீ எங்கட இயக்கத்தை ஆதரிக்கிறாய் என்று நம்புகிறோம்’
இவனிடமிருந்து தங்களுக்குச் சார்பான மறுமொழி வரும் என்ற எதிர்பார்ப்பு வந்திருந்த தீவிரவாதியின்; குரலில் இழைந்திருந்தது.

செல்வகுமாரின் மௌனம் அவர்களுகக்கு எரிச்சலையுண்டாக்கியிருக்க வேண்டும். அவர்கள் செல்வகுமாரின் தங்கையை அழைத்தார்கள்.

அவள் நடுச்சாமத்தில் வந்திருந்த பிணம் தின்னிப் பேய்களைப் பயந்து பார்ப்பதுபோல அவர்களைப் பார்த்தாள்.

‘ உன்ர தமயனுக்கு எங்களப் பற்றிச் சொல், நாளைக்கு வருவோம்’
அவள் தலையாட்டினாள். அவர்கள் போய்விட்டார்கள்.
‘ அண்ணா இந்த ஊருக்கு நீ ஏன் திரும்பி வந்தாய்?’
தங்கை கேவிக்கேவி அழுதாள்.

‘என்னை இவர்கள் இங்கு நடப்பது ஒன்றும் தெரியாமல் வந்து அகப்பட்டேன் என்று பரிதாபமாகப் பார்க்கிறார்களா அல்லது தான் வந்ததால் தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகிறார்களா?’ அவனுக்குப் புரியவில்லை.

‘அண்ணூ இது பேய்கள் ஆட்சி செய்யும் இடம்’ வானத்தில் முழநிலா, தங்கை இவனின் கட்டிலடியிலிருந்து விம்மிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அப்படியே அம்மாவை உரித்து வைத்த முகம். அம்மாவே தனக்க முன்னாலிருந்து அழுவதுnபோலிருந்தது.

அவன் தனது அம்மாவை நினைத்துக்கொண்டான்.

‘தங்கச்சி, அம்மா சாகும்போத என்ன சொன்னா’, தங்கை இவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
‘ஏன் பேசாமலிருக்கிறாய்?’ அவன் இலங்கையைவிட்டுப் போகும்போது அவளுக்குப் பதினான்கு வயது. அப்போதெல்லாம் பயமறியாத் தனத்தில் எல்லோருடனும் வெடுக் வெடுக் என்று பேசுவாள். ஓரு இடத்தில் இருக்காமல் துர துரவென்று ஏதோ செய்து கொண்டிருப்பாள்.

கணவனையிழந்த துயரில் அவள் இப்போது யாருடனும் சரியாகப் பேசவதோ கிடையாது.
சில நிமிடங்களின்பின் அவள், தமயன் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொன்னாள்.

‘ எக்காரணம் கொண்டும் உன்னை இலங்கைக்கு; கூப்பிடவேண்டாம் என்று அம்மா சொன்னா’சொல்லும்போது அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

‘ தமிழ் ஈழம் கிடைத்தபின்னும் நான் வரக்கூடாதா?’
அவன் கிண்டலாகக் கேட்கிறானா? அவள் தமயனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
புpன்னர் வேதனையுடன் சிரித்தாள்

‘ஏன் சரிக்கிறாய்?’
‘அண்ணா கனவுகள் மிகவும் இனிமையானவை.தர்மங்கள் அழிந்த பின் அழிக்கப் பட்டபின் என்ன நடந்தாலும் என்ன பிரயோசனம்?’
அவள் சலிப்புடன் சொன்னாள்.

அடுத்த நாட்காலை தங்கை இவனுக்குச் செய்த இடியப்பமும் சம்பலும் வாய்க்கு எடுபடவில்லை. தெருவுக்கு வந்தான்.

காலைநேர ரோந்துக்கு வரும் இராணுவ வாகனத்தின் அதிரொலி கேட்டு, வாலைச்சுருட்டிப் படுத்திருந்த சொறி நாய்களும் குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொண்டிருந்த கோழிகளும் மறைவிடங்கள்தெடி ஓட்டம் பிடித்தன.

‘அண்ணா தெருவில் நிற்காதே’ அவிழும் தன் கொண்டையைக் கட்டியபடி தங்கை ஓடிவந்தாள்.
ஊருக்குள் புதிதாக யாரோ வந்திருப்பதாக இராணுவத்திற்குத் தெரிந்தால் அவர்கள் விசாரணை என்ற பெயரில் வீட்டுக்குள் வந்து அமர்க்களம் செய்வார்கள் என்ற பயத்தில் செல்வகுமாரைக் கோழிக் கூட்டுக்குள் மறைத்து வைத்தார்கள்.

‘இந்த வீட்டில் ஒரு வளர்ந்த ஆண் இருப்புத தெரிந்தால்….’ தங்கைக்கு மேலே பேச முடியாமல் வாய் உலர்ந்து விட்டது.
ஆண்களைத் தேடிவரும் சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்களை என்ன செய்வார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதை அவனுக்கு அவர்கள் வாயால் சொல்லத் தேவையில்லை. அவர்களின் பதற்றத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

இராணுவத்தைத் தூரத்தில் கண்ட பாட்டி பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள்.
இவனை ஓடச் சொல்லிக் கெஞ்சினாள்.
அவன் குற்ற உணர்வில் வெதும்பினான். இந்தக் கொடுமைகளை என் குடும்பம் நாளாந்தம் அனுபவிக்க நான் மட்டும் லண்டனில் பாதுகாப்பாக இருப்பதா?
இன்னும் சில வருடங்களில் இவனின் மருமகனும் இராணுவத்திடம் அகப்படலாம்.

‘அண்ணா பணக்காரர்கள் வெளியே போகிறார்கள், பதவியாசையும் ஆயுத வெறியும் பிடித்தவர்கள் பலம் பெற்றுத் திரிகிறார்கள்.ஓட முடிந்த ஏழைத் தமிழர் இந்தியாவுக்குப் போகிறார்கள். நாங்கள் எங்கே போவம்?’
இராணுவத்திற்குப் பயந்தோடும்போது தமயனிடம் கேள்வி கேட்கிறாள் தங்கை.

பாட்டி தலையிலடித்துக் கொண்டழுதாள்.’ ஏன் இலங்கையில தமிழர்களாகப் பிறந்தோம்?’
பாட்டி வானத்தை நோக்கிக கைகூப்பிக் கேள்வி கேட்டாள்.
இராணுவ வாகனம் ஊரகை; கடந்து போகும் சத்தம் கேட்டது.
இவனை யாரோ தேடி வந்திருப்பதாக இவனின் மருமகன் வந்து சொன்னான்.
பாட்டி முந்தானையை முடிந்தபடி எட்டிப் பார்த்தாள்.
ரஹிம்!

செல்வராசாவும் அவனும் பத்து வயதிலிருந்து பதினாறு வயது வரைக்கும் அடுத்த நகரத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரின் வேற்று மதங்களும் இவர்களின் சினேகிதத்திற்து; தடையாக ஒரு நாளும் இருந்ததில்லை.

நீண்ட காலத்தின்பின் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் முக மலர்ச்சியுடன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தார்கள். அடுத்ததாக,
‘செல்வராசா, நீ இந்தப் பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கேக்க இஞ்ச வந்திருக்கக் கூடாது’ ரஹீம் முணுமுணத்தான். நண்பனைக் கண்ட சந்தோசத்தைத் தாண்டிய பயம் குரலில் ஒலித்தது.

‘என்ன ரஹீம் ஏன் இப்படி எல்லாம் பயங்கரமாகவிருக்கிறது@ செல்வராசா தனது நண்பனைக்கேட்டான். செல்வராசாவின் கேள்விக்கு ரஹிம்; பதில் சொல்லவில்லை.

‘தமிழர்கள் மட்டும்தான் இலங்கையிற் கஷ்டப்படுகிறார்கள் என்று நினைக்கிறாயா?’ ரஹீமின் குரலிற் தோய்ந்திருந்த வேதனைக்குக் காரணமிருந்தது. அவனின் சொந்தக்காரர்கள், 1990ல் யாழ்ப்பாண்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் அகதிகளாகத் துரத்தப் பட்டிருந்தார்கள்.

‘தமிழருக்குத் தமிழ் ஈழம் வரமுதலே மற்ற இனத்தை இப்படி நடத்துவார்கள,; தங்களுக்குத் தமிழ் ஈழம் கிடைத்தபின் எப்படி நடந்து கொள்வார்கள்? ஏன்பது தெரியவில்லையா? தென்னிலங்கையில், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்த கிட்டத்தட்ட அறுபதினாயிரம் சிங்கள் இளைஞர்கள் 87-89 வரைக்கும் அரச படைகளாற் கொலை செய்யப்பட்டார்களே அவர்களின் உயிரும் உயிர்தானே’. ரஹீம் வந்ததும் வராதுமாகக் கொலைகள் பற்றிப் பேசுவது செல்வராசாவுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.

‘ நீ இங்கு வந்திருகக்கூடாது செல்வராசா’ ரஹிம் வாஞசையுடன் தனது நண்பனுக்குச் சொன்னான்.அவன் குரவிற் கடினம்.
‘ நான் எனது தாயின் சுகவீpனத்தைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன் ரஹீம்’ செல்வராசா அழாத குறையாகச் சொன்னான்.
‘செல்வராசா, இப்போது இலங்கையில் நடக்கும் மரணங்கள் சிலவேளை அர்த்மற்றவையாகப் போய்விட்டன’ ரஹீம் வானத்தைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சுடன் சொன்னான்.

வானம் இருணடுட கொண்டு வந்தது.
‘ செல்வராசா, திரும்பிப்போ ..இந்த நிமிடமே திரும்பிப்போ. இன்னும் கொஞ்ச நேரத்தில் கொழும்புக்குத் தேங்காய்கள் ஏற்றிக் கொண்டு போகும் லொறியில் நீ திரும்பிப் போக நான் ஒழுங்கு செய்து தாறன். உடனே வெளிக்கிடு’ ரஹீமினின் குரலில் அவசரம்,’
‘ நான் வந்து இரண்டு நாட்கள்கூட என் குடும்பத்தோட நிற்கவில்லை’ செல்வராசா அழாக்குறையாகச் சொன்னான்.

தெருவில் ஏதோ சப்தம் கேட்டது.
தெருவிற் சில இளைஞர்கள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களல்ல என்று தெரிந்தது. இளைஞர்கள் எங்கேயோ இருந்து வந்திருக்கு வேண்டும்.

யாரையோ ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
செல்வராசா நண்பனைப் பார்த்தான்.

‘செல்வராசா, நான் இந்த ஊருக்கு வந்திருகக்கூடாது. கொஞ்ச காலத்துக்கு முன்தான் எங்கள் மசூதிக்குள் நுழைந்து பிரார்த்திக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைத் தமிழ்த் தீரவாதிகள் துப்பாக்கியால்ப் படுகொலை செய்தார்கள். அதை மறக்க முடியுமா? இப்போது யாருக்குமே எங்கேயும் ஆபத்திருக்கிறது’ ரஹீம் விரக்தியுடன் சொன்னான்.

தெரு முனைவில் விசாரணை தொடர்ந்து கொண்டிருந்தது.
யாரோ ஒருத்தனை ( ஒரு தமிழனை) ஒற்றன் என்று விசாரிக்கிறார்களாம்.
அதன் பின்னர் ஊரே பெரிய கலக்கத்திற் தவித்தது.

தங்களுக்கு ஒத்துப் போவாதவர்களை,’ ஒற்றர்கள்’ என்று சந்தேகிக்க வெளிக்கிட்டால் தமிழர்களில்; எஞ்சியிருப்பவர்கள் எத்தனைபேர்?

அன்று இரவு அந்த ‘ ஒற்றனை’ ஒரு மரத்திற் கட்டினார்கள்.
ஊரிலுள்ளு அத்தனை தமிழர்களையம் ‘பார்வையாளர்களாக’ அவ்விடம் வந்து சேரும்படி உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

குழந்தைகள்,இளம்பெண்கள், வயதுபோனோர், என்ற பேதமின்றி அத்தனைபேரும் சமுகமளிக்கக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது..
மரத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்த ‘ஒற்றன்’ தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று பரிதாபமாக அழுதான்.

செல்வராசாவுக்கு 1983ல், சிங்கள இன வெறியர்கள் தமிழர்களைக் கொழும்புத் தெருக்களில் வைத்து ஈவிரக்கமில்லாமல் உயிரோடு எரித்ததும், தாறுமாறாக மிருகங்கள் மாதிரி வெட்டிப் போட்டதும் ஞாபகம் வந்தது. சிங்கள இனத்தின் மனித வேட்டைக்கும், தங்களின் ‘தலைமையைத் தக்க வைக்க நடக்கும் இந்த வெறித் தனத்துக்கும் என்ன வித்தியாசம்?

பத்து வருடங்களில், தமிழனைத் தமிழனே மனித வேட்டையாடும் அளவுக்கு எப்படி மாறினான்?

அடுத்த நாள் அந்தத் தமிழ் ‘ஒற்றனின்’ குருதி தமிழ்த் தெருவில் உறைந்து கோலம் போட்டிருந்தது.

(யாவும் கற்பனையே)

(தினமணி இதழில் ஏப்ரல்9,1994ல் வெளியானது) 

தொடர்புடைய சிறுகதைகள்
(வாசர்களின் கவனத்திற்கு, கதையில் சில பகுதிகள் 18+ வயதிற்கு மேற்பட்டவர்க்கு மட்டுமே) பாவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன் கால்களைக் கட்டி,மாடு அசையமுடியாமற் பண்ணியிருக்கிறார்களா? அல்லது,கழுத்தில் கயிறு மாட்டி,மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா? அந்த மாட்டுக்குச் சொந்தக்காரர்,தன் உரிமையின் பிரதிபலிப்பை நிலை நாட்ட வாயில்லாப் பிராணிக்குக் குறி ...
மேலும் கதையை படிக்க...
இங்கிலாந்து-2008 கடந்த சில நாட்களாகப் பெருங்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.பக்கத்து வீட்டில் பிரமாண்டமாகக் கிளைவிட்டு வளர்ந்து நிற்கும் ஒரு பெரிய மரம், காற்றின் வேகத்தில் வேரோடு பிடுங்கப்படும்போல் ஆட்டம் போடுகிறது. மாதவனின்,தோட்டத்தில் வளர்ந்து கிடக்கும் செடிகளும் கொடிகளும் அடங்காத காற்றுக்கு நின்று பிடிக்க முடியாமல் அல்லாடுகின்றன. ...
மேலும் கதையை படிக்க...
“மத்தளங்கள் கொட்டுங்கள், மந்திரங்கள் சொல்லுங்கள். பெட்டை மாட்டைக் கொண்டுவந்து தாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை. ஆழம் காணமுடியாத சோகம் நிழலாடியது. மாமியார் தர்ம சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள். மாமிக்கு வயது எழுபது ஆகப்போகிறது. அவளுக்கு, அதுதான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
'எது சரி எது பிழை என்பது யாரால்,என்ன விடயம் எப்படிப் பார்க்கப் படுகிறது என்பதைப்பொறுத்திருக்கிறது' எனது நண்பன் என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனின் முகத்தை நான் பார்க்கவில்லை.அவன் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களை காதுகள் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க,எனது பார்வை, ஜன்னலுக்கு வெளியில்,லண்டன் தெருவில் ...
மேலும் கதையை படிக்க...
முதலிரவுக்கு அடுத்தநாள்
அந்தப் பச்சை வீடு
மஞ்சுளா
டார்லிங்
கனவுகள் இனிமையானவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)