பத்து ரூபாய் நோட்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 7,800 
 

உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும் தெரியக் கூடாது!” என்றார்.

நான் ஏதோ உளவு ஸ்தாபனத்தில் இருப்பதாக நினைக்-காதீர்கள். நான் வேலை பார்ப்பது, பெங்களூர் விவஸ்தை இல்லாமல் அனுமதித்துக்கொண்டு இருக்கும் அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டும் ரியல் எஸ்டேட் கம்-பெனி ஒன்றில். 30 மாடி, 40 மாடி என்று ஒருவர் தலை மேல் ஒருவராகக் குடியமர்த்தி, அந்தரத்தில் கான்-கிரீட் கனவை விற்கும் நிறுவனம். அந்த நிறுவனத்தில் இருக்-கும் உறவின உயரதிகாரியின் ‘நம்பிக்கையான நாண-யமான ஆள்’ என்கிற சிபாரிசில் இந்த வேலை கிடைத்தது.

‘என்னைப் போன்ற விசுவாசமான, நம்பிக்கையான ஊழியர்களை நம்பித்தான் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன’ என்று கண்களில் பொய்யுடன் சொல்லும்போதே, என்னவோ அத்துவான காரியம் செய்யத்தான் இருக்கும் என்று கணித்தேன்.

நிலம் வாங்க, அதிகாரிகளைக் கவனிக்க, அப்ரூவல் பெற என்று கிட்டத்தட்ட எல்லா காரியங்களுக்கும் கணக்-கில் வராத பணம் தேவைப்படுகிறது. இதன் டாலர் மூலம், துபாய், ஹாங்காங் போன்ற பணம் மரத்துப்-போன நாடுகள். அங்கே உள்ளூர் பணம் கொடுத்து இந்தி-யா-வில் ரூபாய் பட்டுவாடா செய்யும் ரிசர்வ் பேங்குக்கு இணையான ஹவாலா அமைப்பு இருப்பது, சாதுவாக ஆபீஸ் போய் திரும்பி வந்து டி.வி. பார்க்கும் நம் அநேகருக்குத் தெரியாது. இது நிற்க வேண்டு-மென்-றால், இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் என்கிற நாணய மதிப்பு வர வேண்டும் அல்லது இந்தியர்கள் எல்லோரும் யோக்கியஸ்தர்களாக மாற வேண்டும். இரண்டுக்குமே இந்த நூற்றாண்டில் வாய்ப்-பில்லை என்பதால் இந்த பணக் கடத்தலை நம்பி எங்கள் செயல்பாடே இருக்கிறது. அன்றைக்கு நான் சேகரிக்க வேண்டியது ஒரு லட்சம் டாலருக்கு இணை-யான ரூபாய்கள். அந்தக் கணக்கை நான் மன கால்-கு-லேட்டரில் போட்டுக் கணிக்கும்போது ஒவ்வொரு பூஜ்யத்துக்கும் இதயத் துடிப்பு ஸ்டீரியோவில் கேட்டது.

வேலைக்குப் புதுசு என்பதால் என் உயரதி-காரியும் என்னைப் போலவே டென்ஷனாக இருந்தார். கடவுள் மோசஸ§க்குச் சொன்னது போல எனக்கு 10 கட்டளைகள் தந்தார். “தனியாப் போகாதே. டை போட்டுக்கிட்டு ஆபீஸ் களை வேணாம். யாரு-கிட்ட-யும் அநாவசியமாப் பேசாதே. (சி.ஐ.டி. போலீஸ் மஃப்டியில் உலவுவார்கள்.) ஆட்டோ வேண்டாம். விசிட்டிங் கார்டு எல்லாத்தையும் வெச்சுட்டுப் போ (அகப்பட்டா நீதான். கம்பெனி இல்லை.) மெட்ராஸ்-காரங்கன்னு தெரிய வேணாம். (காவிரியில் தண்ணி விடாத நேரம். ) எண்ணிப் பாத்து வாங்கு. ஒன்பது மணிக்கு மேலே அங்கே உலவாதே- (வழிப்பறி திருட்டு.) பணத்தை வாங்கிக்கிட்டு மூத்திரம் வந்தாக்கூட அடக்-கிக்கிட்டு முதல் வேலையா ஆபீஸ§க்கு வா!” எல்லாம் சொல்லி பீதி ஏற்றி அனுப்பிவைத்தார்.

இந்தப் பணமாற்றத்துக்கு ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்ற நேர்த்தியான வியாபார முறை இருக்கிறது. என்னி-ட-மிருக்கும் ஒரு 10 ரூபாய் நோட்டின் எண்ணை எங்கள் துபாய் கிளை, அவர்கள் தரப்பு ஆளிடம் சொல்லும். அதுதான் சங்கேத எண். துபாய் பார்ட்டி, பலான ஆள், பலான பத்து ரூபாய் நோட்டுடன் வந்தால், பணம் பட்டு-வாடா செய்யச் சொல்லி அவரின் இந்திய சகாவுக்குத் தகவல் அனுப்புவார். நான் பெங்களூரில் அந்தக் குறிப்-பிட்ட ரூபாய் நோட்டை அவர் சகா விடம் காட்டினால், டாலருக்கு இணையான ரூபாய்கள் கொடுக்-கப்படும். ஏஎடிம் மிஷினில் காசு எடுப்-பதைவிட எளிதாகப் பணம் கடத்த ஏற்பாடு செய்-யப்பட்ட அமைப்பு.

கதிரேசன் என்பவர் பெயர், அடையாளம், அலைபேசி எண் கொடுக்கப்பட்டு, நானும் என் துணைக்கு வந்த ரங்க-னும், மாட்டினால் எத்தனை வருஷம் ஜெயில் என்று யோசித்தபடி படபடப்பாக காரில் ஏறினோம். தெருவோரம் சிறுநீர் கழிப்பது, ரோட்டில் குப்பை போடுவது, நாடார் கடையில் பபிள்கம் திருடுவது என்று எந்த சில்லறைக் குற்றங்களும் செய்து பழகி இராத என் 32 வயது அனுபவத்தில், முதல் முதலாக அலுவலகக் காரியம் தொடர்பாக ஒரு தேசத் துரோகம் செய்யப்போவது குறித்துப் பயமாக இருந்தது.

சம்பவம் நடக்கப்போகும் ‘சிக்பேட்’ போக ஏழே கால் ஆகிவிட்டது. ‘ரொம்ப லேட். கவுன்ட்டர் மூடியாச்சு’ என்று சொல்லிவிடுவாரோ என்று பயம். போன் போட்டோம். கதிரவன் சாவகாசமாக, “எட்டரை மணியில்ல சொன்னோம்” என்றார்.

சிக்பேட்டின் சிறிய சந்துகளில் எங்கள் கார் அதிகம் கவனம் ஈர்த்தது. பாதி தூரம் போனதும் கார்ப்பரேஷன் குதறிவைத்திருந்த சாலையில் அந்தச் சிறிய காரே ஒரு பெரிய போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி, சிக்-பேட்வாசிகளின் கோபத்தைத் தூண்டியது. எங்கிருந்தோ வந்த ஒரு போலீஸ்காரர் கண்ணாடியைத் தட்டி இறக்கி, ஓட்டுநரிடம் பேசத் துவங்கி பின் ஸீட்டில் உட்கார்ந்-திருந்த எங்களை விரோதமாகப் பார்த்தார். கன்னடத் தில் கோபித்தார். “லைசன்ஸ் எடு” என்றார். டிரைவர் முழித்-தான். “என்ன, ஆபீஸ் வண்டியா? எந்த ஆபீஸ்?” என்று அடுத்த கேள்வி கேட்டார். சடசடவென்று பத்து கட்ட-ளைகளில் பாதி கவிழ்ந்தன. “சார்! மெயின் ரோடு பக்கம் காரோட நிக்கறேன். செல்போன்ல கூப்புடுங்க, வர்றேன்” என்று டிரைவர் இடது பக்கம் திரும்பி விலகி–விட, அந்தப் பிரதேசத்தில் விண்வெளிக் கலத்தில் இருந்து இறங்கினவர்கள் மாதிரி நின்றோம். ரங்கன், “செட்டில் பண்ணி அனுப்புடா” என்று இடித்தான். பர்ஸை எடுத்து இருட்டில் நிரடி இரண்டு மூன்று நோட்-டுக்களை உருவி அவர் கையில் திணித்துவிட்டு நழுவினோம்.

‘சிக்பேட்’ பற்றி தெரியாத சென்னைவாசிகளுக்கு சிக்கன அறிமுகம்-. சிந்தாதிரிப்பேட்டையின் நாற்றம், திருவல்லிக்கேணியின் குப்பை, ரங்கநாதன் தெருவின் ஜன நெருக்கடி, அயனாவரத்தின் இருட்டு, பாரிஸ் கார்-னரின் சத்தம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஸ்தலம். சோம்பேறி பெங்களூர் சுறுசுறுப்பாக இருக்கும் ஒரே இடம். பொட்டி பொட்டியான கடைகளில் சகல வியாபாரங்களும் நடக்கும். தர்மராஜர் கோயில் பின்புறம் அவருக்குத் தெரியாமல் ஹவாலா. ரோட்டோர-மாக தோசையும், காரச் சட்னியும், ஒன் பை டு காபியும் பரிமாறும் கையடக்க உணவகம், மாராப்புச் சேலை விலக்கி வெற்றிலை மென்றபடி கதவோரம் சாய்ந்த சக்குவும் சுசீலாக்களுமாய்.–.. சிக்பேட்.

ஒரே இடத்தில் நின்றால், யார் கண்ணிலாவது படுவோம் என்று சுற்றிச் சுற்றி வந்ததில் பசித்தது. நீர் தோசை, இருட்டு மூலை பொட்டிக் கடையில் வாழைப்பழம், மிரிண்டா, தள்ளுவண்டி ஸ்ட்ராபெரி என்று போரடிக்கும்போதெல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் கதிரவன் செல்லில் வந்து “பன்னி (வாங்க) சார்” என்றார்

கதிரவன் சொன்ன அட்ரஸைக் கண்டு-பிடித்து, வளைவான மாடி ஏறி ஏறி தலை சுற்றி நின்ற இடத்-தில் க்ளோப் கன்சல்டன்ஸி என்கிற பலகை தாண்டி உள்ளே நுழைந்தால், நான்கைந்து பேர் கணிப்பொறி சகிதம் உட்கார்ந்திருந்தார்கள். அயோக்கியத்தனம் செய்-யு-ம் குற்றவுணர்ச்சியின் சுவடு துளி இல்லாத பளிச். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு கடிகாரம், அந்தந்த ஊர் நேரம் காட்டியபடி இருந்தன. அவர்களைத் தாண்டிய மூலை அறையில் உட்கார்ந்திருந்த வெள்ளை குர்தா பைஜாமா, குல்லாய் அணிந்து, மீசையை மழித்து, வெள்ளை தாடி சகிதமாய் முல்லா மாதிரி இருந்தவர் சலாம் வைத்தார்.

நான் ரங்கனிடம் “என்னடா கதிரவன்னாங்க. இவர் பாய்.”

“தம்பி… நான் காதர். பேர் முக்கியமில்லை. நோட்-டுதான்” என்று கை நீட்டினார்.

நான் பர்ஸை எடுத்து அந்த 10 ரூபாய் நோட்டைத் தேடித் தேடி… இறுதியில் “ஐயோ” என்று அலறினேன். “அந்த நோட்டு காணம்டா”. ரங்கன் வாங்கிப் பார்த்து இண்டு இடுக்கிலெல்லாம் விரல்விட்டு பர்ஸையே கிழித்துத் தேடி என்னைவிட அதிகமாக அலறினான். “இந்த மாதிரி எமெர்ஜென்ஸிக்கு ஏதாவது ஸ்டாண்ட் பை பாஸ்வேர்ட் இருக்கும்” என்றான் ரங்கன்.

“நோட்டு காட்டினாத்தான் பணம் குடுக்கறது. பர்ஸ§ல-தான வெச்சிருந்தீங்க? இங்க எதுனா செலவு பண்ணீங்களா?”

ரங்கன் “அடேய்… தோசை, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்-பழம், மிரிண்டா” என்று டென்ஷனாகத் தந்தியடித்தான். “பாய். அரை மணி டைம் குடுங்க” என்று சிக்பேட் சந்து-கள் எங்களை ஆயுசுக்கும் நினைவு வைத்திருக்-கும்-படி தடதடவென்று ஓடினோம். எட்டரை மணி இருட்-டில் கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை மூடிக்கொண்டு இருந்தார்கள். முதலில் அகப்பட்டது ஸ்ட்ராபெர்ரி தள்ளுவண்டிக்காரன்.

“ஹலோ… எங்களை ஞாபகம் இருக்கா? ஒரு மணி முன்-னாடி பழம் வாங்கினோம். நாங்க குடுத்த பணத்துல இந்த நம்பர் இருக்கிற 10 ரூபாய் நோட்டு இருந்ததா பாருங்க.”

“என்ன ஹவாலா சமாசாரமா?” என்றான் பளிச்-சென்று. மாறுவேடத்து சிஐடி போலீஸாக இருப்-பானோ?

“இல்லப்பா. டோனி கையெழுத்துப் போட்டு தந்தது. தேடிப் பாரு ப்ளீஸ்”

சிகரெட் லைட்டர் வெளிச்சத்தில் அந்த ஆளே டப்பாவில் கையைவிட்டுத் தேடி, “இல்லை சார். போங்க” என்றான்.

தோசை கடையில் அவனும் “ஹவாலாவா? அந்த நோட்டையா தொலைச்சீங்க?” என்றான் லேசாகச் சிரித்தபடி.

யார் எல்லா ரூபாய் நோட்டுகளிலும் காந்தித் தாத்தாவையே அடித்தது? நேரு, பட்டேல், அமிதாப், ரஜினி என்று விதவித-மாக இருந்தால், தேட வசதியாக இருந்–திருக்கும். பத்மநாபன் சார் சும்மா சும்மா செல்போனில் கூப்பிட்டார். அவரிடம் உண்மை சொல்லப் பயந்து போனை அணைத்தோம்.

அடுத்து வாழைப்பழ, மிரிண்டா பொட்-டிக்கடையில் போய் மன்றாடினோம். “ஏன் சார் எங்கிட்ட வந்த கஸ்டமருங்க யாருக்கா-வது உங்க நோட்டை நான் குடுத்துருந்தா, சிக்பேட்ல எல்லார் பர்ஸையும் உருவித் தேடுவீங்களா?” என்று நியாயமான கேள்வி ஒன்று கேட்டார். “சிக்பேட் என்ன? பெங்களூர் முழுக்க எல்லார் பர்ஸையும் தேட நான் தயாராக இருந்தேன்.

“ஒரு பத்து ரூபாய்க்கு என்ன சார் இவ்ளோ டென்ஷன் பண்றீங்க? என்ன ஹவாலா நோட்டா?” என்றார். அந்தப் பிரதேசத்-தில் 10 ரூபாய் நோட்டின் ஒரே உபயோகம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். “என் கேர்ள் ஃப்ரெண்ட் கையெழுத்து போட்டுக் குடுத்தது” என்று சொன்னதை அவர் சட்டை செய்யவில்லை.

அங்கேயும் கிடைக்காமல், எங்கள் எல்லா வழிகளும் அடைந்து போய், தலைமேல் கையை வைத்துக்கொண்டு உட்காரப் போகையில் ரங்கனுக்கு பல்பு எரிந்தது. “அடேய்! அந்த போலீஸ்காரனுக்கு குடுத்தது எந்த நோட்டு?”

சரண்டராகப் போன போலீஸ் ஸ்டேஷன் குறுக்கே வந்தது போல அந்த போலீஸ்காரர் அந்தப் பக்கமாக நடந்து வந்தார். கொடுத்த லஞ்-சத்தை எப்படிக் கேட்பது என்றுயோசித் தபடி அவரை வழி மறித்து சலாம் போட்டேன். அவர் தன் வாழ்க்கை-யிலேயே அதற்கு முன் பார்த்திராத ஒரு ஜந்துவைப் பார்ப்பது போல என்னை நோட்டம்விட்டார். “பன்னி ஹா ஓட்டல்ல கூத்கொண்டு மாத்தாடானா” என்று கூட்டிப் போய் கிங்ஃபிஷர் பியர், சிக்கன் 65, வறுத்த முந்திரிப்பருப்பு, மட்டன் பிரியாணி எல்லாம் (அவருக்கு மட்டும்) ஆர்டர் செய்துவிட்டு, “உங்களை இந்த ஏரியாவுல இதுக்கு முன்ன பாத்ததில்லையே. மெட்ராஸ் ஆளுங்களா?” என்றார் அழகான தமிழில். “சார், நீங்க தமிழா?” என்றோம் ஆர்வமாக.

“இங்க கான்ஸ்டபிள்லருந்து கம்பெனி முதலாளி வரைக்கும் பாதிப் பேர் தமிழனுங்கதான். அந்தக் கடுப்புல தான் காவிரில தண்ணி வுட மாட்டேன்றானுங்க.”

“நெத்தியடி டயலாக் சார். ஜூ.வி-க்கு எழுதிப் போட்டா, நூறு ரூபா கெடைக்கும் என்று சமயோசிதமாக நூறு ரூபாய் எடுத்து மேஜை மேல் வைத்தான் ரங்கன். அவர் இடது கையால் எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அந்தப் பிரதேசத்து கேள்வி கேட்டார். “ஹவாலா பணம் கலெக்ட் பண்ண வந்தீங்களா?” கேட்ட விதத்தில் போலீஸ்கார மிடுக்கும் சந்தேக உணர்வும் துளியும் இல்லாமல், ‘என்ன, சினிமா பாக்க வந்தியா?’ என்று தியேட்டரில் வைத்து விசாரிக்கும் பக்க-த்து வீட்டுக்காரரின் தொனி ஒலித்தது தெம்பாக இருந்தது.

“இல்ல சார். என் தாத்தா, அப்பாவுக்கு… என் அப்பா, எனக்-குன்னு முதல் பிறந்த நாளுக்கு வழி வழியாத் தர்ற குடும்ப 10 ரூபா நோட்டு சார்.” அவர் அதை நம்பாமல் பியர் எடுத்து வந்த வெயிட்டரிடம் “கெம்பண்ணான் கேளு இந்தக் கூத்தை” என்று உணவகத்தில் இருக்கிறவர்கள் பாதிப் பேருக்குக் கேட்கிற மாதிரி எங்கள் கதையைச் சொன்னார். நிதான-மாகச் சாப்பிட்டார். இறுதி-யில் சட்டைப் பையில் இருந்து இரண்டு 20 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் காண்பித்து, “இதான் நீ குடுத்தது” என்றார்.

வெளியே வந்து நின்றதும் எனக்கு தலை சுற்றுகிறார்போல இருந்தது. துபா-யில் பணம் கொடுத்தாகிவிட்டது. இங்கே நோட்டு இல்லை என்றால், பணம் அம்பேலா? யாரிடம் கேட்பது? “ரங்கா எனக்கு கண்-ணெல்–லாம் இருட்டிண்டு வர்றது” என்றேன்.

“பவர்கட். விளக்குலாம் எரியலை. அதான்.”

“பத்மநாபன் மூஞ்சில எப்டி முழிக்கிறது? ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கு?”

“ஊரைவிட்டு ஓடுற வேலை எல்லாம் வேண்டாம்.”

“தப்பி ஓடுறதுக்கு இல்லை, தண்ட-வாளத்–துல தலை வைக்கறதுக்கு. ஒரு விளம்பரம் மாதிரி குடுக்கலாமா ரங்கா? இந்தக் குறிப்பிட்ட எண்-ணுள்ள நோட்டைத் திரும்ப கொடுப்-பவர்-களுக்கு ஒரு லட்சம் இனாம். இல்லன்னா, நேரா போலீஸ் ஸ்டேஷன் போய்… ‘சார், இந்த கம்-பெனியில எங்களை ஹவாலா பண்ண அனுப்-பி-னாங்க. இந்தியப் பொருளாதாரத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தற நீசத்தனமான காரியத்துல ஈடுபட எங்க மனசாட்சி இடம்-கொடுக்-கல’ன்னு அப்ரூவர்ஆகிட-லாமா? நல்ல பேரும் கிடைக்கும். கம்பெனியும் நம்ம மேல கை வைக்க முடியாது.”

“டென்ஷன்ல இருக்க. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இரு. பாய் காலைப் புடிச்சுக் கெஞ்சலாம். இல்ல, துபாய் ஆபீஸ§க்கு போன் போட்டு, அவங்களை பணத்தைத் திரும்ப வாங்கிக்கச் சொல்லலாம்.”

புலம்பிக்கொண்டே வரும்போது பரிச்சயப்பட்ட டயோட்டா கார் ஒன்று வந்து எங்கள் முன்னால் நின்றது. சூட்டும் டையு-மாக பத்மநாபன் சார் காரி-லிருந்து கோபமாக இறங்கினார். நான் அவரைப் பேசவே விடாமல், சாலை என்றும் பார்க்காமல், சாஷ்-டாங்கமாகக் காலில் விழுந்தேன். “சார், மன்னிச்சிடுங்க சார்!”

என்னை எழுப்பி நிற்கவைத்து தூசி தட்டுகிற சாக்கில் நாலு அடி அடித்தார். சட்டைப் பையிலிருந்து ரூபாய் எடுத்து என் கையில் தந்தார்.

“இந்த டென்ஷன்லயும் நமஸ்காரம் பண்ணா, ஆசீர்வாதப் பணம் தர்றீங்களே… தேங்க்ஸ் சார்!”

“ஆசீர்வாதப் பணமில்லடா இது. மண்டையை மண்டையை ஆட்டிக் கேட்டுக்கிட்டு கடைசில என் டேபிள் மேலயே அந்த ரூபா நோட்டை வெச்சுட்டுக் கிளம்பிட்டே. மீட்டிங் முடிச்சுட்டு திரும்பி வந்து பாத்தா, டேபிள் மேலயே இருக்கு நோட்டு. போன் பண்ணிக்-கிட்டே இருக்கேன். நீ எடுக்கவே இல்லை. அதான், நானே வந்துட்டேன்.”

நோட்டுடன் பாயிடம் ஓடினோம். 10 மணி தாண்டி-யிருந்தது. மாடியேறி ரூபாயை நீட்டிய இடத்தில் முல்லாவுக்குப் பதிலாக கறுப்பாக, அளவாக கிராப்பு, குறுந்தாடியுடன் கழுத்தில் தொங்கிய சிலுவையோடு இருந்தவரிடம் “காதர் பாய் எங்க?” என்றேன்.

“கதிரவன் இண்டியன் டைம், காதர் பாய் யு.கே. டைம், நான் கெல்வின் யு.எஸ். டைம் ஷிஃப்ட். ஆளு முக்கியமில்லை. நம்பர்-தான்” என்று நோட்டை வாங்கி, கம்ப்யூட்டரில் தொட்டு சரிபார்த்து, கத்தை கத்தையாக நோட்டுகளை அடுக்கிவைத்து, பக்கத்து மேஜையில் இருந்த கரன்ஸி நோட்டு எண்ணும் கருவியைக் காட்டி “யு கேன் யூஸ் இட்” என்றார்.

நம் சமூகத்தில் தப்புக் காரியங்கள் செய்வதற்குப் பயப்பட வேண்-டியதில்லை என்ற தெளிவு வந்த அந்த இரவுக்குப் பிறகு என் அலு-வலக வாழ்க்கையே மாறிவிட்டது. கறுப்புப் பணத்தை கொணர்வது, அதிகாரி-களுக்கும், நில உரிமை-யாளர்-களுக்கும் விநி-யோ-கிப்பது, கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு-வர ரசீதுகள் தருவிப்பது, பொய் கணக்கு எழுதுவது, ஆடிட்-டர்கள் மூலம் பொய் கணக்குக்கு அங்கீகாரம் பெறுவது, வரி குறைப்பது, இன்கம் டாக்ஸ் அதிகாரிகளையும் கவனிப்-பது என்று ஏமாற்று வேலையே என் அலு-வலகச் சிந்தனையாய், அயோக்கியர்கள் மட்டுமே நண்பர்களாய் உருமாறிவிட்டது. இந்த அயோக்கியத்-தனத்தை சிரத்தையாக, யோக்கியமாகச் செய்-கிறேன் என்று நல்ல சம்பளம், ஊக்கத்தொகை என்று என்னை செல்வந்தர் வீட்டு நாய் மாதிரி சௌக்கியமாக வைத்-திருக்கிறார்கள். ஏசி காரில் போகிறேன். உயர்தர செல்போனில் வெளிநாட்டு பணத் தரகர்களிடம் சரளமாகப் பேசுகிறேன். எங்கள் எம்ஜி ரோடு அலு-வலகக் கட்டடத்தின் 22-ம் மாடியில் வாஸ்து பார்த்து குபேர மூலையில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி-யறை இருக்கிறது. அலுவலகத்தில் இன்னுமொரு ஜெகன்னாதன் இருக்கிறார் என்பதால் என் பேர் “ஹவாலா ஜெகன்னாதன்” என்று மாறிவிட்டது!

– 05th நவம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *