கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 12,034 
 

மாநிலத்திலேயே அந்தக் கல்லூரிக்குத் தான் மிக நல்ல பெயர். அந்தக் கல்லூரிக்கு மாநில அரசு, மத்திய அரசு எங்கும் நிறைய செல்வாக்கு உண்டு. ஒரு மாணவனுக்கு அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் அவன் எதிர் காலத்தைப் பற்றிய கவலையை பெற்றோர் சுத்தமாக மறந்து விடலாம்!

அதற்கு முக்கிய காரணம் படிப்பு முடிவதற்குள், நாட்டிலேயே மிக அதிக சம்பளம் தரும் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு நான், நீ என்று வேலைக்கு உத்திரவு கொடுப்பது தான்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தக் கல்லூரியில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்று தவம் இருப்பார்கள்!

பிளஸ் டூ வில் 1100 க்கு மேல் வாங்கியவர்கள் தான் அந்தக் கல்லூரியில் மெரிட் கோட்டாவைப் பற்றி பேச முடியும். மெரிட் கோட்டா அட்மிசன் முடிந்ததும், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர்களைச் சேர்ப்பார்கள்.

அரசு வழக்கம் போல் நன்கொடை வாங்கக் கூடாது. அப்படி நன்கொடை வாங்கியது தெரிய வந்தால் அந்த கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்வது வருடா வருடம் ஒரு வழக்கம்! அதை யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை!

மேனேஜ்மெண்ட் கோட்டா அட்மிஷன் அன்று நடந்தது! மாணவர்களை அவர்கள் பெற்றோர்களுடன் ஒரு பெரிய ஹாலில் உட்கார வைத்திருந்தார்கள்!

மாணவர்களின் பெற்றோர்கள் அந்தக் கல்லூரியில் எப்படியாவது அட்மிஷன் வாங்கி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள்.

முதல் வரிசையில் உட்கார்த்து இருப்பவர்களில் ஒருவர் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர். அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் ஒரு அரசியல் பத்திரிகை ஆசிரியர். அவருகுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் நகரத்திலேயே நெம்பர் 1 கிரிமினல் லாயர். மூவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்.

ஆர்வத்தோடு நிர்வாகத்தினர் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை எல்லோரும் எதிர் பார்த்து காத்திருந்தனர்!

கல்லூரி பொறுப்பாளர் ஒருவர் இரண்டு ஜெராக்ஸ் காகிதங்களைப் ‘பின்’ பண்ணி இதில் உள்ளபடி நீங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தங்கள் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி, அத்துடன் அருகில் இருக்கும் வங்கியில் இரண்டு லட்சத்திற்கு ஒரு டி.டி. எடுத்து இணைத்து கொண்டு முதலில் வருபவர்களுக்கு உடனடியாக இன்றே அட்மிசன் தரப் படும் என்று சொல்லிக் கொண்டே அந்தப் படிவங்களை வழங்கினார்.

‘ இந்தக் கல்லூரி மேலும் சிறப்பாக செயல் பட வேண்டுமென்று ஆசைப் பட்டு கல்லூரிக்குத் தேவையான கட்டிடம் கட்டுவதற்கு என்னால் முடிந்த சிறு உதவியை என் சொந்த விருப்பத்தின் பேரில் தருகிறேன். நான் விருப்பப் பட்டு தரும் இந்த நன்கொடைக்கும், இந்தக் கல்லூரியில் படிக்கும் என்

2

குழந்தையின் அட்மிஷனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியளிக்கிறேன்.’ என்று அந்த ஜெராக்ஸ் கடிதத்தில் இருந்தது.

அதை வாங்கிய அடுத்த நிமிஷமே அந்த ஆளும் கட்சிப் பிரமுகர், பத்திரிகை ஆசிரியர், கிரிமினல் லாயர் மூவரும் அவசர அவசரமாக ஜெராக்ஸ் படிவத்தில் உள்ளபடி தங்கள் கையால் ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டு, வேகமாக வங்கியை நோக்கி ஓடினார்கள். அவர்களுக்கு இது விஷயம் முன்பே தெரியும் போலிருக்கிறது.

அதற்கு தயாராக வராத சிலர் என்ன செய்வதென்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்

சிறிது நேரத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர், பத்திரிகை ஆசிரியர், கிரிமினல் லாயர் மூவரும் முதலாவதாக மேடைக்குப் போய், டி.டி.யும் ,லெட்டரையும் கொடுத்து, அங்கிருந்த பிரின்ஸ்பாலிடம் தங்கள் பையன்களின் அப்ளிக்கேஷனைக் கொடுத்து அதில் ‘அட்மிட்’ என்று எழுதி வாங்கிக் கொண்டு கீழே வந்து தங்கள் குடும்பத்தாரோடு இமயமலையில் கொடி நாட்டிய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

அதன் பின் தங்கள் அறிவும், ஆற்றலும் மற்றவர்களுக்குத் தெரியும் படி தங்கள் சமுதாயச் சேவையை ஆரம்பித்தார்கள்!

ஒரு குடும்பத்தினருக்கு பணம் போதவில்லை. உள்ளூரில் யார் யாருக்கோ போன் செய்து கைமாற்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தொகை அதிகம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பக்கதில் போய் கிரிமினல் லாயர் “ இது சட்டப்படி ரொம்ப தப்புங்க!…இதை நாம இப்படியே விடக் கூடாதுங்க!..”என்று சொன்னார்.

“அரசே….. நன்கொடை வாங்கக் கூடாதுனு தெளிவாச் சொல்லியிருக்கு!….இந்த நிர்வாகம் நம்மளை முட்டாளுனு நெனைச்சிட்டிருக்கு! இதை இப்படியே நாம விடக் கூடாது!…..” என்றார் அந்த ஆளும் கட்சிப் பிரமுகரும்.

“நாளைக்கு நம்ம பத்திரிகையிலே இந்த மேட்டரை கிழி கிழினு கிழிச்சிடப் போறேன்!….” என்றார் பத்திரிகை ஆசிரியர்.

சமுதாயத்தின் ஆணி வேராக இருக்க வேண்டியவர்கள் தங்கள் தேவைகளை முதலில் கச்சிதமாக முடித்துக் கொண்டு, மற்றவர்களின் எதிர் காலத்தைப் பணயம் வைத்துத் தான் தங்கள் பொதுச் சேவையைத் தொடங்குகிறார்கள்!

– ஜூலை 29 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *