பணம் காய்க்கும் இளஞ்செடிகள்

 

நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயதுச் சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பவன்.உடை அணிந்து சாப்பிடுவதற்காக வந்தவன் டேபிளைப் பார்த்தான். மெத்து மெத்தென்ற ஆப்பமும்,தேங்காய்ப்பாலும் எடுத்துவைக்கப்பட்டிருந்தது. தக்காளிச் சட்னி பக்கத்தில் இருந்தது , எல்லாமே இவனுக்குப் பிடித்த ஐட்டம் , சரியான பசி வேறு .நாக்கைச் சப்புக்கொட்டியபடி சாப்பிடப்போனவனை அம்மாவின் குரல் தடுத்தது. “நிதின் கண்ணா அது உனக்கில்லடா செல்லம் , அதெல்லாம் சாப்பிட்டா ஒடம்பு ரொம்ப பெருத்துப் போயிடும் , அதனால உனக்கு பப்பாளி ஜூஸ் வெச்சிருக்கேன் அதக்குடி இது வேண்டாம் என்ன?” என்றாள்.கண்ணீர் வந்துவிட்டது நிதினுக்கு.”மம்மி ப்ளீஸ் மம்மி இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுறேன் மம்மி , அந்த ஜூஸ் வாடையே எனக்குப் பிடிக்கல , ப்ளீஸ் ஒரே ஒரு ஆப்பம் குடு மம்மி ” என்று கெஞ்சினான். அப்போது அங்கே வந்த அப்பா ” மம்மி உன் நல்லதுக்கு தானே நிதின் சொல்றாங்க , இப்ப நீ நடிச்சிட்டு இருக்கற படத்துல ஏழை மன நொயாளிப் பையனா வர , ஒடம்பு ஒல்லியா இருந்தாதான் சரி ,இல்லன்னா டைரக்டர் திட்டுவார் இல்ல? அதுவும் அந்தப் படத்தோட ஹீரோ ஒரு பெரிய நடிகர் , அவருக்கு சமமா நடிச்சு நீ அவார்டு வாங்க வேண்டாமா?”என்று மடமடவென்று பேசிவிட்டு ஆப்பங்களை ஒரு கை பார்க்கலானார்.

வாழ்க்கையே வெறுத்துப்போனது நிதினுக்கு. நன்றாகச் சாப்பிட்டு பல நாட்கள் ஆகி விட்டன. எப்போதும் ஜூஸ் , பழம் இல்லை என்றால் சப்பாத்தி , பருப்பு. ஸ்கூலுக்குப் போய் இரண்டு மாதங்களாகி விட்டன.நண்பர்களோடு விளையாடிய ஞாபகமே மறந்து விட்டது. எல்லாம் இவன் ஸ்கூல் நாடகத்தில் நடித்ததால் வந்த வினை. அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கனமான பாத்திரத்தில் அவன் மிகச் சிறப்பாக நடித்தான். அவன் நடிப்புத் திறமையை பாராட்டாதவர்களே இல்லை. நாடகத்தைப் பார்த்த அப்பாவின் நண்பர் ஒருவர் விளம்பர ஏஜெண்டிடம் அறிமுகப் படுத்தினார். அந்த குழந்தைகளுக்கான பான விளம்பரத்தில் நிதின் உற்சாகமாக நடித்தான்.அவன் தன் நண்பர்களிடம் தான் டிவியில் வருவதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டான். அந்த விளம்பரத்தால் அவனுக்கு பேரும் புகழும் மட்டுமில்லை , அவன் பெற்றோருக்குப் பணமும் கிடைத்தது. கிட்டத்தட்ட அவன் தந்தையின் ஒரு மாத சம்பளத்தை அவன் ஒரே நாளில் சம்பாதித்தான். அதன் பிறகு வரிசையாக பல விளம்பரங்கள் , அதன் விளைவாக சினிமாவிலும் நல்ல வாய்ப்பு. எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய நடிகருடன் நடிக்கும் சந்தர்ப்பம்.அவன் பெற்றோர்களுக்கு தலை கால் புரியவில்லை.அன்று முதல் அவன் அட்டவணை மாறியது.ஸ்கூலுக்கு மருத்துவ காரணங்களையோ இல்லை உண்மைக் காரணங்களையோ சொல்லி நீண்ட விடுப்பு எடுக்க வைத்தார்கள்.நிதின் அப்பா வேலையை விட்டு விட்டு அவனுக்கு செகரட்டரியாகவே ஆகிவிட்டார்.பாடம் படிக்காமல் இருந்ததற்காக அவனை யாரும் கண்டிக்கவில்லை.

ஆரம்பத்தில் இவையெல்லாம் உற்சாகமாகவே இருந்தது நிதினுக்கு.நாட்கள் செல்லச்செல்ல பள்ளியையும் வகுப்புத்தோழர்களையும் எண்ணி எண்ணி ஏங்கினான். மன நோயால் பாதிக்கப்பட்ட பையனாக நடிப்பதால் எந்நேரமும் அது சம்பந்தமான சினிமாக்களையே போட்டுக் காட்டினார்கள்.மன நோயாளி போல பேச, நடக்க பயிற்சி கொடுத்தார்கள். நிதினுக்கு சில சமயங்களில் தான் அது போலவே மாறி விடுவோமோ? என்ற பயம் பிடித்துக் கொண்டது. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு பழையபடி ஸ்கூலுக்குப் போய் நண்பர்களோடு விளையாடி , ஹோம் வொர்க் செய்யாததற்காக டீச்சரிடம் திட்டு வாங்கும் வாழ்க்கைக்கு ஏங்க ஆரம்பித்தான்.பழைய துறுதுறுப்பும் , உற்சாகமும் அவனிடமிருந்து விடை பெற்றன. ஒரு முறை மம்மி கூட அப்பாவிடம் “ஏங்க நாம இவ்வளவு கடுமையா இருக்கணுமா? கொழந்த முகத்தப் பாக்கவே முடியலயே?ஆளே டல்லா ஆயிட்டானே?” என்று வருத்தப்பட்டாள்.அதற்கு அவர் “என்ன கலா நீ புரியாம பேசற? இன்னும் ரெண்டு , மூணு வருஷம் தான் இவனுக்கு மார்க்கெட் இருக்கும் , அதுக்கப்புறம் ஏன்னு கேக்க ஆளிருக்காது. அதுக்குள்ள நாலு காசு சேர்த்தா தானே ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சு மேற்கொண்டு குடும்பத்த நடத்த முடியும் ? அதுவும் தவிர அவன் சிறந்த குழந்தை நட்சத்திரம் அவார்டு வாங்கினா அதுல யாருக்குப் பெருமை? அவனுக்குத் தானே? இப்போ அவன் சின்னப் பையன் இதோட அருமை தெரியாது , அவனே பெரியவனா ஆனதுக்கப்புறம் நமக்கு நன்றி சொல்லுவான் பாரு” என்று நீளமாகப் பேசி வாயடைத்ததெல்லாம் பாவம் நிதினுக்குத் தெரியாது. அவன் நம்பிக்கொண்டிருந்ததெல்லாம் இந்தப் படம் முடிந்ததும் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம் என்று தான்.

காலை எட்டு மணி ஷூட்டிங் சரியாக பத்து மணிக்கெல்லாம் தொடங்கி விட்டது. அதுவரையில் அவன் திட உணவு எதுவும் சாப்பிடவில்லை. அன்று அவன் மழையில் நனைந்தபடி வீட்டுக்குள் இருக்கும் பணக்காரச் சிறுவர்கள் சாப்பிடுவதை ஏக்கத்தோடு பார்ப்பத்தாக காட்சி எடுத்தார்கள். அந்தக் காட்சி மிக இயற்கையாக வந்திருப்பதாக அனைவரும் பாராட்டினார்கள்.அதற்கு அடுத்ததாக அந்தப் பெரிய நடிகருடன் ,நிதின் உற்சாகமாக பாடி ஆடும் காட்சி படமாக்கப்பட்டது.அவனால் சரியாகவே நடிக்க முடியவில்லை. நடன அசைவுகள் கடினமாக இருந்தன. அதனால் பல டேக்குகள் வாங்கினான் நிதின். பெரிய நடிகருக்கு எரிச்சல் வர , உடனே டைரக்டருக்கு கடுங்கோபம் வந்தது.அவனைக் கண்டபடித் திட்டினார்.அவர் திட்டியது ஸ்கூலில் டீச்சர் திட்டுவது போலில்லை மிகவும் கடுமையாக இருந்தது. கண்ணீர் வந்தது நிதினுக்கு.டீச்சரிடம் சொன்னால் ஒருவேளை இந்த டைரக்டரை அவர்கள் அடிப்பர்களா? அப்படி அடித்தால் அவர் எப்படிக் கத்துவார்? என்று கற்பனை செய்தான்.சிரிப்பு வந்தது. ஒரு வழியாக அந்தக் காட்சியில் நடித்து முடித்தான்.

கிட்டத்தட்ட படம் முழுவதும் முடிந்துவிட்டது.இன்று அவனை எரியும் நெருப்பிலிருந்து ஹீரோ காப்பாற்றுவது போல காட்சி எடுத்து முடித்தால் படம் முடிந்துவிடும்.அந்தக்காட்சிக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.பாதுகாப்பு குறித்த விஷயத்தில் அவர்கள் முழு கவனம் செலுத்தி அந்தக்காட்சியையும் எந்த விபரீதமும் நடக்காமல் வெற்றிகரமாக எடுத்து முடித்தார்கள்.எல்லாம் முடிந்தது இனி ஷூட்டிங் கிடையாது , நன்றாகச் சாப்பிடலாம் , ஸ்கூலுக்குப் போகலாம் என்ற ஆனந்தமான கனவில் மூழ்கினான் சிறுவன் நிதின். அப்போது ஒருவர் வந்து அவன் அப்பாவிடம் பள்ளிக்குச் செல்லாமல் , சிறு வயதிலேயே வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் குழந்தைத் தொழிலாளர்களை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப் போவதாகச் சொல்லி , அதில் நிதின் நடிக்க வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த சாஃப்ட்வேர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனந்துக்கு அப்போது உடனே சுதாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனதில் போட்டு பூட்டி வைத்த இரண்டு வருடக் காதல். இன்னமும் அவளிடம் சொல்லவில்லை. சொல்லக் கூடாது என்றில்லை. அவள் என்றாவது ஒரு ...
மேலும் கதையை படிக்க...
யமுனை நதிக்கரை. காற்றிலே ஈரம் தவழ்ந்தது. கரையோரமாக ஒரு கல்லின் மேல் பளிங்குச் சிற்பமென அமர்ந்திருந்தாள் இராதை. ஆம் ! கோகுலக் கண்ணனின் இராதையே தான். காற்றின் ஈரம் அவள் கண்ணிலிருந்து வந்ததோ என்று நினைக்கும் அளவு அவள் நீண்ட பெரிய ...
மேலும் கதையை படிக்க...
கிச்சா
தாமிர பரணி நதி சுழித்து ஓடும் நெல்லை மாவட்ட சின்னஞ்சிறு கிராமம். எல்லா கிராமங்களைப் போலவே இங்கேயும் அக்கிரகாரம் உண்டு. எல்லா அக்கிரகாரங்களைப் போலவே இங்கும் சுமாரான வசதியுள்ளவர்கள் , ஏழைகள் , படு ஏழைகள் அதற்கும் கீழுள்ளோர் என எல்லோரும் ...
மேலும் கதையை படிக்க...
பதினைந்து வயது நிதீஷின் மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது. தான் சாதாரணமாக இல்லை என்று அவனுக்குப்புரிந்தது. "என்ன தவறு என்னிடம்? ஏன் என் மனம் பெண்களின் அருகாமையை நாடுகிறது? அவர்களின் நடுவே இருப்பது தான் பாதுகாப்பாக இருப்பது போலத் தோன்றுகிறது. அவ்வளவு ஏன்? ...
மேலும் கதையை படிக்க...
பத்து அருவா
முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம் பெரும் சுமையாக முதுகில் அழுத்தியது. சிறுகதை "ஆச்சு! இன்னும் கொஞ்சம் தூரம் தான். அடுத்த ஊரு வந்துரும்." என்று நொந்த மனசையும் வலித்த ...
மேலும் கதையை படிக்க...
காதலென்னும் தேரேறி…
இராதா மாதவம்
கிச்சா
இடைப் பிறவி
பத்து அருவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)