Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பஞ்சரத்னம்

 

“பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி.

“அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி.

அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான்.

அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர்கள்.

பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள்.

பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் `ஊருக்கு’ப் போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள்.

குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள்.

போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி.

`இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு.

தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது.

புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்!

ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா?

பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

`இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள்.

`காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி.

சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய `இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன.

“சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள்.

`அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள்.

தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், `உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும்.

ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்று மருந்தாக இருக்கவில்லை.

“ஹலோ, பரம் சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது.

நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்!

சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின.

நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!”

அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. `உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்!

பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை!

அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று.

“தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும்.

ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி.

`இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி.

அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள்.

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள்.

“நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள்.

கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று.

ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள்.

முதலில் சற்று அயர்ந்தாலும், `இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி.

அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி.

“வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம்.

“பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னாடி வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக.

தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், `நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது.

மேலும் சில ஆண்டுகள் கழிந்தன.

ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்!

நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. `காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கும் என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’

அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள்.

நீட்டிய அவள் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி.

(குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச்சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்).

(vallamai.com) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தப் பகுதியில் எல்லாமே பிஸ்கோத்துகளை அடுக்கி வைத்ததுபோல, ஒரே மாதிரியான சிறிய வீடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி. இரு தெருக்களின் இடையே ஒரு சிறு சந்து. அதன் நடுவில் கோணல் மாணலாக சதுர வடிவிலான பாறாங்கற்கள், `எங்கள்மேல் காலை வைத்தால், பதம் ...
மேலும் கதையை படிக்க...
“வேலையிலிருந்து வீடு திரும்ப இவ்வளவு நேரமா? ஆறரை மணிக்குப் பள்ளிக்கூடம் விடுது. இப்போ என்ன மணி, பாத்தியா?”இரண்டு பஸ் பிடித்து, இரவு எட்டு மணிக்குமேல் வீடு வந்திருக்கும் மனைவிக்கு வழியில் என்ன அசௌகரியமோ என்ற ஆதங்கம் கிஞ்சித்தும் இல்லை கேசவனிடத்தில். `இவள் ...
மேலும் கதையை படிக்க...
தந்தை இறந்துவிட்டார் என்று தந்தி வந்திருக்கிறது. அதைப் பொருட்படுத்தாது, கிடாரில் ஸ்ருதி சேர்த்துக்கொண்டு இருந்த நடராஜனைப் பார்த்தான் மனோகர். “புறப்படலே?” என்று கேட்டான், அவன் போய் கொள்ளி போட வேண்டிய அவசியத்தை உணர்த்த விரும்பியவனாக. நடராஜன் சூள் கொட்டினான். “உசிரோட இருந்தப்போ பிள்ளைங்கமேல அவர் ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன. தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று ...
மேலும் கதையை படிக்க...
'ஏண்டா, நீ ஆம்பளைதானா?' பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோதெல்லாம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாத எனக்கு அன்றிரவுதான் அச்சந்தேகம் பயங்கரமாக முளைத்தது. ஹாலில் எனக்குப் பக்கத்தில் தரையில் படுத்திருந்த என் மாமா எப்போது அவ்வளவு நெருங்கி வந்தாரோ, தெரியவில்லை. அவருடைய கை என் உடல்மேல் படர்ந்து, ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு பெண்களும் இன்னொருத்தியும்
புழுவல்ல பெண்
தண்டனை
பந்தயம்
காதலியின் சிரிப்பிலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)