Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பச்சோந்தி

 

Хамелеон : பச்சோந்தி
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி

காவல்துறையில் கண்காணிப்பாளரான ஒட்சும்யேலோவ் புதிய ஓவர்கோட் அணிந்து தன் கைகளுக்கிடையில் பொட்டலம் ஒன்றை வைத்துக் கொண்டு சந்தைச் சதுக்கத்தின் வழியே சென்று கொண்டு இருந்தார். அவருடன் சிவப்புத் தலை கொண்ட காவலன் ஒரு வலைப்பை நிறைய கைப்பற்றப் பட்ட நெல்லிக் காய்களுடன் வேகமாக எட்டு வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான். சுற்றிலும் அமைதி நிலவியது. சதுக்கத்தில் ஈ காக்கை இல்லை…கதவுகள் திறந்திருந்த கடைகளும் விடுதிகளும் கடவுளால் உருவாக்கப் பட்ட இந்த உலகத்தை சகிக்கவே முடியாத பசியுடன் பார்த்துக் கொண்டு இருந்தன; ஒரு பிச்சைக்காரன் கூட அருகில் இல்லை.

“நாயே என்னைக் கடிச்சிட்டியா?”, ஒட்சும்யேலோவ் திடீரென எழுந்த சத்தத்தைக் கேட்டார், “அதைப் புடிங்க. கடிக்கறத இந்தக் காலத்துல தடை செஞ்சிட்டாங்க. புடிங்க அதை.”

நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை ஒட்சும்யேலோவ் பார்த்தார், அங்கு ஒரு நாயைக் கண்டார் , அது மூன்று காலில் நொண்டிக்கொண்டு பிட்சுகினின் மரக்கடையைத் தாண்டி வந்துகொண்டிருந்தது. கஞ்சி போட்ட சட்டையும் பொத்தான் பிரிந்திருந்த மேலாடையுடனும் ஒருவன் அதைத் துரத்திக் கொண்டு வந்தான்.

துரத்திக்கொண்டு வந்தவன் பாய்ந்து முன்னால் விழுந்து அதன் பின் காலை எட்டிப் பிடித்தான். மீண்டும் நாயின் கத்தலும் “போக விடாதே ” என்ற சத்தமும் கேட்டது. தூங்கி வழிந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கடைகளை விட்டு மெல்ல எட்டிப் பார்த்தனர், விரைவில் மரக்கடைக்கு அருகில் ஒரு கூட்டம் கூடியது, திடீரென நிலத்திலிருந்து முளைத்தது போலிருந்தது,

“எதோ பிரச்சினை போல் இருக்கு”, காவலன் சொன்னான்.

ஒட்சும்யேலோவ் பாதி திரும்பி கூட்டத்தை நோக்கி வேகமாகப் போனார்.

மேலே சொன்ன மனிதன் மரக்கடையின் வேலிக்கதவைப் பிடித்தபடி ரத்தம் வழியும் தனது விரலை கூட்டத்திற்கு உயர்த்திப் பிடித்தபடி காட்டிக்கொண்டு இருந்தான். பாதி போதையிலிருந்த அவனது முகத்தில் “உன்னை கவனிச்சுக்கிறேன்” , என்று எழுதப் பட்டு இருப்பதுபோல் இருந்தது, உயர்த்திப் பிடித்த கையின் விரல் எதோ வெற்றிச் சின்னத்தைக் காட்டுவது போலிருந்தது. ஒட்சும்யேலோவ் அடையாளம் கண்டு கொண்டார், அவன் ஹ்ருயுகின் என்கிற பொற்கொல்லன் என்று. முதுகில் மஞ்சள் நிற திட்டுகளுடன் இருந்த வெள்ளை ரஷ்ய போர்சாய் வகை நாய்க்குட்டி, இத்தனை பிரச்சனைக்கும் காரணமானது கூட்டத்துக்கு நடுவில் தரையில் அமர்ந்து தனது நான்கு கால் நகங்களையும் வெளியே நீட்டிக் கொண்டு , தடுமாறிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் அச்சமும் சோகமும் கண்ணீருடன் வழிந்து கொண்டிருந்தது.

“இதெல்லாம் என்ன? “, கூட்டத்தை விலக்கியவாறே முன்னேறிக்கொண்டு கேட்டார் ஒட்சும்யேலோவ், “எதுக்கு எல்லாம் இங்கிருக்கீங்க? நீ எதுக்கு விரலைக் காட்டிட்டு இருக்கே? யார் சத்தம் போட்டது?”

“நான் இந்த வழியா நடந்து வந்துகிட்டு இருந்தேன், யாருக்கும் தொந்தரவு செய்யாமல்,” , ஹ்ர்யுகின் தனது உள்ளங்கைகளுக்குள்ளே இருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான், “நான் மித்ரி மிற்றிச் இடம் விறகுகளைப் பற்றி விசாரிச்சுகிட்டு இருந்தேன், அப்பா இந்த கேடுகெட்ட நாய் எந்தக் காரணமும் இல்லாம என் விரலைக் கடிச்சிருச்சு. நீங்க என்னை மன்னிக்கணும், நான் வேலை செய்யறவன், என்னோட வேலை ரொம்ப நுணுக்கமானது, இப்ப விரலுக்கு காயம் ஆகிருச்சு , ஒரு வாரமோ அதுக்கும் மேலயோ என்னால இந்த விரலைப் பயன்படுத்த முடியாது. சட்டம் இந்த மாதிரி விலங்குகளிடமிருந்து நம்மளக் காப்பாத்தணும், இந்த மாதிரிக் ஒவ்வொருத்தரும் கடிபட்டா வாழ்க்கை என்ன ஆகும்?”

“ம்ம் நல்லாச் சொன்ன”, ஒ உறுதிபடச் சொன்னார், இருமிக்கொண்டே தனது புருவங்களை உயர்த்திக் கொண்டு கேட்டார், ” யாரோட நாய் இது? இதை இப்படியே விட்டுட மாட்டேன். எப்படி நாய் வளக்கறதுன்னு அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போறேன். அந்தப் பெரிய மனுசங்களுக்கு இது தான் சரியான நேரம், சட்டத்தை மதிக்கணும் அவங்க. அவங்களுக்கு அபராதம் விதிச்சு எப்படி இந்த விலங்குளை வளக்கனும்னு சொல்லிக் கொடுக்கப் போறேன். அவங்களுக்கு சரியான பாடமா இருக்கும். “, காவலனைப் பார்த்துக் கண்காணிப்பாளர் கத்தினார், “எல்டிரின் யாரோட நாயின்னு கண்டுபுடிச்சு ரிப்போர்ட் பண்ணு. அது வரைக்கும் நாயைக் கட்டி வை. சீக்கிரம். இது வெறி நாயாகூட இருக்கலாம். யாரோட நாய் இது நான் கேட்கிறேன் இல்ல ?”.

“ஜெனரல் ட்ஷிகலோவோட நாயின்னு நினைக்கிறேன்”, கூட்டத்தில் ஒருவன் சொன்னான்.

“ஜெனரல் ட்ஷிகலோவோட நாயா? ம்ம் … எல்டிரின் எனக்கு கொஞ்சம் உதவி பண்ணு..இந்தக் கோட்டைப் புடி. என்ன வெய்யில்…அனேகமா மழை வரும்னு நினைக்கிறேன்…எனக்கு ஒண்ணுதான் புரியலை, எப்படி அந்த நாய் உன்னைக் கடிச்சிருக்கும்?”, ஒட்சும்யேலோவ் திரும்பி ஹ்ர்யுகினைப் பார்த்துக் கேட்டார், “நிச்சயமா அது உன்னைக் கடிசிருக்காது.நீ பெரிய ஏமாத்துக் காரன், ஆணியில எங்காவது காயம் பட்டு இருப்பாய், அப்புறம் உனக்கு இந்த யோசனை தோன்றியிருக்கணும், எனக்குத் தெரியும்டா உங்களைப் போல பேய்களைப் பத்தி.”

“அய்யா அவன் அனேகமா விளையாட்டுக்கு அதோட மூஞ்சியில சிகரட்ட வச்சிருப்பான், அதப் புடிக்க அது முயற்சி செஞ்சிருக்கும், அவனப் பாத்தாலே தெரியுது அவன் நாடகமாடுறான்னு.”

“அது பொய். ச்குண்டேயே ! நீ அதப் பாக்கவேயில்லை. எதுக்குப் பொய் சொல்ற. அய்யா ரொம்ப நல்லவர், கடவுளறிய அவருக்குத் தெரியும் யார் பொய் சொல்றாங்க நெசமாச் சொல்றாங்கன்னு, நான் பொய் சொல்றேனா அப்படீன்னு நீதிமன்றம் முடிவு செய்யட்டும். சட்டத்துல எல்லாம் எழுதி இருக்கு..இந்தக் காலத்துல நாம எல்லாம் ஒண்ணுதான்..என்னோட சொந்தத் தம்பி ஆயுதப் போலீசுல வேலையா இருக்கான், என்னைப் பேச விடுங்க…”

“வாக்கு வாதம் பண்ணாதீங்க”

“அது ஜெனரல் அய்யா நாய் அல்ல. “, விசாரித்த அளவில் காவலன் சொன்னான், ” இந்த மாதிரி நாய் அவர்கிட்டே இல்லை. அவரோடது எல்லாம் செட்டேர்ஸ் வகை நாய்கள்தான்.”

“உனக்கு நல்லாத் தெரியுமா?”

“ஆமாம் அய்யா”

“எனக்கும் கூட அது தெரியும். அது எல்லாம் ரொம்ப உயர்ந்த வகை நாய்கள். இதைப் பாரு, பட்டை இல்லாமல், கச்சை இல்லாமல் உருவமே ஒழுங்கில்லாமல் இருக்கு. மட்டமான நாய். இதப் போய் யாராவது வளப்பாங்களா? இந்த மாதிரி நாய் பீடர்ச்பர்கிலையோ மாஸ்கோ விலோ வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஹ்ர்யுகின் நீ ஒன்னும் கவலைப் படாத, உனக்குக் காயமாகிப் போச்சு, நாம இந்த விஷயத்தை விட்டுற முடியாது, அவங்களுக்கு ஒரு பாடமா இருக்கட்டும், இது தான் சரியான நேரம். ”

“இருந்தாலும் இதைப்போல ஒரு நாயை ஜெனரல் அய்யாவோட வீட்டுல பார்த்த ஞாபகம். ஆனா அதோட மூஞ்சியில ஒன்னும் எழுதல.” , காவலன் சிந்தனை உரத்துக் கேட்டது.

“அது ஜெனரல் உடையது தான், நிச்சயமா “, கூட்டத்திலிருந்து ஒருவன் உரத்துக் கூறினான்.

“எல்டிரின் இங்க வாப்பா, எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணு, இந்தக் கோட்டைப் புடி. காத்து வேற வீச ஆரம்பிச்சிருச்சு எனக்குக் குளுருது. இதக் கூட்டீட்டுப் போய் ஜெனரல் அய்யா வீட்டுல விசாரி. நான் தான் கண்டு புடிச்சு அனுப்பினேன்னு சொல்லு. அவங்க கிட்ட சொல்லு வீதியில எல்லாம் விட வேண்டாம்னு, இத மாதிரி உயர்ந்த சாதி நாய்களைப் பாதுகப்பா வச்சிருக்கணும், எவனாவது இதன் மூஞ்சியில சிகரட்டைக் காட்டிக் கெடுத்துறப் போறான், நாய் நன்றியுள்ள பிராணி. கையைக் கீழ போடுறா களிமண் மண்டையா. விரலைக்காட்டி ஏமாத்தாத, அது உன்னோட தப்புதான்.”

“அதோ ஜெனரல் அய்யாவோட சமையல் காரன் வர்றான், அவனையே கேளுங்க..ப்ரோஹோர்..இங்க வா..இந்த நாயைப் பாரு..இது உங்களோடதா?”

“என்ன சொல்றீங்க. இந்த மாதிரி ஒன்னை நாங்க வளக்கவே இல்லை.”

“இனிமேலும் பேசீட்டு இருக்காதீங்க. இது தெரு நாய்தான். பேசீட்டு இருக்குறதுல பிரயோசனம் இல்லை. இது தெருநாயின்னு தெரிஞ்சு போச்சு. இதக் கொன்னு போட்டுறனும்.”, ஒட்சும்யேலோவ் சொன்னார்.

“இது எங்க நாய் அல்ல. “, ப்ரோஹோர் சொல்லிக்கொண்டுபோனான் ,”இது ஜெனரல் அய்யாவோட தம்பியோடது, அன்னைக்கு வந்தவர் இத விட்டுட்டுப் போயிட்டார். அய்யாவுக்கு நாய்களைப் புடிக்காது. ஆனா அம்மாவுக்கு இது புடிக்கும்…..”

“என்ன அய்யாவோட தம்பி இங்க வந்தாரா? விளாதிமிர் இவாநித்ச்?”, ஒட்சும்யேலோவ் விசாரித்தார், அவர் முகம் சந்தோசத்தில் ஒளிர்ந்தது, பெரியதாகப் புன்னகைத்தார். “எனக்குத் தெரியாமப் போச்சே, சும்மா வந்தாரா? எதாச்சும் வேலையா?”

“ஆமாம்”

“அடடா எனக்குத் தெரியாமப் போச்சே..வந்து பார்த்திருப்பேனே..இது அம்மாவோட வளர்ப்பா? கேட்கறதுக்கு சந்தோசமா இருக்கு…அழகா இருக்கு பாருங்க…கூட்டீட்டுப் போங்க …இதொண்ணும் மோசமில்லை…அவன் விரலை கவ்வீருச்சு…ஹ ஹ ஹா …குட்டி ஏன் நடுங்குற.. இங்க வா செல்லம்…நல்ல நாய்க்குட்டி…”

ப்ரோஹோர் நாயை அழைத்துக் கொண்டு மரக்கடையை விட்டுப் போனான். ஹ்ர்யுகினைப் பார்த்துக் கூட்டம் சிரித்தது.

“உன்னைக் கவனிச்சுக்கிறேன்..”, ஒட்சும்யேலோவ் அவனை எச்சரிக்கை செய்துவிட்டு, கோட்டுக்குள் தன்னைத் திணித்துக் கொண்டு, சந்தைச் சதுக்கத்தை விட்டு வெளியேறினார்.

- ஜனவரி 1, 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
பழிதீர்ப்பவன்
Мститель : பழிதீர்ப்பவன் மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது ...
மேலும் கதையை படிக்க...
நல்ல முடிவு
Хороший конец : நல்ல முடிவு மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா , சொல்லக்கூடிய அளவுக்கு, சற்றே கொழுகொழுப்பான பெண்மணி, நாற்பதைத் தொட்டிருப்பவர், திருமண ஏற்பாட்டாளர், அது மட்டுமல்லாது காதும்காதும் வைத்தது போல சொல்லக் கூடிய பல ...
மேலும் கதையை படிக்க...
பிறகு
Après : பிறகு மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி "கண்ணுகளா இனி நீங்க தூங்கப் போகலாம்.", பாட்டியம்மா சொன்னார்கள். மூன்று குழந்தைகளும், இரு சிறுமிகள் ஒரு சிறுவன், எழுந்து தங்களது பாட்டியை முத்தமிட்டனர். பிறகு அவர்கள் பாதிரியாருக்கு இரவு வணக்கம் ...
மேலும் கதையை படிக்க...
யாரோ சொன்ன கதை
Рассказ Hеизвестного человека : யாரோ சொன்ன கதை மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி ஐந்தாம் நூற்றாண்டில், இப்போதைப்போலவே, சூரியன் ஒவ்வொரு காலையிலும் உதித்தது ஒவ்வொரு மாலையிலும் ஓய்வெடுக்கச் சென்றது. விடியலில் கதிரொளி பனித்துளியை முத்தமிட்ட போது, பூமி புத்துணர்ச்சி ...
மேலும் கதையை படிக்க...
சூரத் காப்பிக் கடை
СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து ...
மேலும் கதையை படிக்க...
பழிதீர்ப்பவன்
நல்ல முடிவு
பிறகு
யாரோ சொன்ன கதை
சூரத் காப்பிக் கடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)