பக்… பக்… பக்…
ப்ரோடீன்ஸ் பிராய்லர் கடை…
அவரது மகன் வைத்த பெயர் அது. கோழிகளும், கோழிகளின் தோல் உறிக்கும் இயந்திரமும் இருக்கும் ஒரு சிறிய அறையின் முன்னால் பனை ஓலையால் கூரை வேயப்பட்டிருக்கும். அந்த கூரையில் தோல் உரிக்கப்பட்ட கோழிகள் தொங்கியவாறு இருக்கும். கோழியை வெட்டுவதற்கு தோதாக ஒரு முதிர்ந்த மரத்தின் அடிப்பாகம் வட்டமாக வெட்டப்பட்டு, ஒரு கம்பிக்கூண்டின் மீது அமர்ந்திருக்கும். அந்த கம்பிக்கூண்டில் அன்றைக்கு மரண தண்டனை அனுபவிக்கப் போகும் கோழிகள் அடைக்கப்பட்டிருக்கும். காலையில் வந்த உடனேயே அன்றைக்கு விற்பனையாகும் கோழிகளை தோராயமாகக் கணக்குபோட்டு அந்த கூண்டில் அடைத்து வைத்திருப்பான் மாடசாமி. அதனருகே கல்லா பெட்டியும் எடை பார்க்கும் இயந்திரமும் இருக்கும்.
மாடசாமி தனி ஆளாக நின்று கடையை கவனித்து வருகிறான். அந்த கிராமத்தில் இவனது கடைக்கென்று தனி மதிப்பு. காரணம் எல்லோரிடமும் வேடிக்கையாக பேசும் சுபாவம் அவனுக்கு. அது போக அந்த கடை ஒரு பிரமாண்டமான புளியமரத்தின் கீழ் இருந்ததால் கூட்டம் அதிகமானால் கூட அதன் நிழலில் நின்றுகொள்ள வசதியாக இருந்தது. அன்று ஞாயிற்று கிழமை, வழக்கமான நாட்களை விட இன்று வியாபாரம் அதிகம். அவன் கடைக்கு முன்னால் கறிதுண்டினைத் தெரு நாய்கள் வாலை ஆட்டிக்கொண்டே சண்டை போடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சண்டை போட்டால் மாடசாமி விரட்டிவிடுவான் என்று அதற்குத் தெரியும். நாயுடன் வேட்டையில் காக்கையும் சேர்ந்து கொண்டது.
அங்குள்ள எல்லா கோழிகளுக்கும் ஒரே ஒரு சந்தேகம், எல்லோரிடமும் அன்பாகப் பேசும் இவன், தங்களிடம் மட்டும் ஏன் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறான் என்று.
மதியம் 12 மணி…
வெட்டிய அனைத்து கோழிகளையும் விற்றுவிட்டான். அந்த கம்பிக்கூண்டில் இரண்டு கோழிகள் மட்டும் மீதம் இருந்தது. கடையை அடைப்பதற்கான நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்ததை அந்த இரண்டு கோழிகளும் பார்த்துக்கொண்டிருந்தது.
“ஏன்டி கடைய சாத்துற நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கேன்”
“ஆமாம் கா, இன்னைக்கு நாம தப்பிச்சோம் கா”
“”ஹ்ம்ம் ஒவ்வொரு நாளும் கடக்றது பெரும் பாடால இருக்கு. அவன் எப்போ வந்து நம்ம குரவளைய பிடிப்பான்னு உசுர கையில பிடிச்சிட்டு இருக்க வேண்டி இருக்கு. இதுல பசி வேற, எனக்கு 9 மணிக்கே செம்ம பசி. என்னடி வாழ்க்கை இது? நெனச்ச நேரத்துல சாப்பிட கூட முடியல”
“எனக்கும் பசிக்குதுகா”
இரண்டிற்கும் ஆச்சர்யம், தாங்கள் பேசுவது புரிந்து கொண்டது மாதிரி மாடசாமி குருணை அரிசியை எடுத்து வந்து போட்டான்.
இரண்டு நிமிடம் இரண்டும் எதையும் பேசிக்கொள்ளாமல் வயிறார சாப்பிட்டன.
“என்னக்கா நல்ல சாப்டீங்களா, பசி போயிடுச்சாக்கா?”
“ஹ்ம்ம்ம்ம்”
“என்னாச்சுக்கா? என்ன யோசிக்கறிங்க?”
“இல்லடி நம்ம வாழனும்னு சாப்டறோம், ஆனா இவனுங்க நம்மள சாகடிக்றதுக்காக தான நமக்கு சாப்பாடு போடறானுங்க. என்ன பொழப்பு இது. சாகுற வரைக்கும் அடைஞ்சே கிடக்றோம். நம்ம இனத்த பத்தி நினைக்கும் போது கடவுள் இல்லைனுதான்டி தோணுது. இதுல மனுசனுக்காகத்தான் கடவுள் எல்லாத்தையும் படச்சாருனு வேற சொல்லிட்டு திரியுரானுங்க. யோசிச்சு பாத்தா அதான் உண்மையும் கூட இல்ல?”
“அப்டிலாம் கடவுள் இல்லன்னு சொல்லாதீங்கக்கா. எல்லாம் நம்ம விதி”
“அடி போடி உன்ன மாதிரி நெனச்சி தான் நிறைய பேர் சுத்திட்டு இருக்குறானுங்க”
“சரி அத விடுங்கக்கா, இன்னைக்கு நம்மல கொன்றுவான்னுவ நினைச்சோம், எதோ கடவுள் புண்ணியத்துல தப்பிச்சிட்டோம்ல”
“கொன்றுவான்னுவனு பன்மைல சொல்ற?”
“நம்ம சாகுறதுக்கு மாடசாமி மட்டும் காரணம் இல்லல. வாங்க வரவனும் தான காரணம். அத தான் சொன்னேன்”
“சரியா சொன்ன போ, ஒருத்தரும் வாங்க வரலனா இவன் ஏன் நம்மள கொல்ல போறான்”
“ஏன் கா உங்களுக்கு எதாவது ஆசை இருக்குதா என்ன?”
“இப்படி பொறந்துட்டு என்னடி ஆசை பட்றது”
“என்னாச்சு உங்களுக்கு? ஏன் கா இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கீங்க? எப்பவும் கல கலன்னு இருப்பீங்களே?”
“இல்லடி காலைலேயே இங்க வந்து அடச்ச உடனே பயம் வந்துடுச்சு. சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகம் ஆயிடும்னு நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னது சரி தான்டி. இன்னும் அந்த பயம் போகல”
“ஹி ஹி ஹி”
“ஆனா எனக்கு ரொம்ப நாள் வாழணும்னு ஆசைடி”
“அக்கா, ஆணியா பொறந்தா அடி பட்டுதானக்கா ஆகணும். இன்னைக்கு நம்ம பொழச்சிட்டோம், இன்னும் ஒரு நாள் நம்ம நிச்சயம் உயிரோட இருப்போம். அது வரைக்கும் சந்தோசமா இருங்கக்கா”
“ஹ்ம்ம்ம்ம் அதுவும் சரி தான்டி”
ஒரு இளைஞன் அவசர அவசரமாக கடையை நோக்கி கையில் கூடையுடன் வந்தான்.
“வாப்பா எப்டி இருக்ற? அப்பா எப்டி இருக்றாரு?”
“எல்லாரும் நல்ல இருக்காங்க, நீங்க எப்டி இருக்கீங்க அண்ணே?”
“எதோ உங்க புண்ணியத்துல சௌக்கியமா இருக்றேன்பா”
“ஹி ஹி… ஒரு கிலோ கறி போடுங்கண்ணே ”
இரு கோழிகளும் திரு திருவென பார்த்துக்கொண்டது கண்ணில் பயத்துடன்
“இல்லப்பா இன்னைக்கு வியாபாரம் முடிஞ்சுது, கடைய சாத்த போறேன். காளியப்பன் கடைல கேட்டு பாக்றியா?”
“அண்ணே உங்க கடைய விட்டு வேற யார்கிட்டயாவது நான் கறி வாங்கிருக்கேனா? வீட்டுக்கு திடீர்னு விருந்தாளிக வந்துட்டாங்கண்ணே. பாத்து செய்யுங்க”
“இப்போ ஒரு கோழிய வெட்டினா மீதி கறி வீணா போய்டும்ப்பா”
“மீதிய வீட்டுக்கு எடுத்துட்டு போங்கண்ணே”
“ஸ்பெஷல்லா அப்பவே வீட்டுக்கு அனுப்பியாச்சுப்பா”
“ஹ்ம்ம்ம்ம்… சரி அப்போ முழு கோழியா வாங்கிக்குறேன்”
மாடசாமி கையை கூண்டில் விட்டு ஒரு கோழியின் கழுத்தை பிடித்து தூக்கினார். மாட்டிக்கொண்டது அக்கா கோழி.
ஒரு கோழிக்காக இயந்திரத்தை உபயோகபடுத்த விரும்பவில்லை மாடசாமி. கழுத்தை ஒரே திருகு, அரை வினாடியில் போனது உயிர். அடுத்து அரை வினாடியில் தலை நாயின் வாயில் இருந்தது. ஒரு இறக்கையை பிடித்து வெந்நீரில் முக்கி எடுத்த பின், அடுத்த இறக்கையை பிடித்து முக்கினார், போனது மயிர். வெந்நீரில் சூடு பதமாக இருந்ததால் சரியாக போகவில்லை. கைகளால் பிடுங்கி எடுத்தார். உயிரை பிடுங்க கூட அவர் இவ்வளவு கஷ்டப்படவில்லை.
மாடசாமியின் கையில் துடிதுடித்துச் சாகும் தன் உடன்பிறவா அக்காவை கண்கலங்க வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் தங்கை!!!
nice narration
expecting more creations frm yu